அமெரிக்க கல்லூரிகளில் பரவும் பாலத்தீன ஆதரவுப் போராட்டம் - யூத மாணவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டதா?
அமெரிக்காவில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக கல்லூரி வளாகங்களில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே கொலம்பியா, யேல் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது எமர்சன் கல்லூரியைச் சேர்ந்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-யிடம் பாஸ்டன் போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல, தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் 93 பேரும், டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 34 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் போராட்டங்கள் நடைபெறும் பல்கலைக்கழக வளாகங்களில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சரி, என்ன நடக்கிறது? இந்த போராட்டத்தின் பின்னணி என்ன?
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 253 பேர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. 6 மாதங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்தப் போரில் 34,000-க்கும் அதிகமான பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
இந்த நிலையில், காஸா மீதான இஸ்ரேலின் போரை ஆதரிக்கும் நிறுவனங்களில் தங்கள் கல்விக்கட்டணம் முதலீடு செய்யப்படுவதாகக் கூறி அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கடந்த திங்களன்று 133 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அதேபோல, யேல் பல்கலைக்கழகத்திலும் டஜன் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தற்போது மிகப்பெரும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரம் அமைத்துப் போராடி வருகின்றனர்.
அதேநேரம், இந்தப் போராட்டங்களில் யூத மாணவர்கள் மீது வெறுப்பு வெளிக்காட்டப்படுவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. பாதுகாப்பு கருதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
இந்த போராட்டம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 21-ம் தேதி வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "ஒவ்வொரு அமெரிக்கருக்கும் அமைதியாக போராட உரிமை இருந்தாலும், யூத மாணவர்கள் மற்றும் யூத சமூகத்தைக் குறிவைத்து வன்முறை மற்றும் மிரட்டல்களுக்கு அழைப்பு விடுப்பது அப்பட்டமான யூத விரோதம் மற்றும் ஆபத்தானது" என கூறப்பட்டிருந்தது.
ஆனால், பாலத்தீனத்தில் நீதிக்கான கொலம்பிய மாணவர்கள் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
கூடாரங்களை அகற்ற மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வெள்ளிக்கிழமை காலை வரை கொலம்பியா பல்கலைக்கழகம் அவகாசம் அளித்துள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதும் கொலம்பியா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்ற அமெரிக்க சபாநாயகர் மைக் ஜான்சன், சில இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டக்காரர்களால் மிரட்டப்படும் இஸ்ரேலிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருப்பதாகக் கூறினார்.
இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியாவிட்டால் பல்கலைக்கழக தலைவர் ஷபீக், பதவி விலக வேண்டும் என்றார்.
இங்கு மட்டுமின்றி கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், எமர்சன் கல்லூரி, மிச்சிகன் பல்கலைக்கழகம் உட்பட அமெரிக்கா முழுவதும் பல பல்கலைக்கழகங்களில் பாலத்தீன ஆதரவு போராட்டங்கள் வெடித்துள்ளன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



