இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை பாராட்டிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் - என்ன காரணம்?

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டியது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, செர்கெய் லாவ்ரோவ் மற்றும் ஜெய்சங்கர் (கோப்புப்படம்)

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை பாராட்டியுள்ளார். யுக்ரேனுடனான போருக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை இந்தியா முற்றிலுமாக நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்த மேற்கத்திய நாடுகளின் கேள்விகளுக்கு எஸ்.ஜெய்சங்கர் சரியான பதிலை அளித்துள்ளதாக, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் சோச்சி நகரில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) நடைபெற்ற உலக இளைஞர் மன்றத்தில் செர்கெய் லாவ்ரோவ் உரையாற்றினார். அப்போது, ​​ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஜெய்சங்கரின் பதிலை நினைவுகூர்ந்த லாவ்ரோவ், "ஐரோப்பா மற்றவர்களுக்கு உபதேசம் வழங்குவதற்கு முன் தங்களை முதலில் பார்க்க வேண்டும் என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். இந்தியா எப்போதும் ரஷ்யாவின் நண்பன்,” எனத் தெரிவித்தார்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் எனது நண்பருமான எஸ். ஜெய்சங்கர் ஒருமுறை ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிக் கொண்டிருந்தார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதற்கு முன்னர் மேற்கத்திய நாடுகள் தங்களை முதலில் பார்க்க வேண்டும் எனப் பதிலளித்தார்,” எனத் தெரிவித்தார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்துக் கேள்வி எழுப்புபவர்கள், இந்தியாவைவிட ரஷ்யாவிடம் இருந்து பல மடங்கு எண்ணெய் வாங்குகிறார்கள் என்பதை ஜெய்சங்கர் நினைவுபடுத்தினார்.

வரலாற்று தொடர்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டியது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

செர்கேய் லாவ்ரோவ் தனது உரையில், ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்றுக் கூட்டாண்மையையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

பனிப்போரின்போது சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உதவியதாக அவர் கூறினார். அப்போது பாகிஸ்தான் அமெரிக்க முகாமில் இருந்ததால், இந்தியா அந்த முகாமில் சேர மறுத்துவிட்டது.

சோவியத் யூனியனாக இருந்தபோதும் அதற்குப் பின்னரும் ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது எனப் பேசிய ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், "மேற்கத்திய நாடுகள் இந்தியாவுக்கு நவீன ஆயுதங்களை அனுப்ப நினைக்கவில்லை. சோவியத் யூனியனாக இருந்தபோதும் இப்போதும் ரஷ்யா ஆயுதங்களை வழங்குவது மட்டுமல்லாமல், உயர் தொழில்நுட்ப ஏவுகணைகளின் கூட்டுத் தயாரிப்பையும் தொடங்கியது," எனத் தெரிவித்தார்.

பிரமோஸ் ஏவுகணையை அதற்கு எடுத்துக்காட்டாகக் கூறிய அவர், "இக்கட்டான நேரங்களிலும் நாம் எப்போதும் ஒருவரோடு ஒருவர் துணை நிற்பதே இதன் விளைவு. இதை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம், இந்தியர்களுக்கும் இந்தக் குணம் உண்டு,” என்றார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வதை தைரியமாக பல்வேறு தளங்களில் ஜெய்சங்கர் பலமுறை ஆதரித்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜெய்சங்கர் கூறுகையில், பிப்ரவரி 2022 முதல், ஐரோப்பா இந்தியாவைவிட ரஷ்யாவிலிருந்து ஆறு மடங்கு அதிகமாக எண்ணெய் இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மே மாதம், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர், இந்தியாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பிறகு, ஐரோப்பாவிற்கு வரும் ரஷ்ய எண்ணெயைத் தடை செய்வது குறித்துப் பேசியிருந்தார். அப்போது ஜெய்சங்கர், இது ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறவில்லை என்று கூறியிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் கூறுகையில், "இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ரஷ்ய எண்ணெயை பெரியளவில் கொள்முதல் செய்து அதைச் சுத்திகரித்த பின் ஐரோப்பாவில் விற்பனை செய்கின்றன." இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொரெல் கூறியிருந்தார்.

பொரெல்-லின் கருத்துக்குப் பதிலளித்த ஜெய்சங்கர், "இது ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறுவது அல்ல, ஏனெனில் ரஷ்ய எண்ணெய் மூன்றாவது நாட்டிலிருந்து வந்தால், அது ரஷ்ய எண்ணெய்யாகப் பார்க்கப்படாது," என்று கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டியது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 2022இல், இந்தியாவுக்கு அதிகளவில் எண்ணெய் விநியோகிக்கும் நாடாக ரஷ்யா உள்ளது. முன்னதாக, சௌதி அரேபியா, இராக் ஆகியவை இந்தியாவுக்கு எண்ணெய் வழங்கும் முக்கிய நாடுகளாக இருந்தன. ஏப்ரல் 2022இல், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் காணொளி, சமூக ஊடகங்களில் வைரலானது.

அப்போது வாஷிங்டனில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் ஜெய்சங்கர் பதிலளித்துக் கொண்டிருந்தார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த எஸ். ஜெய்சங்கர், "இந்தியா எண்ணெய் வாங்குவதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். ஆனால், ஐரோப்பா ஒரு நாளுக்கு ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய்யை ஒருமாதத்தில்கூட இந்தியா வாங்குவதில்லை," என்று கூறியிருந்தார்.

ஜெய்சங்கரின் ஆளுமை

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டியது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

எஸ். ஜெய்சங்கர் ஒரு கூர்மையான ராஜதந்திரி என்று அறியப்பட்டவர். 2014இல் நரேந்திர மோதி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​எஸ். ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தார். 2014 - 2019 பாஜக ஆட்சியில் சுஷ்மா ஸ்வராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.

மன்மோகன் சிங்கின் கடைசி வெளியுறவுத் துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் இருந்தார். அப்போது, வெளியுறவுச் செயலாளராக இருந்தவர் சுஜாதா சிங். நரேந்திர மோதி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, ​​2005இல் அவருக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. ஆனால், பிரதமரான பிறகு, மோதியை அமெரிக்கா வரவேற்றது. பிரதமரான பிறகு, 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மோதி தனது முதல் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டார்.

அப்போது, ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்தார். அப்போது மோதியின் வருகையை ஜெய்சங்கர் திட்டமிட்ட விதம் பிரதமரை கவர்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 26 ஜனவரி 2015 அன்று இந்தியா வந்தார். அப்போதும் எஸ்.ஜெய்சங்கரின் பங்கு பெரிதாகக் கருதப்படுகிறது.

டாக்டர். ராஜன் குமார், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகள் மையத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார். தனது முதல் அமெரிக்க பயணத்தில் ஜெய்சங்கரின் பங்கு குறித்து மோதி மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக டாக்டர் ராஜன் குமார் கூறுகிறார்.

நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்கத்தில் பிரதமர் மோதிக்கு ஆயிரக்கணக்கான இந்திய-அமெரிக்க மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மோதியின் பேச்சைக் கேட்க மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்தது.

மோதியின் இந்தப் பயணம் மிகவும் வெற்றிகரமாகக் கருதப்பட்டது. அந்தப் பெருமை எஸ். ஜெய்சங்கருக்கு சென்றது. இதுதவிர, சீனாவும் ரஷ்யாவும் இந்தியாவுக்கு மிக முக்கியமான நாடுகள்.

இந்த இரு நாடுகளுக்கும் இந்திய தூதராக எஸ். ஜெய்சங்கர் இருந்துள்ளார். இந்த அனுபவத்தால் பிரதமர் மோதிக்கு எஸ். ஜெய்சங்கரை பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜனவரி 31, 2015 அன்று, அமெரிக்க தூதராக இருந்த எஸ். ஜெய்சங்கரின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதற்கு முன்பே சுஜாதா சிங் நீக்கப்பட்டு வெளியுறவுத்துறை செயலாளராக ஆக்கப்பட்டார்.

அப்போது வெளியுறவுத்துறை செயலாளராக சுஜாதா சிங்கின் பதவிக்காலம் இன்னும் ஏழு மாதங்கள் இருந்தது. இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் எஸ். ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், சுஜாதா சிங்கின் பணி மூப்பு மற்றும் பெண் என்பதாலும் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

வெளியுறவுத்துறை செயலாளரின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். மோதி அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை செயலாளராகப் பணியாற்றிய பிறகு, ஜெய்சங்கர் மே 2018இல் டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் குளோபல் கார்ப்பரேட் விவகாரங்களின் தலைவராக ஆனார்.

கடந்த 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், நரேந்திர மோதி தலைமையில் பாஜக மீண்டும் பெரும்பான்மையைப் பெற்றது. மோதியின் 2வது ஆட்சியில் இருந்த கேபினட் அமைச்சர்கள் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் சுஷ்மா ஸ்வராஜ் இல்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்தது. எஸ். ஜெய்சங்கர் அமைச்சராகப் பதவியேற்றதும், மோதியின் இரண்டாவது ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்பது தெளிவானது.

இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நட்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பாராட்டியது ஏன்?

பட மூலாதாரம், GETTY IMAGES

கடந்த 1971இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 13 நாட்கள் போர் நடந்தது. கிழக்கு பாகிஸ்தானில் எழுந்த மனிதாபிமான நெருக்கடியின் காரணமாக இந்தப் போர் நடந்தது. இந்தப் போருக்குப் பிறகுதான் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக மாறியது. முன்னதாக, கிழக்கு பாகிஸ்தானில் மேற்கு பாகிஸ்தானின் மேலாதிக்கம் குறித்து இந்தியா முழு உலகையும் நம்ப வைக்க முயன்றது.

கிழக்கு பாகிஸ்தானில் இருந்து ஏராளமான அகதிகள் இந்தியா வந்து கொண்டிருந்தனர். மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தானுக்கு இடையே எந்த அரசியல் தீர்வும் இல்லாமல் இப்பிரச்னை சரியாகும் என்ற நம்பிக்கை இல்லை. அப்போது, சோவியத் யூனியன் மட்டுமே இந்தியாவின் பேச்சைக் கேட்டது.

ஆகஸ்ட் 1971இல், அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 'இந்தியா-சோவியத் அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தின் கீழ், போர் ஏற்பட்டால், ராஜதந்திர மற்றும் ஆயுத உதவிகளை வழங்குவதாக சோவியத் யூனியன் இந்தியாவுக்கு உறுதியளித்திருந்தது.

மாஸ்கோ இந்தியாவிற்கு நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. மறுபுறம், இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு சோவியத் ஒன்றியத்துடன் கருத்தியல் நெருக்கம் இருந்தது.

ஹங்கேரியில் 1957ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தலையிட்டபோது, ​​இதற்காக சோவியத் ஒன்றியத்தைக் கண்டிக்கக் கூடாது என்று தீர்மானித்தது ஏன் என்று அப்போதைய பிரதமர் நேரு நாடாளுமன்றத்தில் விளக்கினார்.

உலகில் பல விஷயங்கள் நடக்கின்றன, அவற்றை நாம் முற்றிலும் வெறுக்கிறோம் என்று நேரு கூறியிருந்தார். "ஆனால் நாம் அதைக் கண்டிக்கவில்லை... ஏனென்றால், ஒருவர் பிரச்னையைத் தீர்க்க முயலும்போது, ​​யாரையாவது பெயர் சொல்லிக் கண்டித்தும் பலனில்லை,” என அப்போது நேரு கூறியிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)