விஜயகாந்த்: தமிழக அரசியல் களத்தை அதிரவைத்தவர்

விஜயகாந்த்

பட மூலாதாரம், DMDK Facebook

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற வலுவான இரு துருவ அரசியல் களத்தில் மூன்றாவது துருவமாக உருவெடுத்து, எல்லோரையும் அதிரவைத்தார் விஜயகாந்த். ஆனால், அது நீண்ட காலத்திற்கு நீடிக்காமல் போனது ஏன்?

தி.மு.கவின் பொருளாளராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், அதிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் துவங்கி, விரைவிலேயே தமிழக முதலமைச்சராகவும் ஆன பிறகு, தமிழ் திரைப்பட உலகில் மிக பிரபலமாக இருப்பவர்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்த பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டுவந்தன.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு இந்த அனுமானங்களும் கணிப்புகளும் வெகுவாகவே அதிகரித்தன. ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு தனது திரைஉலக செல்வாக்கால் அரசியலில் ஓரளவுக்காவது சாதித்தவர் என விஜயகாந்தை மட்டுமே சொல்ல முடியும்.

கேப்டன் விஜயகாந்த் மறைவு

பட மூலாதாரம், Getty Images

அரசியல் அடித்தளம்

நீண்ட காலமாக அரசியல் தொடர்பான கருத்துகளை முன்வைத்துவந்த ரஜினிகாந்த் போன்ற நடிகர்களே தயக்கம்காட்டிவந்த நிலையில், துணிச்சலாக அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கும் முடிவை எடுத்தார் விஜயகாந்த்.

2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கிய விஜயகாந்த், 2006ஆம் ஆண்டு தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று மூன்றாவது சக்தியாக உருவெடுத்தார்.

2006ஆம் ஆண்டு தேர்தலில், தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார் என்றாலும், ஒட்டுமொத்தமாக 27 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. இது தமிழக அரசியல் களத்தில் ஒரு மூன்றாவது சக்தியாக விஜயகாந்த் உருவெடுப்பதைச் சுட்டிக்காட்டியது.

"அந்தத் தருணத்தில் அவரது வெற்றி மிக முக்கியமானதாக இருந்தது. அந்தத் தேர்தலில் விஜயகாந்த் ஒருவர்தான் வெற்றிபெற்றிருந்தார் என்றாலும், அது மிகப் பெரிய வெற்றியாகத்தான் இருந்தது. அந்தத் தருணத்தில் தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி உடைந்தால் தே.மு.தி.க. பெரிதாக உருவெடுக்கும் என எல்லோருமே நினைத்தார்கள்" என நினைவுகூர்கிறார் தமிழக அரசியல் வரலாறு குறித்த பல நூல்களின் ஆசிரியரான ஆர். முத்துக்குமார்.

கட்சி துவங்கியபோதும் அதற்குப் பிறகும் தெய்வத்தோடும் மக்களோடும்தான் கூட்டணி என்று ஒவ்வொரு கூட்டத்திலும் சொன்னார் விஜயகாந்த். 2006ஆம் ஆண்டுத் தேர்தலில் வலுவாக இருந்த தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளுக்கு எதிராகத் தனித்துப் போட்டியிட்டு தே.மு.தி.க. 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது.

கேப்டன் விஜயகாந்த் மறைவு

பட மூலாதாரம், Panruti Ramachandran

எதிர்க் கட்சி தலைவரான விஜயகாந்த்

ஆனால், 2009ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தல்கள் நெருங்கியபோது விஜயகாந்த்தின் பார்வையில் சில மாற்றங்கள் தென்பட்டன. தனித்துத்தான் போட்டி என்று சொல்வதற்குப் பதிலாக, "நான் 'கை'காட்டும் இடத்தில் வாக்களிக்கத் தயாராகுங்கள்" என்று சொல்ல ஆரம்பித்தார் விஜயகாந்த்.

இதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற யூகங்கள் எழுந்தன. இந்த யூகங்களை உறுதிசெய்யும் வகையில் இ.வி.எஸ்.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் போன்ற தலைவர்கள் சென்று விஜயகாந்தைச் சந்தித்துப் பேசினார்.

ஆனால், அந்தத் தேர்தலில் தே.மு.தி.க. கூட்டணி எதையும் அமைக்கவில்லை. தனித்தே போட்டியிட்டது. எந்த இடங்களிலும் வெல்ல முடியவில்லையென்றாலும்கூட, 10.3 சதவீத வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. தமிழ்நாட்டில், தி.மு.க. - அ.தி.மு.கவிற்கு ஒரு மாற்றை விரும்பும் வாக்காளர்களின் முதல் தேர்வாக விஜயகாந்த் இருப்பதை அந்தத் தேர்தல் சுட்டிக்காட்டியது.

2011ஆம் ஆண்டில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 எம்.எல்.ஏக்களைப் பெற்று, தி.மு.கவை மூன்றாம் இடத்திற்குத் தள்ளி எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தும் துணைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரனும் அமர்ந்தார்கள். ஆரம்பத்தில், எல்லாம் சுமுகமாகவே சென்றுகொண்டிருந்தது.

ஆனால், ஒரு கட்டத்தில் சட்டமன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் கடுமையாக மோதிக்கொண்டனர். தன்னை எதிர்த்துத் தனித்துப் போட்டியிடும்படி சவால் விடுத்தார் ஜெயலலிதா. அ.தி.மு.கவோடு கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால், இத்தனை இடங்களை தே.மு.தி.க. வென்றிருக்க முடியாது என்றும் கூறினார். கூட்டணி முறிந்தது.

தே.மு.தி.கவின் சட்டமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா. விரைவிலேயே 2011ல் தே.மு.தி.கவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பல எம்.எல்.ஏக்கள் அ.தி.மு.கவிலோ, தி.மு.கவிலோ இணைந்தார்கள்.

கேப்டன் விஜயகாந்த் மறைவு

பட மூலாதாரம், X/Vijayakanth

சரிவை சந்தித்த தேமுதிக

அடுத்த பத்தே ஆண்டுகளில், 2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் 60 இடங்களில் போட்டியிட்டு, வெறும் 0.43 சதவீத வாக்குகளையே பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது தே.மு.தி.க. 2009க்கும் 2021க்கும் இடையில் அக்கட்சி எடுத்த மோசமான முடிவுகள், விஜயகாந்த்தின் உடல் நிலை போன்ற பல அம்சங்கள் இதற்குக் காரணமாக அமைந்தன.

"இனிமேல் கூட்டணி அமைப்பது என்ற முக்கியமான முடிவை 2011ல் விஜயகாந்த் எடுத்தார். அந்தத் தேர்தலில் அவர் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்தபோது, அந்தக் கூட்டணியின் வெற்றியில் அவரது பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இம்மாதிரியான கூட்டணிகள் சில ஆண்டுகளாவது நீடிக்கும். ஆனால், அவர் அவசரப்பட்டு அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டார். இது தே.மு.தி.கவுக்கு பாதகமாகவே இருந்தது.

2014ஆம் ஆண்டின் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. 2016ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலிலும் தே.மு.தி.கவோடு கூட்டணி அமைக்க தி.மு.க. முயன்றது. அது நடக்கவில்லை. கூட்டணி அமைக்கலாம் என முடிவெடுத்த விஜயகாந்த், 2011க்குப் பிறகு சரியான கூட்டணி முடிவுகளை எடுக்கவில்லை. 2016ஆம் ஆண்டின் தோல்விக்குப் பிறகு விஜயகாந்த்தின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது" என்கிறார் முத்துக்குமார்.

விஜயகாந்த்தின் உடல் நலம் மோசமடையாமல் இருந்திருந்திருந்தால், அக்கட்சி தற்போதும் முக்கியமான சக்தியாக இருந்திருக்குமா? "விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் என்று சொல்வதற்கு எந்த அர்த்தமும் கிடையாது. அவர் நன்றாக இருந்த காலத்திலும் தோல்வியைத்தான் சந்தித்தார்" என்கிறார் முத்துக்குமார்.

தமிழ்நாட்டில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டாம் என்ற ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. அந்த வாக்கு வங்கியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் அறுவடை செய்திருக்கிறார்கள்.

80களில் துவக்கத்தில் காங்கிரஸ் அதனை அறுவடை செய்தது. அதனுடைய நீட்சியாகத்தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகியவை இருந்தன. இந்த வாக்கு வங்கிதான் தே.மு.தி.கவாக உருவெடுத்தது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

"கூட்டணி அமைத்தவுடன் அந்த வலிமை போய்விடுகிறது. அதற்குப் பிறகு கட்சி தேய ஆரம்பிக்கிறது. 2021ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.கவும் வேண்டாம், அ.தி.மு.கவும் வேண்டாம் என்று நினைப்பவர்களின் வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் நீதி மய்யத்திற்கும் விழுந்தன" என்கிறார் அவர்.

கேப்டன் விஜயகாந்த் மறைவு

பட மூலாதாரம், Facebook/Vijayakanth

இனிமேல் தே.மு.தி.கவின் எதிர்காலம் என்ன?

"கடந்த தேர்தலோடு தே.மு.தி.கவின் காலம் முடிந்துவிட்டது. விஜயகாந்த்தின் மரணம் இதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. வரும் தேர்தலில் ஒன்று கூட்டணி அமைக்க வேண்டும். இல்லை தனித்து போட்டியிட வேண்டும். ஆனால், அதற்கான சூழல் இல்லை. தே.மு.தி.கவைப் பொறுத்தவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியும். அதுதான் அந்தக் கட்சியின் பலம். வாசனின் தமிழ் மாநில காங்கிரசைவிட சற்றே பலம் கூட்சியாக தே.மு.தி.க. இருக்கும். அவ்வளவுதான்" என்கிறார் முத்துக்குமார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)