பவளப்பாறைகள் அழிவால் கடலில் பாதை மறந்து திண்டாடும் மீன்கள் - என்ன காரணம்?

உயரும் கடல் வெப்பம், ஆபத்தில் பவளப் பாறைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன.
    • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
    • பதவி, பிபிசி காலநிலை நிருபர்

கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன.

கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது.

கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும்.

அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது.

வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.

காலநிலை மாற்றத்தின் விளைவு

உயரும் கடல் வெப்பம், ஆபத்தில் பவளப் பாறைகள்

பட மூலாதாரம், AIMS

படக்குறிப்பு, பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, ​​அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள்.

கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, ​​முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன.

அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது.

வெப்பநிலை உயர்வு: பவளப்பாறைகள் அழிவால் திண்டாடும் மீன்கள் - கோபத்தில் விஞ்ஞானிகள்

பட மூலாதாரம், Getty Images

நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது.

இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது.

"கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.

பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா?

உயரும் கடல் வெப்பம், ஆபத்தில் பவளப் பாறைகள்

பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது.

அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும்.

அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும்.

முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது.

பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

"இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.

உயரும் கடல் வெப்பம், ஆபத்தில் பவளப் பாறைகள்

பட மூலாதாரம், Australian Institute of Marine Science

படக்குறிப்பு, பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது.

ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, ​​அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும்.

"ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப்.

கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது.

சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது.

மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)