உச்சநீதின்றம் தடை எதிரொலி: ராகுல்காந்தி தகுதிநீக்கம் எப்போது விலகும்? தேர்தலில் போட்டியிட முடியுமா?

ராகுல்காந்தி திங்களன்று நாடாளுமன்றம் செல்லலாமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல்காந்தி விமர்சனங்களை முன்வைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்

அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, 'மோதி' என்ற பெயர் குறித்து குறிப்பிட்ட கருத்துகள் சர்ச்சையை எழுப்பின. இதுதொடர்பான வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த தீர்ப்பு எதிரொலியாக ராகுல்காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் இன்று தனது உத்தரவில், "அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க போதுமான காரணங்களையும், முகாந்திரங்களையும் கீழமை நீதிமன்றம் கூறவில்லை" என்று தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், ராகுல்காந்தி விமர்சனங்களை முன்வைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு ஏன்?

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, 'மோதி' என்ற பெயரைக் குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்தார். அதைக் கண்டித்து குஜராத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பர்னீஷ் மோதி, அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

"அனைத்து திருடர்களும் மோதி என்ற பின்னொட்டை கொண்டிருப்பது ஏன்? நிரவ் மோதி, லலித் மோதி, நரேந்திர மோதி" என்று ராகுல்காந்தி பேசியிருந்தார்.

சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோதி இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். அவர் தற்போது தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார். ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோதியும் இதேபோன்ற மோசடி வழக்கில் சிக்கி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளார்.

புர்னீஷ் மோதி தனது புகாரில், ராகுல்காந்தியின் கருத்து மோதி என்ற பின்னொட்டு கொண்ட ஒட்டுமொத்த சமூகத்தையுமே அவமரியாதை செய்வதாக அமைந்திருப்பதாக கூறியிருந்தார். ஆனால் ராகுல்காந்தியோ, 'ஊழலை கோடிட்டுக் காட்டவே அவ்வாறு பேசினேனே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிப்பிட்டு அல்ல' என்று விளக்கம் அளித்தார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல்காந்திக்கு கீழமை நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், கடந்த ஜூலை மாதம் குஜராத் உயர் நீதிமன்றம் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டை நிராகரித்து விட்டது.

ராகுல்காந்தி திங்களன்று நாடாளுமன்றம் செல்லலாமா?

பட மூலாதாரம், Getty Images

ராகுல்காந்தி நாடாளுமன்றம் செல்லலாமா? அடுத்த தேர்தலில் போட்டியிட முடியுமா?

உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு எதிரொலியாக, ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் செல்லவும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் வழி பிறந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

இதுதொடர்பாக மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் பிடிடி ஆச்சாரியிடம் பிபிசி சார்பில் கருத்து கேட்டோம். அவர் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை (தகுதியின்மைக்கு தடை) பிறப்பித்ததுமே, தகுதி நீக்கம் தானாகவே நீங்கிவிடும். தகுதி நீக்கம் அகன்றதும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மீண்டும் கிடைத்துவிடும்.

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலியாக, ராகுல்காந்தியின் தகுதி நீக்கம் ரத்தாகி அவர் மீண்டும் உறுப்பினராக செயல்படலாம் எனபதற்கான அறிவிப்பை மக்களவை செயலகம் வெளியிட வேண்டும். இதை உடனடியாக செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்ததும், அவரை தகுதி நீக்கம் செய்யும் போது காட்டிய அதே அவசரத்தை அவரது உறுப்பினர் பதவியை மீண்டும் கொடுப்பதிலும் மக்களவை செயலகம் காட்ட வேண்டும்.

திங்கட்கிழமை முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அவர் கலந்துகொள்ளலாம். கீழமை நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான விவகாரம் தீர்க்கப்படாவிட்டாலும், அடுத்த மக்களவைத் தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிட தகுதியுடையவராகவே இருப்பார்." என்று கூறினார்.

நீதி வெல்லும்! - தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்

நீதி வெல்லும் ! - தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, என்ன நடந்தாலும், தனது பணி அதேதான். அது இந்தியாவை பாதுகாப்பது என பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி

தீர்ப்புக்கு பின், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, என்ன நடந்தாலும், தனது பணி அதேதான். அது இந்தியாவை பாதுகாப்பது என குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, நீதி நிச்சயம் ஒரு நாள் வெல்லும் எனக்கூறினார். "இன்று இல்லை என்றால் நாளை; நாளை இல்லை என்றால் நாளை மறுநாள்; உண்மை எப்போதும் வெல்லும்.

நான் என்ன செய்ய வேண்டும்; என் பாதை என்ன என்பது குறித்த தெளிவு என் மனதில் உள்ளது. தனக்கு உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி " என்றார்.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தமிழ் நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பாக தெரிவித்துள்ளார். மேலும், "இந்த முடிவு நமது நீதித்துறையின் வலிமை மற்றும் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவை மீதான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது," என குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்பை வரவேற்றுள்ள மேற்க வங்க முதல்வர் மமதா பானர்ஜி, "இது நமது தாய்நாட்டிற்காக ஒன்றுபட்டுப் போராடி வெற்றி பெறுவதற்கான இந்தியா(I.N.D.I.A) கூட்டணியின் உறுதியை மேலும் வலுப்படுத்தும். நீதித்துறைக்கு கிடைத்த வெற்றி," என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

அதேபோல, தீர்ப்பை வரவேற்றுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், "ராகுல் காந்திக்கு எதிரான அநியாயமான அவதூறு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை நான் வரவேற்கிறேன். இது இந்திய ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது. அவருக்கும் வயநாடு மக்களுக்கும் வாழ்த்துகள்," என குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "தகுதி நீக்கம் செய்யும்போது, தீர்ப்பு வந்து 24 மணி நேரத்தில் தகுதி நீக்கம் செய்துவிட்டனர். தற்போது, மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக எவ்வளவு காலம் எடுக்கின்றனர் என பார்க்கலாம்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: