சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் நடப்பதற்கு முன்பே, சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் வெற்றி பெற்றுவிட்டார்.

ஆம், அவருக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள சுயேச்சை வேட்பாளர்களும் தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றனர். எனவே, அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

கடந்த எழுபது ஆண்டுகளில், சூரத் மக்களவைத் தொகுதியின் வரலாற்றில், இப்படி நடப்பது இதுவே முதல்முறை. இந்த விவகாரத்தில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாஜக ஜனநாயகத்தைக் கொன்றுவிட்டதாக காங்கிரஸ் கூறுகிறது. அதேநேரம், `காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள் தங்கள் வேட்பாளரின் பெயர் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனர். எனவே அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. இதில் பாஜகவின் தவறு என்ன?’ என்கிறது பாஜக தரப்பு.

இந்த விவகாரத்தில், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, சுயேச்சை வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுமாறு தனது கட்சி கோரிக்கை விடுத்ததை ஒப்புக் கொண்டார்.

சூரத் நகர பாஜக தலைவர் நிரஞ்சன் ஜான்ஸ்மேரா பிபிசி குஜராத்தி சேவைக்கு அளித்த பேட்டியில், ”காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனுவில் முரண்பாடு இருப்பது கண்டறியப்பட்டதும், எங்கள் கட்சித் தலைவர்கள் தீவிரம் காட்டத் தொடங்கினர்,” என்றார்.

சூரத்தில் மொத்தம் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் காங்கிரஸின் நிலேஷ் கும்பனி உட்பட 6 பேரின் படிவங்கள் ரத்து செய்யப்பட்டன. இதன்மூலம் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர 8 வேட்பாளர்கள் எஞ்சியிருந்தனர். ஆனால் இந்த எட்டு வேட்பாளர்களும் தங்கள் படிவங்களைத் திரும்பப் பெற்றனர். இதனால் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில், பாஜக இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நிலேஷ் கும்பனி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், SHEETAL PATEL/BBC

காங்கிரஸ் தலைவரும் நவ்சாரி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான நைஷாத் தேசாய் பிபிசி குஜராத்திக்கு அளித்த பேட்டியில், “பாஜக சூரத்தில் உள்ள மெரிடியன் ஹோட்டலுக்கு ஏழு சுயேச்சை வேட்பாளர்களையும் வரவழைத்து, வேட்புமனுக்களை திரும்பப் பெற சொன்னதாக" கூறினார்.

“பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பியாரேலால் பார்தி மட்டும் அவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார். எனவே பாஜக தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, குற்றப்பிரிவு காவல்துறையை வைத்து அவருக்கு எதிராகக் காய் நகர்த்தியது. காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவரை மத்திய பிரதேசத்தில் இருந்து அழைத்து வந்தனர். பின்னர் அவரது வேட்புமனுவும் திரும்பப் பெறப்பட்டது," என்றார்.

ஆனால், அனைத்து குற்றச்சாட்டுகளையும் பாஜக மறுத்துள்ளது. முகேஷ் தலாலின் வெற்றி விதிகளின்படிதான் அறிவிக்கப்பட்டது என்றும், கட்சி மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் பாஜக தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பனியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பின்னர் அவரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை என்கிறது சூரத் வட்டாரம். அவரது வீடும் பூட்டப்பட்டுள்ளது. கும்பனி எங்கே என்று காங்கிரஸ் தலைவர்களுக்கே தெரியாதா?

மறுபுறம், காங்கிரஸ் தொண்டர்கள் கும்பனியின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். அவரது வீட்டிற்கு வெளியே ’துரோகி’ என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டினர். ஆர்ப்பாட்டம் செய்தவர்களை காவல்துறை கைது செய்தது.

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், ANI

நிலேஷ் கும்பனி கடைசியாக 21ஆம் தேதி காலை விசாரணைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார், அவருடன் சில காங்கிரஸ் தலைவர்களும் வந்தனர். சிறிது நேரம் கழித்து கும்பனி அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. காங்கிரஸ் தலைவர்களும் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

பிபிசி குஜராத்தியிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் அஸ்லம் சைகல்வாலா, "21ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு நிலேஷ் கும்பனியுடன் தொலைபேசியில் உரையாடினேன். நான் எதிலும் சம்பந்தப்படவில்லை என்று அவர் கூறினார். நான் எதுவும் சொல்லும் நிலையில் இல்லை, என் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்றும் கும்பனி கூறினார். அதன்பிறகு நான் அவருடன் பேசவில்லை,” என்றார்.

மேலும் பேசிய அஸ்லாம் சைகல்வாலா, "கும்பனியின் மூன்று ஆதரவாளர்கள் பற்றி கட்சிக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை. அவரின் வேட்புமனுவுக்கு யார் ஆதரவு கொடுப்பார்கள் என்பதை கும்பனியே முடிவு செய்திருந்தார். அதன்பிறகுதான் அவர்களின் பெயர்கள் கட்சிக்கு தெரிய வந்தது," என்றார்.

கும்பனி மீது குற்றம்சாட்டிய அவர், "எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு நடந்ததாகத் தெரிகிறது. இது மிகப்பெரிய சதி. கும்பனி இனி வெளியே தலைகாட்ட முடியாது. மக்களை எதிர்கொள்ள முடியாது," என்றார்.

இந்தச் சம்பவம் முழுக்க முழுக்க பாஜகவின் உத்தரவின் பேரில் நடந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டிய நிலையில், பாஜக அதை மறுத்துள்ளது.

ஏப்ரல் 21ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஏப்ரல் 22ஆம் தேதி முகேஷ் தலால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் 24 மணிநேரத்தில் நடந்தது.

நிலேஷ் கும்பனி எங்கே?

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

சூரத்தின் சர்தானா பகுதியில் உள்ள ஸ்வஸ்திக் டவரில் நிலேஷ் கும்பானி வசித்து வருகிறார். பிபிசி குஜராத்தி குழு கும்பனியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அது பூட்டப்பட்டிருந்தது. அங்கு சில காவல்துறை அதிகாரிகள் இருந்தனர். கும்பனி வீட்டில் யாரும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அஸ்லம் சைகல்வாலா பேசுகையில், "கும்பனி தற்போது கோவாவில் அவரது குடும்பத்தினருடன் இருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் அவரைத் தொடர்புகொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறோம், ஆனால் முடியவில்லை," என்றார்.

காங்கிரஸ் தலைவர் நைஷாத் தேசாய் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "கும்பனியின் வேட்புமனுவை ரத்து செய்யக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். ஆனால் அவர்கள் யாருமே தொடர்பில் இல்லை. பிரமாணப் பத்திரத்தின் நகலை இதுவரை எங்களிடம் தரவில்லை. அதை வைத்துத்தான் நாங்கள் மனு தாக்கல் செய்ய முடியும்.

கும்பனி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த விதத்தைக் கருத்தில் கொண்டு, அதன் நகல் எதுவும் கொடுக்கப்படவில்லை என்பதால் அவரது நடவடிக்கை சந்தேகத்திற்கு உரியதாகத் தெரிகிறது. கும்பனி பாஜகவில் சேரலாம் என்ற ஊகங்கள் உள்ளன,” என்றார்.

வேட்புமனு படிவத்தில் இருந்த ஆதரவாளர்களின் கையெழுத்து போலியானது என்பது தெரிய வந்தது எப்படி?

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், @BJP4GUJARAT

சூரத் நகர பாஜக தலைவர் நிரஞ்சன் ஜான்ஸ்மேரா பிபிசி குஜராத்திக்கு அளித்த பேட்டியில், "நிலேஷ் கும்பனியின் வேட்புமனுவில் முரண்பாடு இருப்பதை அறிந்ததும், கட்சித் தலைவர்கள் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டனர். கும்பனியின் படிவத்தில் உள்ள ஆதரவாளர்களின் கையெழுத்து போலியானது என்று கலெக்டரிடம் பிரமாணப் பத்திரம் (affidavit) கொடுத்தோம். அதனால் அவரது வேட்புமனு ரத்து செய்யப்பட்டது.”

ஆனால், கும்பனி தரப்பு வழக்கறிஞர் ஜமீர் ஷேக் கூறுகையில் "கடந்த 19ஆம் தேதி படிவங்களைச் சரிபார்க்கும்போது, பாஜக தேர்தல் முகவர் ஆட்சேபனை தெரிவித்தார். கலெக்டரிடம் ஆதரவாளர்கள் தங்கள் கையெழுத்து போலியானது எனச் சொல்வதற்கு முன்னரே இந்த வேட்புமனுவில் பிரச்னை இருக்கிறது என, பாஜகவுக்கு எப்படி தெரியும்?” என்று சந்தேகம் எழுப்புகிறார்.

காங்கிரஸ் தலைவரின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பாஜக வேட்பாளர் முகேஷ் தலாலுக்கு எதிராக சுயேச்சை மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆனால், கடைசி நாளில் அனைவரும் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.

இதுகுறித்து, ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே, காங்கிரஸ் வேட்பாளரின் வேட்பு மனு ரத்து செய்யப்பட்ட பின், சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் பிற வேட்பாளர்களைத் தொடர்பு கொண்டு, படிவங்களைத் திரும்பப் பெறும்படி பாஜக கூறியதை ஒப்புக்கொண்டார்.

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

”பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்கிறதா?” எனக் குறிப்பிட்டு சூரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனு ரத்து செய்யப்பட்டதைப் பற்றி வினோத் தாவ்டேவிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, "எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தவறான முறையில் வேட்பு மனு படிவத்தை நிரப்பினால் ஆட்சேபனை தெரிவிப்பது கீழ்த்தரமான அரசியல் அல்ல. சுயேச்சை வேட்பாளர்களிடம் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறச் சொல்லியிருந்தால் அதுதான் கீழ்த்தரமான அரசியல். ஆனால் அவர்கள் படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்பிக்கும் முன்னரே அவர்களிடம் நாங்கள் சுமூகமாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம்," என்றார்.

பாஜக தரப்பில் சுயேச்சை வேட்பாளர்களைத் தொடர்புகொண்டு வேட்பு மனுக்களைத் திரும்ப பெறச் சொன்னதை ஒப்புக் கொள்கிறீர்களா என அவரிடம் செய்தியாளர் கேட்டபோது, ``ஆம், வேட்பு மனுவை திரும்பப் பெறுமாறு அனைத்து வேட்பாளர்களையும் தொடர்பு கொண்டு பேசினோம். ஆனால் அவர்கள் வேட்பு மனு படிவத்தை நிரப்புவதற்கு முன்பே அவர்களைச் சம்மதிக்க வைக்க முயன்றோம். பாஜக எப்போதுமே தேர்தல் ஆணைய விதிகளின்படிதான் தேர்தலில் வெற்றி பெறப் போராடும்," என்றார்.

நிலேஷ் கும்பனியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட பிறகு, மற்ற வேட்பாளர்களின் பங்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், எட்டு வேட்பாளர்களில் ஏழு பேர் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பியாரேலால் பார்தியின் வேட்புமனு வாபஸ் பெறப்படவில்லை.

அழுத்தம் கொடுக்கும் அரசியல் செய்யப்படுகிறதா?

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து நவ்சாரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நைஷாத் தேசாய் கூறுகையில், "பகுஜன் சமாஜ் கட்சியின் அஷ்வின் பரோட், சுரேஷ் சோனாவனே ஆகியோரிடம் போனில் பேசினோம். வேட்பாளர் பியாரேலாலுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டது. அவரை குஜராத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லுமாறு அவர்களிடம் கூறினோம். ஆனால் திங்கள்கிழமை மதியம் 2 மணியளவில் திடீரென அவரின் வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டது. சூரத்தில் தேர்தல் பற்றிய எங்களின் நம்பிக்கை சுக்குநூறானது,” என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சூரத் மாவட்டத் தலைவர் சதீஷ் சோனாவனே கூறுகையில், கடந்த சில நாட்களாக சூரத்தில் நடந்த சம்பவங்களைp பார்த்தபோது அங்கு நிலவும் சூழலை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. எங்கள் வேட்பாளருக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று யூகித்தோம், எனவே நாங்கள் பியாரேலாலை தலைமறைவாக்க எண்ணினோம்.

அவர் எங்களுடன் தொடர்பில்தான் இருந்தார். ஆனால் திங்கட்கிழமை முதல் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. நாங்கள் அவரைத் தேடிக் கொண்டிருந்தபோது, பியாரேலால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றதை ஊடகங்கள் மூலம் அறிந்தோம்.

விஷயம் கேள்விப்பட்டதும் ஆட்சியர் அலுவலகத்துக்கு விரைந்தோம். ஆனால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டதாகச் சொன்னார்கள. அதன்பிறகு எந்தத் தொடர்பும் இல்லை,” என்றார்.

பிபிசி குஜராத்தி பியாரேலாலுடன் பேச முயற்சி செய்தபோது, அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

மற்றொரு சுயேச்சை வேட்பாளரான ரமேஷ் பரைய்யாவை தொடர்பு கொண்டோம். இதுகுறித்து ரமேஷ் பரைய்யா கூறுகையில், "நான் காங்கிரஸ் தலைவரைத் தொடர்பு கொண்டு, எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டேன். ஆனால், அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மேலும் செலவுகள் குறித்து காங்கிரசிடம் பேசியபோதும் எந்தப் பதிலும் இல்லை. எனவே பாஜகவுக்கு எதிராகப் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதனால் எனது வேட்புமனுவை வாபஸ் பெற்றேன்," என்றார்.

சூரத்: பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றது எப்படி? திருப்பங்கள் அரங்கேறியதன் பின்னணி

பட மூலாதாரம், RUPESH SONWANE

எனினும், ஏதாவது பெருந்தொகை அல்லது அழுத்தம் காரணமாக வேட்புமனுவை வாபஸ் பெற்றாரா என்று ரமேஷ் பரைய்யாவிடம் கேட்டபோது "இல்லை, எனக்குப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை. என் மீது எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. நான் தானாக முன்வந்து எனது வேட்புமனுவை வாபஸ் பெற்றேன்," என்று கூறினார்.

சதியில் ஆதரவாளர்களின் பங்கு என்ன?

ரமேஷ்பாய் பல்வந்த்பாய் போலரா, ஜகதீஷ் நாக்ஜிபாய் சவாலியா மற்றும் துருவின் திருபாய் தமேலியா ஆகியோர் நிலேஷ் கும்பனியின் ஆதரவாளர்களாக வேட்பு மனுவில் கையெழுத்திட்டனர். ஜகதீஷ் சவாலியா நிலேஷ் கும்பனியின் மைத்துனர், துருவின் தமேலியா அவரது மருமகன் மற்றும் ரமேஷ் போலாரா அவரது வணிகப் பங்குதாரர்.

இந்த மூன்று பேரும் நிலேஷ் கும்பனியுடன் தனிப்பட்ட முறையில் தொடர்பு உள்ளவர்கள். அப்படியிருக்க அவர்கள் மூவரும், கும்பனி வேட்பு மனுவில் தங்களின் கையெழுத்து பொய்யானது என ஆட்சியர் அலுவலகம் சென்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு இந்த மூன்று ஆதரவாளர்களும் தலைமறைவாகி விட்டனர்.

ஜமீர் ஷேக், "இந்த விவகாரத்தில் ஆதரவாளர்களின் பங்கும் , கும்பனியின் நடவடிக்கையும் சந்தேகத்திற்கு உரியது. எல்லாம் திட்டமிட்ட சதி எனத் தெளிவாக தெரிகிறது" என்று குற்றம் சாட்டுகிறார்.

கும்பனி முதலில் உம்ரா காவல் நிலையத்திற்குச் சென்று தனது ஆதரவாளர்கள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர்கள் காணாமல் போனார்கள். ஆதரவாளர்கள் கடத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து சூரத் முன்னாள் மேயர் ஜெகதீஷ் படேல் கூறுகையில், "தேர்தல் வந்தாலும் இல்லாவிட்டாலும், பாஜகவை குற்றம் சாட்டுவது காங்கிரஸ் தலைவர்களின் வேலை. அனைவரின் முன்னிலையிலும்தான் படிவங்கள் நிரப்பப்பட்டன?" என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)