கனடா: மாணவர் விசாவில் புதிய மாற்றங்கள் - வெளிநாட்டு மாணவர்களுக்கு மேலும் சிக்கலா?

இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடாவுக்கே சென்று படிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடாவுக்கே சென்று படிக்கின்றனர். (கோப்புக்காட்சி)

வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களின் முக்கிய பிரச்னையான மாணவர் விசா குறித்த ஓர் அறிவிப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.

ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம் இந்த அறிவிப்பைப் பற்றி தெரிவித்தார். அடுத்த ஆண்டு, வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா எண்ணிக்கையை இன்னும் குறைக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.

"இந்த ஆண்டு, 35 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வெளிநாட்டு மாணவர்களுக்கு நாங்கள் விசா வழங்கியுள்ளோம். அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவிகிதம் குறைக்கப்படும்."

"குடியேற்றம் நமது பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும், ஆனால் இந்த திட்டத்தை தவறான விதத்தில் பயன்படுத்தி மாணவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்துபவர்களின் மீது நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கனடா நாட்டில் தற்காலிகமாக வசிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளையும், தனது அரசாங்கம் கடுமையாக்க இருப்பதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

"நாங்கள் குறைந்த ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் பணிக்காலத்தையும் குறைக்க உள்ளோம்".

"கொரோனாவுக்கு பிறகு நாங்கள் இந்த திட்டத்தை சரி செய்ய முயற்சி செய்தோம், ஆனால் தொழிலாளர் சந்தையில் தற்போது மாற்றம் அடைந்துள்ளது. கனடா நாட்டு பணியாளர்களுக்கு வேலை வழங்க எங்களுக்கு அதிக நிறுவனங்களின் முதலீடு தேவை" என்று அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கனடா செல்கின்றனர்

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான இந்திய மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்கின்றனர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடாவுக்கே சென்று படிக்கின்றனர்.

ஆனால் தற்போது கனடா அரசின் இந்த முடிவினால், அந்த மாணவர்களுக்கு இன்னும் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 4 லட்சத்து 27 ஆயிரம் மாணவர்கள் கனடா சென்றுள்ளனர்.

இரண்டாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது, அங்கு 3 லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு சென்றுள்ளனர். இந்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் பிரிட்டனும், நான்காம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் மற்றும் ஐந்தாம் இடத்தில் ஜெர்மனியும் இருக்கிறது.

மாநிலங்களவையில் வெளியிடப்பட்ட தரவுகளின் படி, 2019-ஆம் ஆண்டு 6 லட்சத்து 74 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதற்காக வெளிநாடு சென்றனர், அது 2024-ஆம் ஆண்டு 13 லட்சத்து 35 ஆயிரமாக உயர்ந்து கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது.

இருப்பினும், எந்த மாநிலத்தில் இருந்து எத்தனை மாணவர்கள் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர் என்பது குறித்த மாநில வாரியான தரவுகள் அமைச்சகத்திடம் இல்லை.

கனடா மாணவர்களை விட மற்ற நாடுகளில் படிக்கும் மாணவர்கள் மூன்று மடங்கு அதிக கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டியதாக உள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கட்டணம் மட்டும் கனடா நாட்டின் பொருளாதாரத்திற்கு 22 பில்லியன் கனடிய டாலர்கள் பங்களித்துள்ளது. சுமார் 2.2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என கனடா அரசாங்கத்தின் 2022-ஆம் ஆண்டிற்கான அறிக்கை தெரிவிக்கின்றது.

மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
படக்குறிப்பு, மாணவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விதிகளை மாற்றுவது இது முதன்முறை அல்ல

தனது நாட்டிற்கான மாணவர் விசா குறித்து முதல்முறையாக இந்த அறிவிப்பை கனடா வெளியிடவில்லை. ஏற்கனவே கனடா கல்விக் கட்டணத்தை உயர்த்துவதாகவும் வெளிநாட்டு மாணவர்களுக்கான விதிகளை கடுமையாக்குவதாகவும் அறிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா வழங்கப்படுவது குறித்தும், படிப்பு முடிந்த பிறகு மாணவர்கள் அங்கேயே பணிபுரிவதற்கான அனுமதி நீட்டிப்பு குறித்தும் மாற்றங்களைச் செய்ய மறுத்துள்ளது.

இதன்காரணமாக பல வெளிநாட்டு மாணவர்கள் அவர்களது தாய் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் ஆபத்தில் உள்ளனர்.

கனடாவில் படித்த பிறகு, வெளிநாட்டு மாணவர்கள் மூன்று வருட பணி அனுமதியைப் பெறுகிறார்கள். இதன் போது அந்த மாணவர்கள் கனடாவில் உள்ள பல்வேறு குடியுரிமை பெரும் திட்டத்தின் கீழ் அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தொற்று காலத்தில் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட தேவையை ஈடு செய்ய, பணி அனுமதிக்கான காலத்தை இன்னும் 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நீட்டிக்கும் கொள்கையை கனடா நடைமுறைப்படுத்தியது. ஆனால் சமீபத்தில் கனடா இந்த விதியை மாற்றியுள்ளது.

GIC கட்டணமும் அதிகரித்துள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, GIC கட்டணமும் அதிகரித்துள்ளது

கட்டணம் அதிகரிப்பு

அதே நேரத்தில், உத்தரவாத முதலீட்டுச் சான்றிதழ் (GIC) கட்டணம் 10 ஆயிரம் கனடியன் டாலர்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான கனடியன் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

GIC தொடர்பான புதிய விதிகள் 2024-ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.

ஒவ்வொரு வெளிநாடு மாணவரும் GIC என்ற பெயரில் ஒரு டெபாசிட் செய்யவேண்டியிருக்கிறது. மாணவர்கள் கனடாவுக்கு செல்லவும் அங்கே வாழவும் தங்களிடம் போதிய பணவசதி உள்ளது என்பதை குறிக்கும் ஆதாரமே GIC டெபாசிட் ஆகும்.

படித்து முடித்த பிறகு, இது மாணவர்களுக்கு தவணை முறையில் திருப்பி அளிக்கப்படும்.

வாழ்க்கை துணைக்கான விசாவில் மாற்றம்

வாழ்க்கைத் துணை விசா என்பது ஒரு வகையான சார்பு விசா ஆகும். இந்த விசாவை வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்துடன் வாசிப்பதற்காக இதனை பயன்படுத்துகின்றனர்.

கனடாவில் முதுநிலை அல்லது முனைவர் பட்டம் படிக்க செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் வாழ்க்கைத் துணைக்கு மட்டுமே இனி விசா வழங்கயிருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

இளநிலை கல்வி பயிலும் மாணவர்களின் வாழ்க்கைத் துணைக்கு இந்த விசா வழங்கப்படாது.

வாழ்க்கைத் துணைகக்கான விசாவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வாழ்க்கைத் துணைக்கான விசாவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது

வேலை நேரம் குறைப்பு

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளிநாட்டு மாணவர்கள் பகுதி நேரமாக பணி புரிவதற்குமான நேரத்தையும் கனடா குறைத்தது

கனடா அரசாங்கத்தின் தற்போதைய முடிவின்படி, வெளிநாட்டு மாணவர்கள் ஒரு வாரத்தில் மொத்தம் 24 மணிநேரம் வரை பகுதி நேர வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை வெளிநாட்டு மாணவர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வரை பகுதி நேர வேலைக்கு செல்ல அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது