அம்பேத்கர் பிறந்த ஊரில் இன்று பலருக்கும் வாக்குரிமை கூட இல்லை - கள ஆய்வில் அதிர்ச்சி

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, ஜெயஸ்ரீ குப்பை அள்ளும் வேலை செய்கிறார், ஆனால் இந்த வேலை அவருக்குப் பிடிக்கவில்லை.
    • எழுதியவர், நீது சிங்
    • பதவி, மஹூ, இந்தூரில் இருந்து

அரசியல் சாசனத்தின் சிற்பியான டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாள் என்ற பெயரில் அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறது.

நாட்டிலும் உலகெங்கிலும் திருவிழா போல கொண்டாட்டம் நடக்கிறது. அவரது எழுத்துகளையும் உரைகளையும் குறிப்பிட்டு அவரை நமது வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்ளும் பேச்சு நிலவுகிறது. ஆனால் அவர் பிறந்த இடத்தில், அவரது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை நிலை பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வாருங்கள், இன்று உங்களை டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் பிறந்த இடமான மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் உள்ள மஹூவுக்கு அழைத்துச் செல்கிறோம்.

அவர் பிறந்த இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 'காஸி கி சால்' என்ற குடியிருப்புப் பகுதி உள்ளது. அங்கு பெரும்பாலான குடும்பங்கள் மஹார் சமூகத்தைச் சேர்ந்தவை. இங்குள்ள காட்சியைப் பார்க்கும்போது, ​​ஒரே நேரத்தில் ஆச்சரியமும் கவலையும் ஏற்படுகிறது.

அரசின் வளர்ச்சித் திட்டங்கள் இங்கு பொய்த்துப் போயிருப்பதை நீங்கள் காண்பீர்கள். இதன் காரணமாக இங்குள்ள தலித் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இங்கு தினமும் தங்கள் வீட்டின் முன் தேங்கும் அழுக்கு நீரை வாரியிறைக்க வேண்டிய நிலை உள்ளது. எப்போது இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று யாருக்குமே தெரியாது.

குடியிருப்புப் பகுதியின் நிலை

காலை சுமார் ஏழு மணி. ஊரைச் சேர்ந்த சில பெண்கள், தங்கள் வீட்டுக்கு வெளியே உள்ள குழியில் தேங்கியுள்ள முந்தைய நாள் தண்ணீரை வாளிகளில் நிரப்பி, தெருவிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள மைதானத்தில் கொட்டிக் கொண்டிருந்தனர்.

அது துர்நாற்றம் வீசும் தண்ணீராக இருந்தது. இந்தப் பெண்களுக்கு, துர்நாற்றம் வீசும் இந்த அழுக்குத் தண்ணீரை வீசுவது அன்றாடப் பணி.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத் தலைமையகத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள மஹூவில் உள்ள பீட் சாலையில் 'காஸி கி சால்' காலனியில் 22 வயதான ஹர்ஷா, தனது வீட்டிற்கு வெளியே இரண்டு குழிகளில் தேங்கிய தண்ணீரை காலி செய்து கொண்டிருந்தார்.

​​“புடவையால் முகத்தை மூடிக்கொண்டு தினமும் இந்த வேலையைச் செய்யத்தான் வேண்டும். என் மாமியார் 30-35 வருடங்களாக இப்படித்தான் தண்ணீரை வாரி இறைத்தார். எனக்கு திருமணம் ஆனதில் இருந்து நான் செய்கிறேன்,” என்று வர்ஷா குறிப்பிட்டார்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, குடியிருப்பு பகுதியின் அசுத்தம்

அசுத்தத்திற்கு அருகே படிக்கும் குழந்தைகள்

இந்த காலனியில் ஒவ்வொரு வீட்டுக்கும் வெளியே குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓரிரு குழி தோண்டப்படுகிறது. இதில் காலை முதல் இரவு வரை தேங்கும் தண்ணீரை இங்குள்ள பெண்கள் காலை 5 மணி முதல் 7 மணி வரை வாளிகளில் நிரப்பி தெருவுக்கு வெளியிலுள்ள மைதானத்தில் வீசுகின்றனர்.

இந்த மைதானத்தில் குப்பைக் கிடங்கு குறைவாகவும் பன்றிகள் அதிகமாகவும் உள்ளன. இந்த தலித் காலனியை சேர்ந்த எல்லா குழந்தைகளும் படிக்கும் பள்ளிக்கூடம் இந்த மைதானத்திற்கு எதிரில்தான் கட்டப்பட்டுள்ளது.

"இந்தக் குடியிருப்புக்கு இதுவரை எந்த அதிகாரியும் வந்ததில்லை. எங்கள் குடியிருப்பில் தண்ணீர் வெளியேற வடிகால் அமைக்க வேண்டும், குடிநீருக்கு கை பம்புகள் அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்," என்கிறார் ஹர்ஷா.

"தினமும் சம்பாதித்து பிழைக்க முடியும். ஆனால் தற்போது இந்த அசுத்தமான வேலையில் இருந்து விடுதலை வேண்டும்," என்கிறார் அவர்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, குழியில் இருந்து அழுக்கு நீரை அகற்றும் பெண்

டாக்டர் பாபாசாகேப் பீம் ராவ் அம்பேத்கரின் நினைவிடத்தில் இருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில் கன்டோன்மென்ட் பகுதியில் 'காஸி கி சால்' என்று பெயரிடப்பட்ட இந்த குடியிருப்புப் பகுதி உள்ளது.

இந்தப் பெண்கள் மஹார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் எந்த சமூகத்தைச் சேர்ந்தவரோ அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

இந்த குடியிருப்பில் சுமார் 20-25 மஹார் சமூகத்தின் வீடுகள் உள்ளன, மீதமுள்ள மக்கள் நிமாடி சமூகத்தினர். இருவருமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பீட் ரோட்டில் உள்ள கண்டோன்மென்ட் பகுதியில் மஹார் சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன என்று அப்பகுதி மக்கள் கூறினர்.

'காஸி கி சால்' குயிருப்புப் பகுதி மிக மோசமான நிலையில் உள்ளது. ஏனென்றால் அன்றாடம் பயன்படுத்தப்படும் தண்ணீரை வெளியேற்றுவதற்கு இந்த காலனி முழுவதிலும் வடிகால் வசதி இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, தண்ணீர் மற்றும் வடிகால் பிரச்னை காரணமாக துன்பப்படும் ஷாலினி. கோடையில் தங்கள் பிரச்னைகள் கணிசமாக அதிகரிக்கும் என்றார் அவர்.

தண்ணீர் மற்றும் கழிவுநீர் பிரச்னைகள்

இந்தக் குடியிருப்புப் பகுதியில் எண்ணற்ற பிரச்னைகள் இருந்தாலும், வளர்ச்சி என்ற பெயரில் வடிகால் அமைக்கவும் கைப்பம்புகள் அமைக்கவும் மட்டுமே இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஹர்ஷாவின் வீட்டுக்கு எதிரே இருக்கும் 35 வயதான ஷாலினி தோற்றத்தில் மெலிந்து காணப்படுகிறார். ஏழெட்டு காலி பிளாஸ்டிக் கேன்களை ஒன்றாகப் பிடித்துக் கொண்டு காலை 8 மணியளவில் சாலையை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்.

"தண்ணீரை நிரப்புவதற்கு காலை இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும் ஆகும். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, எங்கள் பிரச்னைகள் அதிகரிக்கத் துவங்கும்.

விநியோகம் செய்யப்படும் தண்ணீர் காலை ஒன்றிரண்டு மணிநேரமும் மாலையில் ஒன்றிரண்டு மணிநேரமும் கிடைக்கும்,” என்று அவர் கூறினார்.

ஷாலினியின் கஷ்டங்கள் இத்துடன் முடிவதில்லை. ஏனென்றால் விநியோகிக்கப்படும் தண்ணீரை அவர் குடிப்பதற்குப் பயன்படுத்துவதில்லை.

"சப்ளை செய்யப்படும் தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நல்ல தண்ணீர் அல்ல. அது குளிப்பதற்கும் துவைப்பதற்கும் பயன்படுகிறது. இங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரயில் நிலையத்திலிருந்தும் சில நேரங்களில் மார்க்கெட்டில் உள்ள குழாயிலிருந்தும் குடிநீர் கொண்டு வருகிறோம்,” என்று ஷாலினி கூறினார்.

"பைக் வைத்திருப்பவர்கள் பைக்கில் கொண்டு வருவார்கள். பைக் இல்லாதவர்கள் இவ்வளவு தூரம் நடந்தே கொண்டு வருகிறார்கள்," என்றார் அவர்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, தண்ணீருக்காக அப்பகுதி மக்கள்படும் அவதி

அவல நிலைக்கு யார் பொறுப்பு?

மஹூவின் கன்டோன்மென்ட் பகுதியில் கடந்த 30-35 ஆண்டுகளாக இதுபோன்ற டஜன் கணக்கான குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. தூய்மை இந்தியா திட்டம், ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை, பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம், வீடுதோறும் குழாய்த் திட்டம் போன்ற எந்த அரசுத் திட்டங்களும் இந்தக் குடியிருப்புகளில் எங்குமே காணப்படவில்லை.

Mhow (அம்பேத்கர் நகர்) பகுதியில், சுமார் 20 முதல் 30 ஆயிரம் மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் வசிக்கின்றனர். விதிகளின்படி எந்த விதமான கட்டுமானப் பணிகளும் இங்கு சாத்தியமில்லை என்று மஹூவின் கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது.

இங்கு எந்தவித கட்டுமானப் பணிகளும் நடைபெறாததால், வடிகால் வசதி, வீடுதோறும் கழிவறை, சாலை, குடிநீருக்கான கைப்பம்புகள் என அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இப்பகுதி மக்கள் தவிக்கின்றனர்.

"இந்தப் பகுதி கன்டோன்மென்ட் வாரியத்தின் கீழ் வருகிறது. இது பாதுகாப்புத்துறையின் நிலம். வருவாய்த்துறையின் நிலம் எங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இங்குள்ள நிலம் கன்டோன்மென்ட் வாரியத்திற்குச் சொந்தமானது,” என்று புதன்கிழமை இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு மஹூவின் SDM ஆக இருந்த அக்‌ஷத் ஜெயின் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இங்குள்ள வசதிகளுக்கு கன்டோன்மென்ட் போர்டு பொறுப்பு. மத்திய பிரதேசத்தின் எந்த பஞ்சாயத்தும் அமைப்பும் இங்கு வேலை செய்யவில்லை. கன்டோன்மென்ட் வாரியத்திற்கு அதன் சொந்த அமைப்பு உள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்கிறது," என்று அக்‌ஷத் ஜெயின் குறிப்பிட்டார்.

"அந்தப் பகுதியில் எனது பொறுப்பு மாஜிஸ்ட்ரேட் என்ற நிலையில் உள்ளது. சட்டம் ஒழுங்கு மட்டுமே என் கீழ் வருகிறது. இப்பகுதியில் மத்திய அரசின் செயல்முறை உள்ளது. முழுப் பொறுப்பும் கன்டோன்மென்ட் சிவில் அமைப்பிடம் உள்ளது," என்றார் அவர்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் மற்றும் கௌதம புத்தர் ஆகியோரின் படத்தை ஏந்தியிருக்கும் ஒரு வயதான பெண்மணி.

வாக்குரிமை இல்லாத இப்பகுதி மக்கள்

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் தலித்துகள் 16.6 சதவிகிதம், அதாவது அவர்களின் எண்ணிக்கை 20 கோடியே 14 லட்சம். இவர்களில் மஹார் சமூகத்தினர் சுமார் 30 லட்சம் பேர்.

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மஹார் சமூகத்தின் மிகப் பெரிய மக்கள் தொகை உள்ளது. கோவா, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் சிறிய எண்ணிக்கையில் அவர்கள் குடியேறியுள்ளனர்.

மராட்டி, வரஹ்தி, காண்டேஷி பாஷா, கொங்கணி, இந்தி போன்ற மொழிகளை அவர்கள் பேசுகின்றனர். 20ஆம் நூற்றாண்டின் மத்தியில், மஹார் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் பௌத்த மதத்தை ஏற்றுக் கொள்வதில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரை பின்பற்றினர். 2017ஆம் ஆண்டுவரை 16 இந்திய மாநிலங்களில் மஹார் சாதியானது பட்டியல் சாதியாகப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மக்கள் குடியேறியுள்ள சில நிலங்கள் டிஃபென்ஸ் எஸ்டேட்டிற்கும் சில ராணுவத்திற்கும் மற்றும் சில ரயில்வேக்கும் சொந்தமானது என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது ஆக்கிரமிப்புப் பகுதி என்பதால் முன்பு வந்து கொண்டிருந்த வருவாயும் நின்றுவிட்டது என்றார் அவர்.

இங்கு எந்தக் கட்டுமானப் பணியும் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார். "இங்குள்ள பிரச்னைகளைத் தீர்க்க பலமுறை முயற்சி செய்துள்ளோம். இந்தூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு ஃபோன் செய்து, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வீடுகளை ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சில கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளாக இந்தக் கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சகத்தின் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 45,000 வீடுகள் மட்டுமே சட்டப்பூர்வ வீடுகளாக உள்ளன.

2016-17ஆம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி கன்டோன்மென்ட் வாரியத்தில் சட்டபூர்வ குடியிருப்பில் வசிப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

2016ஆம் ஆண்டு 51 ஆயிரம் வாக்குகள் இருந்த நிலையில், 2017ஆம் ஆண்டு 32 ஆயிரமாகக் குறைந்தது. 2018ஆம் ஆண்டில் அது 31 ஆயிரமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இங்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள் வசிக்கின்றனர். இவை அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள். அதேநேரம் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, நிலம் ஆக்கிரமிப்பு காரணமாக அப்பகுதியில் வடிகால், தண்ணீர் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

குடியிருப்பு அழிக்கப்பட்டால் எங்கே போவார்கள்?

உணவு சமைத்துக்கொண்டிருந்த, மூன்று குழந்தைகளின் தாயான 35 வயதான மந்தா, தனது வறுமையை எண்ணிப் புலம்புகிறார்.

"நாங்கள் நாள் முழுவதும் குப்பைகளைப் பொறுக்கிப் பிழைப்பு நடத்துகிறோம். வீடு வாங்கும் அளவிற்கு எங்களிடம் பணம் இல்லை," என்று அவர் கூறினார்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் குடியிருப்பு அழிக்கப்பட்டபோது, ​​நாங்கள் இரண்டு மூன்று மாதங்கள் ரோட்டில் இருந்தோம். இப்போதும் அதிகாரிகள் வந்தால் காலி செய்யுங்கள் என்று கூறுகிறார்கள், எங்களுக்கு வீடு மற்றும் நிலம் இல்லாதபோது, ​​​​நாங்கள் எங்கே போவோம்? என்றார் அவர்.

மந்தாவை போலவே இந்த கன்டோன்மென்ட் பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் கவலை என்னவென்றால், இந்த குடியிருப்புகள் அழிக்கப்பட்டால் தாங்கள் எங்கே போவோம் என்பதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தக் குடியிருப்புகள் அழிக்கப்பட்டன. இது ஆக்கிரமிப்பு நிலம். அதை அவர்கள் காலி செய்ய வேண்டும் என்று கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. குடியிருப்புகள் உடைக்கப்பட்ட பிறகு மக்கள் எங்கு வாழ்வார்கள் என்பதற்கு அரசிடம் எந்த ஆயத்த திட்டமும் இல்லை.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, தலையில் தண்ணீர் நிரம்பிய கேனை சுமந்து செல்லும் பெண்

”2015 முதல் 2021 பிப்ரவரி வரை இங்கு கவுன்சிலராக இருந்தேன். எனது பதவிக் காலத்தில் இந்த காலனியில் குடிநீர், வடிகால் வசதி செய்ய கன்டோன்மென்ட் வாரியத்துக்குப் பல கோரிக்கைகளை எழுதினேன்,” என்று முன்னாள் கவுன்சிலர் அஷோக் வர்மா கூறினார்.

"இது ஆக்கிரமிப்பு இடம் என்பதால், இங்கு கட்டுமான பணி நடக்காது என்று கண்டோன்மெண்ட் போர்டு எப்போதும் ஒரே பதிலைச் சொல்கிறது. வார்டு எண் ஏழில் 22 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இங்கு எங்கும் உப்பு கலந்த தண்ணீர் வருவதால் அதைக் குடிக்க முடியாது," என்று அவர் குறிப்பிட்டார்.

"கன்டோன்மென்ட் பகுதியில் சுமார் 15,000 பேர் உவர் நீரை அருந்துகின்றனர், இதனால் அவர்கள் பல்வேறு வயிறு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்," என்றார் அவர்.

​​“என் பதவிக் காலத்தின்போது 2017ஆம் ஆண்டு கான்ட் போர்டிடமிருந்து சுமார் மூன்றரை கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றேன். ஆனால் என் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிந்துவிட்டது. அப்போதிருந்து எந்த வேலையும் நடக்கவில்லை,” என்று அஷோக் வர்மா குறிப்பிட்டார்.

"இந்த தலித் சமூகத்தினருக்கென்று சிறப்புத் திட்டங்கள் எதுவும் இல்லை. இருக்கும் திட்டங்களும் இவர்களை வந்தடைவதில்லை."

இந்தக் குடியிருப்புகள் அமைந்துள்ள மஹூ கண்டோன்மென்ட் போர்டு பகுதியில் உள்ள சாலையைக் கடந்து சென்றால், பீட் சாலையின் ஓரத்தில் அழுக்கு நீர் நிரம்பிய வடிகால்களைக் காணலாம்.

இங்கு கட்டப்பட்டுள்ள பூங்காக்களில் குப்பை குவிந்து கிடக்கிறது. பன்றிகள் டஜன் கணக்கில் உருளுவதையும் பார்க்க முடிகிறது. அசுத்தம் காரணமாக இங்கு சிறிது நேரம்கூட நிற்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது.

"இங்குள்ள வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதில் மாநில தேர்தல் ஆணையத்திற்கு எந்தப் பங்கும் இல்லை. கன்டோன்மென்ட் வாரியம் வேறு அமைப்பைக் கொண்டுள்ளது. அதுதான் கட்டுப்படுத்துகிறது," என்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் அருண் பர்மார் பிபிசியிடம் தெரிவித்தார்.

''1992இல் இருந்து இங்கு நடந்த எல்லா தேர்தல்களிலும், நான் இரண்டு முறை கவுன்சிலராகவும் துணைத் தலைவராகவும் இருந்துள்ளேன். சிவில் பகுதிகளில் மட்டுமே அரசு பணத்தை செலவிட முடியும் என்று 2006ஆம் ஆண்டு, ஒரு புதிய விதி வந்தது,” என்று கன்டோன்மென்ட் வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் கைலாஷ் தத் பாண்டே கூறினார்.

"இந்தக் குடியிருப்புகளின் நிலங்களை சிவில் பகுதியுடன் இணைக்க நான் தொடர்ந்து முயன்றேன், ஆனால் அது நடக்கவில்லை. அதனால்தான் இங்கு நிலைமையில் முன்னேற்றம் இல்லை," என்றார் அவர்.

​​“இங்கு கட்டப்பட்டுள்ள எல்லா குடிசைப் பகுதிகளையும் நீக்கிவிட்டு அடுக்குமாடிக் கட்டடங்களாக மாற்றி, சிறிய ப்ளாட்டுகளை இந்த மக்களுக்கு வழங்குமாறு நாங்கள் அரசுக்குப் பலமுறை பரிந்துரைகளை அனுப்பியுள்ளோம். ஆனால் அதற்கான பொறுப்பை ஏற்க யாரும் தயாராக இல்லை,” என்று கைலாஷ் தத் கூறினார்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

சுதந்திர இந்தியாவில் அடிமை வாழ்க்கை

இங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்கு குடியேறிய மஹார் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் குப்பை பொறுக்குவது அல்லது பெரிய வீடுகளில் பெருக்கி, சுத்தம் செய்யும் வேலையைச் செய்கின்றனர்.

இந்தப் பெண்கள் குப்பை அள்ளும் வேலையை விட்டுவிட விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்கு மாற்று வேலைக்கான வழி ஏதும் இல்லை.

"காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை குப்பை அள்ளும் வேலையைச் செய்கிறேன். இந்த அசுத்தமான வேலையில் வெறும் 150 ரூபாய்தான் கிடைக்கிறது. காலையில் இருந்து மாலைவரை இதே நாற்றம் நிறைந்த வேலையைத்தான் செய்யவேண்டியுள்ளது,” என்று இங்கு வசிக்கும் 38 வயதான ஜெயஸ்ரீ கூறுகிறார்.

​​"மஹூவின் மிகவும் ஏழ்மையில் வாடும் பிரிவினர் வார்டு 3 மற்றும் 7ல் வசிக்கின்றனர். அம்பேத்கர் காலனியின் நிலையைப் பார்த்தால், உங்களுக்கு இங்குள்ள வளர்ச்சியின் நிலை தெரியும். சுதந்திரத்திற்குப் பிறகும் அவர்கள் அடிமை வாழ்க்கை வாழ்கின்றனர்,” என்று ஆறு ஆண்டுகளாக கன்டோன்மென்ட் வாரியத்தின் துணைத் தலைவராகவும் சில ஆண்டுகள் கவின்சிலராகவும் இருந்த யோகேஷ் யாதவ் கூறினார்.

"நீண்ட காலமாக இந்தப் பகுதிகள் புறக்கணிக்கப்படும் சூழலை நான் பார்த்து வருகிறேன். பெரும்பாலான தொழிலாள வர்க்க மக்கள் இங்கு வாழ்கின்றனர். இவர்களால் தங்கள் அதிகாரம், உரிமைகளுக்காகப் போராட முடிவதில்லை. இங்குள்ள தலைமை வலுவாக இருந்தால் மட்டுமே நிலைமை மேம்படும் வாய்ப்பு ஏற்படும்."

"மஹூ, இந்தூரில் செழித்து வளரும் ஒரு நகரம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்காக இந்தூருக்கு ரயிலில் செல்வார்கள். ஆனால் ஒரு சதித்திட்டத்தின் பகுதியாக, தினசரி ஷட்டில் ரயில் நிறுத்தப்பட்டது," என்று யோகேஷ் யாதவ் கூறுகிறார்.

"இதில் தினமும் 20 முதல் 25 ஆயிரம் பேர் கூலி வேலை செய்ய பயணம் செய்து வந்தனர். பேருந்தில் சென்றால் அவர்களுக்கு தினசரி கட்டணமாக 80 ரூபாய் தேவைப்படும். அவர்களின் ஊதியத்தில் பாதி இந்தக் கட்டணத்திலேயே செலவாகிவிடும்," என்று அவர் குறிப்பிட்டார்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, ஏழை மக்களை கவனிக்க ஆள் இல்லை என்கிறார் ராணி பாய்.

தேர்தலுக்குப் பிறகு யாரும் வருவதில்லை

65 வயதான ராணி பாய் ஒரு சிறிய அறைக்குள் பாத்திரங்களை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதே அறையில்தான் அவர் தங்கவேண்டும். பாத்திரங்களைக் கழுவ வேண்டும். குளிக்கவும் வேண்டும்.

இங்குள்ளவர்கள் கஷ்டப்பட்டு தாங்களாகவே கட்டிய சிறிய வீடுகள் இந்த குடியிருப்புப் பகுதியில் உள்ளன.

”கவுன்சிலர்கள், தலைவர்கள் ஓட்டு கேட்க ஒருமுறைதான் இங்கு வருவார்கள். இதைத் தவிர யாரும் இங்கு எட்டிக்கூட பார்ப்பதில்லை. இரண்டு ஆண்டுகளாக எனக்கு ஓய்வூதியம்கூட வரவில்லை. ஏழைகளை கவனிக்க ஆளில்லை,” என்று ராணி பாய் கூறுகிறார்.

"இந்தூர் மாநகராட்சி சில ஆக்கிரமிப்புக் குடியிருப்புகளை அடுக்குமாடி குடியிருப்புகளாக மாற்றியது போல அரசும் வீடுகளைக் கட்டி இவர்களைக் குடியமர்த்தினால் இந்த விலைமதிப்பற்ற இடம் காலியாகிவிடும். குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களும் குறைந்துவிடும்,” என்று முன்னாள் கவுன்சிலர் அஷோக் வர்மா கூறினார்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், NEETU SINGH/BBC

படக்குறிப்பு, இந்தியாவில் 62 கன்டோன்மென்ட் பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று மோகன் வாகோடே கூறினார்.

'பாபா சாஹேப்பின் அரசியல் சாசனம் அவர் பிறந்த இடத்தில் செயல்பாட்டில் இல்லை'

டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் ஜென்மபூமி ஸ்மாரக் சமிதியின் முன்னாள் செயலாளர் மோகன் ராவ் வாகோடே, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த மஹார் காலனியில் வசித்து வந்தார்.

"இந்த மஹார் குடியிருப்புகள் மற்றும் பட்டியல் சாதியினரின் நிலை விலங்குகளைவிட மோசமானது," என்று அவர் கூறுகிறார்,

"நாடு முழுவதும் தூய்மைப் பிரசாரம் நடந்து வருகிறது. நீங்கள் இங்கு சுற்றிப் பார்த்திருந்தால் இங்குள்ள தூய்மை அமைப்பைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

மாநில அரசின் திட்டங்களாகட்டும் அல்லது மத்திய அரசின் திட்டங்களாகட்டும், அவை கன்டோன்மென்ட் வாரியத்தில் செயல்படுத்தப்படுவதில்லை. பாபா சாஹேப் வடிவமைத்த அரசமைப்பு அவர் பிறந்த இடத்தில் செயல்பாட்டில் இல்லை,” என்றார் அவர்.

"இங்குள்ள சுமார் 27,000 பேருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் நில ஆக்கிரமிப்பாளர்கள் என்று காரணம் கூறப்பட்டது. இங்குள்ள மக்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்கு வாக்களிக்கலாம். ஆனால் கன்டோன்மென்ட் பகுதியின் கவுன்சிலரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது.”

நாடு முழுவதும் 62 கன்டோன்மென்ட்கள் உள்ளன, அங்கு வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று வாகோடே தெரிவித்தார்.

​​"இவர்கள் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் வசிப்பவர்கள், அதனால் அவர்களுக்குப் பலன்கள் கிடைக்காது என்று கூறப்படுகிறது.

அவர்களை வளர்ச்சியடையச் செய்யும் கவுன்சிலரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இல்லாததால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: