அமெரிக்காவில் சீக்கியரை கொல்ல 'ரா' அமைப்பு சதி செய்ததாக வெளியான வாஷிங்டன் போஸ்டின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கூறிய பதில் என்ன?

மோதி - பைடன்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியில் இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் பங்கு இருப்பதாக அமெரிக்க ஊடகம் `தி வாஷிங்டன் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த செய்தி அறிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

செவ்வாய் அன்று, வாஷிங்டன் போஸ்ட் செய்தி குறித்து வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “இந்த செய்தி அறிக்கை, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் நியாயமற்ற, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சக அறிக்கையில், “ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளின் நெட்வொர்க்குகளை பற்றி அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்க தரப்பில் பகிரப்பட்ட பாதுகாப்புக் கவலைகளைத் தொடர்ந்து இந்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இதை ஊகித்து, பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவது பயனுள்ளதாக இருக்காது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் என்ன இருக்கிறது?

"வாஷிங்டன் போஸ்ட்" செய்தி அறிக்கையில், "கடந்த ஆண்டு ஜூன் 22-ம் தேதி, அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில், இந்திய உளவு அமைப்பான, 'ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு' (RAW) அதிகாரி ஒருவர் அமெரிக்காவில் கொலை செய்யும் கூலிப்படையை பணிக்கு அமர்த்தியுள்ளார். காலிஸ்தான் இயக்க தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் பெயரில் இந்த கொலையாளிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் கொலை செய்ய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

'ரா' அதிகாரியான விக்ரம் யாதவ், இந்தக் கொலையை 'முன்னுரிமை கொடுக்க வேண்டிய' மிக முக்கியமான நடவடிக்கை என்று விவரித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில அதிகாரிகளை மேற்கோள் காட்டி, நியூயார்க்கில் பன்னுன் வசிக்கும் இருப்பிடம் பற்றிய தகவல்களை யாதவ் சிலருக்கு வழங்கியதாக செய்தியில் எழுதப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் பன்னுன் வீடு திரும்பியதும் , "வேலையைத் தொடர உத்தரவுகளைப் பெறுவோம்" என்று கூலிப்படையினர் கூறியதாக செய்தியில் கூறப்பட்டது.

யாதவ்வின் அடையாளம் மற்றும் இந்த வழக்கில் அவரது தொடர்பு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அமெரிக்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்ட கொலைத் திட்டம், RAW அதிகாரியால் உத்தரவிடப்பட்டது என்பதற்கு யாதவ் என்ற பெயர் வெளி வந்திருப்பதே தெளிவான சான்று என செய்தியில் எழுதப்பட்டுள்ளது.

தற்போதைய மற்றும் முன்னாள் மேற்கத்திய பாதுகாப்பு அதிகாரிகளின் கூற்றுப்படி, சிஐஏ, எஃப்.பி.ஐ மற்றும் பிற ஏஜென்சிகளின் விரிவான விசாரணையில் சில உயர்மட்ட `ரா’ அதிகாரிகளும் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளனர்.

பன்னுன் கொலை முயற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த சம்பவங்களால் இந்தியா - அமெரிக்கா உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பன்னுனை குறிவைத்து நடத்தப்பட்ட கொலை முயற்சி நடவடிக்கைக்கு அப்போதைய `ரா’ தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகளும் ஆய்வில் கண்டறிந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த கொலை முயற்சி நடவடிக்கையை பற்றி நன்கு அறிந்த முன்னாள் மூத்த இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் 'வாஷிங்டன் போஸ்ட்-நிருபர்களிடம் பேசியதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் கூற்றுபடி "வெளிநாட்டில் வசிக்கும் சீக்கிய தீவிரவாதிகளை ஒழிக்க கோயலுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது” என கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவத்துக்கு முன்னர், கனடாவின் வான்கூவர் அருகே ஜூன் 18 அன்று, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில், இந்தியாவின் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன, அதை இந்தியா மறுத்தது.

மோதி அரசால் 'தீவிரவாதிகள்' என அறிவிக்கப்பட்ட குறைந்தது 11 சீக்கியர்கள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் பாகிஸ்தானில் கொல்லப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் செய்தியில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், 'ரா' அமைப்பின் இந்தத் திட்டத்தைப் பற்றி அறிந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் இந்தக் கூற்றுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் கொடுக்கப்படவில்லை.

பன்னுன் கொலை முயற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அரசு ஊழியர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் நிகில் குப்தா, பன்னுனைக் கொல்ல கொலையாளிகளை ஏற்பாடு செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

நிகில் குப்தா மீது அமெரிக்காவின் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நியூயார்க்கில் பிரிவினைவாத தலைவரை கொல்ல இந்தியரான நிகில் குப்தா ஒரு நபரை வேலைக்கு அமர்த்தியதாக அமெரிக்கா கூறியது. இதற்காக கொலையாளிக்கு ஒரு லட்சம் டாலர்கள் (சுமார் ரூ.83 லட்சம்) வழங்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், நிகில் குப்தாவுக்கு இந்திய அரசு ஊழியர் ஒருவரிடமிருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு ஜூன் மாதம் செக் குடியரசில் நிகில் குப்தா கைது செய்யப்பட்டார். இந்திய அரசு ஊழியர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் அவர் பன்னுனைக் கொல்ல கொலையாளிகளை ஏற்பாடு செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்தியாவின் உயர் மட்ட அதிகாரிகளிடம் அமெரிக்கா கேள்வி எழுப்பியது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அப்போதைய செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொள்கிறது, மேலும் இந்த விவகாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

பக்சியின் கூற்றுப்படி “அமெரிக்கா உடனான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள், பயங்கரவாதிகள், ஆயுத வியாபாரிகள் ஆகியோரின் தொடர்பை பற்றிய சில உள்ளீடுகளைத் அமெரிக்கத் தரப்பு பகிர்ந்து கொண்டதாக நாங்கள் ஏற்கெனவே கூறியுள்ளோம். இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

பன்னுன் கொலை முயற்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பன்னுன் யார்?

அமெரிக்காவில் வசிக்கும் குர்பத்வந்த் சிங் பன்னுன், 'நீதிக்கான சீக்கியர்கள்' (Sikhs for Justice) என்ற அமைப்பின் நிறுவனர் ஆவார்.

காலிஸ்தானுக்கான கோரிக்கையை முன்வைக்கும் 'பொதுவாக்கெடுப்பு-2020' என்ற பிரசாரத்தை பன்னுன் தொடங்கினார். அதன் கீழ், பஞ்சாப் மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் சீக்கியர்கள் ஆன்லைனில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், ஆனால் வாக்களிப்பதற்கு முன்பே, இந்திய அரசாங்கம் காலிஸ்தானுக்கு ஆதரவான தளங்கள் என்று கூறி 40 இணையதளங்களை தடை செய்தது. இந்த அமைப்பு தன்னை ஒரு மனித உரிமை அமைப்பு என்று முன்னிறுத்தி உள்ளது. ஆனால் இந்தியா அதை 'பயங்கரவாத' அமைப்பாக அறிவித்துள்ளது.

பன்னுனிடமிருந்து வரும் மிரட்டல் வீடியோக்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக இந்தியாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஜூலையில் இந்தியாவால் பயங்கரவாதியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

எல்லை தாண்டி வசித்த போதிலும், வெளிநாட்டு மண்ணிலிருந்தும் பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் பன்னுன் ஈடுபட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, பன்னுன் தேச விரோத நடவடிக்கைகள் மற்றும் காலிஸ்தான் இயக்கத்தில் செயல்படுகிறார். பஞ்சாபில் பயங்கரவாதத்தை புதுப்பிக்க முயற்சிப்பதன் மூலம் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கிறார்.

முன்னதாக, ஜூலை 10, 2019 அன்று, உள்துறை அமைச்சகம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான UAPA இன் கீழ் 'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பையும் தடை செய்தது.

பன்னுன் கொலை முயற்சி
படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

கனடாவில் நடந்த நிஜ்ஜார் கொலை சம்பவமும் இந்தியா மீதான பழியும்

கடந்த ஆண்டு ஜூன் மாதம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நிஜ்ஜார் படுகொலை தொடர்பான வலுவான குற்றச்சாட்டுகளை கனடா இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக ட்ரூடோ கூறினார். இருப்பினும், அத்தகைய தகவல்கள் பொதுவில் பகிரப்படவில்லை.

நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக ‘குறிப்பிட்ட’ எந்த உண்மையான தகவலாக இருந்தாலும் அதை ஆய்வு செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியிருந்தது.

ஆனால், அப்படி எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. எனவே கனடாவின் இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று இந்திய அரசு கூறுகிறது. இதையடுத்து இந்தியாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்தியாவும் உத்தரவிட்டது. இந்தியா, வெளியுறவு தூதர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை கேட்டுக் கொண்டதால், கனடா 41 தூதர்களை திரும்பப் பெற வேண்டியிருந்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)