தெலங்கானாவில் முழு ஏரியும் சிவப்பாக மாற என்ன காரணம்? பிபிசி கள ஆய்வு

ஏரி மாசுபாடு, கழிவு நீர் கலப்பு, நீர் மாசுபாடு, தெலங்கானா
    • எழுதியவர், அமரேந்திர யர்லகட்டா
    • பதவி, பிபிசி நிருபர்

தெலங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லகுண்டா ஏரியிலிருந்து மாசடைந்த நீர் நெல் வயல்களில் பரவியதாக விவசாயி ஒருவர் பதிவு செய்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில் அந்த ஏரி அமைந்துள்ள கும்மடிடாலா நகராட்சியைச் சேர்ந்த டோமாடுகு கிராமத்திற்கு பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.

ஏரி மாசுபாடு, கழிவு நீர் கலப்பு, நீர் மாசுபாடு, தெலங்கானா

துர்நாற்றத்தால் அவதிப்படும் கிராம மக்கள்

இந்த கிராமம் ஹைதராபாத் - நர்சாபூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. அந்தக் காணொளியில் விவசாயி ஒருவர், நல்லகுண்டா ஏரி ரசாயனம் கலந்த கழிவுநீரால் மாசடைந்து இருப்பதாகவும், மாசடைந்த நீர் வயல்களுக்குள் புகுந்திருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

அங்கு காற்றும் நீரும் கடுமையாக மாசடைந்துள்ளதாகக் கூறும் விவசாயிகள் சுற்றுச்சூழலை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

பிபிசி நல்லகுண்டா ஏரிக்குச் சென்றபோது இரண்டு நிமிடங்கள் கூட அங்கு இருக்க முடியவில்லை. முகத்தில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு தான் அந்தப் பகுதியை பார்வையிட முடிந்தது. நல்லகுண்டா ஏரியில் உள்ள நீர் முழுவதும் சிவப்பு நிறத்தில் மாறியிருந்தது.

22 ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி அமைந்துள்ளது. அதன் ஒரு பக்கத்தில் விமானப்படை அகாடமியின் மதில் சுவர் அமைந்துள்ளது.

விமானப்படை அகாடமி உள்ள பக்கத்தில் இருக்கும் சுவரின் கீழே நீர் ஏரியில் கலப்பதைக் காண முடிந்தது.

ஏரி மாசுபாடு, கழிவு நீர் கலப்பு, நீர் மாசுபாடு, தெலங்கானா

ஹெடெரோ நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டும் நிறுவனத்தின் பதிலும்

நல்லகுண்டா ஏரிக்குள் ரசாயன கழிவு நீர் கலப்பதால் தான் மாசடைந்துள்ளதாக உள்ளுர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

"இந்த மாசடைந்த நீர் ஹெடெரோ ட்ரக்ஸ் யூனிட் 1-இல் இருந்து விமானப்படை அகாடமி பகுதிக்கு வருகிறது. அங்கிருந்து கழிவுநீர் ஏரிக்குள் நுழைகிறது," என சுகிஷா ரெட்டி என்கிற விவசாயி பிபிசியிடம் தெரிவித்தார்.

தான் 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

நல்லகுண்டா ஏரி பகுதிக்கு பிபிசி சென்றபோது ஹெடெரோ ட்ரக்ஸ் நிறுவனத்திலிருந்து மாசடைந்த நீர் ஏரிக்குள் கலப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஹெடெரோ ட்ரக்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது. அந்நிறுவனத்தைச் சேர்ந்த சூழலியல் பொறியாளரான நாகராஜு பிபிசியிடம் அலைபேசியில் பேசினார்.

"எங்கள் நிறுவனத்தில் இருந்து எந்த கழிவுநீரும் வெளியேற்றப்படுவதில்லை. நாங்கள் பூஜ்ஜிய டிஸ்சார்ஜ் சிஸ்டம் (கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்யும் அமைப்பு) வைத்துள்ளோம். எங்கள் நிறுவனத்தில் உற்பத்தியாகும் மாசடைந்த நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துகிறோம்," எனத் தெரிவித்தார்.

ஹெடெரோ நிறுவனத்திலிருந்து சிவப்பு நிறத்திலான மாசடைந்த நீர் நல்லகுண்டா ஏரிக்குள் செல்கிறது என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

நல்லகுண்டா ஏரிக்கும் ஹெடெரோ ட்ரக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே விமானப் படை பகுதி அமைந்துள்ளது. அந்த இடம் முழுவதும் மரங்களால் சூழ்ந்து காட்டைப் போல காட்சியளிக்கிறது.

மாசடைந்த நீர் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய பிபிசி முயன்றபோதும் விமானப்படை தளத்திற்குள் நுழைவதில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக எங்களால் அந்தப் பகுதியை அடைய முடியவில்லை.

ஏரி மாசுபாடு, கழிவு நீர் கலப்பு, நீர் மாசுபாடு, தெலங்கானா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வயலில் கலந்துள்ள சிவப்பு நிற நீர்

300 ஏக்கர் நிலம் பாதிப்பு

நல்லகுண்டா ஏரியிலிருந்து மாசடைந்த நீர் பக்கத்தில் உள்ள வயல்களுக்குள் சென்று அங்கிருந்து ராஜநலா குளத்தில் (2 கிமீ தொலைவில் அமைந்துள்ள குளம்) கலக்கிறது.

இந்த இரண்டு நீர் நிலைகளுக்கும் இடையே சுமார் 300 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் நெல் மற்றும் காய்கறிகளைப் பயிரிடுகின்றனர்.

ஏரி நீர் முழுவதும் மாசடைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

"முன்னர் ஏரி நன்றாக இருந்தது. பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதியிலிருந்து நீர் வந்தது. இந்த நிறுவனம் வந்த 10 ஆண்டுகள் கழித்து மாசுபாடு மற்றும் கழிவு காரணமாக சூழ்நிலை மாறிவிட்டது," என மங்கய்யா என்கிற விவசாயி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாசடைந்த, நிறம் மாறிய நீர் வயல்களுக்குள் நுழைந்து பயிர்களை அழிப்பதாக சுகிஷா ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

"இது நெல் விதைகளை விதைக்கும் காலம். ஆனால் மாசடைந்த நீரால் விதைகள் வளர்வதில்லை. தாவரங்கள் புற்களைப் போல வளர்ந்து பயனற்றதாகப் போகின்றன. பயிர் அழிக்கப்பட்டு வருகிறது. முதலீடும் வருவதில்லை," என்றார்.

ஏரி மாசுபாடு, கழிவு நீர் கலப்பு, நீர் மாசுபாடு, தெலங்கானா

பட மூலாதாரம், Getty Images

கடந்த கால மாசுபாடு சம்பவங்கள்

2012-ஆம் ஆண்டும் நல்லகுண்டா ஏரி இதேபோன்று முழுவதும் மாசடைந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அப்போது மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டு கள அளவில் விசாரணை ஒன்று நடத்தப்பட்டது.

நல்லகுண்டா ஏரியில் மாசடைந்த நீர் கலந்திருப்பதை கண்டறிந்த மாசு கட்டுப்பாடு வாரியம் மார்ச் 2013-இல் ஹெடெரோ நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

அதில் ஏரியில் உள்ள மாசடைந்த நீர் முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

"ஹெடெரோ ட்ரக்ஸ் நிறுவனம், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவின்படி நல்லகுண்டா ஏரியில் கலந்த மாசடைந்த நீரை அகற்றியது," என அந்நிறுவனத்தின் சூழலியல் பொறியாளர் அக்டோபர் 2013-இல் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

"அப்போது நாங்கள் மிகப்பெரிய அளவிலான இயக்கம் ஒன்றை நடத்தினோம். அரசு உத்தரவின் பேரில் அந்நிறுவனம் டேங்கர் லாரிகளைப் பயன்படுத்தி மாசடைந்த நீரை வெளியேற்றியது," என டோமாகுடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகும் நீர் மாசடைவது தொடர்பாக பிபிசியிடம் பேசிய ஜெய்பால் ரெட்டி என்கிற விவசாயி "இதே பிரச்னை ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ஆனால் இம்முறை தீவிரமாக உள்ளது. ஏரியில் உள்ள நீரின் நிறம் முழுவதுமாக மாறிவிட்டது," என்று தெரிவித்தார்.

ஏரி மாசுபாடு, கழிவு நீர் கலப்பு, நீர் மாசுபாடு, தெலங்கானா

ஹெடெரோ நிறுவனம் கூறுவது என்ன?

ஆனால் ஏரியில் நீர் நிறம் மாறியதற்கு மாசுபாட்டைத் தவிர வேறு காரணங்கள் இருக்கலாம் என ஹெடெரோ ட்ரக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த நாகராஜு பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஏரி நீர் நிறம் மாறியதற்கு பாக்டீரியா, பாசி மற்றும் பூஞ்சை கூட காரணமாக இருக்கலாம். நிறத்தை மேற்பரப்பில் மட்டுமே காண முடிகிறது," என்றார் அவர்.

பிபிசி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த நிர்வாகம், "நீரிலிருந்து வரும் நாற்றம் உள்ளூர் கழிவுகள் கலந்தததால் இருக்கலாம். அதில் வருகின்ற அதிக அளவிலான நுரைக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை. இங்கிருந்து எந்த ரசாயன கழிவும் வெளியேறுவதில்லை." எனத் தெரிவித்துள்ளது.

ஏரி மாசுபாடு, கழிவு நீர் கலப்பு, நீர் மாசுபாடு, தெலங்கானா

மாசு கட்டுபாட்டு வாரியம் என்ன சொல்கிறது?

சங்கரெட்டி மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சூழலியல் பொறியாளர் குமார் பதக்கை தொடர்பு கொண்டு நல்லகுண்டா ஏரி மாசுபாடு பற்றி பிபிசி தமிழ் பேசியது.

"கடந்த காலங்களிலும் நல்லகுண்டா ஏரியில் மாசுபாடு தொடர்பாக புகார்கள் உள்ளன. இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நிறுவனம் மற்றும் ஏரியின் நிலை பற்றி ஆராயப்பட்டது. சிறப்பு குழுவின் விசாரணை முடிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது," எனத் தெரிவித்தார்.

ஏரியில் பாக்டீரியா, பாசி மற்றும் பூஞ்சை இருக்கிறதா என்கிற கேள்வியை பிபிசி முன்வைத்த போது, "தற்போது இதைப்பற்றி நாங்கள் எதுவுமே கூற முடியாது. இதனை முன்னணி நிறுவனங்களை வைத்து ஆய்வு செய்ய விரும்புகிறோம்." என்றார்.

மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் சிறப்பு குழுவிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஏரி நீரை என்ன செய்வதென முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு