மீனவர்கள் வலையில் சிக்கும் ஆழ்கடல் உயிரினம் - ராமேஸ்வரம் கடலுக்கு என்ன ஆச்சு?

கடலோர மீனவர் வலைகளில் சிக்கும் திமிங்கிலம் போன்ற ஆழ்கடல் உயிரிகள்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆழ்கடலில் வாழும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் பாக் நீரிணை, மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் கடலோரத்தில் மீன் பிடிக்கும் சிறு மீனவர் வலைகளில் சமீபத்தில் அவ்வப்போது சிக்கி வருகின்றன. 

கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம் உள்ளிட்ட உயிரினங்கள் இவற்றில் அடக்கம்.

 வடகிழக்கு பருவ மழை தொடங்கியபிறகு இப்படி தங்கள் வலைகளில் உயிரோடு சிக்கும் இத்தகைய அரிய வகை உயிரினங்களை பத்திரமாக மீண்டும் கடலுக்குள்ளே விடுவதாக மீனவர்கள் கூறுகிறார்கள். 

அரிய உயிரிகள் வலையில் சிக்கிய சம்பவங்கள்

ராமநாதபுரம் அடுத்த அழகன்குளம் அம்மன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி ஆற்றங்கரை கடற்கரை பகுதியில் கரைவலை மீன்பிடிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அதிக எடை கொண்ட மிகப்பெரிய புள்ளி திமிங்கலம் ஒன்று சிக்கியது.

மீனவர்கள் அதை பத்திரமாக கடலில் விட்டனர்.

அடுத்ததாக ராமநாதபுரம் அடுத்த கீழக்கரை கடற்கரையில் கடந்த நவம்பர் மாதம் 30ந்தேதி காலை மீனவர்கள் கரை வலை மீன் பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது வலையில் சுமார் 60 கிலோ எடை கொண்ட டால்பின் மீன்கள் இரண்டு உயிருடன் சிக்கின.

அவை இரண்டையும் வலையில் இருந்து பத்திரமாக பிரித்தெடுத்த மீனவர்கள் அவற்றைக் கடலில் விட்டதாகத் தெரிவித்தனர். 

மீண்டும் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் கடற்கரையில் மீனவர்கள் கரை வலை முறையில் மீன் பிடித்துவிட்டு கடற்கரையில் வைத்து வலையில் இருந்து மீன்களை பிரிக்கும் போது அதில் கடல் பசு மற்றும் சித்தாமை இருந்தது தெரிய வந்ததது. மீனவர்கள் இரண்டையும் பத்திரமாக கடலில் விட்டனர்.

கடலோர மீனவர் வலைகளில் சிக்கும் திமிங்கிலம் போன்ற ஆழ்கடல் உயிரிகள்

ஏன் இப்படி நடக்கிறது?

கடலோர மீனவர்கள் வலையில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் சிக்குவதற்கான காரணம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கு.சிவக்குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடல் பசு, திமிங்கிலம், டால்பின், உள்ளிட்ட சில கடல் வாழ் உயிரினங்கள் அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றி வேறு இடத்திற்கு குடியேறும்," என்று கூறினார்.

"இந்த வகை கடல் வாழ் உயிரினங்கள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்து மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வந்து மீண்டும் அது மகாராஷ்டிரா செல்லும்.

'கடல் பசு' எண்ணிக்கையில் மிகவும் குறைவாக உள்ளதால் அரசு கடல் பசுவை அழிவின் விளிம்பில் இருந்து மீட்க முன்னுரிமை அளிக்கிறது. அதே போல் Sea Humpback Whale என்கிற திமிங்கலம் எண்ணிக்கையில் 50 மட்டுமே உள்ளதால் அதனையும் பாதுகாக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.

கடலில் கன்னியாகுமரிக்கு கீழே WEDGEBANK என்ற பகுதி உள்ளது. அது ஆழம் குறைந்த பகுதி, பாதுகாப்பு மற்றும் தேவையான உணவு கிடைப்பதால் அங்கு கடல் பசு, டால்பின், ஆமைகள், கடல் பல்லி, திமிங்கலம் உள்ளிட்டவைகள் அதிகளவில் வசிக்கின்றன," என்று அவர் கூறினார்.

மன்னார் வளைகுடா கடல் வழியாக இடம்பெயர்ந்து பாக் நீரிணை வரை சென்று மீண்டும் மன்னார் வளைகுடா பகுதிக்கு இந்த வகை உயிரினம் வருகிறது என்று குறிப்பிட்ட பேராசிரியர் சிவக்குமார், அதற்கான அவசியம் என்ன என்பதையும் விவரித்தார்.

"பருவமழை காலங்களில் மழை நீர் கடலில் சேர்ந்து கடல் நீரில் உப்பு தன்மை குறைவதால் கடல் புற்கள் நல்ல வளர்ச்சி அடையும். பொதுவாக கடல் மீன்கள் இந்த புற்களுக்கு மத்தியில் வாழ்விடத்தை அமைத்துக் கொள்ளும். அப்போது இந்த மீன்களை உண்ணும் கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம், டால்பின் போன்றவை கடல் புற்கள் உள்ள கரைப் பகுதிக்கு வர நேரிடுகிறது.

மேலும், நன்னீரும் கடல் நீரும் சேரும் இடங்களில் கடலுக்கு அடியில் மணல் திட்டுகள் இருக்கும். அங்கு டால்பின்கள் துள்ளிக் குதித்து நீரை கலங்கடித்து கடல் மீன்களைக் குழப்பி அவற்றை வேட்டையாடும். இதற்காக டால்பின்கள் கரையோரம் வரும்போது வரும் மீனவர்கள் வலையில் சிக்குகின்றன என்கிறார் பேராசிரியர் சிவக்குமார்.

கடலோர மீனவர் வலைகளில் சிக்கும் திமிங்கிலம் போன்ற ஆழ்கடல் உயிரிகள்

அரிய உயிரினத்தை பாதுகாக்கும் மீன்கள்

தொடர்ந்து பேசிய பேராசிரியர் கு.சிவக்குமார் முன்பெல்லாம் வலையில் சிக்கிய கடல் பசு, கடல் ஆமை, டால்பின் உள்ளிட்டவற்றை மீனவர்கள் வர்த்தகப் பொருளாக பார்த்தனர்.

கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கடல் பசு, கடல் ஆமை, டால்பின் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை குறைவதால் கடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் எவ்வாறு பாதிக்கப்படும் என மீனவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் சமீப காலமாக மீனவர்கள் தங்களது வலைகளில் சிக்கும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை கடலில் பத்திரமாக விட்டு விடுகின்றனர்.

வலையில் சிக்கும் கடல் பசு, கடல் ஆமைகளை ஒரு சில மீனவர்கள் கடலில் பத்திரமாக விடுவார்கள். ஆனால் போட்டோ, வீடியோ எடுப்பதில்லை. ஆனால் தற்போது வலையில் சிக்கும் இவைகளை கடலில் விடும் விடியோ, போட்டோ வனத்துறையினரிடம் வழங்கினால் மீனவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுவதால் மீனவர்கள் போட்டோ, வீடியோ எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகம் பகிரப்படுவதால் மீனவர்கள் வலையில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் சிக்குவது பொது மக்கள் மத்தியில் பரவலாக தெரிய வருகிறது.

தங்கள் வலையில் சிக்கும் அரிய வகை உயிரிகளை மீட்க சில நேரங்களில் மீனவர்கள் தங்களது வலைகளை அறுத்து விடுகின்றனர்.

இதனால் மீனவர்களுக்கு பொருள் சேதம் ஏற்படுகிறது. மீனவர்கள் நஷ்டம் அடையாமல் இருக்க சேதமடைந்த வலைக்கு பதில் புதிய மீன்பிடி வலையை அரசு வழங்க வேண்டும்.

கடலில் உயிருடன் பாதுகாப்பாக விடும் மீனவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் அரசு அதனை செய்தால் நிச்சயம் அழிவின் விளிம்பில் உள்ள கடல் பசு, டால்பின், திமிங்கலம் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை உயரும் என்று கூறினார் சிவக்குமார். 

கடலோர மீனவர் வலைகளில் சிக்கும் திமிங்கிலம் போன்ற ஆழ்கடல் உயிரிகள்

இது குறித்து வலையில் சிக்கிய அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பத்திரமாக கடலில் விட்ட மீனவர் ஜிம்மி காட்டர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பருவ மழை காலங்களில் கடல் நீரோட்டம் காரணமாக இவ் வகை கடல் வாழ் உயிரினங்கள் கடல் நீர் மட்டம் குறைந்த பகுதிக்கு உணவுக்காக வந்து நீர்மட்டம் உயரும் வரை மணல் திட்டுகளில் தங்கி விடும். அப்போது கரை ஓரங்களில் மீன் பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வலையில் இவை சிக்குகின்றன. 

கடல் பசு தனது குட்டிகளுக்கு உணவளிக்கவும், வேட்டையாடவும், கடலடி மணல் திட்டுகளின் இடையில் உள்ள தாவு பகுதிக்கு வரும் போது அதனை நாட்டுப்படகு மீனவர்கள் இறைச்சிக்காகவும், மருத்துவ குணத்துக்காகவும் பிடித்து வெட்டி விற்பனை செய்வது முன்பு வழக்கமாக இருந்தது. அவை மீனவர்களை தாக்குவதில்லை.

இவை கடலுக்கு எவ்வளவு முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்பட்ட காரணத்தால் இவற்றை மீனவர்கள் தற்போது தொந்தரவு செய்வதில்லை," என்கிறார்.

பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க திட்டம்

ராமநாதபுரம் மாவட்ட வனக்காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினை கடல் பகுதியில் கடல் பசுவை பாதுகாப்பதற்குத் அரசு பல முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறுகிறார்.

"மீனவர்களின் வலைகளில் சிக்கும் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை கடலில் விடும் மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் நான்கு இடங்களில் வலையில் சிக்கிய டால்பின், ஆமை, திமிங்கலம், கடல் பசு உள்ளிட்டவைகளை கடலில் விட்ட மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்க திட்டமிட்டுள்ளோம்," என்கிறார் அவர்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும் மீனவர்கள் தங்களது விலை உயர்ந்த வலையை அறுத்து அதில் உள்ள அரிய வகை கடல் வாழ் உயிரினங்களளை மீட்டு கடலில் விடும் போது வலை சேதமடைகிறது. எனவே மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க வலைகளுக்கான பணத்தை வழங்குவது குறித்து வனத்துறை திட்டமிட்டு வருவதாகவும் பகான் ஜகதீஷ் சுதாகர் தெரிவித்தார்.

கடலோர மீனவர் வலைகளில் சிக்கும் திமிங்கிலம் போன்ற ஆழ்கடல் உயிரிகள்

மன்னார் வளைகுடாவும், கடல் பசுக்களும்

தமிழ்நாட்டின் தென் கிழக்கு கடல் பகுதி மன்னார் வளைகுடா என அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது.

சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்த கடற்பரப்பில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன. இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மன்னார் வளைகுடா கடலில் எவ்வளவு கடல் வாழ் உயிரினங்கள்?

உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவளப் பாறைகள் என இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன.

இவற்றில், அழியும் தருவாயில் உள்ள அரிய வகை உயிரினங்கள் சில உள்ளன. இவற்றில் ஒன்று கடல் பசு. இது, கடலில் வளரும் புற்களை உணவாக உட்கொள்வதை வழக்கமாகக் கொண்ட உயிரினம் ஆகும்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 200-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே கடல் பசுக்களே இருப்பதாக சொல்லப்படுகிறது. இவற்றையும், இவற்றின் வாழ்விடத்தையும் பாதுகாக்கும் பணியில் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: