சென்னை, கோவை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி?

வாக்குப்பதிவு தரவுகளில் முரண்பாடு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதிக்கு முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

இதில் மாலை 7 மணியளவில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகளுக்கும், இரவு 12.15 மணியளவில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஒட்டுமொத்த தமிழக வாக்குப்பதிவு தரவுகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

கோவை, சென்னை, தருமபுரி தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி? தேர்தலின் போது சராசரி வாக்குப்பதிவு சதவீதத்தை எவ்வாறு கணக்கிடுவார்கள்? அதுகுறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் என்னென்ன தகவல்கள் இடம்பெற்றிருந்தன?

மக்களவைத் தேர்தல் 2024

இந்தியாவில் ஏப்ரல் 19இல் தொடங்கியுள்ள 18வது மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள தொகுதிகளும் அடங்கும்.

தமிழ்நாடு முழுவதும் 72.09% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளதாகவும், இதில் தருமபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய தொகுதிகள் வாக்குப்பதிவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளதாகவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு நேற்று இரவு தெரிவித்திருந்தார்.

ஆனால், நள்ளிரவு வேளையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு விகித தரவுகள், தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக கூறின.

இரவு ஏழரை மணியளவில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு வெளியிட்ட தரவு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவு இரண்டுக்கும் இடையே மூன்று சதவீதத்திற்கும் அதிகமான வித்தியாசம் இருந்தது. குறிப்பாக, பெரிதும் எதிர்பார்க்கப்படும் நட்சத்திர தொகுதிகளாக கருதப்படும் சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல தொகுதிகளிலும் வாக்குப்பதிவு வித்தியாசம் கணிசமாக இருந்தது. இதற்கு முந்தைய எந்தவொரு தேர்தலிலும் இதுபோன்ற பெரிய வித்தியாசம் இருந்ததில்லை.

மக்களவைத் தேர்தல்
படக்குறிப்பு, 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 7 மணி வாக்குப்பதிவு எண்ணிக்கையை விட, 12.15 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குவிகிதம் குறைந்துள்ளது.

வாக்கு விகித முரண்பாடு

சென்னையின் மூன்று தொகுதிகள், மதுரை, ஸ்ரீபெரும்புதூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை ஆகிய தொகுதிகளில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி 7 மணிக்கு வெளியிட்ட வாக்குவிகிதத்தை விட, இரவு 12.15 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு விகிதத்தில் பெரும் சரிவு காணப்படுகிறது.

கள்ளக்குறிச்சி, தருமபுரி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், அரக்கோணம், சேலம் ஆகிய தொகுதிகளில் 7 மணி வாக்குவிகிதத்தை விட, 12.15 மணி வாக்குவிகிதம் 4 முதல் 5% உயர்ந்துள்ளது.

மக்களவைத் தேர்தல்
படக்குறிப்பு, ஒரு சில தொகுதிகளில் 7 மணி வாக்குப்பதிவு எண்ணிக்கையை விட, 12.15 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குவிகிதம் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது 7 மணியளவில் தமிழ்நாட்டில் வாக்குவிகிதம் 72.09% என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார். ஆனால், இரவு 12.15 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட சராசரி வாக்குவிகிதம் 69.46% என்று கூறப்பட்டுள்ளது. இதை முந்தைய அளவோடு ஒப்பிடுகையில் 12.15 மணிக்கு வெளியிடப்பட்ட வாக்குவிகிதத்தில் 2.63% குறைந்துள்ளது.

இந்த 2.63% வேறுபாடு தான் தற்போது தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால், இதில் எந்த முரண்பாடும், குளறுபடியும் இல்லை என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான என்.கோபால்சாமி.

வாக்குப்பதிவு முரண்பாடு ஏன்?

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, என். கோபால்சாமி, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

வாக்கு விகிதம் கணக்கீடு எப்படி?

ஒவ்வொரு தேர்தலின் போதும் எப்படி வாக்குப்பதிவு விகிதம் வெளியிடப்படுகிறது என்பதை கோபால்சாமி பிபிசி தமிழிடம் விளக்கமாக கூறினார்.

“தேர்தல் நடக்கும் போது ஒவ்வொரு மண்டலத்திலும் குறிப்பிட்ட வாக்குசாவடிகளுக்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரி அவ்வப்போது கொடுக்கும் தோராய கணக்கே அடிக்கடி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும்.”

“இதனடிப்படையில் தான் வாக்குப்பதிவு முடியும் சமயத்திலும் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு விகிதம் என்ன என்றும் தெரிவிக்கப்படும். ஆனால், அதுவும் இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல் கிடையாது.”

“ஒவ்வொரு வாக்காளரும் வாக்கு செலுத்தும்போது, 17A என்ற படிவத்தில் கையெழுத்திடுவார்கள். அப்படி இந்த படிவத்தில் எத்தனை வாக்காளர்கள் கையெழுத்திட்டுள்ளார்கள் என்பதை வாக்குப்பதிவு முடிந்த பிறகு கணக்கிட்டு 17C என்ற படிவத்தில் நிரப்புவார்கள். இதை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த பிறகு, அவர்கள் இந்த வாக்குப்பதிவு விகிதத்தை அதற்கான மென்பொருளில் பதிவேற்றம் செய்து இறுதி விகிதத்தை வெளியிடுவார்கள்.

அதுவே இறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்” என்று கூறுகிறார் கோபால்சாமி.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 17C என்ற படிவத்தில் நிரப்பப்படும் எண்ணிக்கையே இறுதியான வாக்குப்பதிவு எண்ணிக்கை.

தவறு எங்கே நடக்கிறது?

சத்யபிரதா சாகு மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகிய இருவரும் வெளியிட்ட தரவுகளை ஒப்பிடுகையில் பல இடங்களில் கணிசமாக வித்தியாசம் காணப்படுகிறது. இதனால், வாக்குப்பதிவு விகிதத்தை கணக்கிடுவதில் ஏதேனும் குளறுபடி நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இதுகுறித்து கோபால்சாமியிடம் கேட்கையில், “இதில் தவறு நடக்க சாத்தியமே இல்லை" என்று உறுதியாக கூறுகிறார்.

“தேர்தல் அதிகாரிகளை உடனுக்குடன் அப்டேட் கேட்டு ஊடங்கள் அழுத்துவதே இந்த முரண்பாட்டுக்கு காரணம். ஒரு மண்டல தேர்தல் அதிகாரி ஒவ்வொரு பூத்துக்கும் சென்று அங்கு பதிவாகியுள்ள வாக்குகளை தோராயமான கணக்கெடுத்து மேலே தெரிவிப்பதற்கு முன்பே அங்கு கணக்கு மாறிவிடும். எனவே அதற்கு ஏற்றாற்போல் அவரும் முன்பின் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மதிப்பிட்டு கூறுவார். எனவே இயல்பாகவே இந்த சதவீதத்தில் வித்தியாசம் இருக்கும்” என்கிறார் அவர்.

மக்களவைத் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 17C படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாக்குக்கும், எண்ணப்படும் வாக்குக்கும் இடையே முரண்பாடு இருந்தால் சந்தேகம் எழுப்பலாம் என்கிறார் கோபால்சாமி.

எப்போது சந்தேகம் எழுப்ப வேண்டும்?

"தேர்தலில் பதிவான வாக்கு விகிதத்தில் சந்தேகம் எழுப்ப தேவையில்லை. ஆனால், வாக்கு எண்ணிக்கை நாளன்று 17C படிவத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாக்குக்கும், எண்ணப்படும் வாக்குக்கும் இடையே ஒரு வாக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் கூட சந்தேகம் எழுப்பலாம்" என்கிறார் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி கோபால்சாமி.

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் இதுகுறித்து பேசுகையில், "அவரும் இது தேர்தல் நடத்தும் அதிகாரிகள் செய்துள்ள கணக்கீட்டு தவறே தவிர, தேர்தலில் எந்த வித குளறுபடியும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை" என்றே கூறினார்.

பதிவான வாக்குகளை கணக்கிடுவதில் என்ன தவறு நடந்தது? எப்படி 72.09% என்று வாக்குவிகிதம் அப்படியே 3% குறைய முடியும் என்பதை தேர்தல் ஆணையமே தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறுகிறார் அவர்.

வாக்குப்பதிவு தரவுகளில் முரண்பாடு

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் ஆணையம் அறிக்கை

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் சதவீதத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவற்றிற்கெல்லாம் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நண்பகல் 12 மணிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த சந்திப்பு ரத்து செய்யப்ட்டு விட்டது. அதன் பின்னர் மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் சார்பில் விளக்க அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்டபடியே, இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து இரவு 7 மணியளவில் அறிக்கை ஒன்று வெளியானது. அதில், நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது போன்றே தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்த தரவுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

சத்யபிரதா சாகு வெளியிட்ட தரவுகளுக்கும், தேர்தல் ஆணையத்தின் தரவுகளும் இடையே பெரிய வித்தியாசம் இருந்தது ஏன்? வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏன் இந்த முரண்பாடு? என்பதற்கான விளக்கம் ஏதும் அந்த அறிக்கையில் இடம்பெறவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)