சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக திரும்ப அணையா விளக்கு ஏற்றி வழிபாடு- அவரது பூர்வீக கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராக்ஸி கக்டேகர் சாரா
- பதவி, பிபிசி குஜராத்தி
விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர். அவர்கள் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன் மூலம் பூமிக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் ஜூன் 5-ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள். ஆனால் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணத்தால் அவர்கள் பூமிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது.
சுனிதாவின் குடும்பத்தினரும் அமெரிக்காவில் உள்ள மில்லியன் கணக்கான மக்களும் அவரை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் குஜராத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான ஜூலாசனிலும் எதிரொலித்துள்ளது.
அங்கு உள்ள சுனிதாவின் உறவினர்களும், அபிமானிகளும் செப்டம்பர் 19-ஆம் தேதி அவரது 59வது பிறந்தநாளுக்காக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பவேண்டும் என்பதற்காக வழிபாடு செய்து வருகின்றனர்.
"அவருக்கு அங்கு என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை," என்று சுனிதா வில்லியம்ஸின் உறவினர் நவீன் பாண்டியா கூறினார்.
"அவர் நலமாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் மறுபுறம் அவர் பத்திரமாக திரும்பி வர முடியாது என்றும் சிலர் கூறுகின்றனர். உண்மையில் என்ன நடக்கிறது, எப்போது, எப்படி அவர் திரும்பி வருவார் என்பது பற்றிய உண்மையான தகவல்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை," என்று அவர் கூறினார்.

குஜராத் தலைநகர் காந்திநகருக்கு வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜூலாசன் கிராமத்தில் பல்வேறு சாதிகள் மற்றும் சமூகத்தை சேர்ந்த சுமார் 7,000 மக்கள் வசிக்கின்றனர்.
2007 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் சுனிதா வில்லியம்ஸ் ஜூலாசனுக்கு வந்துள்ளார். சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா இந்த கிராமத்தில்தான் பிறந்தார். 1957-ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து முடித்த பிறகு, அவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு அவர் உர்சுலின் போனி என்பவரை மணந்தார், அவர்களுக்கு 1965-ஆம் ஆண்டு சுனிதா பிறந்தார். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ள நிலையில், அவரது பாதுகாப்பிற்காக இந்த கிராமமே வழிபாடு நடத்தி வருகிறது.

பட மூலாதாரம், KUSHAL BATUNGE
அணையா விளக்கு ஏற்றி வழிபாடு
தலா மாதா கோவிலில் சுனிதா வில்லியம்ஸிற்காக வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 2013-ஆம் ஆண்டு சுனிதா இந்த கோவிலுக்கு சென்றிருந்தார். தலா தேவி தெய்வம், அவரை எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றுவார் என்று அங்கு உள்ள மக்கள் கருதுகின்றனர்.
சுனிதா வில்லியம்ஸின் புகைப்படம் அங்கு வைக்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸின் உறவினரான கோவில் பூசாரி தினேஷ் பாண்டியா, "அவரது நீண்ட ஆயுளுக்காகவும், அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பவும் நாங்கள் வழிபாடு செய்கிறோம்" என்று கூறினார்.
பூஜைகள் மற்றும் ஹோமம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கலந்துகொள்ள கிராம மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதற்கான நம்பிக்கையின் அடையாளமாக ஒரு எண்ணெய் விளக்கு 2024 ஜூலை மாதம் முதல் தொடர்ந்து எரிந்து வருகிறது. "பூஜையின் போது இந்த விளக்கை நானே தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொள்கிறேன்", என்று தினேஷ் பாண்டியா கூறினார்.
தினமும் மாலையில் பெண் பக்தர்கள் குழு ஒன்றுகூடி வழிபாடு நடத்துகின்றனர். "எங்கள் தெய்வத்தின் மீது எங்களுக்கு வலுவான நம்பிக்கை உள்ளது. அவர் சுனிதாவை விரைவில் பத்திரமாக அழைத்து வருவார் என்று எங்களுக்குத் தெரியும்," என்கிறார் அந்த கிராமத்தை சேர்ந்த கோமதி படேல்.
"சுனிதாவின் சாதனைகளுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்கள் மகளை பாதுகாப்பாக மீட்க நாசாவும், அரசும் தங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்", என்று கிராமவாசியான மது படேல் கூறினார்.
சுனிதா வில்லியம்ஸின் தொடர்பு, இந்த கிராமத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது என்று சமீபத்தில் அமெரிக்கா சென்று வந்த மது படேல் தெரிவித்தார்.

பட மூலாதாரம், DINESH PATEL
பழைய படங்கள்
சிமெண்ட் சாலைகள், நவீன பங்களாக்கள் மற்றும் பாரம்பரிய வீடுகள் போன்றவை இந்த கிராமத்தில் இருக்கின்றன. வெளிநாட்டின் பண உதவி அதிக அளவில் கிடைக்கும் அந்த பகுதியின் கிராமங்களில் ஜூலாசனும் ஒன்றாக உள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேர் அமெரிக்காவில் குடியேறியுள்ளனர். 1957-ஆம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸின் தந்தை தீபக் பாண்டியா அமெரிக்கா சென்றதில் இருந்து இந்த இடம்பெயர்வு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா சென்ற பிறகு, 1972-ஆம் ஆண்டு தீபக் பாண்டியாவும் அவரது குடும்பத்தினரும் முதல் முறையாக கிராமத்திற்கு வந்தபோது நடந்த பெரிய ஊர்வலத்தை கிராம மக்கள் பலர் நினைவு கூர்கின்றனர்.
தீபக் பாண்டியாவும் மற்றவர்களும் ஒட்டகத்தில் கிராமத்தைச் சுற்றி வந்ததை 68 வயதான ஓய்வுபெற்ற தச்சரான பாரத் கஜ்ஜர் நினைவு கூர்ந்தார்.
“அப்போது சிறுமியாக இருந்த சுனிதாவும் மற்றவர்களும் ஒட்டகத்தின் மீது சவாரி செய்து கிராமம் முழுவதையும் சுற்றிப்பார்த்தது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. இந்த ஊர்வலம் அமெரிக்காவிற்குச் செல்லும் ஆசையை கிராம மக்கள் பலரது மனதிலும் தூண்டியது,” என்று 64 வயதான நவீன் பாண்டியா குறிப்பிட்டார். இப்போது இந்த கிராமத்தில் வசிக்கும் சுனிதாவின் ஒரு சில உறவினர்களில் அவரும் ஒருவர்.
சுனிதா பாதுகாப்பாக பூமி திரும்ப அவர் கோவிலில் வழிபட்டு வருகிறார். "நான் சுனிதாவின் குடும்பத்துடன் தொடர்பில் இல்லை. ஆனால் நாங்கள் அனைவரும் அவரைப் பற்றிய கவலையில் இருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், DINESH PATEL
குடும்ப மரபுகள்
சுனிதா வில்லியம்ஸின் குடும்பத்தின் பெயரில் ஜூலாசனில் இன்னும் சொத்துக்கள் இருக்கின்றன.
சுனிதா வில்லியம்ஸின் தாத்தா பாட்டி பெயரில் 1960களில் அமைக்கப்பட்ட நூலகம் மற்றும் தீபக் பாண்டியாவின் பூர்வீக வீடு ஆகியவை பாழடைந்த நிலையில் உள்ளன.
இந்த நூலகத்தை ஒரு சில மாணவர்கள் இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்குள்ள பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் பிற செலவுகளை ஈடுகட்ட அந்த நூலகத்தின் ஒரு பகுதி, மளிகை கடையை நடத்த வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் நன்கொடை வழங்கிய ஒரு பள்ளிக்கூடத்தின் வழிபாடு மண்டபத்தில் அவரது தாத்தா பாட்டியின் படம் மாட்டப்பட்டுள்ளது.
“சுனிதா இங்கு வந்தபோது பள்ளியின் நலனுக்காக 2.50 லட்சம் ரூபாய் வழங்கினார்,” என்று பள்ளி முதல்வர் அம்பாலால் படேல் கூறினார். 2007-ஆம் ஆண்டு இந்த பள்ளி வளாகத்தில் சுனிதா கௌரவிக்கப்பட்டார்.
“எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் நான் அவரிடம் சென்று ஆங்கிலத்தில் ’நான் உங்கள் சகோதரன்’ என்று சொன்னேன். அவர் என் கைகளை குலுக்கி, ’ஓ! என் சகோதரன்’ என்று சொன்னார். அந்த தருணத்தை நினைத்தால் இன்றும் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது,” என்று சுனிதா வில்லியம்ஸின் உறவினர் கிஷோர் பாண்டியா அவர்களின் 2007 சந்திப்பை நினைவு கூர்ந்தார்.
"நாங்கள் அவரது குடும்பத்தை அணுக முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. தீபக் மாமா (சுனிதா வில்லியம்ஸின் தந்தை) உயிருடன் இருக்கும் வரை, நாங்கள் அவரை எளிதாக தொடர்பு கொள்ள முடிந்தது. ஆனால் அவர் இறந்த பிறகு அது கடினமாகிவிட்டது”, என்று அவர் கூறினார்.
பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அவர் செய்யும் பணி மற்றும் வார்த்தைகள் பலருக்கு ஊக்கம் அளிக்கின்றன.
"அவரால் எங்கள் கிராமத்தின் பெயர் உலகில் முழுவதும் தெரியப்படுத்தப் பட்டிருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்" என்று கிராமத்தைச் சேர்ந்த இளம் வழக்கறிஞர் தருண் லியூவா கூறினார்.
"நாம் எதைச் செய்தாலும் அதை விரும்பிச்செய்ய வேண்டும், அப்போது நமக்கு வெற்றி கிடைக்கும் என்று சுனிதா வில்லியம்ஸ் ஒருமுறை அவரது உரையில் கூறினார். அமெரிக்காவில் வாழ்ந்தாலும்கூட, அவர் இன்னும் எங்களைப் போலவேஇந்த கிராமத்தில் வசிக்கும் சாதாரண குடிமகனான இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் எங்களில் பலருக்கு அவர் ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார்,” என்று சிஏ (CA) தேர்வுக்குத் தயாராகி வரும் மந்தன் லியூவா கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












