ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி? 'பஜ்ரங் தள்' யாத்திரையில் நடந்தது என்ன? கள ஆய்வு

முக்கிய சாராம்சம்
  • ஜூலை 31 ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள நூஹ் நகரில் பஜ்ரங் தள் அமைப்பு ஒரு சமய ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
  • ஆயிரக்கணக்கான ஹரியாணா பஜ்ரங் தள் தொண்டர்களும், பக்தர்களும் இதில் பங்கேற்றனர்.
  • இந்த ஊர்வலம் நூஹ் பகுதியில் உள்ள கோவிலைக் கடந்தபோது கல்லெறிதல் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தீயிடல் ஆரம்பமானது.
  • நகரின் தெருக்களிலும் கோவிலுக்கு வெளியேயும் கும்பல் துப்பாக்கிச் சூடும் நடத்தியது
  • ஏராளமான மக்கள் கோயிலுக்குள் சிக்கியிருந்தனர், அவர்கள் நிர்வாகத்தின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியே அழைத்துச்செல்லப்பட்டனர்.
  • வன்முறையில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர், இதில் இரண்டு போலீசாரும் அடங்குவர்.
  • இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • எழுதியவர், அபினவ் கோயல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்
ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நல்ஹட்டில் உள்ள சிவன் கோவிலுக்கு வெளியே உள்ள சாலையில் ஒரு கும்பல் திங்கள்கிழமை பல வாகனங்களுக்கு தீ வைத்தது.

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தின் தெருக்கள் பொதுவாக பரபரப்புடன் காணப்படும். ஆனால் தற்போது தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. துணை ராணுவப் படைகள் ரோந்து செல்லும் ஓசை மட்டும் அங்கு கேட்கிறது.

தீயில் எரிந்த வாகனங்களை நிர்வாகம் சாலைகளில் இருந்து அகற்றிவிட்டபோதிலும், அவற்றின் அடையாளங்கள் நகரம் முழுவதும் பரவியுள்ளன. இது திங்களன்று வெடித்த வகுப்புவாத வன்முறைக்கு சாட்சியமளிக்கிறது.

அங்கு அமல் செய்யப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மூன்று நாட்களாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கடைகளுக்கு வெளியே பூட்டுகள் தொங்குகின்றன. வெள்ளிக்கிழமை மதியம் ஊரடங்குச் உத்தரவு சிறிது நேரம் தளர்த்தப்பட்டது.

நூஹ்வில் வகுப்புவாத வன்முறை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் சுற்றியுள்ள நகரங்களில் இருந்து தீயிடல் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக நகரத்தில் இன்னும் பதற்றம் நீடிக்கிறது.

ஜூலை 31, திங்கட்கிழமையன்று, நூஹ் நகரம் நாள் முழுவதும் எரிந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் சிலர் வாள்கள், தடிகள் மற்றும் துப்பாக்கிகளை அசைப்பதைக் காண முடிந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நகரத்தின் தெருக்களில் அங்கும் இங்கும் ஓடுவதைக் காண முடிந்தது.

இந்த காட்சிகளை இங்குள்ளவர்கள் இதுவரை பார்த்ததில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக இந்த பகுதியில் வெடித்த வகுப்புவாத வன்முறை, நூஹ்வின் பரஸ்பர சகோதரத்துவத்தின் மீது கரும்புள்ளிகளை ஏற்படுத்தியுள்ளது. அதை மறப்பதும், மனதில் இருந்து அழிப்பதும் அத்தனை சுலபமாக இருக்காது.

நகரில் திடீரென இந்த வன்முறை இவ்வளவு பெரிய அளவில் வெடித்தது எப்படி என்பதுதான் இப்போதைய கேள்வி.

இது நன்கு திட்டமிடப்பட்ட சதியா? இது எப்போது, எப்படி தொடங்கியது? இப்படி நடக்கும் என்ற சந்தேகம் நிர்வாகத்திற்கு இருந்ததா? உயிர், உடமை இழப்புகளைத் தடுத்திருக்க முடியுமா?

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

வகுப்புவாத வன்முறை எப்படி தொடங்கியது?

வகுப்புவாத வன்முறை வெடித்த நூஹ், ஹரியாணாவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இது ராஜஸ்தானுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இந்த மாவட்டம், மேவாத் என்று அழைக்கப்படும் பெரிய பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.

மேவாத் பகுதியில் ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகள் வருகின்றன. இவற்றில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.

இந்தப்பகுதி பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பின்தங்கிய பகுதிதான். ஆனாலும் வகுப்புவாத வன்முறை அல்லது கலவரம் போன்ற சம்பவங்கள் இங்கு நிகழ்ந்ததில்லை. ஆனால் திங்கட்கிழமை நடந்தது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

முதலில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வோம்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய அமைப்பான பஜ்ரங் தள் அழைப்புவிடுத்ததன் பேரில், பிரஜ்மண்டல் (மேவாத்) ஜலாபிஷேக யாத்திரைக்கு ஜூலை 31 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த யாத்திரையில் நல்ஹட் சிவன் கோவிலிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள ஃபிரோஸ்பூர் ஜிர்காவின் ஜிர் கோவிலையும், அங்கிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள புன்ஹானா கிருஷ்ணர் கோவிலையும் சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.

பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள், ஹரியாணா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் தங்கள் தொண்டர்கள் மற்றும் பக்தர்களை இந்த யாத்திரையில் பங்கேற்க அழைத்திருந்தன.

“நூஹ் நகரில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள பானிபத்தில் இருந்து காலை 6 மணிக்கு பேருந்தில் 50 பேர் புறப்பட்டோம். காலை 11 மணியளவில் நல்ஹட்டில் உள்ள சிவன் கோவிலை அடைந்தோம். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு வந்திருந்தனர். 12 மணி வரை உணவு விநியோகம் மற்றும் ஜலாபிஷேக நிகழ்ச்சி நடந்தது,” என்று யாத்திரையில் பங்கேற்ற பானிபத்தில் வசிக்கும் பஜ்ரங் தள் தொண்டர் மகேஷ் குமார் கூறினார்.

மதியம் கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டம் அதிகமாக இருந்தது. 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், கார்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. மக்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர்.

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம், MANISHJALUI/BBC

படக்குறிப்பு, நூஹ் பகுதியில் நல்ஹட்டில் உள்ள சிவன் கோவில்

'நாங்கள் முன்னோக்கிச் சென்றவுடன் கல்வீச்சு தொடங்கியது'

”பிற்பகல் 12.30 மணியளவில் பிரஜ்மண்டல் யாத்திரை ஃபிரோஸ்பூர் ஜிர்காவில் உள்ள ஜிர் மந்திருக்கு புறப்பட்டது. பேருந்துகளிலும் கார்களிலும் அமர்ந்து மக்கள் வெளியேறத் தொடங்கினர். நூற்றுக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் இதில் இருந்தனர். ஊர்வலம் சுமார் 2 கிலோமீட்டர் முன்னே சென்று பிரதான சாலையை அடைந்ததும் கல்வீச்சு ஆரம்பமானது,” என்று மகேஷ் குறிப்பிட்டார்.

" யாத்திரையில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதான சாலையை அடைந்து மோனு மானேசர் ஜிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பினர். அதன் பிறகு வன்முறை வெடித்தது," என்று நூஹ்வின் உள்ளூர்வாசி முஸ்தஃபா கான் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் வைரலான யாத்திரையின் பல வீடியோக்களில் சிலர் 'மோனு மானேசர் ஜிந்தாபாத்' என்ற கோஷங்களை எழுப்புவதை பார்க்க முடிகிறது.

மோனு மானேசர் மீது மக்களுக்கு கோபம் இருந்தது. யாத்திரையில் ஈடுபட்டவர்கள் சமய முழக்கங்களை எழுப்பியதாகவும், இது சூழலைக் கெடுத்துவிட்டதாகவும் நூஹ்வின் உள்ளூர்வாசியான வாசிம் கான் கூறுகிறார்.

மோனு மானேசர் ஒரு வீடியோவை வெளியிட்டு வன்முறை குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளார்.

“மேவாத்தின் சிறிய யூடியூபர்கள் சூழலை கெடுத்துவிட்டனர். மோனு மானேசர் வரமாட்டார் என்று காவல்துறை ஏற்கனவே செய்தியாளர்களிடம் கூறியது. அப்படி இருந்தும்கூட உள்ளூர் யூடியூபர்கள் சூழலைக் கெடுத்தனர்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வன்முறைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் ஒரு வார்த்தை கூட தான் தவறாகப் பேசவில்லை என்றும் கடந்த ஆண்டுகளைப்போலவே யாத்திரையில் பெரிய அளவில் பங்கேற்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் மோனு மனேசர் கூறினார்.

“பஜ்ரங் தள் ஆட்கள் மதியம் 1.30 மணியளவில் இங்கு வரத் தொடங்கினர். திடீரென்று கல் வீச்சு தொடங்கியது, சிலர் வாள்களுடன் என் கடைக்குள் நுழைந்து பொருட்களை அடித்து உடைக்கத்தொடங்கினர். என் ஊழியர்கள் எப்படியோ தங்கள் உயிரை காப்பாற்றிக்கொண்டனர். அந்தக் கும்பல் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரைக் கொளுத்தியது,” என்று கல் வீச்சு தொடங்கிய இடத்தில் கடையை நடத்தும் சஞ்சய் குமார் தெரிவித்தார்.

மதியம் இரண்டு மணியளவில், நூஹ் தெருக்களில் தீ வைப்பு தொடங்கியது. யாத்திரையில் முன்னால் சென்றவர்கள் பிரதான சாலையில் சிக்கிக் கொண்டதால், நூற்றுக்கணக்கானோர் கோயிலுக்கு திரும்பிச் செல்லத்தொடங்கினர்.

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?
படக்குறிப்பு, கோயிலுக்கு வெளியே குண்டடிப்பட்ட காரணத்ததால் அபிஷேக் இறந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் மரணம் என்ற குற்றச்சாட்டு

“சாலையில் முன்னே போகும் வழியின் சூழல் மோசமாக உள்ளது என்று தெரிந்தவுடன் பேருந்தை மீண்டும் கோயில் நோக்கி திருப்பினோம். எங்கள் கண் எதிரில் வாகனங்கள் எரிக்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடந்தது. எப்படியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டு கோவிலை நெருங்கினோம்,” என்று யாத்திரையில் கலந்துகொண்ட அனூப் கூறினார்.

பிற்பகலில் தொடங்கிய இந்த வன்முறை மாலை 5 மணியளவில் மீண்டும் தீவிரமடைந்ததாகவும், இம்முறை மக்கள் கூட்டம் சிவன் கோவிலை சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

"மாலையில் சூழ்நிலை இன்னும் மோசமாக மாறியது. வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது, மக்கள் கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.அந்த நேரத்தில் கோவிலுக்குள் இரண்டாயிரம் முதல் இரண்டாயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்,”என்று நல்ஹட் சிவன் கோவிலின் பூசாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் தனது மாமா மகன் அபிஷேக்குடன் கோயிலுக்கு வெளியே இருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டில் அபிஷேக் கொல்லப்பட்டதாகவும் பானிபத்தில் வசிக்கும் மகேஷ் கூறுகிறார். அதேநேரம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் உறுதி செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவிலுக்கு அக்கம்பக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மை எண்ணிக்கையில் வாழும் கிராமங்கள் உள்ளன. வன்முறைக்குப் பிறகு அங்கு நிசப்தம் பரவியது. காவல்துறை நடவடிக்கையின் அச்சம் காரணமாக பல முஸ்லிம் குடியிருப்புகள் காலியாகிவிட்டன. “வெளியில் இருந்து சில விஷமிகள் உள்ளூர் மக்கள் கூட்டத்திற்குள் நுழைந்தனர். இங்குள்ளவர்கள் யாரையும் துப்பாக்கியால் சுடவில்லை,” என்று துப்பாக்கிச்சூடு குறித்த கேள்விக்கு உள்ளுர் மக்கள் பதில் அளித்தனர்.

நூஹ்வில் தொடங்கிய வன்முறை பின்னிரவில் ஹரியாணாவின் சோஹ்னா மற்றும் குருகிராம் ஆகிய இடங்களை அடைந்தது. அங்கு கும்பல் பொருட்களை சேதப்படுத்தி, தீயிடலில் ஈடுபட்டது. மசூதியின் 22 வயதான நாயப் இமாம் முகமது சாத், இந்த வன்முறை கும்பலால் கொல்லப்பட்டார்.

இந்த வகுப்புவாத வன்முறையை ‘நன்கு திட்டமிடப்பட்ட சதி’ என்கிறார் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிந்தவுடன், டிஜிபி, ஏடிஜி, டிஜிபி சட்டம்-ஒழுங்கு மற்றும் அருகிலுள்ள மாவட்ட காவல்துறையினர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினோம்,” என்றார்.

“சிலர் சதித்திட்டம் தீட்டி, யாத்திரை மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். யாத்திரை மட்டுமல்ல, காவல்துறையினரும் குறிவைக்கப்பட்டனர். அதன்பின் யாத்திரைக்கு இடையூறு ஏற்படுத்தினர். பல இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. நிச்சயமாக இது ஒரு பெரிய சதித்திட்டத்தின் பகுதியாகவே தெரிகிறது."என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைதியை நிலைநாட்டும் பொருட்டு, நூஹ்வில் துணை ராணுவப் படையின் 14 பிரிவுகளும், பல்வலில் 3, குருகிராமில் 2 மற்றும் ஃபரிதாபாத்தில் ஒரு பிரிவும் நிறுத்தப்பட்டுள்ளன என்று ஹரியாணா அரசு தெரிவித்தது.

”வன்முறையில் இதுவரை 6 பேர் இறந்துள்ளனர். இதில் இரண்டு போலீசாரும் அடங்குவர். அதேநேரம் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 90 பேர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்,” என்றும் முதல்வர் கூறினார்.

இந்த வன்முறை தொடர்பாக காவல்துறை மற்றும் நிர்வாகம் மீது விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயல் தலைவர் ஆலோக் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். “பிரிஜ் மண்டல் யாத்திரை ஆண்டுதோறும் நடக்கிறது. இருபதாயிரம் பேர் பங்கேற்கிறார்கள், இது அனைவருக்கும் தெரியும். காவல்துறை இதற்கு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்தார்கள். பல நாட்களாக கற்கள் சேகரிக்கப்பட்டு வந்துள்ளது. திட்டம் தீட்டப்பட்டு வந்தது. யாத்திரை ஒரு கிலோமீட்டர் மட்டுமே செல்வதற்குள் தாக்குதல் நடந்தது. இது உளவு அமைப்புகளின் பெரிய தோல்வி,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?
படக்குறிப்பு, நூஹ்விலிருந்து தொடங்கிய வன்முறையின் மையமாக ஒரு பெயர் குறிப்பிடப்படுகிறது. அது மோனு மானேசர்.

வன்முறைக்கான காரணம் என்ன?

இந்த வகுப்புவாத வன்முறை தொடங்குவதற்கு முன்பே நூஹ் மக்களிடையே மிகுந்த கோபம் இருந்தது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்களும் இதற்கான காரணங்களில் ஒன்று. இந்த வீடியோக்கள் பஜ்ரங்தளத்தின் ஹரியாணா பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மோனு மானேசர், பிட்டு பஜ்ரங்கி மற்றும் ஃபெரோஸ்பூர் ஜிர்காவின் காங்கிரஸ் எம்எல்ஏ மாமன் கான் ஆகியோர் வெளியிட்டவை.

“மேவாத் பிரஜ்மண்டல் யாத்திரை ஜூலை 31, திங்கட்கிழமை நடைபெறும் என்று எல்லா சகோதரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொள்கிறேன். எல்லா சகோதரர்களும் இதில் பெரும் எண்ணிக்கையில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். மேவாத்தின் எல்லா கோவில்களுக்கும் அதிக எண்ணிக்கையில் வருகை தர வேண்டும். நானும் யாத்திரையில் கலந்துகொள்வேன். என் முழு குழுவும் இதில் ஈடுபடும்,” என்று ஒரு வீடியோவில், மோனு மானேசர் கூறுகிறார்.

மோனு மானேசர் மீது, மேவாத்தை சேர்ந்த நாஸிர் மற்றும் ஜுனைத் ஆகிய இரு இளைஞர்களின் கொலை உட்பட பல கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளன. மோனு மானேசரின் வீடியோக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவர் தலைமறைவாக இருப்பதாக காவல்துறை கூறுகிறது.

அத்தகைய ஒரு வீடியோ தன்னை பசு பாதுகாவலர் என்று கூறிக்கொள்ளும் பிட்டு பஜ்ரங்கியுடையது. அதில் அவர், “நான் வரும் இடத்தை முழுமையாக தெரியப்படுத்துவேன். இல்லையென்றால் நான் தெரிவிக்கவில்லை என்று சொல்வார்கள். இப்போது நான் பாலியில் இருக்கிறேன். சீக்கிரமே புறப்படுவேன். மலர் மாலையை தயாராக வைத்திருங்கள். எந்த பிரச்சனையும் இல்லை,” என்று அதி அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் பின்னால் இருந்து ' உங்கள் அண்ணன் வருகிறார்’ என்று ஒரு குரல் கேட்கிறது. அதை பிட்டு பஜ்ரங்கி ஒப்புக்கொள்வது போலத்தெரிகிறது.

ஒரு வீடியோவில், ஃபெரோஸ்பூர் ஜிர்காவின் காங்கிரஸ் எம்.எல்.ஏ மாமன் கான், சட்டப்பேரவையில் மோனு மானேசரை மிரட்டுகிறார். வன்முறைக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர் தனது அறிக்கையை தெளிவுபடுத்தினார். “நான் இந்த விஷயத்தை பகிரங்கமாகச் சொல்லவில்லை. சகோதரத்துவம் கெட்டுவிடாமல் இருக்க அவரை (மோனு மானேசர்) அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் இதை அரசிடம் கூறியிருந்தேன்,” என்று அவர் சொன்னார்.

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம், MANISH JALUI/BBC

படக்குறிப்பு, திங்கட்கிழமை நூஹ் பகுதியில் தொடங்கிய வன்முறைக்குப்பிறகு மாலையில் சோஹ்னாவில் தீயிடல் சம்பவங்கள் நிகழ்ந்தன.

வன்முறைக்கு முன்பு இருந்த பயம்

வன்முறைக்கு முன்பாக இந்த மூன்று வீடியோக்களும் நூஹ் முழுவதும் விவாதிக்கப்பட்டன.

"மோனு மானேசர் மீது இங்குள்ள மக்களிடையே கோபம் உள்ளது. மூன்று நாட்களுக்கு முன் அந்த வீடியோவை வெளியிட்டு நான் யாத்திரைக்கு வருகிறேன் என்று கூறியிருந்தார். அவர் சூழலை சீர்குலைக்கும் வேலையைச் செய்துள்ளார்,"என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் ஒரு உள்ளுர்வாசி தெரிவித்தார்.

நூஹ் நகரில் வசிக்கும் உள்ளூர் மக்கள் இந்த பதற்றத்தை முன்பே உணர்ந்தனர்.

"இதுபோன்ற வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் சூழலைக் கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்முறைக்கு முன்பே மக்கள் நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். ஆனால் காவல்துறை காட்டவேண்டிய உஷார்தன்மை ஏதும் காணப்படவில்லை,”என்று உள்ளூர்வாசி முஸ்தஃபா கான் தெரிவித்தார்.

“யாத்திரை நாளில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க இரு தரப்பினரையும் உட்கார வைத்து நாங்கள் பேசினோம். மோனு மானேசர் யாத்திரையில் பங்கேற்கவில்லை என்றும் பத்திரிகைகள் வாயிலாக செய்தி வெளியிட்டோம்,” என்று நூஹ் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வன்முறை வெடித்த நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் காவல்துறையினரின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது என்று அவர் கூறினார். இந்த சம்பவத்தில் பல போலீசாரும் காயம் அடைந்துள்ளனர்.

வன்முறையை தூண்டியதாக மோனு மானேசர் மீது சாட்டப்படுகிறது. அவரது பதிலைப் பெற பிபிசி பலமுறை தொலைபேசியில் அவரை தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் அவர் பேசவில்லை.

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம், MANISH JALUI/BBC

படக்குறிப்பு, நூஹ்

மேவாத் ஏன் எரிகிறது?

மேவாத் மக்கள் மோனு மானேசர் மற்றும் பஜ்ரங் தள் குறித்து கோபத்தில் உள்ளனர். இதற்குக் காரணம் கடந்த பல ஆண்டுகளாக அப்பகுதியில் பசு பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் அதிகரித்து வருவதுதான்.

பிப்ரவரி மாதத்தில், ராஜஸ்தானின் பரத்பூரில் வசிக்கும் நாஸிர் மற்றும் ஜுனைத், சில பசு பாதுகாவலர்களால் எரித்துக் கொல்லப்பட்டனர்.

இதற்குப்பின்னணியில் மோனு மானேசரின் கை இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் மோனு மானேசரை கைது செய்ய ராஜஸ்தான் போலீசார் பல மாதங்களாக முயற்சி செய்தும் அது பலனளிக்காத நிலையில் மோனு ஊடகங்களுக்கு வெளிப்படையாக பேட்டி அளித்து வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு ஜனவரி மாதத்தில், நூஹ்வில் வசிக்கும் 21 வயதான வாரிஸ் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இறந்தார். இந்த சம்பவத்திலும் பாதிக்கப்பட்ட குடும்பம் மோனு மானேசர் மீது கொலைக்குற்றம் சாட்டியது. சம்பவம் நடந்த அந்த இடத்தில், அந்த நேரத்தில் மோனு மானேசர் இருந்ததைக்காட்டும் படங்கள் வெளியாகியுள்ளன.

அப்போது பிபிசியிடம் பேசிய மோனு, "வாரிஸ் பசு மாடு கடத்தல் செய்து வந்தார். எங்கள் தொண்டர்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் சாலை விபத்தில் இறந்தார். விபத்து நடந்த சிறிது நேரத்திற்குப்பிறகு நான் சம்பவ இடத்தை அடைந்தேன். வாரிஸுக்கு

டீ கொடுத்தேன். மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்,” என்று கூறியிருந்தார்.

இந்த இரண்டு சம்பவங்களும் மேவாத் மக்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளன. அதை அவர்களால் மறக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, மோனு மானேசர் உள்ளிட்ட பசு பாதுகாவலர்கள் மீது தாக்குதல் மற்றும் வன்முறை குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்றன. பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய பசு பாதுகாவலர்கள் ஹரியாணா மாவட்டங்களில் தங்களுடைய சொந்தக் குழுக்களை உருவாக்கியுள்ளனர். கிடைக்கும் தகவலின் பேரில் அவர்கள் இரவு இருட்டில் பசு கடத்தல்காரர்கள் என்று சொல்லப்படுபவர்களை பிடிக்கிறார்கள்.

பசு பாதுகாவலர்களின் இலக்குகள் எப்போதும் முஸ்லிம்கள்தான் என்றும், இதனால் அப்பகுதியில் நீண்ட காலமாக அச்சத்தின் சூழல் நிலவுவதாகவும் மேவாத் பகுதி மக்கள் கூறுகின்றனர்.

“பசு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மசோதாவை ஹரியாணா அரசு 2015ல் கொண்டு வந்தது. இது மிகவும் கடுமையான சட்டமாகும். இதில் 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். எந்தச் சட்டத்தையும் அமல்படுத்துவது அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பு. ஆனால் இதில் பசு பாதுகாவலர்களின் உதவியை அரசு எடுத்து வருகிறது. ஹரியாணா அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பசு பணிக்குழுவை உருவாக்கியுள்ளது. அதில் அரசு அதிகாரிகளுடன் இதுபோன்ற பசு பாதுகாவலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்,” என்று மூத்த செய்தியாயாளர் ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார்.

"பசு பாதுகாவலர்கள் என்று கூறப்படுபவர்கள் தொடர்பான சம்பவங்கள் மட்டுமல்லாது குருகிராமில் திறந்த வெளியில் நமாஸ் செய்து சூழல் சீர்குலைக்கப்பட்டதும் கூட, மேவாத்தின் அமைதிச் சூழலைக் கெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்,” என்றார் அவர்.

ஹரியாணா வன்முறை வெடித்தது எப்படி?

பட மூலாதாரம், MANISH JALUI/BBC

யாத்திரையில் விஎச்பியின் பங்கு

நூஹ்வில் உள்ள நல்ஹட் சிவன் கோவிலில் இருந்து மேவாத் பிரஜ் மண்டல் யாத்திரை தொடங்குவது இது முதல் முறையல்ல. இந்த யாத்திரை பல தசாப்தங்களாக நடந்து வருகிறது.

இந்த பகுதியில் மூன்று பெரிய இந்து கோவில்கள் இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக, உள்ளூர் இந்துக் குடும்பங்கள் இந்த மூன்று கோயில்களுக்கும் யாத்திரை செல்கின்றன. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த யாத்திரையின் வடிவம் மாறிவிட்டது.

“இந்த யாத்திரை உள்ளூர் இந்துக் குடும்பங்களுடன் தொடர்புடையது. அது அவர்களின் நம்பிக்கை. ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இங்குள்ள முஸ்லிம்கள் மீது அழுத்தம் கொடுக்கும் விதமாக விஎச்பி மற்றும் பஜ்ரங்தளம் இந்த யாத்திரையில் வெளியில் இருந்து மக்களைத் திரட்டத் தொடங்கியது,” என்று மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரி குறிப்பிட்டார்.

“இந்த யாத்திரை மேவாத் மக்களுடையது. பானிபத், ஹிசார், பிவானி மற்றும் குருக்ஷேத்ரா போன்ற தொலைதூர மாவட்ட மக்கள் இதில் என்ன செய்கிறார்கள்? இது சதித்திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திரட்டப்படுகின்றனர்,” என்றார் அவர்.

” முன்பும் யாத்திரை நடந்தது. ஆனால் நாங்கள் இந்த யாத்திரைக்கு ஒரு அமைப்பு வடிவத்தை அளித்தோம். மேவாத் இந்துக்கள் மட்டுமே இதில் செல்ல முடியும் என்று யாராவது சொன்னால், அது புனித யாத்திரைகளின் முக்கியத்துவத்தை அவமதிப்பதாக நான் நினைக்கிறேன்,” என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச இணைப் பொதுச் செயலர் டாக்டர் சுரேந்திர ஜெயின், பிபிசியிடம் தெரிவித்தார்.

சுரேந்திர ஜெயின் யாத்திரை நாளில் கோவிலில் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு உள்ளது.

"யாத்திரைக்கு முன், கோவில் வளாகத்தில் ஆத்திரமூட்டும் உரை நிகழ்த்தப்பட்டது. யாத்திரையில் கலந்துகொண்டவர்கள் ஏதாவது போருக்கு வந்தவர்களா, கையில் ஆயுதங்களுடன் அவர்கள் ஏன் வரவேண்டும்,” என்று மூத்த செய்தியாளர் ஹேமந்த் அத்ரி வினவினார்.

“நான் எந்த ஆத்திரமூட்டும் உரையையும் நிக்ழ்த்தவில்லை… பசுவைப் பாதுகாப்போம் என்றுதான் சொன்னேன்” என்கிறார் சுரேந்திர ஜெயின்.

“ஒரு சமய யாத்திரையில் யாரும் ஆயுதங்களை எடுத்துச் செல்வதில்லை. ஆனால் உரிமம் உள்ளவர்கள் அவற்றைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். உரிமம் பெற்ற ஆயுதங்களை மக்கள் வைத்திருந்தனர். அவர்கள் அதை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் பலர் இறந்திருப்பார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மேவாத்தின் சூழல் திட்டமிட்டு கெடுக்கப்படுகிறதா என்பதே இப்போதைய கேள்வி.

அது உண்மையானால் அதைத் தடுக்க அரசு என்ன செய்கிறது? அதைத் தடுக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறதா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: