ஹைதியில் சிறையை தாக்கிய முன்னாள் காவல்துறை அதிகாரி; தப்பியோடிய 3700 கைதிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஹென்றி ஆஸ்டியர் மற்றும் ஜியான்லூகா அவாக்னினா
- பதவி, பிபிசி நியூஸ்
ஹைதி நாட்டின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரச் சிறைக்குள் ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அந்நாட்டு அரசு 72 மணி நேர அவசர நிலையை அறிவித்தது. இந்த சிறைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 3,700 கைதிகள் தப்பினர்.
வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆயுத குழுக்களின் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவரை வெளியேற்றும் நோக்கில் செயல்படும் ஆயுத குழுக்கள், தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸின் 80% பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
ஆயுதக் குழுவின் தலைவராக முன்னாள் காவல்துறை அதிகாரி
ஹைதியில் ஆயுத குழுக்களினால் நிகழ்த்தப்படும் வன்முறை பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது.
இரண்டு சிறைச்சாலைகள் வார இறுதியில் தாக்கப்பட்டதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது, ஒன்று தலைநகரிலும் மற்றொன்று அருகிலுள்ள குரோயிக்ஸ் டெஸ் பொக்கெட்ஸ் எனும் நகரிலும்.
குழுக்களின் இந்த 'கீழ்ப்படியாமை' செயல்கள் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், அதற்கு பதிலடியாக உடனடியாக இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாகவும் அரசு கூறியது, இந்த ஊரடங்கு இந்திய நேரப்படி திங்கட்கிழமை 01:00 மணிக்கு தொடங்கியது.
சிறைச்சாலைகள் மீதான ஒருங்கிணைந்த தாக்குதலுக்கு முன்பாக அதிகாரிகளின் கவனத்தை திசை திருப்ப மற்ற காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும் ஹைதி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர்ட்-ஓ-பிரின்ஸின் சிறையில் உள்ள கைதிகளில், 2021ஆம் ஆண்டு அதிபர் ஜோவெனல் மொய்ஸ் கொல்லப்பட்டது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட குழுவின் உறுப்பினர்களும் அடங்குவர்.
கென்யா தலைமையிலான பன்னாட்டுப் பாதுகாப்புப் படையை ஹைதிக்கு அனுப்புவது குறித்து விவாதிக்க வியாழன் அன்று பிரதமர் நைரோபிக்கு சென்றபோது, இந்த வன்முறை சம்பவங்கள் தொடங்கின.
பிரதமரை பதிவியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற நோக்கில் ஒரு ஒருங்கிணைந்த தாக்குதலை அறிவித்தார் ஆயுதக் குழுவின் தலைவர் ஜிம்மி செரிசியர் ("பார்பெக்யூ" என்ற புனைப்பெயர் கொண்டவர்)
"நாங்கள் அனைவரும், அதாவது மாகாண நகரங்களில் உள்ள ஆயுதக் குழுக்களும் தலைநகரில் உள்ள ஆயுதக் குழுக்களும் ஒன்றுபட்டுள்ளோம்" என்று போர்ட்-ஓ-பிரின்ஸில் நடந்த பல படுகொலைகளுக்கு காரணமானவராக கருதப்படும் இந்த முன்னாள் காவல்துறை அதிகாரி கூறுகிறார்.
தலைநகரின் பிரதான சிறைச்சாலையை வலுப்படுத்த உதவுமாறு ஹைதியின் போலிஸ் தொழிற்சங்கம் ராணுவத்திடம் கேட்டிருந்தது, ஆனால் அதற்குள் சனிக்கிழமை சிறைச்சாலை தாக்கப்பட்டது.
சிறைச்சாலையின் கதவுகள் இன்னும் திறந்தே உள்ளன, அதிகாரிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை அன்று தெரிவித்தது. தப்பிச் செல்ல முயன்ற மூன்று கைதிகள் முற்றத்தில் பிணமாகக் கிடந்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்குள் சென்ற ஏஎப்பி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் தோட்டாக்களால் துளைக்கப்பட்ட சுமார் 10 உடல்களைக் கண்டதாகக் கூறினார்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய சிறை ஊழியர் ஒருவர், "அதிபர் மொய்ஸின் கொலைக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் கொலம்பிய வீரர்கள் உட்பட 99 கைதிகள் துப்பாக்கி சூட்டிற்கு பயந்து தங்கள் அறைகளில் முடங்கிவிட்டனர்" என்று கூறினார்.

பட மூலாதாரம், REUTERS
அமெரிக்க தூதரகத்தின் எச்சரிக்கை
ஞாயிற்றுக்கிழமை அன்று போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது குடிமக்களை உடனடியாக ஹைதியை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசா சேவைகளை மூடுவதாக பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஹைதி பல ஆண்டுகளாக ஆயுதக் குழுக்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 2021இல் அதிபர் மோயிஸ் அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து வன்முறை மேலும் அதிகரித்துள்ளது. 2016 முதல் அங்கு அதிபர் தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால் அதிபர் பதவி காலியாக உள்ளது.
ஒரு அரசியல் ஒப்பந்தத்தின் கீழ், பிப்ரவரி 7க்குள் பிரதமர் ஹென்றி பதவி விலக வேண்டும். ஆனால் திட்டமிட்டு தேர்தல் நடத்தப்படாததால் அவர் இன்னும் பதவியில் நீடிக்கிறார்.
கிளாட் ஜோசப், அதிபர் மோயிஸ் படுகொலை செய்யப்பட்டபோது தற்காலிக பிரதமராக செயல்பட்டவர் மற்றும் இப்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். பிபிசியிடம் பேசிய ஜோசப், ஹைதி நாடு ஒரு 'கொடுங்கனவில்' வாழ்ந்து வருவதாக கூறினார். முடிந்தவரை பிரதமர் பதவியில் நீடிக்க ஹென்றி விரும்புவதாகவும் ஜோசப் கூறுகிறார்.
"பிப்ரவரி 7ஆம் தேதி பதவி விலக முதலில் ஒப்புக்கொண்டு, பின்னர் மறுத்துவிட்டார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தாலும், அவர் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. ஆனால் இப்போது இந்த குற்றவாளிகள் அவரை பதவி விலகுமாறு கட்டாயப்படுத்த வன்முறை வழிகளைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது" என்கிறார் ஜோசப்.
கடந்த ஆண்டு ஹைட்டியின் ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்ட வன்முறையில் 8400 பேர் கொல்லப்பட்டனர் என்று ஜனவரியில் வெளியான தனது அறிக்கையில் ஐ.நா. கூறியுள்ளது. இது 2022இல் பலியானவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் எனவும் ஐ.நா. கூறியுள்ளது.
வன்முறையால் பல மருத்துவமனைகள் செயல்படாமல் உள்ளன.
அரசியல் வெற்றிடம் மற்றும் அதீத வன்முறையின் மூலம் வெளிப்படும் கோபம், அரசாங்கத்திற்கு எதிரான பல போராட்டங்களுக்கு வழிவகுக்கிறது. அரசு எதிர்ப்பாளர்கள் இப்போது பிரதமரின் ராஜினாமாவைக் கோருகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












