இளைஞர் உயிரைப் பறித்த 'இன்ஸ்டா' படங்கள் - ரூ.12 லட்சம் கேமராவுக்காக கொன்ற நபர்கள் பேஸ்புக்கால் சிக்கியது எப்படி?

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை
படக்குறிப்பு, புகைப்படக் கலைஞர் சாய் குமார்
    • எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
    • பதவி, பிபிசிக்காக

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுரவாடா என்னும் ஊரைச் சேர்ந்தவர் 23 வயதான சாய் விஜய் பவன் கல்யாண் குமார் (சாய் குமார்). தொழில்முறை புகைப்படக் கலைஞரான இவர், திருமணம் போன்ற விஷேச நிகழ்வுகளுக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பவர்.

பிப்ரவரி 26 அன்று ஒரு நிகழ்வை படம்பிடிப்பதற்காக விசாகப்பட்டினத்திலிருந்து ராஜமுந்திரிக்கு ரயிலில் புறப்பட்ட சாய் குமார், ஆந்திராவின் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் உள்ள மூலஸ்தானம் கிராமத்தின் மணல் குன்றுகளில் மார்ச் 3ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? ஒரு நிகழ்வை படம்பிடிக்கச் சென்ற சாய் குமாரை கொன்றது யார்? அவரது பெற்றோரும் காவல்துறையும் என்ன சொல்கிறார்கள்?

காணாமல் போனவர் கொலை செய்யப்பட்டது எப்படி?

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை
படக்குறிப்பு, புகைப்படக் கலைஞர் சாய் குமார்

முதலில் சாய் குமார் காணவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதாக விசாகப்பட்டினம் போலீசார் கூறுகின்றனர்.

போட்டோ ஷூட் ஆர்டர்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகின்றன. பின்னர் நிகழ்வுகளை படம்பிடிக்க தொலைதூர பகுதிகளுக்கு பயணம் செய்கிறார்கள் புகைப்படக் கலைஞர்கள். அது போலவே சாய்குமாரும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம் என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

ஒரு நிகழ்வு படப்பிடிப்புக்காக இன்ஸ்டாகிராம் மூலம் அணுகப்பட்டுள்ளார் சாய் குமார்.

விசாகப்பட்டினத்திலிருந்து புகைப்படம் எடுப்பதற்காக ராஜமுந்திரி சென்ற சாய் குமார் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை விசாகப்பட்டினம் துணை காவல் கண்காணிப்பாளர் சந்து மணிகாந்த் பிபிசியிடம் விளக்கினார்.

“அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தைச் சேர்ந்த சண்முக தேஜா மற்றும் நக்கா வினோத் குமார் ஆகிய இரு இளைஞர்கள் சாய் குமாருடன் இன்ஸ்டாவில் மூன்று மாதங்களாக தொடர்பில் இருந்துள்ளனர். இருவருக்கும் 20 வயது.

இருவரும் பிப்ரவரி 16ஆம் தேதி சாய் குமாரை அழைத்து பிப்ரவரி 27ஆம் தேதி ரவுலபாலத்தில் போட்டோ ஷூட்டுக்கு வருமாறு கூறியுள்ளனர். 10 முதல் 15 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு போதிய உபகரணங்களுடன் வருமாறு கூறியுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக படம்பிடித்தால் திரைப்பட வாய்ப்பு கூட கிடைக்கும் என்று ஆசை காட்டியுள்ளனர்" என்றார் சந்து மணிகாந்த்.

தொடர்ந்து பேசிய அவர், "பிப்ரவரி 26ஆம் தேதி ரவுலபாலம் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, கேமரா மற்றும் உபகரணங்களை எடுத்துக்கொண்டு ரயிலில் புறப்பட்டுள்ளார் சாய் குமார். பின்னர் ராஜமுந்திரி ரயில் நிலையத்தை அடைந்துள்ளார். சண்முக தேஜாவும், வினோத் குமாரும் காரில் வந்து அவரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

ராஜமுந்திரி அருகே இரவு எட்டு மணியளவில் சாய் குமாருடன் வாலிபர்கள் இருவரும் பீர் குடித்துள்ளனர். அதன் பின் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்" என்றார்.

“சிறிது தூரம் சென்றதும் போதையில் இருந்த சாய் குமாரை கீழே தள்ளி, பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொன்றுள்ளனர். நள்ளிரவுக்குப் பிறகு ஆலமூர் மண்டலம் மூலஸ்தானம் கிராமத்தில் உள்ள மணல்மேட்டில் சாய் குமாரின் சடலத்தை புதைத்துள்ளனர்."

"அவரது கேமரா மற்றும் பிற உபகரணங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் திரும்பியுள்ளனர்" என்று இந்த வழக்கு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார் அந்த காவல் அதிகாரி.

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை

ரூ.12 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் உபகரணங்கள்

பிப்ரவரி 26ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து கிளம்பும் போது தனக்கு ஒரு பெரிய நிகழ்ச்சியை படம்பிடிக்கும் வேலை இருப்பதாகவும், 10 நாட்கள் கழித்து தான் வீடு திரும்புவேன் என்றும் பெற்றோரிடம் கூறியுள்ளார் சாய் குமார்.

இதுகுறித்து பேசிய சாய் குமாரின் தந்தை ஸ்ரீனிவாஸ், "சாய் குமார் நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, ​​பல நாட்கள் வெளியூரில் தங்குவார். சில நாட்கள் போனில் மூலம் கூட தொடர்பு கொள்ள முடியாது" என்கிறார்.

பிப்ரவரி 26ஆம் தேதி மதியம் வீட்டை விட்டு புறப்பட்ட மகன் இரவு 7.45 மணிக்கு தனது தாய்க்கு போன் செய்ததாக தந்தை ஸ்ரீனிவாஸ் கூறினார். சாய் குமாரின் தந்தை ஸ்ரீனிவாஸ் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

ரூ.12 லட்சம் மதிப்புள்ள கேமரா உபகரணங்களுடன் ராஜமுந்திரிக்கு வீட்டிலிருந்து புறப்பட்ட சாய் குமார் மாலையில் தனக்கு போன் செய்ததாக தாய் ரமணம்மா தெரிவித்தார்.

“அம்மா... எனக்கு அதிகம் அறிமுகம் இல்லாதவர்களுடன் செல்கிறேன். அவர்களின் நடத்தை சற்று சந்தேகத்திற்குரிய வகையில் உள்ளது. என்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், இந்த இரண்டு எண்களுக்கு அழைக்கவும் என்றார். அதுவே அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள். அதன் பிறகு அவரை சடலமாகத் தான் பார்த்தேன்'' என ரமணம்மா கண்ணீர் மல்க கூறினார்.

“சாய் குமாருடன் பேசிய பிறகு, நாங்கள் அனைவரும் தூங்கச் சென்றோம். காலையில் எழுந்ததும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தால் சுவிட்ச்ஆப் என்று வந்தது. சாய் குமார் கொடுத்த இரண்டு எண்களை தொடர்பு கொண்டோம். அதில் ஒரு எண்ணில் ரிங் ஒலித்தது, ஆனால் யாரும் எடுக்கவில்லை."

"இன்னொரு நம்பர் சுவிட்ச்ஆப் என வந்தது. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சாய் அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்களை பார்த்த போது அதில் ஒரு காரின் போட்டோ இருந்தது. அந்த கார் நம்பரை என் கணவர் மற்றும் உறவினர்களிடம் கூறினேன்,'' என்கிறார் ரமணம்மா.

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை

கார் கண்டுபிடிப்பு

இரண்டு நாட்களாக மகனுக்காக காத்திருந்த சாய் குமாரின் பெற்றோர் பிப்ரவரி 29ஆம் தேதி மல்லையா பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் சாய் குமாரைக் காணவில்லை என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

சாய் குமாரின் தொலைபேசி அழைப்பு தரவுகளின் அடிப்படையில், அவருடன் பேசியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும், சாய் குமார் அவரது தாயாருக்கு அனுப்பிய கார் எண்ணை வைத்து அந்த கார் யாருடையது என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

“போட்டோ ஷூட் இருக்கிறது என்று அழைத்த சண்முக தேஜாவின் எண்ணுக்கு போன் செய்தால் அதுவும் சுவிட்ச்ஆப் ஆகிவிட்டது. விசாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், கடந்த மார்ச் 1ஆம் தேதி சண்முக தேஜா வீட்டுக்கு எங்கள் போலீசார் சென்றனர். சண்முக தேஜா அங்கு இல்லை.

ஆனால் விசாகப்பட்டினத்தில் இருந்து சாய் குமார் கொண்டு வந்த கேமராவும் மற்ற உபகரணங்களும் சண்முக தேஜா வீட்டில் இருந்தது. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடி வந்தோம்'' என ஆலமுரு பி.எஸ்.எஸ்.ஐ.எல். ஸ்ரீனிவாஸ் நாயக் நம்மிடம் கூறினார்.

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை
படக்குறிப்பு, முக்கிய குற்றவாளி சண்முக தேஜா

காதலியால் சிக்கிய குற்றவாளி

சண்முக தேஜா தலைமறைவாகி இருப்பது எங்களுக்குத் தெரிய வந்தது. சாய் குமாரின் எண் மற்றும் சண்முக தேஜாவின் எண் இரண்டும் சுவிட்ச்ஆப் ஆகி இருந்ததால், சண்முக தேஜாவை பிடிக்க சமூக வலைதளங்களின் உதவியை நாடியதாக கூறுகிறார் ஸ்ரீனிவாஸ் நாயக்.

"அவர் யாருடன் பேஸ்புக்கில் சாட் செய்கிறார் போன்ற விவரங்களை சேகரித்தோம். சண்முக தேஜா விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது. உடனே அந்த பெண்ணை தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி உதவி கேட்டோம்."

"அந்த பெண்ணும் சண்முக தேஜாவுடன் பேஸ்புக்கில் பேசினார். அதன் பிறகு அந்த பெண்ணின் கேள்விகளுக்கு சண்முக தேஜா பதில் சொல்ல ஆரம்பித்தார். அதன் மூலம் சண்முக தேஜா இருக்கும் இடத்தை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது" என்கிறார் அவர்.

"அவரை அன்னவரம் அருகே பிடித்து, மார்ச் 2ஆம் தேதி காவலில் எடுத்தோம். அவர் அளித்த தகவலின் பேரில் மற்றொரு குற்றவாளியான வினோத் குமாரும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தியதில், சாய் குமாரை கொன்றதை சண்முக தேஜா ஒப்புக்கொண்டார்'' என போலீசார் தெரிவித்தனர்.

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை
படக்குறிப்பு, மற்றொரு குற்றவாளி வினோத் குமார்

சாய் குமார் கொல்லப்பட்டது ஏன்?

சாய் குமார் காணாமல் போன வழக்கின் விசாரணையில் தனது நண்பர் வினோத்துடன் சேர்ந்து சாய் குமாரை கொன்றதாக வாக்குமூலம் அளித்த சண்முக தேஜா, அவரை கொன்றது ஏன் என்பது குறித்தும் விளக்கமளித்துள்ளதாக விசாகப்பட்டினம் போலீசார் கூறுகின்றனர்.

“சாய் குமாரிடம் விலை உயர்ந்த கேமராக்கள் மற்றும் உபகரணங்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் முதல் 12 லட்சம். அவற்றை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் சாய் குமாரை ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளார்"

"சாய் குமார் தனது கேமராக்களை இன்ஸ்டாவில் பதிவிட்டபோது, ​​அவை குற்றவாளியின் கவனத்திற்கு வந்துள்ளன. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக சாய் குமாருடன் தினமும் இன்ஸ்டாகிராமில் அவர் பேசியுள்ளார். அதன் பிறகு ஒரு நாள் நிகழ்ச்சி இருக்கிறது என ராஜமுந்திரிக்கு அழைத்துள்ளார். எனவே சாய் குமார் கேமராவை எடுத்துக்கொண்டு ராஜமுந்திரிக்கு சென்றுள்ளார்” என்று துணை காவல் கண்காணிப்பாளர் சந்து மணிகந்தா கூறினார்.

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை

“ராஜமுந்திரியை அடைந்ததும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டபடி அவரைக் கொன்று, சடலத்தை மணல் குன்றில் புதைத்தனர். காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு கொலை வழக்கில் தீர்வு காணப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் விலை உயர்ந்த கேமராவுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது" என டிசிபி தெரிவித்தார்.

சண்முக தேஜா கொடுத்த தகவலின் பேரில் மூலஸ்தானம் கிராமத்தின் மணல் மேட்டில் இருந்து சாய் குமாரின் சடலத்தை போலீஸார் மார்ச் 3ஆம் தேதி மீட்டனர்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் சாய் குமாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்தனர்.

விசாகப்பட்டினத்திலிருந்து மூலஸ்தானம் கிராமத்திற்குச் சென்ற சாய்குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்த சாய்குமாரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

தனியாக காஷ்மீர் வரை சென்றவர்

விலையுயர்ந்த கேமராவுக்காக இளைஞர் கொலை

கடந்த ஏழு வருடங்களில் சாய் குமார் பல போட்டோ ஷூட்களை செய்துள்ளதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். போட்டோ ஷூட்கள் மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளுக்கு சுற்றிப் பார்க்கவும் சென்றுள்ளார் என அவர்கள் கூறினர்.

"விலையுயர்ந்த கேமராக்களுக்காக சாய் குமாரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு தனியாகச் சென்று திரும்பியவர், அருகே இருக்கும் ராஜமுந்திரிக்கு சென்று திரும்ப வர மாட்டார் என நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை" என சாய் குமாரின் சகோதரி கண்ணீருடன் கூறினார்.

"தனது வாழ்வாதாரத்திற்காக ஆட்டோ டிரைவரான தந்தையிடம் அடம்பிடித்து வாங்கிய கேமராக்களால் சிறுவயதிலேயே சாய் குமார் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை" என்று அவர் வேதனையுடன் கூறினார்.

வெறும் விலையுயர்ந்த கேமராக்களுக்காக நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும், இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக விசாகப்பட்டின கமிஷனர் ரவிசங்கர் தெரிவித்தார். தற்போது வரை இந்த வழக்கில், இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)