ரஷ்யாவை 24 மணிநேரம் பதற்றத்தில் வைத்திருந்த 'வாக்னர் படை' - யார் இவர்கள்?

பட மூலாதாரம், Reuters
ரஷ்யா - யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்த இந்த கூலிப்படையினர், தலைநகர் மாஸ்கோவை நோக்கி அணிவகுக்க இருப்பதாக அறிவித்தனர்.
மேலும், ரஷ்யாவின் முக்கிய நகரான ரோஸ்டோவ்-ஆன் - டானுக்குள் புகுந்து, அங்குள்ள ரஷ்யாவின் தெற்கு பிராந்திய ராணுவ தலைமை அலுவலகத்தையும் வாக்னர் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
வாக்னர் குழுவினரின் இந்த செயல்களை ரஷ்ய அதிபர் புதின், ‘முதுகில் குத்தும் செயல்’ என்று சாடியிருந்தார்.
"துரோகப் பாதையில் இறங்கி தீவிரவாதத்தைக் கையில் எடுத்தவர்கள், நிச்சயம் தண்டனையை அனுபவிப்பார்கள்,” என்றும் புதின் கூறியிருந்தார்.
ஆனால் அதேநேரம், “இது ஆட்சிக் கவிழ்ப்புக்கான ராணுவ சதி அல்ல, இது நீதிக்கான அணிவகுப்பு” என்று வாக்னர் கூலிப்படையினரின் தலைவர் ப்ரிகோஜின் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மாஸ்கோவை நோக்கி அணிவகுத்து முன்னேறிக் கொண்டிருந்த வாக்னர் கூலிப்படையினர், தற்போது பின்வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின், தனது படைகளைப் பின்வாங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இருதரப்பும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
தனது செயல்கள் மூலம் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த இந்த வாக்னர் கூலிப்படையினர் யார்? ரஷ்ய -யுக்ரேன் போரில் இவர்களின் பங்கு என்ன?
வாக்னர் கூலிப்படையினர் யார்?
வாக்னர் கூலிப்படை, தன்னை ஒரு ‘தனியார் ராணுவ நிறுவனம்’ என விவரிக்கிறது.
இந்தப் படையில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்கள்.
யுக்ரேன் - ரஷ்யா இடையிலான போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக நீண்டகாலமாகக் களத்தில் நின்று துணைபுரிகின்றனர்.
குறிப்பாக யுக்ரேனின் ’பாக்முத்’ என்ற நகரைக் கைப்பற்றுவதற்கு நடைபெற்ற யுத்தத்தில், வாக்னர் படையினர் பெரும் பங்கு வகித்தனர்.
தங்களைத் தனியார் ராணுவ நிறுவனம் என்று கூறி வரும் வாக்னர் படையை, ரஷ்ய அரசாங்கம் சமீபகாலமாகக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அதேநேரம், வாக்னர் குழுவினரின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் , “யுக்ரேனை நாஜிமயமாகாமல் தடுப்பதற்கோ, ராணுவமயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கோ இந்தப் போர் நடக்கவில்லை. ஒரு கூடுதல் நட்சத்திரத்திற்காகவே இந்தப் போர் தேவைப்பட்டது," என்று யுக்ரேன் - ரஷ்ய போர் குறித்துப் பேசியிருந்தார்.
‘யுக்ரேனுடன் போரில் ஈடுபடுவதற்கு ரஷ்யா கூறும் காரணங்கள் நியாயமற்றது’ என்றும் ப்ரிகோஜின் குறிப்பிட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷொய்குவே மீது ப்ரிகோஜின் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
வாக்னர் குழு அதிகாரப்பூர்வமாக பிஎம்சி வாக்னர் (PMC WAGNER) என்று அழைக்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில், இந்தக் குழு ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தபோது, வாக்னர் குழு குறித்த தகவல்கள் முதன்முதலாக வெளியுலகிற்கு தெரிய வந்தன.
அதற்கு முன்பு வரை, இந்தக் குழு ஒரு ரகசிய அமைப்பாக இயங்கி வந்தது. பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில்தான் இந்தக் குழுவின் இயக்கம் இருந்துள்ளது. அப்போது இந்தக் குழுவில் வெறும் 5000 வீரர்கள் மட்டுமே இருந்ததாகக் கருதப்பட்டது. அவர்கள் ரஷ்யாவின் உயரடுக்கு படைப்பிரிவு மற்றும் சிறப்பு படைப்பிரிவு வீரர்களாக இருந்தனர்.
ஆனால் அதன்பின் இந்தக் குழுவினரின் எண்ணிக்கை கணிசமாக உயரத் தொடங்கியது.
”வாக்னர் இப்போது 50,000 வீரர்களைக் கொண்டுள்ளது. மேலும் அது யுக்ரேன் மீதான போரில் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜனவரி மாதம் கூறியிருந்தது.
“2022ஆம் ஆண்டு, இந்தக் குழு தங்களுக்காக அதிகளவு ஆட்சேர்ப்பு பணிகளில் ஈடுபட்டது. அதற்கு முக்கியக் காரணம் ரஷ்ய அரசு தங்களுடைய சொந்த ராணுவத்திற்காக ஆட்களைச் சேர்ப்பதில் தடுமாறி வந்தது,” என்றும் பிரிட்டன் அமைச்சகம் குறிப்பிட்டது.

பட மூலாதாரம், Reuters
அதேபோல் வாக்னர் ராணுவ துருப்புகளில் உள்ள 80% வீரர்கள், சிறையிலிருந்து வந்தவர்கள் என அமெரிக்க தேசியப் பாதுகாப்பு கவுன்சில் இந்தாண்டு துவக்கத்தில் கூறியிருந்தது.
ரஷ்யாவில் கூலிப்படைகள் சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன. ஆனாலும் வாக்னர் குழுமம் கடந்த 2022ஆம் ஆண்டு தன்னை ஒரு தனியார் நிறுவனமாகப் பதிவு செய்துகொண்டது. செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் புதிய தலைமையகத்தையும் திறந்தது.
"வாக்னர் குழு ரஷ்ய நகரங்களில், விளம்பரப் பலகைகளில் ஆட்சேர்ப்பு குறித்து வெளிப்படையாக விளம்பரம் செய்து வருவதாகவும், ரஷ்ய ஊடகங்களில் இது ஒரு தேசபக்தி அமைப்பு என்று பெயரிடப்பட்டு வருவதாகவும்” கூறுகிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் சிந்தனைக் குழுவில் உள்ள டாக்டர் சாமுவேல் ரமணி.
வாக்னர் குழு யுக்ரேனில் என்ன செய்கிறது?
கிழக்கு யுக்ரேனில் உள்ள பாக்முத் நகரைக் கைப்பற்றுவதில், ரஷ்யாவுக்கு பெரும் துணையாக நின்றது வாக்னர் குழு.
அப்போது நடைபெற்ற மோதலில், யுக்ரேனுடன் நேரடியாக மோதுவதற்கு வாக்னர் குழுவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு அனுப்பப்பட்டனர். இதன் விளைவாக அவர்களில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் வாக்னர் குழுவினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் முதலில் குறிப்பிடவில்லை.
ஆனாலும் அந்த மோதலில், தன்னலமற்ற முறையில், தைரியமாகப் பங்காற்றியதற்காக வாக்னர் குழுவினர் பின்னாளில் பாராட்டப்பட்டனர்.
வாக்னர் குழு எப்படி உருவானது?

வாக்னர் குழு குறித்து பிபிசி மேற்கொண்ட விசாரணையில், ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரி டிமிட்ரி உட்கினுக்கு, வாக்னர் குழு உருவாக்கப்பட்டதில் முக்கியப் பங்கு இருப்பது தெரிய வந்தது.
செச்சினியாவில் நடைபெற்ற ரஷ்ய போரில், வாக்னர் குழுவும் பங்காற்றியது. இதில் ரஷ்யாவின் முன்னாள் ராணுவ அதிகாரியான டிமிட்ரி உட்கின்தான் ’வாக்னரின் முதல் கள தளபதியாக’ நின்று செயலாற்றினார் எனக் கூறப்படுகிறது.
ராணுவத்தில் ஒருவரையொருவர் தொடர்புகொள்ளும்போது புனைப்பெயர் சூட்டி அழைக்கப்படும் பழக்கம் உண்டு. டிமிட்ரி உட்கின் 'வாக்னர்' என்று அழைக்கப்பட்டார். அப்படி ரேடியோவில் அவர் அழைக்கப்பட்ட புனைப்பெயரே இந்த ராணுவ கூலிப்படையின்(வாக்னர் படை) பெயராகவும் சூட்டப்பட்டது.
தற்போது வாக்னர் குழுவின் தலைவராக யெவ்கெனி ப்ரிகோஜின் இருக்கிறார். இவர் ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் சமையல் ஒப்பந்தங்களைப் பெற்றதன் மூலம் 'புதினின் சமையல்காரர்' என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
"2014ஆம் ஆண்டு ரஷ்யா கிரைமியாவை இணைப்பதற்கு உதவியதுதான் வாக்னர் குழுவின் முதல் செயல்பாடாகப் பார்க்கப்படுகிறது” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மோதல் மற்றும் பாதுகாப்பு பேராசிரியரான (professor of conflict and security) டிரேசி ஜெர்மன் கூறுகிறார்.
ரஷ்ய ராணுவ தளபதிகளோடு ஏற்பட்ட மோதல்
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் ஷோய்கு மற்றும் யுக்ரேனில் உள்ள இராணுவத் தலைவர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் திறமையற்றவர்களாக இருக்கிறார்கள் என்று கூறும் பிரிகோஜின், அவர்கள் யுக்ரேனில் சண்டையிடும் வாக்னர் பிரிவுகளை வேண்டுமென்றே குறைவாகப் பேசுவதாகக் குற்றம் சாட்டி வருகிறார்.
யுக்ரேனில் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள், ஜூன் மாத இறுதிக்குள் தங்களுடைய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டுமென்று சமீபத்தில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அந்த அறிவிப்பில் வாக்னர் குழுமத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனாலும் இந்த நடவடிக்கை வாக்னர் குழு மீது அதிக கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
இதற்குப் பதிலளிக்கும் விதத்தில், தன்னுடைய வாக்னர் குழு இந்த ஒப்பந்தங்களைப் புறக்கணிக்கும் என்று ஆவேசமாக அறிவித்தார் யெவ்கெனி ப்ரிகோஜின்.
வாக்னர் குழு வேறு எங்கெல்லாம் இயங்குகிறது?

பட மூலாதாரம், @RSOTMTELEGRAPH GROUP
கடந்த 2015 முதல் வாக்னர் குழுவின் கூலிப்படையினர் சிரியாவிலும் இயங்கி வருகின்றனர். அங்கு அரசு சார்பு படைகளுடன் இணைந்து, எண்ணெய் வயல்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
லிபியாவிலும் வாக்னர் குழுவின் கூலிப்படையினர் உள்ளனர். அங்கு ஜெனரல் கலீஃபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகளை ஆதரிக்கின்றனர்.
’மத்திய ஆப்பிரிக்க குடியரசு’ (CAR), வைரச் சுரங்கங்களைப் பாதுகாக்க வாக்னர் குழுவை அழைத்துள்ளது.
அதேபோல் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள மாலி அரசாங்கம், இஸ்லாமிய போராளிக் குழுக்களுக்கு எதிராக வாக்னர் குழுவைப் பயன்படுத்துகிறது.
இந்த வாக்னர் குழு நடவடிக்கைகளில் இருந்து அதன் தலைவர் ப்ரிகோஜின் பணம் சம்பாதிப்பதாகக் கருதப்படுகிறது.
‘தனக்குச் சொந்தமான சுரங்க நிறுவனங்களை வளப்படுத்துவதற்காக அவர் வாக்னர் குழுவை பயன்படுத்துகிறார்,” என அமெரிக்க கருவூலம் கூறுகிறது.
வாக்னர் குழு மீதான குற்றச்சாட்டுகள்
கடந்த ஜனவரி மாதம், வாக்னர் குழுவை விட்டு வெளியேறிய ஒரு முன்னாள் தளபதி, நார்வேயில் தஞ்சம் கோரினார். யுக்ரேனில் நடந்த போர்க்குற்றங்களை நேரில் பார்த்ததாக அவர் கூறினார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், யுக்ரேனில் கீயவ் அருகே இருந்த பொதுமக்களை ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து வாக்னர் குழுவினர் கொன்று குவித்ததாக யுக்ரேன் வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதேபோல், மார்ச் 2022இல் புச்சாவில் உள்ள பொதுமக்களை, வாக்னர் கூலிப்படையினர் படுகொலை செய்திருக்கலாம் என்று ஜெர்மன் உளவுத்துறை கூறுகிறது.
மேலும், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் இருக்கும் வாக்னர் குழுவினர், பலாத்காரம் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் சபையும் பிரெஞ்சு அரசாங்கமும் குற்றம் சாட்டியுள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












