பொன்னியின் செல்வன் 2: நட்சத்திரங்கள் வெளியிட்ட 'ரகசியங்கள்' என்னென்ன?

பட மூலாதாரம், LYCA Productions
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொன்னியின் செல்வன் - 2 படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக முடிவடைந்திருக்கிறது. இந்த விழாவில் பங்கேற்ற பலரும் பல்வேறு புதிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் - 2 படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் புதனன்று நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், இந்தப் படத்தில் நடித்த கார்த்தி, த்ரிஷா, விக்ரம், ஐஸ்வர்யா ராஜ், சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா, குஷ்பு, ரேவதி, சுகாசினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நடிகர் சிலம்பரசனும் இந்த விழாவில் கலந்துகொண்டார். எழுத்தாளர் ஜெயமோகனும் இதில் பங்கேற்றார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் இந்த விழாவில் பங்கேற்றுப் பேசினார்.
இந்த விழாவில் பாடல்கள் வெளியிடப்படும் என்பதால், பெரும் எண்ணிக்கையில் ஏ.ஆர். ரஹ்மானின் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.
விழா துவங்கியவுடன் முதல் ஆளாக ஜெயமோகன் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். இந்தப் படம் குறித்த முக்கியமான தகவல் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார் ஜெயமோகன். அதாவது "பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வெறும் அறிமுகம்தான். இரண்டாவது பாகம்தான் முழுமையானது" என்றார் அவர். மேலும், பொன்னியின் செல்வன் படம் வெளியான பிறகு உலகமே ராஜராஜ சோழனைப் பற்றித் தெரிந்துகொண்டது என்றும் குறிப்பிட்டார்.
அப்போது நாயகன்; இப்போது பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம், Lyca productions
இந்தப் படத்தில் நடிக்காவிட்டாலும், விழாவிற்கு வந்திருந்த குஷ்பு, ஷோபனா, ரேவதி, சுஹாசினி ஆகியோர் மொத்தமாக பேச அழைக்கப்பட்டனர்.
முதலில் பேசிய குஷ்பு, நான் மணிரத்னத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், சுஹாசினி கண்ணையும் காதையும் மூடிக்கொள்ள வேண்டியிருக்கும் என்றார். "மணிரத்னத்தின் மௌனராகம் படம் ரொம்பவும் பிடிக்கும். ஆனால், அவருடைய படம் எதிலும் நாயகியாக நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதற்காக தனியாக அவரிடம் சண்டைபோடுவேன். ஆனால், தமிழ் சினிமாவுக்கு தனியாக ஒரு அந்தஸ்தைப் பெற்றுக்கொடுத்தவர் மணிரத்னம்தான்" என்றார்.
மணிரத்னம் இயக்கி அஞ்சலி, மௌனராகம், இருவர் ஆகிய படங்கள் பிடிக்கும் என்று குறிப்பிட்ட ரேவதி, அவரோடு பணியாற்றிய நாட்கள் மறக்கமுடியாதவை என்றார்.
தான் நிறையப் படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ரஜினியோடு தளபதியோடு நடித்தவராகவே அறியப்படுவதாக குறிப்பிட்டார் ஷோபனா.
இதற்குப் பிறகு பேசிய சுஹாசினி, மணிரத்னம் மிக ரொமான்டிக்கானவர் என்றார். இவ்வளவு பெரிய படத்தை எடுத்து முடித்த பிறகு, இன்று காலையில், இதெல்லாம் எனக்கு ஜுஜுபி என குறிப்பிட்டதாகக் கூறினார். இதற்கு முன்பு, மணிரத்னம் படங்களில் தனக்கு நாயகன் படத்தைத்தான் மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது பொன்னியின் செல்வன் மிகவும் பிடித்திருக்கிறது என்றார்.
குந்தவை, நந்தினி ஆகிய இரு முக்கியக் கதாபாத்திரங்களில் எந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க விரும்புகிறீர்கள் என நால்வரிடம் கேட்கப்பட்டது. இந்த இருவரையும்விட தனக்கு ஆழ்வார்க்கடியானாக நடிக்கவே விருப்பம் என்றார் சுஹாசினி. ஷோபனா தனக்கு குந்தவையாக நடிக்கவே விருப்பம் என்றார். குஷ்புவும் ரேவதியும் தங்களுக்கு நந்தினியாக நடிக்க விருப்பம் என்றார்கள்.
அடுத்ததாக பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேச அழைக்கப்பட்டார். அவர் பேசத் துவங்கியதும் கமலும் ஏ.ஆர். ரஹ்மானும் வந்ததால், பேச்சு தடைபட்டது. பிறகு அவரோடு பட்டிமன்ற ராஜாவும் சேர்ந்துகொண்டார். இருவரும், பொன்னியின் செல்வனில் அதிகம் தெரிவது காதலா, வீரமா என விவாதித்தனர்.
வந்தியத்தேவன் என் தொகுதியைச் சேர்ந்தவர்

பட மூலாதாரம், Lyca productions
இதற்குப் பிறகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேச அழைக்கப்பட்டார். இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டாம் என தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஷ்கரனிடம் தான் வலியுறுத்தியதாகக் கூறினார் துரைமுருகன்.
"பொன்னியின் செல்வன் நாவலை ஐந்து தடவைக்கு மேல் படித்திருக்கிறேன். தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் எனது நண்பர். அவர் பொன்னியின் செல்வன் படத்தைத் தயாரிக்கப்போவதாகச் சொன்னபோது வேண்டாம் என்று சொன்னேன். அந்த நாவலைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை என்றார். பிறகு அந்த நாவலின் கதையை விரிவாகச் சொன்னேன். ஒவ்வொரு பாத்திரத்தையும் விளக்கினேன். இது ஒரு கதை அல்ல, காவியம். இதைப் படமாக எடுப்பது கடினம் என்றேன். பிறகு, யார் இயக்குநர் என்று கேட்டேன். மணிரத்னம்தான் இயக்குநர் என்றார். ஐயோ, அவர் இருட்டில் படம் எடுப்பவராயிற்றே என்றேன். ஆனால், முதல் பாகத்தைப் பார்த்த பிறகு, நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கொண்டேன்.
ஏ.ஆர். ரகுமான் பழக அமைதியானவர். ஆனால், அவருக்குள் ஒரு இசைப் புயல் குடியிருக்கிறது" என்றார் துரைமுருகன்.
நாவலின் கதாநாயகனாக வரும் வந்தியத்தேவன், தன் தொகுதியைச் சேர்ந்த திருவலம் பகுதியை ஆண்டவர் என்பதால் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார் துரைமுருகன்.
எம்ஜிஆரின் விருப்பம்- பாரதிராஜா சொன்ன தகவல்
பிறகு பேச வந்த பாரதிராஜா, எம்.ஜி.ஆர். இந்த நாவலைப் படமாக எடுக்க விரும்பியது குறித்த சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார். "பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக எடுக்க எம்.ஜி.ஆருக்கு மிகுந்த ஆசை. ஒரு முறை நான், கமல், ஸ்ரீதேவி அமர்ந்திருக்கும்போது, இந்தப் படத்தை நான் இயக்க வேண்டுமென எம்.ஜி.ஆர். சொன்னார். கமல்தான் வந்தியத்தேவன் என்றார். நல்லவேளை அது நடக்கவில்லை. நான் சொதப்பியிருப்பேன்" என்றார் பாரதிராஜா.
தன்னை மிஞ்சிய இயக்குநர் தமிழ் சினிமாவில் இல்லை என தான் கருதியிருந்தபோது, பின்னால் ஒரு உருவம் தெரிந்ததாகவும் அந்த உருவம் மணிரத்னத்தின் உருவம் என்றும் குறிப்பிட்டார் பாரதிராஜா. மேலும், பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் மிகக் கவனமாக உருவாக்கியிருப்பதாகவும் நாவலில், நந்தினியின் பாத்திரம் பாதியில் நிற்பதாகவும் அந்தப் பாத்திரத்தின் கதையை தனியாக எடுக்க முடியும் என்றும் அப்படி எடுத்தால், அதையும் பார்த்துவிட்டுத்தான் போவேன் என்றும் குறிப்பிட்டார் பாரதிராஜா.

பட மூலாதாரம், Lyca productions
மணிரத்னத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது
இந்தத் தருணத்தில் சிம்பு அரங்கத்திற்கு வர, அங்கு கூடியிருந்த ரசிகர்கள் பெரும் கரகோஷத்தை எழுப்பினர். இதற்குப் பிறகு கமல் ஹாசன் பேச வந்தார்.
"நல்ல படங்களை எடுப்பது நம் கடமை. என்னிடம் எப்படி வேலைக்குச் செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் வேலைக்குச் சென்றே வெகுநாட்களாகிவிட்டது என்றேன். எனக்குப் பிடித்ததைச் செய்ய சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடியாததன் மூலம், நல்ல கலைஞர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு போய்விட்டது. மணிரத்னத்தைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது" என்றார் கமல்.
மேலும், "இது பொறாமைப்படுவதற்கான நேரமில்லை. எல்லோரும் சேர்ந்து அனுபவிப்பதற்கான நேரம். இதுபோல படம் எடுக்கத் தைரியம் வேண்டும். மணிரத்னம் நின்று அடித்திருக்கிறார். யாராவது சற்றுப் பிழையாகச் செய்திருந்தாலும் கனவு கலைந்திருக்கும். இது சோழர்களின் பொற்காலம் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் பொற்காலம்" என்றார் அவர்.
கமலும் மணிரத்னமும் இணையும் படம் குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டபோது, இந்த மேடையில் அதைச் சொல்வது பொருத்தமாக இருக்காது என்றும் இருவரும் இணைவது உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், அது தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் கமல்.
இதற்குப் பிறகு சரத்குமாரும் பார்த்திபனும் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தது தொடர்பாக பேசினர்.
அதற்குப் பிறகு பேசவந்த ஏ.ஆர். ரஹ்மான், தன்னை எங்கே பார்த்தாலும் எப்போது கம் - பேக் தரப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள் என வேடிக்கையாகச் சொன்னார்.
சிம்பு பேசும்போது, மணிரத்னம் குறித்து மிகுந்த நன்றி உணர்வுடன் பேசினார். "நான் மிகுந்த சிரமமான காலகட்டத்தில் இருந்தபோது எனக்கு மணிரத்னம் வாய்ப்பு வழங்கினார். நான் ஒரு இரவுப் பறவை. காலை என்ற அற்புதமான விஷயத்தை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தினார்" என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு கார்த்தியும் த்ரிஷாவும் ஒன்றாக பேச அழைக்கப்பட்டனர். "ஒவ்வொரு முறையும் ஜெயம் ரவியிடம் இந்தப் படத்தில் எப்படித் தேர்வானீர்கள் என யாராவது கேட்கிறார்கள். அவரும் சீரியஸாக பதில் சொல்கிறார். என்னிடம் யாரும் அதை கேட்க மாட்டேன் என்கிறார்கள். ஆகவே நானே இப்போது அதைச் சொல்லப்போகிறேன். கைதி படத்தில் நடிக்கும்போதுதான் மணிரத்னத்திடம் இருந்து போன் வந்தது. பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடிக்க வேண்டும் என்றதும் நான் உடனே சரி என்றேன். ஆனால், படப்பிடிப்பு துவங்கியபோதுதான் சிரமம் தெரிந்தது. தான் நினைத்ததை அவர் வாங்காமல் விட மாட்டார் என்பது தெரிந்தது" என்றார் கார்த்தி.

பட மூலாதாரம், Lyca productions
பிறந்த குழந்தைக்கு குந்தவையைப் போலவே ஆடை அணிவித்தெல்லாம் தனக்கு புகைப்படங்கள் அனுப்பப்படுவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் த்ரிஷா.
இதற்குப் பிறகு, விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் ஒன்றாக பேச அழைக்கப்பட்டார்கள்.
ஒவ்வொருவர் பேசுவதற்கு நடுவிலும் ட்ரெய்லரும் பாடல்களும் ஒன்றின் பின் ஒன்றாக வெளியிடப்பட்டன.
இந்த விழாவில் பேசிய பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன், "இதுபோல தூய தமிழில் பாடல் எழுதும் வாய்ப்பு எப்பொழுதாவதுதான் கிடைக்கும் என மணிரத்னம் கூறினார்" என நினைவுகூர்ந்தார்.
இந்த விழாவில் ஒரு பாடலை சித்ராவுடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் பாடியபோது, அரங்கமே அதிர்ந்தது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












