புதுச்சேரி: டெல்லியில் முகாமிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள், ஜெ.பி. நட்டாவிடம் முதல்வர் மீது புகார் - என்ன நடக்கிறது?

புதுச்சேரி: முதல்வர் என்.ரங்கசாமிக்கு எதிராக டெல்லியில் முகாமிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, புதுவையைச் சேர்ந்த பா.ஜ.கவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க. ஆதரவு அதிருப்தி எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுடன்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அரசுக்கு எதிராக சில பா.ஜ.க. எம்.எல்.ஏக்களும் பா.ஜ.கவுக்கு ஆதரவளிக்கும் சுயேச்சை எம்.எல்.ஏக்கள் சிலரும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஜே.பி. நட்டாவை சந்தித்து புகாரும் அளித்துள்ளனர். புதுச்சேரி அரசியலில் என்ன நடக்கிறது?

புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசின் மீது அதிருப்தி தெரிவித்து, குறிப்பாக முதலமைச்சர் என். ரங்கசாமி தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்து பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் சிலரும் பா.ஜ.க. ஆதரவு சுயேச்சைகள் சிலரும் புகார் அளித்திருக்கின்றனர்.

கடந்த 2021இல் நடந்து முடிந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தமுள்ள 30 இடங்களில் என்.ஆர். காங்கிரசுக்கு 10 இடங்களும் பா.ஜ.கவுக்கு 6 இடங்களும் சுயேச்சைகளுக்கு ஆறு இடங்களும் கிடைத்தன. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. ஆறு இடங்களையும் காங்கிரஸ் இரண்டு இடங்களையும் பெற்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதற்குப் பிறகு என்.ஆர். காங்கிரசும் பா.ஜ.கவும் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன. ஆனால், கூட்டணி அரசு அமைக்கப்பட்ட பிறகு, என்.ஆர். காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையில் தொடர்ந்து உரசல்கள் நீடித்து வந்தன. புதுச்சேரிக்கென உள்ள மூன்று நியமன எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க. ஆதரவாளர்களாகவே நியமிக்கப்பட்டனர்.

அதேபோல புதுச்சேரியின் மாநிலங்களவை உறுப்பினராக பா.ஜ.கவை சேர்ந்த எஸ்.செல்வகணபதியே நியமிக்கப்பட்டார். இந்த நியமனங்கள் எல்லாம் என்.ஆர்.காங்கிரசை கலந்தாலோசிக்காமல் செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மொத்தம் இருந்த ஆறு சுயேச்சை எம்.எல்.ஏக்களில் மூன்று பேர் பா.ஜ.கவுக்கும் மீதி மூவர் என்.ஆர்.காங்கிரசுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

இப்படி பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்த மூன்று எம்.எல்.ஏக்களில் ஏனாம் தொகுதியின் எம்.எல்.ஏவான ஸ்ரீநிவாஸ் அசோக்கும் ஒருவர். இவரது ஆதரவை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டது என்.ஆர். காங்கிரசாரிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு ஒரு காரணம் இருந்தது. அதாவது, என்.ஆர். காங்கிரசின் தலைவரான என். ரங்கசாமி சட்டமன்றத் தேர்தலில் ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அதில் ஏனாம் தொகுதியில் தோல்வியடைந்தார். அந்தத் தொகுதியில் அவரைத் தோற்கடித்தவர்தான் இந்த ஸ்ரீநிவாஸ் அசோக். தங்கள் கட்சியின் தலைவரைத் தோற்கடித்தவரின் ஆதரவை பா.ஜ.க. ஏன் ஏற்றுக்கொண்டது என்று என்.ஆர். காங்கிரசில் சலசலப்பு எழுந்தது.

இது போதாதென கடந்த 2022ஆம் ஆண்டு இந்த ஸ்ரீநிவாஸ் அசோக், புதுச்சேரி சட்டமன்றத்தின் வாசலியே உண்ணாவிரத்தில் அமர்ந்தார். தனது தொகுதிக்கு வரும் வளர்ச்சித் திட்டங்களை முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவுடன் சேர்ந்துகொண்டு, முதலமைச்சர் என். ரங்கசாமி தடுப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

புதுச்சேரி: முதல்வர் என்.ரங்கசாமிக்கு எதிராக டெல்லியில் முகாமிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், HANDOUT

அதே ஆண்டு செப்டம்பரில் மற்றொரு பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏவான அங்காளன் இதேபோன்ற போராட்டத்தில் ஈடுபட்டார். என்.ஆர். ரங்கசாமி அரசு பா.ஜ.க. எம்.எல்.ஏக்களின் தொகுதிகளையும் சுயேச்சை எம்.எல்.ஏக்களின் தொகுதிகளையும் புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

அப்போதே, ரங்கசாமியை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, பா.ஜ.கவை சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க வேண்டுமென்று அவர் கூறி வந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்த முரண்பாடுகள் முற்றின. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவை சேர்ந்தவருமான ஏ. நமச்சிவாயம் போட்டியிட்டார்.

ஆனால், அந்தத் தேர்தலில் சுமார் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசின் வி. வைத்தியலிங்கம் வெற்றி பெற்றார். இதையடுத்து, என்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் பா.ஜ.க. வேட்பாளருக்கு சரியாகப் பணியாற்றவில்லை என பா.ஜ.கவினர் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏக்களான கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகியோரும் பா.ஜ.கவுக்கு ஆதரவளித்து வரும் சுயேச்சை எம்.எல்.ஏக்களான அங்காளன், சிவசங்கரன் ஆகியோரும் ஒன்றாகச் சேர்ந்து ஜூன் 29ஆம் தேதியன்று துணை நிலை ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். ஆனால், இந்தச் சந்திப்பு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை. ஆளுநர் மாளிகையும் சந்திப்பு குறித்த புகைப்படங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில் அந்தச் சந்திப்பின்போது துணை நிலை ஆளுநரிடம் என்ன சொல்லப்பட்டது என்பது குறித்து பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏவான அங்காளன் பேசிய ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியானது.

புதுச்சேரி: முதல்வர் என்.ரங்கசாமிக்கு எதிராக டெல்லியில் முகாமிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

அதில் புதுச்சேரியில் ரெஸ்ட்ரோ-பார்கள் அதிகரிப்பு, நியாய விலைக் கடைகள் சரியாக திறக்கப்படாதது, குப்பைகளை அகற்றுவதில் சுணக்கம் ஆகியவை குறித்துப் பேசியதாகவும் தற்போதுள்ள பா.ஜ.க. அமைச்சர்களை மாற்ற வேண்டும் எனக் கோரியதாகவும் அங்காளன் சொல்லியிருந்தார். இது புதுச்சேரி அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் பா.ஜ.கவின் டெல்லி தலைமையைச் சந்தித்துப் புகார் அளிக்க, பா.ஜ.க. எம்.எல்.ஏக்களான கல்யாணசுந்தரம், ஜான்குமார், விவிலியன் ரிச்சர்ட், பாஜக ஆதரவு சுயேச்சைகள் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக், நியமன எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆகிய 8 பேர் இரு நாட்களுக்கு முன்பாக டெல்லி சென்றனர்.

தேசிய தலைமையைச் சந்திக்கும்போது, ஏற்கெனவே உள்ள பா.ஜ.க. அமைச்சர்களை மாற்றிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏக்களுக்கு வாரியத் தலைவர் பதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரப் போதாகத் தகவல்கள் கசிந்தன.

புகார் அளிக்கும் நோக்கத்துடன் இந்த எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை பா.ஜ.கவின் மாநிலத் தலைவரும் எம்.பியுமான செல்வகணபதியும் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வமும் சந்தித்துப் பேசினார்கள். இந்தச் சந்திப்பின்போது என்ன நடந்ததென புதுச்சேரியின் சபாநாயகர் செல்வம் பிபிசியிடம் பேசினார்.

"முதல்வருடனான சந்திப்பின்போது, எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்றிருப்பது குறித்துக் கேட்டார். கட்சியின் மேலிடத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து தெரிவிக்கிறோம் என்று சொன்னவுடன் முதல்வர் ஏற்றுக்கொண்டார்" என்றார் செல்வம்.

பா.ஜ.கவை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தேசிய தலைமையைச் சந்திக்க டெல்லி சென்றிருப்பது குறித்துக் கேட்டபோது, "டெல்லி சென்றிருப்பவர்களில் மூன்று பேர் மட்டும்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள். மற்றவர்கள் எல்லாம் ஆதரவு எம்.எல்.ஏக்கள்தான். இவர்கள் டெல்லி சென்றிருப்பதால் எதுவும் நடக்கப் போவதில்லை. புதுச்சேரியில் இருப்பது கூட்டணி ஆட்சி. எங்களுக்குள் அதிருப்தி என எதுவும் கிடையாது" என்கிறார் செல்வம்.

புதுச்சேரி: முதல்வர் என்.ரங்கசாமிக்கு எதிராக டெல்லியில் முகாமிட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், HANDOUT

இரு நாட்கள் காத்திருப்பிற்குப் பிறகு, டெல்லி சென்றிருந்த எம்.எல்.ஏக்கள் புதன்கிழமையன்று பிற்பகலில் பா.ஜ.கவின் தலைவர் ஜெ.பி.நட்டாவையும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலையும் (இவர் புதுச்சேரி பா.ஜ.கவின் முன்னாள் பொறுப்பாளர்) சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என டெல்லியில் இருக்கும் பா.ஜ.க எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரத்திடம் பிபிசி கேட்டபோது, புதுச்சேரி முதலமைச்சர் தன்னிச்சையாகச் செயல்படுவதாக புகார் தெரிவித்ததாகக் கூறினார்.

"புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும் முதலமைச்சர் என்.ஆர். ரங்கசாமி தன்னிச்சையாகச் செயல்படுகிறார். கூட்டணி அரசின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தையே அவர் நடத்துவதில்லை. பட்ஜெட் தருணத்தில்கூட எவ்வித விவாதத்தையும் பா.ஜ.கவினரோடு அவர் மேற்கொள்வதில்லை. அவர் இஷ்டத்திற்கு முடிவெடுக்கிறார். மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.

இப்படியே நிலைமை நீடித்தால், புதுச்சேரி பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு நல்லதில்லை என்பதை டெல்லி தலைவர்களிடம் சொல்லியிருக்கிறோம். கூட்டணியில் நீடிக்க வேண்டுமென்றால் எல்லோரையும் கலந்தாலோசித்து ரங்கசாமி செயல்பட வேண்டும். இல்லாவிட்டால், பா.ஜ.க. அந்தக் கூட்டணியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதைத் தெரிவித்திருக்கிறோம்" என்கிறார் கல்யாணசுந்தரம்.

புதுச்சேரியில் பா.ஜ.க. அமைச்சர்களை மாற்றும்படி கோரினீர்களா எனக் கேட்டபோது, "அதை நாங்கள் கேட்க முடியாது. நடப்பதைச் சொல்லியிருக்கிறோம். மற்ற விவகாரங்களை டெல்லி தலைமைதான் முடிவெடுக்க வேண்டும்" என்றார் கல்யாணசுந்தரம்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைமை தமது பக்கம் இருப்பதால், இப்போதைக்குப் பெரிய பிரச்னை வராது என நம்புகிறார் என். ரங்கசாமி.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)