மணிப்பூர்: எல்லை வகுத்து பிளவுபட்டு இருக்கும் மெய்தேய், குக்கி பகுதிகள் - கள நிலவரம்

பட மூலாதாரம், MANISH JAIN/EPA-EFE/REX/SHUTTERSTOCK
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்தியாளர்
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் செல்போனின் இடையூறு இல்லாமல் நீல வானத்தை பார்க்கவும், வீசும் காற்றில் உள்ள புத்துணர்ச்சியை உணரவும் உங்களால் முடியும்.
மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கிய குக்கி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையேயான கலவரத்தைத் தொடர்ந்து என் மனதில் நிலவும் இடைவிடாத வன்முறை பயம் மற்றும் குழப்பங்களுக்கு முற்றிலும் மாறாக இம்பாலில் ஒரு நிசப்தமான சூழல் நிலவுகிறது.
இந்த மௌனத்தை நீங்கள் அமைதி என்று தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.
மணிப்பூரில் செல்போன் இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், எப்போது, எந்த மூலையில், எந்த சமூகத்தினர் வீட்டை எரித்தனர், போலீஸ் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, எந்த பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நம்மை எச்சரிக்க எந்த வசதியும் அங்கு கிடையாது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு நாளைக்கு தாங்கும் அளவுக்கு மட்டுமே செல்போனின் பேட்டரியில் சார்ஜ் இருந்தது. பெரும்பாலான நேரங்களில் அதன் ஸ்கிரீனை அணைத்தே வைத்திருந்தேன்.
இம்பாலின் தெருக்களில் பகல் நேரங்களில் ஒருசில வாகனங்கள் செல்கின்றன, சந்தையில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவ்வப்போது ரோந்து செல்லும் போலீஸ் வாகனம் சூழல்நிலை இயல்பாக இருக்கிறது என்பது போன்ற மாயை ஏற்படுத்துகிறது.
முற்றிலும் எரிந்து சாம்பலான நிலையில் உள்ள மிகப் பெரிய கட்டிடத்தை கடந்து நாங்கள் சென்றோம். இந்த கட்டிடம் முன்பு வணிக வளாகமாக இருந்துள்ளது. தற்போது அதன் உள்ளே இருந்த கடைகள் எல்லாம் எரிந்துவிட்டன. பள்ளி கட்டிடங்களும் இதே நிலையில்தான் உள்ளன. மே மாதம் வெடித்த வன்முறையின் இருண்ட அடையாளங்களாக அவை உள்ளன.
பல இடங்களில் நிவாரண முகாம் என்று பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் சிலவை அரசாங்கத்தாலும், சிலவை அரசியல் கட்சிகளாலும், சிலவை சமூக அமைப்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளன.
பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள்ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்வி கற்கவும் வாய்ப்பு இல்லை.

பட மூலாதாரம், Getty Images
மெய்தேய்- குக்கி சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள பிளவு
பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தேய் சமூகத்தினருக்கும் வன்முறைக்கு பிறகு மலைப்பாங்கான இடங்களுக்கு சென்றுவிட்ட குக்கி சமூகத்தினருக்கும் இடையே ஆழமான பிளவு தோன்றியுள்ளது. பள்ளத்தாக்கிற்கும் மலை சார்ந்த பகுதிகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் தற்போது கள யதார்த்தமாக உள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கு மெய்தேய் சமூகத்தினரின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. பெரும்பாலான முக்கிய பள்ளிகள்-கல்லூரிகள்-பல்கலைக்கழகங்கள், அரசு வேலைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் தலைநகரிலேயே இருப்பதால் குக்கி சமூகத்தினரும் இங்கு வாழத் தொடங்கினர்.
தற்போது வன்முறைக்கு பிறகு அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கை விட்டு மலைப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள சில கிராமங்களில் வசித்துவந்த மெய்தேய் சமூகத்தினர் அங்கிருந்து வெளியேறி இம்பாலில் உள்ள நிவாரண முகாம்களில் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.
மணிப்பூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இம்பால் பள்ளத்தாக்கைச் சுற்றி ஒரு எல்லை வரையப்பட்டுள்ளது. மெய்தேய் சமூகத்தினர் மலைகளுக்குச் செல்ல முடியாது, குக்கி சமூகத்தினர் பள்ளத்தாக்குக்கு வர முடியாது.

மணிப்பூரில் முஸ்லிமாக இருப்பது பாதுகாப்பானது
மெய்தேய் மற்றும் குக்கி சமூகத்தினரிடையே உள்ள இந்த இடைவெளியை இரு சமூகங்களுடனும் நட்பு அல்லது பகை இல்லாதவர்களால் மட்டுமே கடக்க முடியும்.
இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மெய்தேய் சமூகத்தினர் வசிக்கும் பகுதி மற்றும் கிறிஸ்தவர்கள் அதிகளவு வசிக்கும் குக்கி சமூத்தினர் வசிக்கும் பகுதிக்கும் இடையே பயணம் செய்யும் மக்கள் இஸ்லாமிய வாகன ஓட்டிகளின் உதவியை அதிகம் நாடுகின்றனர். மணிப்பூரில் முஸ்லிமாக இருப்பது பாதுகாப்பானது.
குக்கி பகுதி மக்களை சந்திக்க முதல்வர் பிரேன் சிங் இதுவரை செல்லவில்லை. அவர் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
மணிப்பூரை பூர்வீகமாக கொள்ளாத ஆளுநர் அனுசுயா உகே மெய்தேய் மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளிலும் உள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்றுள்ளார். அவர் பயணிக்கும் வாகனங்களின் ஓட்டுநர்களும் பள்ளத்தாக்கு மற்றும் மலையின் எல்லையில் மாற்றப்படுகிறார்கள்.

மேசைக்கு அடியில் வெடிகுண்டு
குக்கி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்கு இடையிலான எல்லை என்பது ஒரு கோடு அல்ல, இது பல கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். மெய்தேய் பகுதியிலிருந்து வெளியேறுவதற்கும் குக்கி பகுதிக்குள் நுழைவதற்கும் இடையே உள்ள இந்த தூரத்தில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன.
முதல் சோதனைச் சாவடியில் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்களும், கடைசி சோதனைச்சாவடியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். இடையில் ராணுவம் மற்றும் காவல்துறையினரை உள்ளடக்கிய சோதனைச் சாவடிகள் உள்ளன.
அப்பகுதி மக்கள் சாக்கு மூட்டைகள், சில இடங்களில் கம்பிகள், பெரிய குழாய்கள் கொண்டு வழிகளை அடைத்துள்ளனர். சோதனைச் சாவடியில் நின்று கொண்டிருப்பவர்கள் ஆயுதங்களையும் வைத்துள்ளனர்.
வாகனத்தில் ஆயுதம் உள்ளதா என சோதனைச்சாவடியில் சோதனை செய்யப்படுகிறது. வாகன ஓட்டுநரிடம் அடையாள அட்டை கேட்கப்படுகிறது. அவரது ஜாதி - மதம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. எல்லை தாண்டுவதற்கு அவருக்கு உரிமை உள்ளதா இல்லையா என்பதை இந்த தகவலை வைத்து முடிவு செய்கின்றனர்.
இருபுறமும் எல்லைகளில் ஆயுதங்களுடன் அந்தந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைத்துள்ள சோதனைச் சாவடிகள் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. அரசு இருந்தும் இல்லாமல் உள்ளது என்பதற்கு இந்த சோதனைச்சாவடிகளே சாட்சிகளாக இருக்கின்றன.
கிராமத்தில் வசிப்பவர்கள், நகரத்தில் வசிப்பவர்கள் என அனைவரிடமும் ஆயுதங்கள் உள்ளன. அவை மலிவான விலையில் கிடைக்கின்றன. தங்களின் பாதுகாப்பிற்காக வீடுகளிலும் அலுவலகங்களிலும் அவர்கள் ஆயுதங்களை வைத்துள்ளனர்.
தலைநகர் இம்பாலில், ஒரு நபர் தனது மேசைக்கு அடியில் இருந்த வெடிகுண்டை மிக எளிதாகக் எடுத்துக் காட்டினார்.
தற்காப்புக்காக இதனை வைத்துள்ளதாக அவர் கூறினார். அருகில், அவரது சிறுமிகள் பொம்மை துப்பாக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
வன்முறை குறித்த அச்சம்
எல்லைகளில் மட்டுமே அதிகப்பட்ச பதற்றம் நிலவுகிறது. இம்பால் பள்ளத்தாக்கின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் மலைகளுக்குச் செல்லும் சாலைகளின் இருபுறமும் எரிந்த வீடுகளும், உடைந்த வாகனங்களும் சிதறிக் கிடக்கின்றன.
இந்த கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். எரிந்த கட்டிடங்களில் தற்போது ராணுவ வீரர்கள் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு மாலை வேளையிலும் , இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு தொடங்குகிறது.
சில சமயங்களில் மக்கள் கொல்லப்படுவதும், சில சமயங்களில் காலியாக கிடந்த கடைகள் தீப்பிடித்து எரிகின்றன. காய்கறிகள், பழங்கள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் நடமாட்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறை அச்சத்தின் மத்தியில், மணிப்பூர் அரசு எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளையும் அரசு அலுவலகங்களையும் திறக்க அறிவுறுத்தியுள்ளது.
இம்பால் பள்ளத்தாக்கில் சில பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் மிகச் சில பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.
மலைப் பகுதிகளில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தன்னார்வலர்கள் அங்குள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று கல்வி கற்பிக்கிறார்கள், ஆனால் வீடு இல்லாதபோது படிப்பில் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கிறது.

பட மூலாதாரம், Reuters
வேலை செய்யாவிட்டால் சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்ட பிறகு, மெய்தேய் சமூகத்தினர் மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பள்ளத்தாக்கில் உள்ளன. இதனால் தங்களால் வேலைக்கு செல்ல முடியாது என்று குக்கி சமூகத்தினர் கூறுகின்றனர்.
இரு சமூகத்தினருக்கும் இடையே பிரிவினையின் கோடு மிகவும் ஆழமாக மாறியுள்ளதால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட வாழ்க்கை, வேலைகள், வணிகம் ஆகியவற்றை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதற்கு பதில் காண முடியவில்லை.
சூரியன் மறைந்தவுடன் எல்லா இடங்களும் வெறிச்சோடிவிடுகின்றன. மணிப்பூரில் இரவு நேரத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
அங்கு இருட்டு என்பது இரவில் மட்டுமல்ல. மனக்கசப்பு, வெறுப்பு போன்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன, அமைதியைப் பற்றி பேசுபவர்கள் தங்கள் சமூகமே தம்மீது கோபப்பட்டு விடுமோ என்று பயப்படுகிறார்கள்.
மொபைல் இணையச் சேவை துண்டிக்கப்பட்டிருந்தாலும் இரு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ அனைவரின் செல்போனில் உள்ளது.
வை-ஃபை மூலமும், இணையம் இல்லாமல் வீடியோக்களை அனுப்பும் செயலிகள் மூலமும் இது தொடர்பான வீடியோக்கள் பரவுகின்றன.
அதனுடன் கோபமும், சோகமும், அநீதி உணர்வும் பரவுகிறது. மணிப்பூரில் ஏற்பட்டுள்ள பிளவு எல்லையை தடையின்று கடப்பது இவை மட்டுமே.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








