'மைதாவில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட், செவ்வாயில் கூட உயிர் வாழும்' - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Riya Dhage
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
பிரெட், பீர் போன்ற உணவுப் பொருள்களில் பயன்படுத்தப்படும் நுரைமம் அல்லது நொதி என அழைக்கப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையால் செவ்வாய் கோளில்கூட சாகாமல் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஒரு செல் உயிரியான ஈஸ்ட், பூமி தவிர்த்துப் பிற கோள்களில் உயிர்கள் எவ்வாறு பிழைத்திருக்க முடியும் என்பதற்கான தடயங்களைக் கொண்டுள்ளதாக, இந்திய அறிவியல் நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு, "விண்வெளியில் மனித செல்கள் சந்திக்கும் அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைக் கண்டறிவதற்கான ஓர் அளவுகோலாக ஈஸ்ட் இருக்கலாம் என்பதைக் காட்டுகிறது," என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முன்னாள் விஞ்ஞானியும் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
பெங்களூருவில் அமைந்திருக்கும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் உயிரிவேதியியல் துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆய்வாளர்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
விண்வெளிப் பரிசோதனையில் ஈஸ்ட் பூஞ்சை
உயிர்கள் பூமி தவிர பிற கோள்களில் பிழைத்திருக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்த புரிதலைப் பெறுவதற்காக பிரெட், மைதா போன்றவற்றில் பயன்படுத்தப்படும் ஈஸ்ட் என்ற பூஞ்சையை வைத்து விஞ்ஞானிகள் ஒரு விண்வெளி மாதிரிப் பரிசோதனையை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் முடிவுகள் ஆக்ஸ்ஃபோர்ட் அகாடெமிக் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, செவ்வாய் கோளின் கடினமான சுற்றுச்சூழலை ஒத்த மாதிரிகளை உருவாக்கிய ஆய்வுக் குழுவினர், அதைத் தாங்கிப் பிழைத்திருக்கக் கூடிய தன்மை ஈஸ்டுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
செவ்வாய் கோளில் தொடர்ந்து நிகழும் விண்கல் மோதல் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. அதே அளவிலான அதிர்ச்சி அலைகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல், ஹிஸ்டா என்றழைக்கப்படும் ஹை-இன்டன்சிடி ஷாக் டியூப் (HISTA) என்ற கருவி மூலம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள முனைவர் பாலமுருகன் சிவராமனின் ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்டது. அதோடு, செவ்வாய் கோளில் உள்ள மண்ணில் காணப்படும் நச்சு வேதிப்பொருளான சோடியம் பெர்க்ளோரேடை ஈஸ்ட் எதிர்கொள்ளக் கூடிய சூழலையும் விஞ்ஞானிகள் ஏற்படுத்தினர்.

பட மூலாதாரம், Dr Bhalamurugan Sivaraman
செவ்வாய் கோளின் வளிமண்டலத்தில், அதன் சுற்றுச்சூழலில் பல சவால்கள் உள்ளன. "அப்படிப்பட்ட இரண்டு சவால்கள் மீது கவனம் செலுத்தி இந்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஒன்றுதான் செவ்வாயில் ஏற்படும் அதிர்வுகளை ஒத்த பரிசோதனை" என்று விவரித்தார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.
அதுகுறித்து எளிமையாக விளக்கிய அவர், "செவ்வாய்க் கோளினுடைய வளிமண்டலம் பூமியைவிட மிகக் குறைவான அடர்த்தியுடன் இருக்கும். அதனால் தடையின்றி விண்கற்கள் செவ்வாயின் மேற்பரப்பில் மோதும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கும். எனவே, ஒலியைவிட 5.6 மடங்கு அதிக வேகத்தில் விண்கல் மோதல் நிகழ்வதை ஒத்த கடுமையான அதிர்வுகளை ஈஸ்ட் பூஞ்சைகள் எதிர்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட்டது," என்றார்.
மேற்கொண்டு பேசியவர், "மற்றுமொரு சூழ்நிலையில், செவ்வாய் மண்ணில் காணப்படும் சோடியம் பெர்க்ளோரைட் என்ற நச்சு வேதிமத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். இந்த வேதிமம் குறிப்பாக, நீருடன் ஒட்டாத வேதிப் பொருள்களுடன் வினைபுரியும். அப்படி வினைபுரிவது, உயிரினங்களின் செல்களை உடைத்துவிடும். அத்தகைய உயிரி செல்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதிமத்துடன் ஈஸ்டுகள் பரிசோதிக்கப்பட்டன," என்று விளக்கினார்.
இந்த இரண்டு சவால்களையும் தனித்தனியாகவும் ஒருசேரவும் ஈஸ்ட் பூஞ்சைகளை எதிர்கொள்ள வைத்து விஞ்ஞானிகள் பரிசோதித்தனர். அப்போது அவற்றின் எண்ணிக்கை பெருகுவதன் வேகம் குறைந்ததே தவிர அவை இறக்கவில்லை என்று ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Riya Dhage
செவ்வாய் கோளில் ஈஸ்ட் பூஞ்சை எவ்வாறு உயிர் பிழைக்கும்?
ஒற்றை செல் பூஞ்சைகளான ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் சுற்றுச்சூழலை ஒத்திருக்கும் மிகக் கடினமான சவால்களைக்கூட சமாளித்து உயிர் பிழைத்திருந்தது எப்படி?
அதற்கான காரணம், "இந்த ஈஸ்டுகள் தங்களுக்குள் ஆர்.என்.பி எனப்படும் புரதத்தை சிறிய, துளி போன்ற கட்டமைப்புகளாக, ஒரு கவசத்தைப் போல் உருவாக்கிக் கொண்டதே" என்று ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, "இந்த ஆர்.என்.பி கவசங்கள் அணுவின் சாதாரண பாகங்களைப் போல் இருக்கவில்லை. அது ஒரு நீர்த்துளியை ஒத்த வடிவில் இருந்தது.
"அணுவானது ஒரு புற அழுத்தத்தை எதிர்கொள்ளும்போது, அதன் மரபணு செயல்முறைகளைக் கடத்தும் எம்.ஆர்.என்.ஏ மூலக்கூறுகளைச் சுற்றி இந்த ஆர்.என்.பி புரதத் துளிகள் ஒரு கவசம் போல் உருவாகின. அதன் மூலம் ஈஸ்டுகள் செவ்வாய் கோளின் கடினமான சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்பட்டன."
இத்தகைய பாதுகாப்புக் கவசங்களை உருவாக்கிக் கொள்ளாத ஈஸ்டுகள் உயிர் பிழைப்பதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Swati Lamba
அதேவேளையில், "இந்த ஆர்.என்.பி கவசத் துளிகள், தட்பவெப்ப நிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், ஊட்டச்சத்துக் குறைபாடு, ஆக்சிஜனேற்ற அயற்சி போன்ற பல காரணங்களின் விளைவாகவும் உருவாகலாம்" ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.
இந்நிலையில், செவ்வாய் கோளை ஒத்த சவால் மிகுந்த சுற்றுச்சூழலை எதிர்கொண்டதன் விளைவாக, அதிலிருந்து உயிர் பிழைக்கவே ஈஸ்ட் பூஞ்சைகள் இந்தக் கவசத்தை உருவாக்கின என்ற முடிவுக்கு எப்படி வர முடியும், என்ற கேள்வி எழுகிறது.
அதற்குப் பதிலளித்த முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், "ஈஸ்ட் பூஞ்சைகள் இந்த ஆர்.என்.பி. கவசங்களை பல்வேறு கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உருவாக்கலாம். ஆனால், அவை பரிசோதிக்கப்படும் நேரத்தில் எப்படிப்பட்ட சவாலை எதிர்கொள்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.
இந்தப் பரிசோதனையில் அவை செவ்வாய் கோளின் விண்கல் தாக்கம் மற்றும் நச்சு வேதிம அபாயத்தை எதிர்கொண்டன. அதுதவிர வேறு அழுத்தங்களை அவை எதிர்கொள்ளவில்லை. எனவே, அவற்றுக்கு எதிர்வினையாகவே அவை ஆர்.என்.பி கவசங்களை உருவாக்கின என்ற முடிவுக்கு வரலாம்," என்று குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, பூஞ்சையில் தோன்றும் இந்தச் சிறிய துளி போன்ற கவசங்கள், "விண்வெளி போன்ற சூழ்நிலைகளில் உயிர்கள் இருக்கும்போது அவற்றின் செல்களில் ஏற்படும் அழுத்தத்தைக் குறிக்க உதவும் உயிரியல் அளவுகோலாகப் பயன்படுத்தப்படலாம்" என்றும் அவர் கூறினார்.

செவ்வாய் கோளில் ஈஸ்ட் பிழைத்திருப்பதால் மனிதர்களுக்கு என்ன பயன்?
இந்த ஆய்வு மனிதர்கள் விண்வெளியில் உயிர் பிழைக்க ஏதுவான வழிகளைக் கண்டறிய உதவுமா? ஈஸ்ட் பூஞ்சையை செவ்வாய் கோளின் சுற்றுச்சூழல் மாதியில் பரிசோதிப்பதால் என்ன பயன்?
ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் ஆமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடத்தின் பேராசிரியருமான முனைவர் பாலமுருகன் சிவராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது அவர், "நிச்சயமாக இந்த ஆய்வு எதிர்காலத்தில் மனிதர்களின் பல விண்வெளித் திட்டங்களுக்கு உதவும். இது இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கு மிகவும் முக்கியமானது" எனக் கூறினார்.
செவ்வாய் கோளில் ஒரு உயிர் பிழைத்திருக்கப் பல வகை சவால்கள் இருப்பதாகக் கூறிய அவர், "அவற்றில் சில சவால்களான விண்கல் மோதல் மற்றும் நச்சு வேதிமத்துடனான எதிர்வினை இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்டன" என்றும் அவற்றில் சாகாமல் ஈஸ்டுகள் பிழைத்து இருந்ததாகவும் கூறினார்.
ஆனால், "மனிதர்கள் விண்வெளியில் பிழைத்திருப்பது எப்படி என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, மேலும் பல கட்டங்களில் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளில் இது ஒரு துளி மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு, வான் உயிரியல், வான் வேதியியல் ஆகிய துறைகளில் இந்தியா ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகக் கூறிய முனைவர் பாலமுருகன், அதில் இன்னும் மேம்படுவதன் மூலம் நாம் பலவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்," என்றும் தெரிவித்தார்.

விண்வெளி சூழலில் ஆய்வு செய்ய ஈஸ்ட் பூஞ்சையை தேர்வு செய்தது ஏன்?
விண்வெளியில் உயிர்கள் பிழைத்திருக்க முடியுமா என்பதை ஆராய ஈஸ்ட் போன்ற மிகச் சாதாரணமான பூஞ்சை நுண்ணுயிரி உதவக்கூடும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த ஆய்வில், சாக்கரோமைசெஸ் செரிவிசியே (Saccharomyces cerevisiae) என்ற வகையைச் சேர்ந்த ஈஸ்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு அது தேர்வு செய்யப்பட மிக முக்கியக் காரணம் இருந்ததாகக் கூறுகிறார் ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரும் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை பேராசிரியருமான புருஷர்த் ராஜ்யகுரு.
இந்த ஆய்வில் பரிசோதிக்கப்பட்ட குறிப்பிட்ட வகை ஈஸ்ட், ஒரு ஒற்றை செல் பூஞ்சைதான். இருந்தாலும், "அது மனித உடலில் நடப்பவை குறித்துப் பல பயனுள்ள தகவல்களை வழங்குகிறது. அதில் நடக்கக்கூடிய பல செயல்பாடுகள் நம் உடலிலும் நடக்கின்றன. அதனால்தான் இதை வைத்து விண்வெளியில் வாழும் திறனை பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது."
மேலும் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய பேராசிரியர் ராஜ்யகுரு, "செவ்வாய் கோளின் அழுத்தமான சூழலில் ஈஸ்ட் பூஞ்சைகள் தமது ஆர்.என்.ஏ மற்றும் புரதங்களை எவ்வாறு பாதுகாக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்வது, உயிர்கள் பூமிக்கு வெளியே விண்வெளியின் பிற பகுதிகளில் பிழைத்திருக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள எதிர்காலத்தில் உதவக்கூடும்" என்று விளக்கினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












