ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு தடை: 'நாடாளுமன்ற அரசியலில் இனி பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடக்கலாம்'

ராகுல் காந்தி

பட மூலாதாரம், FB/RahulGandhi

    • எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மோதி என்ற பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறு கருத்து தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

“அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் கீழமை நீதிமன்றம் கூறவில்லை,” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ராகுல்காந்தி விமர்சனங்களை முன்வைக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிஆர் கவாய், நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இந்த அவதூறு வழக்கில், அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான வாதியின் வாதங்களைத் தவிர வேறு எந்த காரணத்தையும் விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.

இந்த இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை காரணமாகத்தான் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 8(3)-இன் விதிகள் அமலுக்கு வந்து மனுதாரரின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டது. இந்தத் தண்டனை ஒரு நாள் குறைக்கப்பட்டிருந்தால்கூட இந்த விதி பொருந்தியிருக்காது,” என்று தெரிவித்தனர்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

தனது தீர்ப்பில் சூரத் நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம் குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், குற்றத்தை ஈடுசெய்ய முடியாத, ஜாமீன் பெறக்கூடிய மற்றும் அடையாளம் காணக்கூடிய வழக்குகளில், விசாரணை நீதிபதி அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான காரணங்களை வழங்க வேண்டும் என்றும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை விளக்க உயர்நீதிமன்றம் பல பக்கங்கள் செலவழித்தும், இந்த அம்சங்கள் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "சத்தியம் எப்போதும் வெல்லும், இன்று இல்லையென்றால் நாளை வெல்லும், நாளை இல்லையென்றால் அடுத்த நாளில் வெல்லும். மக்களின் ஆதரவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோதி உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஊடகங்களிடம் பேசும்போது, நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் எங்களின் சட்டப் போராட்டம் தொடரும் எனக் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், FACEBOOK/PURNESHMODI

ராகுல் காந்தி மீதான வழக்கின் பின்னணி என்ன?

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி கர்நாடகாவின் கோலாரில் ராகுல் பிரசாரம் செய்தார். அப்போது, தன்னுடைய பேச்சில் "எப்படி திருடர்கள் அனைவருக்கும் மோதி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது," என்று நீரவ் மோதி, லலித் மோதி போன்றோரைக் குறிப்பிட்டு ராகுல் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக வழக்கறிஞரும் சூரத் மேற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினருமான புர்னேஷ் மோதி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நான்கு ஆண்டுகள் நடந்த வழக்கின் விசாரணையில் கடந்த மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பளித்த சூரத் நீதிமன்றம், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-இன் படி ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது,” எனத் தீர்ப்பளித்தது.

எனினும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அதேநேரத்தில் சூரத் நீதிமன்ற தீர்ப்பு வெளியான அடுத்த நாளே ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்தது.

சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எனினும், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறிய குஜராத் உயர்நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை சரியானதுதான் என்று கூறியது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கில்தான் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

தீர்ப்பு தொடர்பாக பிபிசியிடம் பேசிய மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் பிடிடி ஆச்சாரி உச்சநீதிமன்றம் ஓர் உத்தரவை (தகுதியின்மைக்குத் தடை) பிறப்பித்ததுமே, தகுதி நீக்கம் தானாகவே நீங்கிவிடும். தகுதி நீக்கம் அகன்றதும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் கிடைத்துவிடும் என்றார்.

"உச்சநீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் ரத்தாகி அவர் மீண்டும் உறுப்பினராகச் செயல்படலாம் எனபதற்கான அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட வேண்டும். இதை உடனடியாகச் செய்ய வேண்டும்.

கீழமை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததும், அவரை தகுதி நீக்கம் செய்யும்போது காட்டிய அதே அவசரத்தை அவரது உறுப்பினர் பதவியை மீண்டும் கொடுப்பதிலும் மக்களவை செயலகம் காட்டவேண்டும்," என்கிறார் அவர்.

மேலும் திங்கட்கிழமையில் இருந்து அவர் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி அவரது கூற்றுப்படி, கீழமை நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான விவகாரம் தீர்க்கப்படாவிட்டாலும் அடுத்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட தகுதியுடையவராகவே இருப்பார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம், அதற்கு பிரதமர் மோதி அளிக்கவுள்ள விளக்கம் ஆகியவை எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு உடனடியாக திரும்பப்பெறப்படுமா?

மக்களவைக்கு ராகுல் காந்தி வருவாரா? நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்று பேசுவாரா?

இப்படியாகப் பல கேள்விகள் எழுந்துள்ளன.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

முகமது ஃபைசலும் ராகுல் காந்தியும்

லட்சத்தீவை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி முகமது ஃபைசல் தனது உறவினரான முகமது சாஹில் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.

ஐந்து ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில் முகமது ஃபைசல் குற்றவாளி என்றும் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் ஜனவரி 11, 2023 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து தனது எம்பி பதவியை அவர் இழந்தார்.

பின்னர், அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், முகமது ஃபைசலை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பளித்தது. எனினும் அவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்படுவதற்கு காலதாமதமானது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ஃபைசல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வரவிருந்த வேளையில், அவரின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக்களவை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதேபோல், ராகுல் காந்தி விவகாரத்தில் கால தாமதம் செய்யாமல் விரைவில் அவருக்கு மக்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸுக்கு சாதகமாக அமையும்

காங்கிரஸ் கட்சி இந்த உத்தரவை வெற்றியாகப் பார்க்கலாம். ஆனால் எம்பியாக நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவது மக்களவை சபாநாயகர் மற்றும் மக்களவை செயலகத்தின் முடிவுக்கு உட்பட்டது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

அதேநேரத்தில், நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தி அனுமதிக்கபட்டாலும், அனுமதிக்கப்படாவிட்டாலும் காங்கிரஸுக்கு அது சாதகமாகத்தான் அமையும் என்கிறார் அவர்.

"ஒருவேளை ராகுல் இந்த கூட்டத்தொடரில் அனுமதிக்கப்பட்டால், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் மோதிக்கு எதிராகப் பேசுவார், மணிப்பூர் விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்புவார். அனுமதிக்கப்படவில்லை என்றால், ராகுலை பார்த்து மோதி பயப்படுகிறார் என்று காங்கிரஸ் கூறும்.”

மேலும், "இந்த வழக்கின் உத்தரவு குறித்து வரும் நாட்களில் அதிகளவில் விவாதிக்கப்படும். இதுவரை ராகுல் காந்தி பழிவாங்கப்பட்டார் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமே கூறி வந்தன.

வரும் நாட்களில், எந்த கட்சியையும் சேராதவர்களுக்கும் ராகுல் காந்தி பழிவாங்கப்பட்டுள்ளார் என்ற எண்ணம் ஏற்படக்கூடும்," என்றும் தராசு ஷ்யாம் கூறுகிறார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

உடனடியான மீண்டும் பதவியை வழங்க வேண்டும்

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பிபிசி தமிழிடம் பேசுகையில், "குஜராத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு எந்த வேகத்தில் ராகுல் காந்தியின் பதவியை பறித்தார்களோ, அதே வேகத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு பதவியை தரவேண்டும். திங்கட்கிழமைக்குள் ராகுல் காந்திக்குப் பதவியை திருப்பித் தருவதுதான் உசிதமாக இருக்கும்," என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் இதே கோரிக்கையை எழுப்பியுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ ராகுல் காந்தியை 24 மணிநேரத்துக்குள் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தார்கள்.

தற்போது, எவ்வளவு நேரத்தில் அந்தப் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்," என்றார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

மேலும், "குஜராத்தில் இருந்து உத்தரவு வந்த 24 மணிநேரத்தில் அவரை தகுதி நீக்கம் செய்வது, வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

உச்சநீதிமன்றத்துக்கும் நாடாளுமன்றத்துக்கு இடையிலான தூரம் சில கிலோமீட்டர்கள் மட்டுமே. அப்படியிருக்கும்போது, ஒரு நாள் இரவிலேயே அவருக்கு மீண்டும் எம்.பி. பதவியை வழங்க வேண்டும். பார்ப்போம் என்ன செய்கிறார்கள் என்று, ஏற்கனவே நீண்ட காலம் காத்திருந்தோம். இந்த உத்தரவுக்கும் காத்திருப்போம்,” எனக் கூறினார்.

இடைக்கால தடை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது - பாஜக

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பிபிசியிடம் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதையும் அளிக்கவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. மற்றபடி ராகுல் காந்தியை குற்றவாளி இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை. இன்றளவும் குற்றவாளிதான். அவரது தண்டனை நிறுத்தி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது,” என்றார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

பல சுவாரஸ்யமான காட்சிகள் காத்திருக்கின்றன

மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிபிசியிடம் பேசியபோது, மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோதி நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும்போது, ராகுலும் இருக்கக்கூடும் என்றும் இந்திய அரசியலில் பல சுவாரஸ்ய காட்சிகள் காத்திருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

“பா.ஜ.கவின் பதவிவெறி மிக மிக மோசமானது. மோதி என்ற சமூகத்தினரை அவமதித்துவிட்டார் என்று 2018-19 வழக்குத் தொடர்கிறார்கள். அதில் இப்போது அவசர அவசரமாகத் தீர்ப்பு வருகிறது. தீர்ப்பு வந்தவுடன் ராகுலின் எம்.பி. பதவி பறிபோகிறது.

மேல் முறையீட்டிற்கு கால அவகாசம் அளிக்காமல் அவர் 20 ஆண்டுகளாகக் குடியிருந்த வீடு காலி செய்யப்படுகிறது. இதெல்லாம் எவ்வளவு மட்டமான செயல்பாடு. அவதூறு வழக்குகளில் பொதுவாக மன்னிப்புக் கேட்டுவிடுவார்கள். இல்லாவிட்டால் சிறு தண்டனை வழங்கப்படும். ஆனால், இந்த வழக்கில் பதவியைப் பறிக்க வேண்டுமென்றே 2 ஆண்டுகள் தண்டனை விதித்தார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், ராகுல் காந்தியைப் பார்த்து பா.ஜ.க. பயப்படுகிறது என்பதுதான். குறிப்பாக மோதி பயப்படுகிறார். ராகுலின் நடைபயணம், அதனால் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த எழுச்சி, ஆகியவற்றால் அதிர்ந்துபோன பா.ஜ.க. ராகுலின் பதவியைப் பறிக்க முடிவு செய்தது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கால் வைக்கக்கூடாது என்று பா.ஜ.க. நினைத்தது. ஆனால், இப்போது அந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

எங்கே ராகுல் காந்தி வரக்கூடாது என பா.ஜ.க. நினைத்ததோ, அங்கே அவர் வரப் போகிறார். வரும் 8ஆம் தேதி, பிரதமர் மணிப்பூர் விவகாரம் குறித்து பதிலளிக்கும்போது அவர் நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடும். இந்திய அரசியலில் பல சுவாரஸ்யமான காட்சிகள் காத்திருக்கின்றன” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: