மாஸ்கோ நோக்கி 'வாக்னர்' படைகள் அணிவகுப்பு - என்ன செய்யப் போகிறார் புதின்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பால் கிர்பி
- பதவி, பிபிசி செய்திகள்
ரஷ்யா - யுக்ரேன் போரில் திடீர் திருப்பமாக ரஷ்ய ஆதரவு கூலிப்படையான ‘வாக்னர்’ அந்நாட்டுக்கு எதிராகவே திரும்பி உள்ளது. யுக்ரேனில் இருந்து ரஷ்ய எல்லைக்குள் நுழைந்துள்ள இந்த கூலிப்படையினர் தலைநகர் மாஸ்கோவை நோக்கி அணிவகுக்க தயாராகி வருவதாக அதன் தலைவர் பிரிகோஸின் தெரிவித்துள்ளார்.
பிரிகோஸின் இந்த செயலை தேசத்துரோகம் என்று கண்டித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், ‘இது முதுகில் குத்தும் செயல்’ எனவும் விமர்சித்துள்ளார்.
புதின் குற்றச்சாட்டை மறுத்துள்ள வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஸின், “ராணுவத்துக்கு எதிராக சதி செய்வது தங்களின் நோக்கம் அல்ல என்றும், இது நீதிக்கான அணிவகுப்பு” எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
வாக்னர் குழுவில் என்ன நடக்கிறது?
சில மாதங்களாகவே யுக்ரேனில், ரஷ்ய ராணுவம் தொடர்பான பிரசாரங்களில் பிரிகோஸின் முக்கியப் பங்கு வகித்து வருகிறார். குறிப்பாக ரஷ்ய சிறைகளில் உள்ளவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை தமது தலைமையிலான வாக்னர் கூலிப்படையில் அவர் சேர்த்து வருகிறார்.
யுக்ரேனுக்கு எதிராக போரை நடத்தி வரும் ரஷ்யாவின் ராணுவ உயரதிகாரிகளுடன் பிரிகோஸின் நீண்ட நாட்களாகவே மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தற்போது அது கிளர்ச்சியாக மாறி உள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரைனில் இருந்து தெற்கு ரஷ்யாவில் உள்ள பெரிய நகரமான ரோஸ்டோவ் - ஆன்-டானுக்குள் நுழைந்துள்ள வாக்னர் கூலிப்படை, அங்கு ராணுவத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இது மிகவும் கடினமான சூழல் என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் புதின், ரஷ்யாவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பட மூலாதாரம், Reuters
புதின் அரசைக் கவிழ்க்க சதியா?
"எனது தலைமையிலான வாக்னர் படையின் தற்போதைய அதிரடி நடவடிக்கை நீதிக்கான அணிவகுப்பு. இதை ராணுவத்துக்கு எதிரான சதி அல்லது புரட்சி என்று கூறுவது அபத்தமானது" என்று விளக்கம் அளித்துள்ளார் பிரிகோஸின்.
ஆனால், " யுக்ரேன் போரில் தங்களின் கூலிப்படைக்கு தேவையான ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றை வழங்க ராணுவம் தவறியதால் தான் தற்போது தலைநகரை நோக்கி அணிவகுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தங்களை இப்படியொரு இக்கட்டான நிலைக்கு தள்ளிய நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான செர்ஜி ஷோய்கு, ஆயுதப் படைகளின் தலைவரான வலேரி ஜெராசிமோவ் ஆகியோர் எங்களின் சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது" என்றும் வாக்னர் படையின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார் பிரிகோஸின்.
வாக்னர் படையின் கிளர்ச்சி ரஷ்யாவின் ஆட்சி, அதிகாரத்தில் உயர்நிலையில் இருப்பவர்களை கவிழ்க்கும் சதியாகவும் பார்க்கப்படுவதால், அதிபர் புதினின் அதிகாரத்துக்கு கடும் சவால் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவிவரும் சூழலை ரஷ்ய அரசு மிகவும் தீவிரமாக கருதுவதால், தலைநகர் மாஸ்கோ நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், CONCORD PRESS SERVICE
பிரிகோஸின் விருப்பம் என்ன?
வாக்னர் படையினரின் கிளர்ச்சியை நீதிக்கான அணிவகுப்பு என்று பிரிகோஸின் நியாயப்படுத்துவதில் அவர் எந்த அளவுக்கு தெளிவாக இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், ரஷ்ய ராணுவ தலைமை உடனான அவரது மோதல் போக்கு வேகமாக அதிகரித்துள்ளதும், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை அவர் வெளியேற்ற விரும்புகிறார் என்பதும் தற்போது தெளிவாகி உள்ளது.
ராணுவ துணை அமைச்சரிடமும், ராணுவ ஜெனரல் ஒருவரிடமும் ரோஸ்டோவ் நகரில் பிரிகோஸின் வெள்ளிக்கிழமை பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் ரஷ்ய ராணுவத்தின் உயர் பொறுப்பில் உள்ள இரண்டு முக்கிய அதிகாரிகள் தன்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை, தலைநகர் மாஸ்கோ நோக்கிய தனது படையின் அணிவகுப்பு தொடரும் என்று அந்த வீடியோவில் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
தங்களின் கிளர்ச்சி யுக்ரேனில் போரிட்டு வரும் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு எதிரானது அல்ல. ஆனால், ராணுவத்தை வழிநடத்தி வரும் சில கோமாளிகளுக்கு எதிரானது என்று பிரிகோஸின் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். அவரை அமைதி காக்கும்படி ராணுவ தளபதிகள் பலர் வேண்டுகோள் விடுத்தாலும் அவற்றை கேட்டும் நிலையில் பிரிகோஷின் இருப்பதாக தெரியவில்லை.
இதனிடையே, ரோஸ்டோவின் வடக்கே வோரோனேஸ் பகுதியில் ரஷ்ய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அந்த பகுதியில் அமைந்துள்ள M4 நெடுஞ்சாலையில் வாக்னர் படையின் அணிவகுப்பு சென்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
புதின் - பிரிகோஸின் என்ன உறவு?
ரஷ்ய அதிபர் புதினின் நீண்டகால கூட்டாளியாக பிரிகோஸின் அறியப்படுகிறார். ஒரு தொழிலதிபராக புதினுக்கு அறிமுகமானவர், பின்னர் அவரது ஆதரவின் கீழ் கூலிப்படை தலைவராக வளர்ந்துள்ளார்.
கிழக்கு உக்ரைனில் பாக்முட் பகுதியை கைப்பற்றும் முயற்சியின்போது, வாக்னர் படையை சேர்ந்த போராளிகள் அதிக எண்ணிக்கையில் இறந்தனர். இந்த மோசமான நிகழ்வுக்கு ரஷ்ய ராணுவத்தின் உயர் நிலையில் உள்ள அதிகாரிகள் தான் காரணம் என்று பிரிகோஸின் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார். அப்போதில் இருந்து அவருக்கும், ரஷ்ய ராணுவ தலைமைக்கு இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்தது. தற்போது அது கிளர்ச்சியாக உருவெடுத்துள்ளது.
ராணுவ உயர் அதிகாரிகள் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டும் பிரிகோஸின், அதிபர் புதினை இதுவரை நேரடியாக விமர்சிக்கவில்லை. இருப்பினும் அவரை ‘மகிழ்ச்சியான தாத்தா’ என்று சமீபத்தில் பிரிகோஸின் குறிப்பிட்டிருந்தது புதின் மீதான அவரது மறைமுக விமர்சனமாகவே பார்க்கப்படுகிறது,
ரஷ்யாவில் உள்ள அனைத்து கூலிப்படைகளும் வரும் ஜூலை 1 ஆம் தேதிக்குள் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று இந்த மாத தொடக்கத்தில் அதிபர் புதின் கூறியிருந்தார். பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக அதிபர் புதின் விடுத்த வேண்டுகோளை பிரிகோஸின் நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Google
ராணுவ தளங்களை கைப்பற்றிய வாக்னர் படை
இதனிடையே, யுக்ரேனில் தங்களது படை சேர்ந்தவர்கள் மீது ரஷ்ய ராணுவம் கொடிய ஆயுத தாக்குதலை நடத்தியது என்று பிரிகோஸின் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்த ராணுவம், தங்கள் மீது சுமத்தும் இதுபோன்ற குற்றச்சாட்டை நிரூபிக்க பிரிகோஸின் தவறிவிடுகிறார் என்று ராணுவ உயரதிகாரிகள் பதிலடி கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், வாக்னர் படை தமது கிளர்ச்சியை கைவிட வேண்டும் என்று ராணுவ தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளை பிரிகோஸின் மறுத்துவிட்டார். ஆயிரக்கணக்கான படையினருடன் மாஸ்கோவை நோக்கி தங்களது அணிவகுப்பின் முக்கிய முன்னேற்றமாக, ரோஸ்டோவ் நகரை அடைந்து விட்டதாகவும், அங்கு ராணுவ தலைமையகத்துக்குள் இருப்பதாகவும் வாக்னர் படையினர் இன்று காலை அறிவித்திருந்தனர்.
அத்துடன், மற்றொரு முக்கிய அம்சமாக வோரோனேஸ் நகரில் உள்ள ராணுவ தளத்தையும் கைப்பற்றிவிட்டதாகவும் வாக்னர் படையினர் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கும் புதினுக்கும் சவாலான காலகட்டம்
வாக்னர் படைகளின் கிளர்ச்சி யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள போருக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்காது. அதிபர் புதினின் தலைமையில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று பிரிகோஸின் கூறுகிறார்.
ஆனால், ரஷ்ய அதிபர் புதின் 5 நிமிடங்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றியிருப்பதன் மூலம், இதனை அவர் மிக தீவிரமான ஒன்றாகவே எடுத்துக் கொண்டதாக தெரிகிறது.
அவரது நிபந்தனைகள் ஏற்கப்படாவிட்டால் மாஸ்கோவை நோக்கி வாக்னர் படைகள் அணிவகுக்கும் என்று பிரிகோஸின் மிரட்டியுள்ளார். அந்த திட்டத்தை தொடர்ந்து அவர் முன்னெடுக்கும் பட்சத்தில் என்ன நடக்கும்?
மிகக் குறைந்த வாய்ப்பாக, வேகமாக மாறி வரும் சூழலில் புதின் போன்ற தலைவர்கள் ஆட்சி, அதிகாரம் மீது முழு கட்டுப்பாட்டை இழந்துவிடக் கூடும்.
பிரிகோஸினுக்கு ரஷ்யாவில் கணிசமான மக்கள் ஆதரவும் உள்ளது. அவரது சவால் முறியடிக்கப்பட்டாலும் கூட, யுக்ரேனில் அவரது கூலிப்படையை நம்பியிருக்கும் இராணுவத்திற்கு இது நெருக்கடியான தருணமாக மாறியுள்ளது.
இது புதினின் தலைமையை தீர்மானிக்கும் ஒரு தருணம். அதேபோல், ரஷ்யர்கள் விழித்துக் கொள்வதற்கான அழைப்பும் இதுதான். இது எவ்வாறு முடிவுக்கு வரும் என்பது மிக விரைவில் தெரிந்துவிடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












