கஞ்சா ஆயில்: ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் பிடிபட்ட ரூ.108 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்

கஞ்சா ஆயில் பறிமுதல்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற கஞ்சா ஆயில் போதை பொருளை இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்துள்ள அதிகாரிகள், கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட நtட்டுப் படகு உள்ளிட்டவையையும் பறிமுதல் செய்தனர்.

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.50 கோடி மதிப்பிலான 30 கிலோ மெத்தா பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு நான்கு நாளே ஆன நிலையில் மண்டபம் கடலில் ரூ.108 கோடி மதிப்பிலான 99 கிலோ கஞ்சா ஆயில் போதைப்பொருள் பிடிபட்டுள்ளது.

கஞ்சா ஆயில் பறிமுதல்

99 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை (மார்ச் 5) அதிகாலை நாட்டுப்படகில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி செல்ல இருப்பதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

அதனையடுத்து, இந்திய கடலோர காவல் படை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் இணைந்து மண்டபம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது இலங்கை நோக்கி சென்ற பாம்பன் புயல் காப்பகம் பகுதியைச் சேர்ந்த ரெபிஸ்டன்(31) என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி விசாரித்ததாக கடலோர காவல்படையினர் தெரிவித்தனர்.

படகில் இருந்த மூவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த இந்திய கடலோர காவல் வீரர்கள் நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தபோது படகில் 111 பாக்கெட்களில் கஞ்சா ஆயில் போதை பொருள் இருந்தது தெரியவந்திருக்கிறது.

இதையடுத்து அதிகாரிகள் போதை பொருளை பறிமுதல் செய்ததுடன் படகில் இருந்த மூவரை இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் படகில் இருந்த மூவர் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ரெமிஸ், பிரதாப், ஜான்சன் என தெரியவந்தது.

கஞ்சா ஆயில் பறிமுதல்

கடலுக்கு அடியில் தேடிய ஸ்கூபா வீரர்கள்

மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள கடல் பகுதியில் நாட்டு படகை மடக்கி பிடிக்க முயற்சித்த போது கடலில் பார்சல் ஒன்றை வீசியதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதை இந்திய கடலோர காவல்படையின் ஸ்கூபா வீரர்கள் கடலுக்கு அடியில் தீவிரமாக தேடினர். ஆனால், கடலுக்கு அடியில் ஒன்றும் சிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து, பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் உள்ள ரெவிஸ்டன் வீட்டில் தங்கச்சிமடம் காவல் நிலைய பெண் போலீஸ் உதவியுடன் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி மற்றும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் சோதனை செய்தனர்.

சோதனையில் போதைப்பொருள் அல்லது தங்கம் என எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

போதை பொருள் கடத்தல் சம்பவம் குறித்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பாம்பனை சேர்ந்த ரெவிஸ்டன் உட்பட மொத்தம் நான்கு பேரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கஞ்சா ஆயில் பறிமுதில்

கஞ்சா ஆயில் என்றால் என்ன? அது எப்படி தயார் செய்யப்படுகிறது?

இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுவையில்,"கஞ்சா ஆயில் என்பது ஒரு போதை பொருள். இதனை ஆங்கிலத்தில் “HASISH OIL” என குறிப்பிடுகின்றனர்.

"கஞ்சா செடியை வேகவைத்து அதில் இருந்து வடிகட்டி கஞ்சா ஆயில் எடுக்கப்படுகிறது. சராசரியாக 100 கிலோ கஞ்சா செடியை வேக வைத்தால் அதிலிருந்து சுமார் 900 கிராம் கஞ்சா எண்ணெய் கிடைக்கும். இந்த கஞ்சா எண்ணெய்க்கு இந்தோனேசியா போன்ற வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. அங்குள்ள மக்கள் இதனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்."

"இது மிகவும் விலை உயர்ந்த போதைப் பொருட்களில் ஒன்று. இவ்வாறான விலை உயர்ந்த போதைப் பொருட்கள் இலங்கை கடத்தப்படுவதற்கான முக்கிய காரணம் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். அவர்களுக்கு விற்பனை செய்யவே இங்கிருந்து கடத்தப் படுவதாக தகவல் கிடைக்கப்பட்டுள்ளது."

"கஞ்சா ஆயில் விலை உயர்ந்த போதைப் பொருட்களில் ஒன்று என்பதால் பெரும்பாலும் இலங்கையின் உள்ளூர் மக்கள் அதை பயன்படுத்துவதில்லை. அதேபோல் தமிழகத்தில் கஞ்சா ஆயில் பயன்பாடு கஞ்சா போதை பொருள் பயன்படுத்துபவர்கள் காட்டிலும் மிக குறைவு."

"பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா எண்ணெய் இலங்கை நபர்களிடம் நடுக்கடலில் வைத்து கொடுத்து விட்டு கஞ்சா எண்ணெய்க்கான தொகைக்கு ஏற்ப இலங்கை நபர்களிடம் இருந்து தமிழகத்தை சேர்ந்த கடத்தல்காரர்கள் தங்க கட்டிகளை பெற்று தமிழகத்திற்கு எடுத்து வருகின்றனர்."

"கஞ்சா ஆயில் மூன்று ரகங்களாக தரம் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது. மண்டபம் கடலில் பிடிக்கப்பட்ட கஞ்சா ஆயில் முதல் ரகத்தைச் சேர்ந்தது என ஆய்வில் தெரியவந்து. ராமேஸ்வரம் பகுதியில் 99 கிலோ கஞ்சா ஆயில் பிடிபட்டது இதுவே முதல் முறை," இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

கஞ்சா ஆயில் பறிமுதல்

நடுக்கடலில் நடந்தது என்ன?

தொடர்ந்து பேசிய அந்த அதிகாரி,சென்னையில் இருந்து கஞ்சா ஆயில் கொண்டு வரப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக கடத்த இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வந்ததாகக் கூறினார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஐந்து சாக்கு மூட்டைகளில் கஞ்சா ஆயில் மண்டபம் கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் ஏற்றியதை கடலில் ரோந்து படகில் இருந்தவாறு கண்காணித்து வந்தனர். பின், நாட்டுப்படகு இலங்கை நோக்கி புறப்பட்டதும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் விரட்டி சென்று படகை தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது படகில் மீன்பிடி வலைகளுக்கு கீழ் அடி பகுதியில் மறைத்து வைத்திருந்த ஐந்து சாக்குகளை கைப்பற்றி சோதனை செய்ததில் கஞ்சா ஆயில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட பாம்பனை சேர்ந்த ரெவிஸ்டன் குறித்து கைது செய்யப்பட்ட மூவர் கொடுத்த தகவல் அடிப்படையில் ரெவிஸ்டன் என்பவரை பாம்பன் புயல் காப்பகம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியதை ஒப்புக்கொண்டதுடன், இந்த கஞ்சா ஆயில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.

பின்னர் பிடிபட்ட அந்த சாக்குகளில் உள்ள கஞ்சா ஆயில் எடை போட்டு பார்த்ததில் மொத்தமாக 99 கிலோ கஞ்சா ஆயில் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ 108 கோடி இருக்கலாம் எனவும், கைது செய்யப்பட்ட நால்வரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.

கஞ்சா ஆயில் பறிமுதல்
கஞ்சா ஆயில் பறிமுதல்

எதிர்க்கட்சிகள் கண்டனம்

ராமேஸ்வரம் கடலில் ரூ.108 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் பிடிபட்டது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமேஸ்வரம் கடல் பகுதியில் 108 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் என்ற செய்தி தமிழ்நாட்டை இந்த திமுக அரசு சுடுகாடாக மாற்றி வருகிறதோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ்நாட்டை போதைப் பொருள் மொத்த விற்பனைக் கிடங்காக இந்த அரசு மாற்றியுள்ளதாக நான் ஏற்கனவே கூறிய நிலையில், தற்போது போதைப் பொருள் தயாரிப்பு மையமாக தமிழ்நாடு மாறிவிட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது."

"அரசின் மெத்தனத்தாலும் ஊக்குவிப்பதிலும் தமிழ்நாட்டில் குவிந்து கிடக்கும் போதைப்பொருட்களை முழுவதுமாக பறிமுதல் செய்து தமிழ்நாட்டின் கடல் எல்லைகளை போதைப்பொருள் புழங்கா வண்ணம் பாதுகாக்குமாறு போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்" என எடப்பாடி பழனிசாமி குறிப்பிடப்பட்டிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)