விஜயகாந்த் மீதான மக்களின் அபிமானம் தேமுதிகவுக்கு கைகொடுத்ததா? ஓராண்டில் கண்ட மாற்றம் என்ன?

தேமுதிக, விஜயகாந்த் நினைவு தினம்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, சென்னையில் நடைபெற்ற தேமுதிக பேரணியின் ஒரு காட்சி.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் முதல் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சனி அன்று (டிசம்பர் 28) சென்னையில் அக்கட்சித் தொண்டர்கள் அமைதிப் பேரணியை நடத்தினர்.

விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அனுதாபத்தை அரசியல் ரீதியாக பிரேமலதா தக்க வைத்துக் கொண்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், இதற்கு மாற்றான கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

விஜயகாந்த் மீதான மக்களின் அனுதாபத்தை அவரது மறைவுக்குப் பிறகு தேமுதிக தக்கவைத்துக் கொண்டதா? தமிழ்நாடு அரசியலில் உண்மையில் என்ன நடக்கிறது?

தேமுதிக, விஜயகாந்த் நினைவு தினம்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவை அறிந்து மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தேமுதிகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு சரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்தக் கூட்டம் கவனத்தைப் பெற்றது.

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின பேரணி

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கட்சித் தொண்டர்களுடன் அமைதிப் பேரணி நடத்தினார்.

தேமுதிக அலுவலகத்தில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேமுதிக, விஜயகாந்த் நினைவு தினம்

பட மூலாதாரம், HANDOUT

விஜயகாந்தின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'மாசற்ற மனதுக்கும் தூய அன்புக்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் விஜயகாந்தை நினைவுகூர்வதாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நாம் கட்சியின் சீமான், 'அவரால் வாழ்ந்தவர்கள் பலர். ஆனால், வீழ்ந்தவர்கள் என்று யாரும் இல்லை' எனக் கூறினார்.

விஜயகாந்த் மீதுள்ள பற்றின் காரணமாக அவரது முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அரசு சார்பில் முதலமைச்சர் தன்னை அனுப்பி வைத்ததாக தமிழ்நாடு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அதேநேரம், விஜயகாந்த் மறைவு நாளில் திரண்ட கூட்டமும் அதன் பிறகான தேமுதிகவின் கடந்த ஓராண்டு அரசியல் பயணமும் பேசுபொருளாக மாறியுள்ளன.

தேமுதிக, விஜயகாந்த் நினைவு தினம்

பட மூலாதாரம், HANDOUT

தேமுதிகவுக்கு பலன் கிடைத்ததா?

"2016 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்தின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இது அக்கட்சிக்கு சரிவை ஏற்படுத்தியது. ஆனால் அவரது மரணத்துக்குப் பிறகு கூடிய கூட்டத்தால் அக்கட்சிக்கு புத்துணர்வு கிடைத்தது" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா.

"தேமுதிகவுக்கு பொதுமக்களின் அனுதாபமும் கிடைத்தது. அதைத் தக்க வைத்துக் கொண்டு கட்சியை வளர்ப்பதில் பிரேமலதா கவனம் செலுத்தி வருகிறார்" எனவும் பிபிசி தமிழிடம் துரை.கருணா தெரிவித்தார்.

ஆனால், மற்றொரு மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமோ, "விஜயகாந்த் மீது மக்கள் வைத்துள்ள அபிமானம், அவரது இறப்பின் போது வெளிப்பட்டது. ஆனால், அது அரசியல் கட்சித் தலைவர் என்பதற்கான அபிமானமாக இல்லை. அவரது செயல்பாடுகளும் சினிமா பின்புலமும் பிரதான காரணமாக இருந்தன" என்கிறார்.

விஜயகாந்தின் தொடக்க கால அரசியல் என்பது தி.மு.க, அ.தி.மு.க எதிர்ப்பு ஆகியவற்றை மையப்படுத்தி இருந்ததாக கூறும் ஷ்யாம், "2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது. இதன் பிறகே விஜயகாந்துக்கு அரசியல் ரீதியாக சரிவு ஏற்பட்டது" என்கிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் உச்சக்கட்ட வளர்ச்சி என்பது 2011 தேர்தல் முடிவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றது தான். அதன் பிறகு அவரது கட்சி எம்எல்ஏக்களில் பலரும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர்" என்கிறார்.

"தேமுதிகவை பிரேமலதா வழிநடத்தினாலும் அவரால் விஜயகாந்தின் பிரபலத்தை ஈடுகட்ட முடியாது. விஜயகாந்துக்கு சினிமா பின்னணி இருந்தது" எனவும் கூறுகிறார் ஷ்யாம்.

தேர்தல் முடிவு சொல்வது என்ன?

 பிரேமலதா விஜயகாந்த்

பட மூலாதாரம், Handout

படக்குறிப்பு, "தேமுதிகவை பிரேமலதா வழிநடத்தினாலும் அவரால் விஜயகாந்தின் பிரபலத்தை ஈடுகட்ட முடியாது" எனவும் கூறுகிறார் ஷ்யாம்.

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் தோல்வி வித்தியாசத்தைக் குறைப்பதில் தேமுதிகவின் அடிப்படை வாக்கு வங்கி ஓரளவுக்கு கை கொடுத்ததாக கூறுகிறார், அரசியல் விமர்சகர் கா.அய்யநாதன்.

"தேமுதிக பலமாக உள்ளதாகப் பார்க்கப்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர் போன்ற இடங்களில் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியைத் தழுவின" என்கிறார் கா.அய்யநாதன்.

கடநத் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் நான்கு இடங்களில் தேமுதிக போட்டியிட்டது. இதில், கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகளில் தேமுதிகவுக்கு இரண்டாம் இடம் கிடைத்தது.

விருதுநகரில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு அவர் கடும் நெருக்கடி கொடுத்தார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில், அதாவது 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓரிடம் கூட கிடைக்காவிட்டாலும் தேமுதிகவுக்கு கிடைத்த வாக்கு சதவீதம் அக்கட்சித் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்தது.

"நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, மீண்டும் தேமுதிக அதன் பழைய பலத்தோடு எழுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்பது முக்கியம்" என்கிறார் கா.அய்யநாதன்.

இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் ஷ்யாம், "நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதி மட்டுமே தேமுதிகவுக்கு ஆறுதல் கொடுத்தது. ஆனால், அதன்பிறகு விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைத் தக்கவைப்பதற்கான வேலைகளை தேமுதிக செய்யவில்லை" என்கிறார்.

தேமுதிக, விஜயகாந்த் நினைவு தினம்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, பிரேமலதா விஜயகாந்த்

மாநிலங்களவையில் இடம் கிடைக்குமா?

அடுத்ததாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குவதாக அதிமுக அளித்த உறுதிமொழியை பிரதானமாகப் பார்க்கின்றனர், அரசியல் விமர்சகர்கள்.

இதைப் பற்றி கடந்த மார்ச் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் உறுதியாகிவிட்டது. அது வெற்றிலை பாக்கு மாற்றப்பட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது. யாருக்கு சீட் என்பதைப் பிறகு கூறுகிறேன்" என்றார்.

இதை சுட்டிக்காட்டிப் பேசிய மூத்த பத்திரிகையாளர் துரை.கருணா, "அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டால் அக்கட்சியின் அரசியல் பயணத்தில் சற்று வேகம் இருக்கும்" என்கிறார்.

அதேநேரம், அதிமுகவின் நிலைப்பாடு குறித்த சந்தேகத்தையும் அவர் முன்வைக்கிறார்.

"தற்போது சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 61 எம்எல்ஏக்கள் உள்ளனர். ராஜ்யசபா சீட்டை பெறுவதற்கு 34 இடங்கள் வேண்டும். இரண்டு இடங்களைப் பெறுவதற்கு 68 எம்எல்ஏக்கள் வேண்டும். ஒரு சீட் மட்டும்தான் கிடைக்கும் என்றால் அதை தேமுதிகவுக்கு அதிமுக ஒதுக்குமா என்ற கேள்வியும் எழுகிறது" என்கிறார் துரை.கருணா.

தேமுதிக, விஜயகாந்த் நினைவு தினம்

பட மூலாதாரம், X/DMDK

கூட்டணியில் தேமுதிகவை எதிர்பார்ப்பது ஏன்?

மாநிலம் முழுவதும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு வலுவான கட்டமைப்பு உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அதை நோக்கி பாஜக பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், தேமுதிகவின் கட்டமைப்பு பலமானதாக இல்லை" என்கிறார்.

"மக்களிடம் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் களத்தில் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். பத்திரிகையாளர் சந்திப்புகளோ, போராட்டங்களோ பெரியளவில் கை கொடுக்காது" என்பது அவரது கருத்து.

தமிழக அரசியலில் 2 அல்லது 3 சதவீத வாக்குகள் உள்ள கட்சியை தங்கள் பக்கம் வைத்திருப்பதை பெரிய கட்சிகளும் முக்கியமானதாகப் பார்ப்பதாகக் கூறுகிறார் ஷ்யாம்.

"தேமுதிக தங்கள் பக்கம் இருந்தால் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் கணிசமான வாக்குகள் கிடைக்கும் என அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கருதுகின்றன" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"தங்கள் கட்சி தனியாக வெற்றி பெற முடியாது என்பதை தேமுதிக தொண்டர்கள் அறிவார்கள். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு வெற்றிக் கூட்டணி அமைய வேண்டும் என்பதைத் தான் அவர்களும் விரும்புகின்றனர்" என்கிறார் ஷ்யாம்.

அந்தவகையில் வரும் காலங்களில் அரசியல் ரீதியாக தேமுதிக எடுக்கப் போகும் முடிவுகள், அக்கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக அமையும் எனவும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.

தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் விளக்கம்

விஜயகாந்த் மறைவுக்கு பிந்தைய கடந்த ஓராண்டில் தேமுதிகவின் செயல்பாடுகள் குறித்த அரசியல் விமர்சகர்கள் மற்றும் மூத்த பத்தரிகையாளர்களின் கருத்து பற்றி தேமுதிக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பார்த்தசாரதியிடம் பிபிசி தமிழ் பேசினோம்.

"விஜயகாந்த் இறந்த பிறகும் தேமுதிகவுக்குப் புத்துணர்வைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். பொதுமக்களும் அவர் செய்த உதவிகளை கேள்விப்பட்டு, கட்சிக்கு ஒரு வாய்ப்பைக் கொடுக்காமல் தவற விட்டுவிட்டதை எண்ணிப் பார்க்கிறார்கள்" என்றார் அவர்.

தேமுதிகவின் உள் கட்டமைப்பு தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த பார்த்தசாரதி, "பொங்கல் முடிந்த பிறகு மாநிலம் முழுவதும் பொதுச்செயலாளர் பிரேமலதா சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டுள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பை மேலும் வலுவாக்கும் விதமாக இந்தப் பயணம் அமையும்" என்று பார்த்தசாரதி கூறினார்.

ராஜ்யசபா சீட் தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த அவர், " அதைப் பற்றி இப்போது பேச வேண்டியதில்லை. ராஜ்யசபா தேர்தல் வரும் போது அதிமுக என்ன சொல்கிறது என்பதைப் பொறுத்து தான் பதில் அளிக்க முடியும்" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)