இந்திய அணியில் ரோகித்துடன் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் - பிசிசிஐ திட்டம் என்ன?

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் ஜூன் மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை இந்திய கிரி்க்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசி) இன்று அறிவித்துள்ளது.

அதில் ரசிகர்கள் அனைவரும் வியக்கும் வகையில் சில மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன. மற்றவகையில் சீனியர் வீரர்களே இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

குறிப்பாக ஐபிஎல் தொடரில் இதுவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படாத ஹர்திக் பாண்டியாவுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. லக்னெள அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டுவரும் கே.எல்.ராகுலுக்கு உலகக் கோப்பை அணியில் இடமில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டனாக பட்டையை கிளப்பிவரும் சஞ்சு சாம்ஸன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து ரிஷப் பந்தும் இடம் பெற்றுள்ளதால், சாம்ஸனுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

அதேபோல, இளம் வீரர்கள் ரிங்கு சிங், சுப்மான் கில், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்களாக இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கரிபீயன் தீவுகளில் ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் நடக்க உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த மெகா கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 55 போட்டிகள் நடக்க உள்ளன.

எந்தக் கலவையில் அணி தேர்வு?

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியில் ஹர்திக்கிற்கு பதவி, சாம்ஸன் சேர்ப்பு: ராகுலுக்கு இடமில்லை

டி20 உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருப்பதால் அனைத்து அணிகளும் அணியை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் பிசிசிஐ தேர்வுக் குழுவும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர 3வது வீரராக களமிறங்க விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 4வது வரிசைக்கு சூர்யகுமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடுவரிசைக்கு பலம் சேர்க்க ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், யஜுவேந்திர சஹல் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர ஜடேஜா, அக்ஸர் உள்ளனர். வேகப்பந்துவீச்சுக்கு ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சுப்மான் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் மாற்று வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளோடு சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஜூன் 5ம்தேதி அயர்லாந்துடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது. அதன்பின், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தானுடனும் அதைத் தொடர்ந்து 12-ம்தேதி அமெரிக்காவுடனும், 15-ம் தேதி கனடா அணியுடனும் இந்திய அணி மோதுகிறது.

அதிர்ச்சி முடிவுகள்

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இஷாந்த் கிஷன், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ரிங்கு சிங், திலக் வர்மா ஆகியோர் இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

அதிலும் இந்திய அணிக்காக பலமுறை கேப்டன் பொறுப்பேற்று விளையாடியுள்ள, பலமுறை துணைக் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள கே.எல்.ராகுல் உலகக் கோப்பைக்கான அணியில் இல்லாதது வியப்புக்குரியதாக இருக்கிறது. ஏற்கெனவே அணியில் ரிஷப் பந்த், சாம்ஸன் என இரு விக்கெட் கீப்பர்கள் இருக்கும் நிலையில் ராகுல் சேர்க்கப்பட்டால் விக்கெட் கீப்பராக இல்லாமல் “ஸ்பெஷலிஸ்ட்” பேட்டராகத்தான் சேர்க்க முடியும். ஆதலால் கே.எல்.ராகுல் பெயர் பரிசீலிக்கப்படாமல் இருக்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஐபிஎல் டி20 தொடரில் கே.எல்.ராகுல் 10 போட்டிகளில் 378 ரன்கள் சேர்த்து 144 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடி வரும் போது அவரை உலகக் கோபபைக்கான அணியில் சேர்க்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சிக்குரியதுதான்.

அதேபோல மற்றொரு விக்கெட் கீப்பரும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரருமான இஷான் கிஷன் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது ரசிகர்கள் ஒருதரப்பில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

ஏனென்றால், லீக் போட்டிகளிலும், இந்திய அணியிலும் மட்டும் விளையாடிவரும் இஷான் கிஷன் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதன்பின் பிசிசிஐ செயலர் ஜெய்ஷா எச்சரிக்கை, பிசிசிஐ தேர்வுக்குழுவினர் எச்சரிக்கைக்குப் பின்புதான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இஷான் கிஷன், சூர்யகுமார் ஆகியோர் விளையாடத் தொடங்கினர்.

ஐபிஎல் டி20 தொடரிலும் இஷான் கிஷன் பெரிதாக இதுவரை எந்த ஸ்கோரும் அடிக்கவில்லை என்பதாலேயே தேர்வுக்குழுவினர் அவர் மீது கவனத்தைச் செலுத்தவில்லை. அது மட்டுமல்லாமல், ஏற்கெனவே விக்கெட் கீப்பிங் பணிக்கு 3 பேர் போட்டியிடும் நிலையில் இஷான் கிஷன் பரிசீலிக்கபட்டிருக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கே அணியின் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டுவரும் ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை 447 ரன்கள் சேர்த்து ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார். இதில் 3 அரைசதங்கள், ஒருசதம், 98 ரன்களில் அவுட் என்று ருதுராஜ் சிறப்பாக ஆடி வரும் நிலையில் அவரின் பெயரும் உலகக் கோப்பைக்கான அணியில் இல்லை.

அதேபோல, திலக் வர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக இந்த சீசனில் 336 ரன்கள் குவித்துள்ளார். 158 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிவரும் அவரை தேர்ந்தெடுக்கவில்லை. 2019 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் கலக்கிய ரவி பிஸ்னோய், ஐபிஎல் தொடரிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரின் பெயரும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இல்லை.

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், நீண்ட நாட்களாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சஹல் மீண்டும் கம்பேக் கொடுத்து, உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். யுஸ்வேந்திர சஹல் தனது பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்குகிறார் என்ற குற்றசாட்டு இருந்தாலும், விக்கெட் டேக்கிங் பவுலர் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இந்திய அணிக்கு பல நேரங்களில் சஹல் எடுத்துக் கொடுத்த விக்கெட் திருப்புமுனையாக மாறி ஆட்டத்தின் முடிவையே மாற்றி அமைத்திருக்கிறது. அதிலும் ஐபிஎல் தொடரிலும் சஹல் ராஜஸ்தான் அணியில் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் என்பதால் மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சாம்ஸனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

சஞ்சு சாம்ஸன் இதற்கு முன் பல முறை இந்திய அணியில் பல்வேறு ஒருநாள், டி20 தொடர்களில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ப்ளேயிங் லெவனில் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது குறைவுதான். ஆனால்,ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டன் பொறுப்பேற்று கடந்த 3 சீசன்களாக சிறப்பாக செயல்பட்டதைப் பார்த்தபின், தேர்வுக் குழுவினரால் சாம்ஸனை புறந்தள்ளிவிட்டுச் செல்லமுடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.

சாம்ஸனின் பேட்டிங் செய்யும் வித்தில் மாற்றம் ஏற்பட்டு, தேவைக்கு ஏற்றாற்போல் பேட்டிங்கை மாற்றி அமைக்கிறார். அதாவது தேவைப்படும் நேரத்தில் ஆங்கர் ரோலும், ரன்ரேட் தேவைப்படும் போது அதிரடியான ஆட்டத்தை கையாலும் பக்குவத்தை சாம்ஸன் பெற்றுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் சாம்ஸனின் ஆட்டத்தில் ஏற்பட்ட முதிர்ச்சியே அவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர வைத்தது. ஆனால், ரிஷப் பந்தைவிட அருமையாக கீப்பிங் செய்யக்கூடிய சாம்ஸனுக்கு இந்த முறையும் பெஞ்சில் அமரவைக்கப்படுவாரா அல்லது ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா என்பது ரசிகர்களிடையே விவாதிக்கப்படும் ஒன்றாக உள்ளது.

ரோஹித் - ஹர்திக் இருவருக்கும் ஒத்துப் போகுமா?

ஹர்திக் பாண்டியாவுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதில் இருந்தே இருவருக்கும் இடையே மறைமுகமாக உரசல் நிலவி வருவதாக நாளேடுகளில் செய்திகள் வந்துள்ளன.

நேற்று கூட "மும்பை அணி ஒரு குழுவாக செயல்படவில்லை. ஒரு அணியாக ஒருங்கிணைந்து விளையாடவில்லை. மும்பை அணி பிளவுபட்டுள்ளது, மும்பை அணிக்குள் வெவ்வேறு குழுக்கள் உருவாகியிருக்கலாம்" என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருந்தார்.

அப்படி இருக்கும்போது, ரோஹித் சர்மா கேப்டனாக இருக்கும், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா துணை க் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து, விமர்சித்து வருகிறார்கள்.

டி20 உலகக்கோப்பை இந்திய அணி, ரோகித் - ஹர்திக்

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் ஆடியுள்ள ஹர்திக் 197 ரன்கள் சேர்த்துள்ளார், 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிக்கான ஃபார்மிலேயே இல்லாத ஒரு வீரரை எவ்வாறு அணியில் சேர்த்தீர்கள், துணைக் கேப்டன் பதவியையும் தூக்கிக் கொடுத்தீர்கள் என்று இந்திய அணி தேர்வுக்குழுவை ரசிகர்கள் கேள்வியால் துளைக்கிறார்கள்.

இந்திய அணியில் கீழ் வரிசையில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்டர்கள் தேவை என்ற காரணத்தினாலும், நடுப்பகுதி ஓவர்களில் குறைந்தபட்சம் 2 ஓவர்கள் வரை வீச பந்துவீச்சாளர் தேவை என்பதாலும் ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு துணைக் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)