ஆரோக்கிய வாழ்வுக்கான 'வானவில் தட்டு' சவால் பற்றி தெரியுமா?

செப்டம்பர் 1 முதல் 7 வரை 'தேசிய ஊட்டச்சத்து வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செப்டம்பர் 1 முதல் 7 வரை 'தேசிய ஊட்டச்சத்து வாரம்' கடைப்பிடிக்கப்படுகிறது.
    • எழுதியவர், அன்பு வாகினி
    • பதவி, பிபிசி தமிழுக்காக

மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியின் தொடக்க காலம் முதல், உணவும் ஆரோக்கியமும் இணைந்தே பயணித்துள்ளன. நமது மூதாதையர்கள் வேட்டையாடியும், பறவைகளின் முட்டைகளை சேகரித்தும், காடுகளில் கிடைத்த கனிகளை உண்டும் வாழ்ந்தனர்.

இந்தப் பன்முகத்தன்மை கொண்ட உணவு முறையே, மனித மூளையின் வளர்ச்சிக்கும், நிமிர்ந்து நடக்கும் திறனுக்கும் அடிப்படையாக அமைந்தது. நம் உணவுப் பழக்கத்தில் இருந்த அந்த பன்முகத்தன்மை இன்றைய நவீன யுக காலத்தில் தொடர்கிறதா என்பது கேள்விக்குறியே.

தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் முக்கியத்துவம்

நமது அன்றாட வாழ்வில், "நான் என்ன சாப்பிடுவது?" என்பது மிக அடிப்படையான, அதே நேரம் மிக முக்கியமான கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு விடை காண்பதிலேயே நமது தனிப்பட்ட மற்றும் சமூக ஆரோக்கியத்தின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

இந்த அடிப்படைத் தேவையை நோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 7 வரை 'தேசிய ஊட்டச்சத்து வாரம்' (National Nutrition Week) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஊட்டச்சத்துச் சவால் - மும்மடங்கு சுமை

நாட்டில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சிக் குறைவு, ஒல்லி நிலை மற்றும் எடைக் குறைவு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாட்டில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான குழந்தைகள் வளர்ச்சிக் குறைவு, ஒல்லி நிலை மற்றும் எடைக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா உலகின் முன்னணி உணவு உற்பத்தியாளர்களில் ஒன்றாக இருந்தும், ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்ந்து ஒரு பெரும் சவாலாக நிற்கிறது. நாட்டின் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் வளர்ச்சிக் குறைவு (Stunting), ஒல்லி நிலை (Wasting) மற்றும் எடைக் குறைவு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவை ஒப்பிடும் போது, தமிழ்நாடு இந்தக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும், ரத்த சோகை (Anemia) இன்னும் பெரும்பான்மையான பெண்களையும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஆண்களையும் பாதித்துள்ளது.

இந்தியாவில், 67.1% குழந்தைகள் மற்றும் 59.1% வளரிளம் பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் (NFHS-5). நான்கு இந்தியப் பெண்களில் மூன்று பேர் போதுமான இரும்புச்சத்து இல்லாமல் உள்ளனர்.

இதனிடையே, குழந்தைகள் மற்றும் பெரியவர்களில் அதிக எடை/பருமன் வேகமாக அதிகரித்துக் கொண்டிருப்பது ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

இதனால் இந்தியா ஊட்டச்சத்துக் குறைபாடு, ரத்த சோகை போன்ற நுண்ணூட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் பருமன் ஆகிய மூன்று சுமைகளையும் (Triple Burden of Malnutrition) ஒரே சமயத்தில் சுமந்து கொண்டிருக்கிறது.

வயிறு நிரம்புவது மட்டும் முக்கியமல்ல

ஒருவரின் உணவில் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாவிட்டால், அவருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒருவரின் உணவில் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாவிட்டால், அவருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கலாம்.

ஒரு நபர் போதுமான கலோரிகள் நிறைந்த உணவைச் சாப்பிட்டாலும், அவரது உணவில் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாவிட்டால், அவருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ("மறை பசி" அல்லது Hidden Hunger) இருக்கலாம்.

எனவே, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு என்பது வெறும் வயிற்றை நிரப்பும் உணவு கிடைப்பது மட்டுமல்ல.

இது ஒவ்வொரு மனிதனும் தனது வயது, பாலினம், தொழில் மற்றும் ஆரோக்கிய நிலைக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் தினமும் பெற வேண்டும்.

இந்த நோக்கத்தை அடைய, 'உணவுப் பன்முகத்தன்மை' முக்கிய பங்கு வகிக்கிறது.

உணவுப் பன்முகத்தன்மை - வரையறை மற்றும் வகைகள்

உணவுப் பன்முகத்தன்மை என்பது ஒருவர் உண்ணும் உணவில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள், சுவைகள், சமையல் முறைகள் மற்றும் கலாசாரங்கள் அடங்கியிருத்தலைக் குறிக்கிறது. இதைப் பல வகைகளாகப் பிரிக்கலாம்:

ஊட்டச்சத்து பன்முகத்தன்மை: அனைத்து சத்துக்களும் நிறைந்த பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உணவில் சேர்ப்பது.

கலாசார பன்முகத்தன்மை: வெவ்வேறு பகுதிகள் மற்றும் சமூகங்களின் தனித்துவமான உணவு முறைகளை ஏற்றுக்கொள்வது.

சுவை பன்முகத்தன்மை: பல்வேறு சுவைகளை உணவில் இடம்பெறச் செய்வது.

புவியியல் பன்முகத்தன்மை: உள்ளூரில் விளையும் மற்றும் பருவகாலத்திற்கேற்ப கிடைக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வது.

"வானவில் தட்டு" - ஒரு நடைமுறை வழிகாட்டி

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மாமிச உணவுகளை ஒரே தட்டில் சேர்ப்பதே வானவில் தட்டு எனப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மாமிச உணவுகளை ஒரே தட்டில் சேர்ப்பதே வானவில் தட்டு எனப்படுகிறது

"வானவில் தட்டு" (Rainbow Plate) என்பது உணவுப் பன்முகத்தன்மையை மிகவும் எளிதாக நடைமுறைப்படுத்தும் ஒரு சிறந்த வழிமுறையாகும்.

இம்முறை, பல்வேறு வண்ணங்களிலான காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் மாமிச உணவுகளை ஒரே தட்டில் சேர்ப்பதை ஊக்குவிக்கிறது.

ஒவ்வொரு வண்ணமும் (சிவப்பு, பச்சை, மஞ்சள்/ஆரஞ்சு, ஊதா/நீலம், வெள்ளை/பழுப்பு) குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக, சிவப்பு நிறத் தக்காளி இதய ஆரோக்கியத்திற்கும், பச்சை நிற கீரைகள் எலும்பு வலிமைக்கும், மஞ்சள் நிற மாம்பழம் நோயெதிர்ப்பு சக்திக்கும், ஊதா நிற கத்தரிக்காய் மூளை ஆரோக்கியத்திற்கும், வெள்ளை நிற உருளைக்கிழங்கு ஆற்றலுக்கும் உதவுகின்றன.

இவ்வாறு அனைத்து வண்ணங்களையும் ஒரே தட்டில் சேர்ப்பது உடலுக்கு ஒரு சக்திவாய்ந்த நோயெதிர்ப்புக் கேடயத்தை வழங்குகிறது என்கிறது ஓர் ஆய்வு.

ஒரே மாதிரியான உணவை உண்பதை விட, இந்தப் பன்முக உணவுமுறை ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது.

இது ஊட்டச்சத்துக் குறைபாடு, உடல் எடை, இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய்கள் ஆகியவற்றின் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது.

முக்கியமாக, இது குடல் நுண்ணுயிர்களின் (gut microbiome) ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்கிறது மற்றொரு ஆய்வு.

இந்த வானவில் தட்டுக் கருத்து உள்ளூரில் கிடைக்கும் சத்தான உணவுகளை அடிப்படையாகக் கொண்டது, இது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு உணவின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் ஒரு சிறந்த வழியாகும்.

உணவுப் பன்முகத்தன்மையை அடைவதிலுள்ள சவால்கள்

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

இந்த பன்முக உணவுப் பொருட்களை பெறுவதில் பல்வேறு சவால்கள் உள்ளன.

பொருளாதார சிரமம்: ஊட்டச்சத்து மிக்க உணவுகள் விலை அதிகமாக இருப்பது.

விழிப்புணர்வின் பற்றாக்குறை: சமச்சீரான உணவு திட்டம் குறித்த அடிப்படை விழிப்புணர்வு இல்லாதது.

நவீன வாழ்க்கை முறை: நேரம் மிச்சப்படுத்தும் விரைவு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பக்கம் மக்கள் திரும்புவது.

இந்தச் சவால்களை சில எளிய மற்றும் பயனுள்ள முறைகள் மூலம் சமாளிக்க முடியும்.

உள்ளூர் மற்றும் பருவ நிலை சார்ந்த உணவுகளை நுகர்தல்: இவை விலை மலிவாகவும், புதியதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

பாரம்பரிய தானியங்களை உணவில் சேர்த்தல்: தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களை பயன்படுத்துவது.

ஊட்டச்சத்து கல்வி: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

அரசு மற்றும் சமூக முயற்சிகள்: பொது விநியோக அமைப்பு (PDS) மூலம் பன்முக உணவு வகைகளை விநியோகிப்பது, போஷன் அபியான் (POSHAN Abhiyan) போன்ற திட்டங்களை வலுப்படுத்துவது.

தமிழகத்தின் பன்முக உணவுக் கலாசாரம் மற்றும் அச்சுறுத்தல்கள்

தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு மாவட்டம் உணவு வகைகள் மற்றும் சுவைகள் மாறுபடுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு மாவட்டம் உணவு வகைகள் மற்றும் சுவைகள் மாறுபடுகின்றன.

தமிழகம் அதன் செழுமையான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உணவுக் கலாசாரத்திற்கு பிரபலமானது.

மாவட்டத்திற்கு மாவட்டம் உணவு வகைகள் மற்றும் சுவைகள் மாறுபடுகின்றன, இது இயற்கையான உணவுப் பன்முகத்தன்மையின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆனால் இந்த வளமான பாரம்பரியமும் சவால்களை எதிர்கொள்கிறது. நவீன வாழ்க்கை முறை, பாரம்பரியமான மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உணவுகளை விட ஒரே மாதிரியான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை நோக்கி நகர்வதை ஏற்படுத்துகிறது.

மேலும், பருவநிலை மாற்றம் பாரம்பரிய பயிர்களின் விளைச்சலை அச்சுறுத்துகிறது, இது உணவுப் பன்முகத்தன்மையைக் குறைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.

பன்முகத்தன்மையை பாதுகாப்போம்

உணவுப் பன்முகத்தன்மை என்பது ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரம் ஆகிய மூன்றையும் இணைக்கும் ஒரு முக்கிய கருத்தாகும். பொது விநியோக (PDS) முறையில் செறிவூட்டப்பட்ட அரிசி கொடுப்பது என்பது இரும்புச்சத்து, போலிக் அமிலம் போன்ற குறிப்பிட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுகளை விரைவாக எதிர்கொள்ளும் ஒரு அவசர நடவடிக்கையாகும்.

ஆனால் நீண்டகால ஆரோக்கியத்திற்கும், நிலையான ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கும், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்,மீன், முட்டை போன்ற பன்முக உணவுப் பொருட்களை PDS விநியோகத்தில் உள்ளடக்குவதே நிரந்தரமான மற்றும் முழுமையான தீர்வாக இருக்க முடியும்.

பன்முக உணவு அடிப்படையிலான அணுகுமுறைகள் மட்டுமே நுண்ணூட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கான நிலையான உத்திகள் என மா.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் முன்னாள் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர். சௌம்யா தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆரோக்கியமான வாழ்க்கையையும் பன்முகத்தன்மை கொண்ட உணவையும் ஊக்குவிப்பதற்காக, "வானவில் தட்டு" என்ற ஒரு சவாலை நாம் அனைவரும் ஏற்கலாம்.

உங்களுக்கு விருப்பமான உணவுப் பொருட்களைப் பயன்படுத்தி, அதிகபட்ச வண்ணங்களைக் கொண்ட ஒரு "வானவில் தட்டை" (Rainbow Plate) தயாரிக்கவும்.

அதனை ஒரு சுவையான உணவாக சமைக்கவும் (சாலட், பிரை, சாம்பார், சட்னி, கறி போன்ற ஏதேனும் ஒரு உணவு வகை).

- கட்டுரையாளர் உணவுத் தொழில்நுட்ப வல்லுநராக இருக்கிறார். இதில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் அவரது சொந்தக் கருத்துகளே.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு