காஸாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை 90% நிறைவு - ஆனால், முட்டுக்கட்டையாக உள்ளது என்ன?

இஸ்ரேல் - காஸா, போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ருஷ்டி அபுவலூஃப் & ஷைமா கலீல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்கள்

காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 90% நிறைவடைந்துள்ளது, ஆனால் இன்னும் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது என்று இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலத்தீன மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

ஃபிலடெல்பி பாதையில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து இருப்பது முழு போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

தெற்கு காஸாவின் எகிப்து எல்லையில் உள்ள இந்த ஃபிலடெல்பி பாதையானது, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

தோஹாவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் விவரங்களை பாலத்தீன மூத்த அதிகாரி ஒருவர் பகிர்ந்து கொண்டார். இதில் காஸாவுடனான இஸ்ரேலின் எல்லை முழுவதும், பல கிலோமீட்டர் அகலத்தில் ஒரு ராணுவ மோதலற்ற மண்டலத்தை உருவாக்குவதும் அடங்கும்.

இந்தப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து இருக்கும் என அந்த அதிகாரி கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மேலும், இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டால், மூன்று கட்ட போர் நிறுத்தமானது சில நாட்களிலே ஒப்புக்கொள்ளப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.

மூன்று கட்ட போர் நிறுத்தத்தில் முதல் கட்டமாக ஒவ்வொரு பெண் இஸ்ரேலிய ராணுவ வீரருக்கும் 20 பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்

எந்தெந்த கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர் என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஆனால் இஸ்ரேலில் 25 ஆண்டுகள் அல்லது அதற்குள் மேலாக சிறைத் தண்டனை அனுபவிக்கும் சுமார் 400 பேர்களில் இருந்து அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவர்களில் மூத்த ஃபத்தா தலைவர் மர்வான் பர்கௌட்டியின் பெயர் இருப்பதாக தெரியவில்லை. அவரை விடுவிப்பதை இஸ்ரேல் நிராகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் - காஸா, போர் நிறுத்தம்

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேல் பணயக்கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள். காணாமல் போன பணயக்கைதிகளில் சிலரை ஹமாஸ் இன்னும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

காஸாவில் தற்போது உள்ள 96 பணயக்கைதிகளுள், 62 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் கருதுகிறது.

எகிப்து/ கத்தார் நாட்டின் மேற்பார்வையின் கீழ், பொதுமக்கள் காஸாவின் வடக்கு பகுதிக்கு செல்ல முடியும். மேலும் நாளொன்றுக்கு சுமார் 500 டிரக்குகள் காஸா முனைக்கு உதவி பொருட்களை கொண்டு வரும் என்று அதிகாரி கூறினார்.

மூன்று கட்டமாக நடைபெற உள்ள போர் நிறுத்தத்தின் கடைசி கட்டத்திற்கு பிறகு, 14 மாதங்கள் நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வரும்.

அரசியல் சார்பு இல்லாத, ஆனால் அனைத்து பாலத்தீன பிரிவுகளின் ஆதரவையும் பெற்ற நிபுணர்கள் குழுவால் காஸா பகுதி மேற்பார்வை செய்யப்படும்.

சமீபத்திய வாரத்தில் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தங்கள் மத்தியஸ்த முயற்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளன. மேலும் ஒரு ஒப்பந்தத்திற்கு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆகிய இரு தரப்பினரும் அதிக விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த பேச்சு வார்த்தையின்போது, குறுகிய கால போர்நிறுத்த முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்ததால் எந்த ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை.

இஸ்ரேல் "புதிய நிபந்தனைகளை விதிப்பதை நிறுத்தினால்" மட்டுமே காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை விரைவாக எட்ட முடியுமென ஹமாஸ் மற்றும் இரண்டு பாலத்தீன ஆயுதக்குழுக்கள் தெரிவித்தன.

காஸாவில் ஆட்சி புரிந்த ஹமாஸ், கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி அன்று இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத வகையில் ஒரு எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தியது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கடத்தப்பட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)