சாகித்ய அகாதெமி விருது: 'திருப்பித் தர மாட்டேன்' என வாக்குறுதி அளிக்க வேண்டுமா?

சாஹித்ய அகாதெமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அகாதெமி விருதுகளுக்காகப் பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, அரசியல் காரணங்களுக்காக விருதைத் திரும்பத் தர மாட்டேன் என்ற வாக்குறுதியைப் பெற வேண்டுமென நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அகாதெமி விருதுகளுக்காகப் பெயர்களைப் பரிந்துரைக்கும்போது, அரசியல் காரணங்களுக்காக விருதைத் திரும்பத் தர மாட்டேன் என்ற வாக்குறுதியைப் பெற வேண்டுமென நாடாளுமன்ற நிலைக் குழு ஒன்று பரிந்துரைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த திங்கட்கிழமையன்று தனது பரிந்துரைகளை மாநிலங்களவைக்கு அளித்தது. அந்தப் பரிந்துரையில், கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு இலக்கிய மற்றும் கலாச்சார அமைப்புகள் விருதுகளை வழங்கிவருகின்றன. சாகித்ய அகாதெமி விருது போன்ற விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்படும்போது, அரசியல் காரணங்களுக்காக அந்த விருதுகளைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என்ற வாக்குறுதிகளை அளிக்க வேண்டும் என்றும் அதை மீறி விருதுகளைத் திருப்பி அளித்தால், வேறு எந்த விருதுகளுக்கும் அந்த கலைஞரையோ, எழுத்தாளரையோ பரிசீலிக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலைக்குழுவில் இடம்பெற்றிருந்த சி.பி.எம்மின் ஏ.ஏ. ரஹீமும் காங்கிரஸ் கட்சியின் கே. முரளிதரனும் எதிர்த்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் உள்ள கலை, கலாச்சார அகாதெமிகள் அரசியல் சார்பற்றவை. இந்தியாவில் ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச அங்கீகாரமாக அகாதெமி விருதுகளே இருக்கும் நிலையில், "அதில் அரசியலுக்கு இடமே இல்லை. ஆகவே, இந்த விருதைக் கொடுக்கும்போது அரசியல் காரணங்களுக்காக இந்த விருதைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டுமென இந்தக் குழு பரிந்துரைக்கிறது. இது நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது” என அந்தக் குழு பரிந்துரைத்திருக்கிறது.

விருதை திருப்பி அளித்த 39 எழுத்தாளர்கள்

சாகித்ய அகாதெமி விருது: திருப்பித் தர மாட்டேன் என வாக்குறுதி அளிக்க வேண்டுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருத்து சுதந்திரம் வேண்டி, 2015ஆம் ஆண்டு 30க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்தனர்.

இந்த விருதுகளுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்பெறும்போதே, விருதுகளைத் திருப்பித் தர மாட்டோம் என்றும் எந்தக் காலகட்டத்திலும் அந்த விருதை அவமதிக்க மாட்டோம் என்ற வாக்குறுதியை சம்பந்தப்பட்ட கலைஞர்களிடம் பெற்றுவிட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாதிரி வாக்குறுதியைப் பெறாமல் எந்த விருதையும் வழங்கக்கூடாது என்றும், அதை மீறி வழங்கினால், எதிர்காலத்தில் எந்த விருதுக்கும் அவர்களது பெயரைப் பரிசீலிக்கக்கூடாது என்றும் இந்தக் குழு கூறியிருக்கிறது.

2015ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம். கல்புர்கி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்சாரே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவரான நரேந்திர தபோல்கர் ஆகியோரின் படுகொலைச் சம்பவங்கள் ஆகியவை தொடர்பாக சாகித்ய அகாதெமி எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை எனக் கூறி 2015ஆம் ஆண்டின் செப்டம்பரிலிருந்து அக்டோபர் மாதத்திற்குள் 30க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்தனர்.

சிலர் சாகித்ய அகாதெமி விருதை திருப்பி அனுப்பினர். சிலர் விருதுடன் அளிக்கப்பட்ட தொகையைத் திருப்பி அனுப்பினர். சிலர் சாகித்ய அகாதெமியின் உறுப்பினர்கள் பதவிகளையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்த சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் கொடுக்கவில்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளரான நந்த் பரத்வாஜ் மட்டும் தனது முடிவை திரும்பப் பெற்றார்.

மொத்தமாக 39 எழுத்தாளர்கள் தங்களுடைய சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பி அளித்ததாக கலாச்சார அமைச்சகம் இந்தக் குழுவிடம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலைக் குழுவின் தலைவராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் விஜய்சாய் ரெட்டி தலைவராக இருந்தார்.

இதுபோல விருதைத் திருப்பி அனுப்பிய எழுத்தாளர்களில் சிலர், சாகித்ய அகாதமி அதற்குப் பிறகு நடத்திய விழாக்களில் பங்கேற்றதாகவும் விருதுபெறுவோரைத் தேர்வுசெய்வதற்கான குழுவில் இடம்பெற்றதாகவும் கூறியுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு, அகாதெமியை அவமானப்படுத்தியவர்கள், எப்படி மீண்டும் அதன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

"எழுத்தாளரை அங்கீகரிப்பது அரசின் கடமை, விருதை ஏற்பது எழுத்தாளனின் முடிவு"

சாகித்ய அகாதெமி விருது: திருப்பித் தர மாட்டேன் என வாக்குறுதி அளிக்க வேண்டுமா?
படக்குறிப்பு, ஒரு எழுத்தாளன் எழுத்துக்காக வாழ்ந்த வாழ்க்கையை, சமூகத்தின் மேலிருக்கும் அக்கறையை அவமானப்படுத்தும் நிபந்தனை இது என்கிறார் எழுத்தாளர் இமையம்.

நிலைக் குழுவின் இந்தப் பரிந்துரையை தமிழ் எழுத்தாளர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர். 2020ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதை வென்ற இமயம், இது போன்ற நிபந்தனைகள் எழுத்தாளர்களை அவமானப்படுத்துபவை என்கிறார்.

"ஒரு எழுத்தாளன் எழுத்துக்காக வாழ்ந்த வாழ்க்கையை, சமூகத்தின் மேலிருக்கும் அக்கறையை அவமானப்படுத்தும் நிபந்தனை இது. எழுத்தை அங்கீகரித்து விருதைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. விருதை ஏற்பது, ஏற்காதது, திருப்பி அளிப்பது ஆகியவை எழுத்தாளனின் முடிவு. சாகித்ய அகாதெமி தகுதியில்லாத எழுத்தாளர்களுக்கு விருது கொடுக்கப்பதில்லையா? அது எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதாக இல்லையா..? பெரிய பிரபலங்கள் என்றால் பிரதமரோ, குடியரசுத் தலைவரோ விருதளிக்கிறார்கள். ஆனால், எழுத்தாளர்களுக்கு ஏதாவது அமைப்பின் தலைவர்கள் விருதளிக்கிறார்கள். இது எழுத்தாளர்களுக்கு அவமானம் இல்லையா?" என கேள்வி எழுப்புகிறார் இமையம்.

சாகித்ய அகாதெமி 22 மொழிகளில் புத்தகங்களை பதிப்பிக்கிறது. எனக்கு விருது கொடுத்து 2 வருடம் ஆகிறது. என்னுடைய படைப்பு வேறு மொழிகளுக்குச் சென்றிருக்கிறதா, சாகித்ய அகாதெமி வெளியிடும் இந்தியன் லிட்டரேச்சர் இதழில் இந்த நாவலைப் பற்றி ஏதாவது வந்திருக்கிறதா..? இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதாக இல்லையா...? தகுதியான எழுத்தாளருக்கு தகுந்த நேரத்தில் இந்த விருதை அளித்திருக்கிறார்களா?

விருது எனது எழுத்துக்காக அளிக்கப்படுகிறது. ஆனால், விருதை திருப்பி அளிக்கும்போது, தனிமனிதராக நான் திருப்பி அளிக்கிறேன். எழுத்தாளர்களை, கவிஞர்களை, பத்திரிகையாளர்களைக் கொல்லும்போது வேறு என்ன செய்ய முடியும்?" என்கிறார் இமையம்.

"எதிர்ப்பை தெரிவிக்க உண்ணாவிரதம் இருக்கலாம், விருதை ஏன் திருப்பி தர வேண்டும்?"

ஆனால், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை மிகச் சரியானது என்கிறார் சாகித்ய அகாதெமி பொதுக் குழுவின் முன்னாள் உறுப்பினரும் கவிஞருமான ரவி சுப்பிரமணியன். "இது மிகச் சரியான முடிவு. ஆட்சியில் வெவ்வேறு கட்சிகள் இருக்கும். அந்தக் கட்சியின் கொள்கைப்படி ஆட்சி நடக்கும். அதில் சில விஷயங்கள் பிடிக்கவில்லையென்றால் அகாதெமி விருதை எதற்காகத் திருப்பித் தர வேண்டும்? எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமனால், உண்ணாவிரதம் இருக்கலாம். போராட்டம் நடத்தலாம். விருதைத் திருப்பித் தருவதை அந்த அமைப்பை அவமானப்படுத்துவதைப் போல. இந்த நாட்டையே அவமானப்படுத்துவதுபோல.

ஒரு விருதை அளிப்பதற்கு முன்பாக எத்தனை நடவடிக்கைகள் இருக்கின்றன? எவ்வளவு செலவு செய்யப்படுகிறது? தாங்கள் பிரபலமாவதற்காக, விருதைத் திருப்பி அளிக்கிறார்கள். அவ்வளவு வெறுப்பு இருந்தால் விருதை வாங்காமல் இருக்க வேண்டும். அது என்ன சுண்டல் என நினைத்தார்களா, உப்பு சரியில்லை எனத் திரும்பக் கொடுக்க?" என்கிறார் ரவி சுப்பிரமணியன்.

விருதைக் கொடுக்கச் சொல்பவர்களே மறுக்கச் சொல்லும் வினோதமும் நடக்கிறது என்கிறார் ரவி சுப்பிரமணியன். "உதாரணமாக, குறிப்பிட்ட ஆண்டில் கவிஞர் இன்குலாப்புக்கு சாகித்ய அகாதெமி விருதளிக்க வேண்டும் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் ஒருவர் மிகவும் வலியுறுத்தினார். விருது அளிக்கப்பட்ட பிறகு, அவரது குடும்பம் அதை மறுத்தது. அந்த நிலைப்பாடு சரிதான் என அந்த எழுத்தாளரே நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதுகிறார். ஏனென்று கேட்டால், கொடுக்க வேண்டியது கடமை, மறுக்க வேண்டியது கட்சியின் நிலைப்பாடு என்கிறார். இம்மாதிரி சூழலில், இம்மாதிரி கேட்பது சரிதான்" என்கிறார் ரவி சுப்பிரமணியன்.

"பரிசுகளை அரசியலோடு தொடர்புபடுத்துவது ஆரோக்கியமானதல்ல"

சாகித்ய அகாதெமி விருது: திருப்பித் தர மாட்டேன் என வாக்குறுதி அளிக்க வேண்டுமா?

பட மூலாதாரம், Facebook/மாலன்

படக்குறிப்பு, எல்லா விருதுகளும் ஏதோ சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அளிக்கப்படுகின்றன; ஆகவே இப்படி ஒரு நிபந்தனை விதிப்பதை தவறெனச் சொல்ல முடியாது என்கிறார் மூத்த எழுத்தாளரான மாலன்.

எல்லா விருதுகளும் ஏதோ சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அளிக்கப்படுகின்றன; ஆகவே இப்படி ஒரு நிபந்தனை விதிப்பதை தவறெனச் சொல்ல முடியாது என்கிறார் மூத்த எழுத்தாளரான மாலன்.

"இந்த விவகாரத்தில் அகாதெமியின் நிலைப்பாடு என்னவென்றால், விருதை யாருக்குக் கொடுப்பது என்ற முடிவை அரசு எடுப்பதில்லை. ஒரு நடுவர் குழு எடுக்கிறது. அந்தக் குழு எழுத்தாளர்களைக் கொண்ட குழு. அந்தக் குழுவை அகாதெமியின் தலைவர் நியமிக்கிறார். அவரும் அரசியல்வாதி அல்ல. அரசின் மீது வருத்தம் இருந்தால், அகாதெமியின் பரிசை திருப்பி அளிக்க வேண்டியதில்லை என்பதுதான் அந்த அமைப்பின் கருத்தாக அந்த சமயத்தில் இருந்தது.

அது அரசின் துறை அல்ல. சாகித்ய அகாதெமி உருவாக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அது ஒரு சொசைட்டியாக பதிவுசெய்யப்பட்டது. ஆகவே அது ஒரு சுயேச்சையான அமைப்பு. இந்த விருதுகள் திருப்பிக் கொடுக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு சில நுண்ணிய மாற்றங்கள் அமைப்பில் ஏற்பட்டன. அதாவது, சாகித்ய அகாதெமிக்கு கலாச்சார அமைச்சகம் தான் நிதி ஒதுக்குகிறது என்பதால், அழைப்பிதழில் கலாச்சார அமைச்சகத்தின் பெயர் இடம்பெற வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. விருதுகளில் அமைச்சகத்தின் பெயர் இருக்காது.

இந்த நிலையில், விருது ஒருவருக்கு அறிவிக்கப்பட்ட பிறகு அவர் அதனை மறுத்தால் அல்லது திரும்பிக்கொடுத்தால் அது அரசுக்கு அவமரியாதை அல்ல; மாறாக அவரைத் தேர்வுசெய்த தேர்வுக் குழுவுக்குத்தான் அவமரியாதை என்ற கருத்தும் இருக்கிறது" என்கிறார் மாலன்.

அவர் மேலும் கூறுகையில், "சாகித்ய அகாதெமி விருது சமீப காலமாக பெரும்பாலும் இடதுசாரி சிந்தனை கொண்டவர்களுக்குத்தான் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. மோடி அரசு வந்த பிறகும்கூட, எதிர்க்கட்சிகளைச் சார்ந்த வீரப்ப மொய்லி, சஷி தரூர் போன்ற அரசியல் தலைவர்களின் படைப்புகளுக்கு விருது அளிக்கப்பட்டது. திருணமூல் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த ப்ரத்யா பாசுவுக்கும் அசாம் கண பரிஷத் கட்சியின் புரஃபல்ல குமார் மொஹந்தாவின் மனைவியான ஜோயா ஸ்ரீ மஹந்தாவுக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அரசின் கொள்கைகளுக்கும் இந்த விருதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்காக இதைச் சுட்டிக்காட்டுகிறேன்.

அதுவே அந்தப் பரிசின் இயல்பை வெளிப்படுத்துகிறது. மேலும், பரிசுகளை அரசியலோடு தொடர்புபடுத்துவது ஆரோக்கியமானதில்லை. இதுபோன்ற நிபந்தனை கேட்பதைத் தவிர்க்கலாம்தான். ஆனால், கேட்பதில் தவறில்லை. ஏனென்றால் எல்லா பரிசுகளும் ஏதோ ஒரு நிபந்தனைகளின் பேரில்தான் வழங்கப்படுகின்றன" என்கிறார் மாலன்.

சாகித்ய அகாதெமி 1954ல் உருவாக்கப்பட்டது. 24 மொழிகளில் சிறந்த இலக்கியத்திற்கான விருதுகளை வழங்கும் இந்த அமைப்பு, நல்கைகள், மானியங்கள் ஆகியவற்றையும் வழங்குகிறது. மேலும், 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்களை வெளியிடுகிறது. இந்த அமைப்பு சாகித்ய அகாதெமி விருதைத் தவிர, பாஷா சம்மான் விருது, மொழிபெயர்ப்பிற்கான விருது, குழந்தைகள் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் ஆகிய விருதுகளையும் வழங்குகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: