இங்கிலாந்தின் 'பேஸ்பால்' சவாலை முறியடித்த இந்தியா - ஆட்டத்தை புரட்டிப் போட்ட அந்த 'ரன் அவுட்'

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

'இன்னும் 180 ஓவர்கள் மீதமிருக்கின்றன. ஆனால், நாங்கள் ஆட்டத்தை 60 முதல் 70 ஓவர்களில் முடித்துவிட முயற்சிப்போம்'

- இது இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் நேற்றைய பேட்டி.

இன்றைய ஆட்டமும் அவரது கூற்றை அப்படியே மெய்ப்பித்திருக்கிறது. ஆனால், முடிவு அவர் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இங்கிலாந்துக்கு பாதகமாக கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தை 69.2 ஓவர்களில் ஆல் அவுட் செய்து இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்திய அணிக்கு பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் கைகொடுக்க, பவுலிங்கில் ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகிய இருவரும் மிரட்டினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நூலிழையில் 500 விக்கெட் என்ற மைல்கல்லை தவறவிட்டார்.

விசாகப்பட்டினத்தில் 2-வது டெஸ்ட்

ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றிருந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி இரண்டாம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி இரட்டை சதத்தின் உதவியுடன் 396 ரன்களை சேர்த்தது. 290 பந்துகளில் 209 ரன்களை குவித்த அவர் 19 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களை விளாசினார். சதத்தை சிக்சர் அடித்தும், இரட்டை சதத்தை பவுண்டரி விளாசியும் அவர் கடந்தது சிறப்பம்சம்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 255 ரன்களை சேர்த்தது. தொடக்க வீரர் கிராவ்லி மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது இன்னிங்சில் ஜெய்ஸ்வால் ஏமாற்ற, மற்றொரு இளம் வீரர் சுப்மன் கில் சதம் கடந்து இந்திய அணியை கரை சேர்த்தார். வேறு யாரும் அரைசதம் கூட அடிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்களை சேர்த்த இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இரு அணிகளுக்குமே வெற்றிவாய்ப்பு இருந்த நிலையில், 2 நாள் ஆட்டம் எஞ்சியிருந்தாலும் இங்கிலாந்து அணியோ அதிரடியாகவே இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. மூன்றாவது நாள் முடிவில் தொடக்க வீரர் பென் டுக்கெட் விக்கெட்டை மட்டும் இழந்து இங்கிலாந்து அணி 67 ரன்களை எடுத்தது.

இதனால், அடுத்த 2 நாட்களில், அதாவது 180 ஓவர்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 332 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்த பிறகு அளித்த பேட்டியில்தான் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இக்கட்டுரையின் முதலில் இடம் பெற்ற வார்த்தைகளை உதிர்த்தார். அதாவது, 180 ஓவர்கள் இருந்தாலும் கூட தங்களது பிரத்யேகமான 'பேஸ்பால்' உத்தி மூலம் 332 ரன்களை 60 அல்லது 70 ஓவர்களில் ஆட்டத்தை முடித்துவிட முயற்சிப்போம் என்பதே அவரது கூற்றாக இருந்தது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

பரபரப்பான 4-வது நாள் ஆட்டம்

ஜேம்ஸ் ஆண்டர்சன் குறிப்பிட்டது போலவே, இங்கிலாந்து வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் தொடக்கம் முதலே அதிரடியை தொடர்ந்தனர். இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்சில் 200 ரன்களுக்கும் மேலாக எடுப்பது என்பதே அரிதான நிகழ்வு என்று புள்ளிவிவரம் கூறினாலும், அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இங்கிலாந்து வீரர்கள் அடித்தாடினர். இதனால், ஒருநாள் போட்டிகளைப் போலவே இங்கிலாந்து அணியின் ஸ்கோர் போர்டு எகிறியது.

ஆனால், இங்கிலாந்து அணியின் வேகத்திற்கு இந்தியாவின் அஸ்வின் - குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சு கூட்டணி அணை போட முயன்றது. இருவருமே அவ்வப்போது விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கூட இங்கிலாந்து வீரர்கள் அச்சமின்றி அதிரடியைத் தொடர்ந்தனர்.

ஆலி போப், ஜோ ரூட் ஆகிய இருவரின் விக்கெட்டையும் அஸ்வின் வீழ்த்தினர். மறுபுறம் நிலைத்து ஆடி இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை குல்தீப் யாதவ் சாய்த்தார்.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

500 விக்கெட் மைல்கல்லை தவறவிட்ட அஸ்வின்

9 பந்துகளில் ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் என்று அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய ஜோ ரூட்டை அஸ்வின் காலி செய்தார். அது டெஸ்ட் போட்டிகளில் அவரது 499-வது விக்கெட்டாக அமைந்தது. ஜோ ரூட் நான்காவது விக்கெட்டாக வீழ்ந்தார். இங்கிலாந்து அணிக்கு மேலும் 6 விக்கெட்டுகள் எஞ்சியிருந்ததால் அஸ்வின் 500 விக்கெட் என்ற மைல்கல்லை இந்த போட்டியில் எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஒரு கட்டத்தில் அந்த மைல்கல்லை எட்டிவிட்டதாகவே ரசிகர்கள் கருதினர். அஸ்வின் வீசிய பந்தில் இங்கிலாந்து வீரர் டாம் ஹாட்லி ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயல, பந்து அவர் மீது பட்டு விக்கெட் கீப்பர் பரத் கைகளில் தஞ்சம் புகுந்தது. இந்திய வீரர்கள் அவுட் கேட்டு அப்பீல் செய்ய நடுவரும் கையை உயர்த்திவிட்டார். ஆனால், இங்கிலாந்து அணி ரிவியூ செய்த போது பந்து ஹாட்லியின் மணிக்கட்டுக்கு மேலே உரசியபடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நடுவர் தனது முடிவை திரும்பப் பெற்றுவிட்டார்.

இதனால், இந்திய வீரர்கள் அதிருப்தியடைந்ததால், கேப்டன் ரோகித், பவுலர் அஸ்வின் மற்றும் பீல்டர்களிடம் தனது முடிவு குறித்து நடுவர் விளக்கம் அளித்தார். அதாவது, கேட்ச் என்று கருதியே அவுட் கொடுத்ததாகவும், பந்து கையுறையில் படாமல் மணிக்கட்டுக்கு மேலே பட்டதால் தனது முடிவை திரும்பப் பெற்றதாகவும், எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் கொடுக்கவே இல்லை என்றும் நடுவர் கூறினார்.

இதனால், 500 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த அஸ்வின் ஏமாற்றம் அடைந்தார். அதனை எட்டும் அவரது முயற்சி இந்த போட்டி முடியும் வரை கைகூடவில்லை.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தை புரட்டிப் போட்ட அந்த 'ரன் அவுட்'

இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 52 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்திருந்தது. கேப்டன் பென் ஸ்டோக்சும், விக்கெட் கீப்பர் பென் ஃபோக்சும் களத்தில் இருந்தனர். 53-வது ஓவரில் ஃபொக்ஸ் செய்த தவறு அந்த அணியையே ஒட்டுமொத்தமாக தடம்புரளச் செய்துவிட்டது. நான்காவது பந்திதை ஷாட் மிட்விக்கெட் திரைசயில் தட்டிவிட்டு, விரைவாக ஒரு ரன்னை எடுத்துவிட அவர், கேப்டன் பென் ஸ்டோக்சை அழைத்தார்.

பென் ஸ்டோக்சும் ஒரு ரன்னுக்காக விரைந்து செல்ல, அங்கே பந்தை விரைவாக பீல்டிங் செய்த ஸ்ரேயாஸ் குறி தவறாமல் எறிந்து ஸ்டம்புகளை தகர்க்க, ஸ்டோக்ஸ் ரன் அவுட்டானார். அவரது பேட்டிற்கும் கிரீசுக்கும் இடையே வெறும் 3 இன்ச் இடைவெளியே இருந்தது. இதனால், 399 ரன் வெற்றி இலக்கை நோக்கி விரைவாக நடைபோட்ட இங்கிலாந்து அணியின் நம்பிக்கை அத்துடன் குலைந்து போனது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்தியா 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி

அடுத்து வந்த இங்கிலாந்து வீரர்களும் துரிதமாக ரன்களை சேர்த்தாலும் வெற்றிக்கு அது போதுமானதாக இருக்கவில்லை. கடைசி விக்கெட்டாக டாம் ஹாட்லியை இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா கிளீன் போல்டு செய்தார். இங்கிலாந்து அணி 69.2 ஓவர்களில் 292 ரன்களை எடுத்து ஆல்அவுட்டானது. இந்திய அணி 106 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் டெஸ்டில் இங்கிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் என மொத்தம் 9 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தினார். இங்கிலாந்து அணியின் 'பேஸ்பால்' அதிரடிக்கு அணை போட்டது பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும், அவரது ரிவர்ஸ் ஸ்விங்கும் தான் என்றால் மிகையாகாது.

இந்தியா vs இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ஆட்ட நாயகன் ஜெய்ஸ்வால்

முதல் இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட உதவிய இளம் வீரர் ஜெய்ஸ்வாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)