ஆந்திராவில் ஏகாதசி தரிசனத்தின் போது கூட்ட நெரிசல் – 9 பேர் உயிரிழப்பு

வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், UGC

ஆந்திராவின் ஸ்ரீககுளம் மாவட்டத்தின் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பேர் உயிரிழந்ததாக, பிபிசியிடம் காவல்துறை கூறியுள்ளது.

ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் அக்கோவிலில் திரண்டதால் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இத்தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும், மாநில வேளாண் துறை அமைச்சர் கே. அச்சநாயுடுவும் அவ்விடத்திற்கு சென்றார்.

இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

சம்பவ இடத்தில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வெங்கடேஸ்வர சுவாமி கோவில் கூட்ட நெரிசல்

பட மூலாதாரம், UGC

பிரதமர் மோதி இரங்கல்

ஆந்திராவின் ஸ்ரீககுளம் மாவட்டத்தில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

இச்சம்பவத்தால் தான் மிகவும் வருத்தமடைந்துள்ளதாக ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பக்தர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்திருப்பது கொடுமையானது, அவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் எனவும் அவர் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரண பணிகளை கண்காணிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு