சாதி விவகாரத்தில் சாவர்க்கரோடு அம்பேத்கர் இணைந்து செயல்பட முயன்றது எப்போது? என்ன நடந்தது?

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கையில் மஹாட் சத்தியாகிரகம் ஒரு முக்கியமான கட்டமாகும்
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

1927 மார்ச் 20 ஆம் தேதி அம்பேத்கரும் அவரது ஆதரவாளர்களும் மகாராஷ்டிராவின் கொலாபா மாவட்டத்தில் உள்ள மஹாட் என்ற இடத்தில் அமைந்துள்ள சாவ்தார் குளத்திற்கு ஊர்வலம் சென்றனர். அவர்கள் தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

அம்பேத்கர் தலைமையில் தீண்டாமைக்கு ஆளான ஆயிரக்கணக்கான மக்கள் சாவ்தாரில் உள்ள பொதுக்குளத்தில் இருந்து தண்ணீரை அருந்தினர். முதலில் டாக்டர் அம்பேத்கர் தண்ணீரை அள்ளிக்குடித்தார், பின்னர் அவரைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தண்ணீர் குடித்தார்கள்.

அப்போது அம்பேத்கர் அங்கு கூடியிருந்தவர்களிடம் பேசுகையில், "குடிக்க தண்ணீர் கிடைக்காததால் இங்கு வந்திருக்கிறோமா? இங்கு சுவையான தண்ணீர் இருக்கிறது என்பதால் அதைக்குடிக்க இங்கு வந்திருக்கிறோமா? கண்டிப்பாக இல்லை. மனிதர்களாக இருப்பதற்கான நமது உரிமையை நிலைநாட்ட இங்கே வந்திருக்கிறோம்,"என்றார்.

இது ஒரு அடையாளப் போராட்டமாகும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஆதிக்க சாதி, நிலப்பிரபுத்துவ அதிகாரத்திற்கு சவால் விடப்பட்டது. சமூக அந்தஸ்து குறைந்த மக்களுக்கு, விலங்குகளுக்கு இருந்த உரிமைகளைக்கூட கொடுக்க அவர்கள் தயாராக இருக்கவில்லை.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், VIJAY SURWADE'S ARCHIVAL COLLECTION NAVAYANA

இது மற்ற சாதியினர் மீது பரவலான எதிர்வினையை ஏற்படுத்தியது. இதற்கு பழிவாங்கும்விதமாக ஆதிக்க சாதியினர் தீண்டாமைக்கு உள்ளான மக்களின் குடியிருப்புக்கு சென்று மோசமான தாக்குதலை நடத்தினர்.

அஷோக் கோபால் எழுதி சமீபத்தில் வெளியான ‘A part Apart. The life and thought of B.R. Ambedkar’ என்ற புத்தகத்தில்,”ஆதிக்க சாதி இந்துக்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்களை கொடூரமாக தாக்கினர்."என்று எழுதியுள்ளார்.

"நகரில் உள்ள வீரேஸ்வரர் கோவிலுக்குள் தீண்டாமைக்கு உள்ளான மக்கள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் வதந்திகள் பரவின. அம்பேத்கரின் இந்த போராட்டத்திற்கு மறுநாள்,1927 மார்ச் 21 ஆம் தேதி சனாதான இந்துக்கள், சாவ்தார் குளத்தின் நீரை 'புனிதப்படுத்தும்' சடங்கை செய்தனர்.”

சிறுவயதிலேயே தீண்டாமைக்கு ஆளான அம்பேத்கர்

பீம்ராவ் அம்பேத்கரின் தந்தை ராணுவத்தில் இருந்தார். அவர் கோரேகாவில் பணியமர்த்தப்பட்டார். பீம்ராவையும் தனது சகோதரர் மற்றும் சகோதரியின் குழந்தைகளையும் அவர் கோரேகாவுக்கு வருமாறு அழைத்தார். ஆனால் அவர்கள் எந்த ரயிலில் கோரேகாவை அடைகிறார்கள் என்ற செய்தி அவருக்கு கிடைக்கவில்லை. எனவே அவர்களை சந்திக்க யாருமே ரயில் நிலையத்திற்கு வரவில்லை.

ஸ்டேஷன் மாஸ்டர் அவரிடம் நீங்கள் யார், எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ’மஹர்கள்’ (தீண்டாமைக்கு உள்ளான சாதி) என்று தெரிந்தவுடன் அதிர்ச்சியில் பின்னால் சென்றுவிட்டார். மிகவும் சிரமப்பட்டு ஒரு மாட்டு வண்டி வரவழைக்கப்பட்டது. வழியில் மாட்டு வண்டி ஓட்டுநருக்கு அவர்கள் அனைவரும் மஹர்கள் என்பது உரையாடலின் போது தெரிந்துவிட்டது.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், NAVAYANA

சாவித்ரி அம்பேத்கர் தனது ' மை லைஃப் வித் டாக்டர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தில் "மாட்டு வண்டிக்காரர் அவர்கள் அனைவரையும் உடனடியாக வண்டியில் இருந்து கீழே இறக்கிவிட்டுவிட்டார். இருட்டாகிவிட்டது. அவருக்கு இருமடங்கு கட்டணம் தருவதாக குழந்தைகள் ஆசைகாட்டியபோது அவர் அதற்கு ஒப்புக்கொண்டார்

குழந்தைகள் வண்டியை ஓட்டுவார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வண்டிக்கார் நடந்தே செல்வார் என்பது அவரது நிபந்தனை. அது கோடை காலம், எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் தாகமாக இருந்தது, ஆனால் வழியில் யாரும் தண்ணீர் கூட கொடுக்கவில்லை. அவர்கள் அனைவரும் மறுநாள் மிகமோசமான நிலைமையில் அவர்கள் தங்கள் வீட்டை அடைந்தனர்,” என்று எழுதியுள்ளார்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், RUPA

படக்குறிப்பு, டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் மற்றும் அவரது மனைவி சவிதா அம்பேத்கர்

வாடகை வீடு கொடுக்க யாரும் தயாராக இல்லை

பரோடாவில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு நடந்த மற்றொரு சம்பவம் அவரை உலுக்கியது. வெளிநாட்டில் கல்வி கற்ற பிறகு, 1913 ஜனவரியில் அவருக்கு பரோடா செயலகத்தில் வேலை கிடைத்தது. அவர் தொட்டு விடக்கூடாது என்பதற்காக பியூன்கள் ஃபைலை தூரத்தில் இருந்தே வீசுவது வழக்கம். அவருக்கு வீடு வாடகைக்கு கொடுக்க யாரும் தயாராக இல்லை.

"பாபா சாஹேப் பார்சி பெயரை வைத்துக்கொண்டு ஒரு பார்சி ஹோட்டலில் ஒரு நாளைக்கு ஒன்றரை ரூபாய் வாடகையில் வாழத் தொடங்கினார். 11வது நாள், முதல் மாடியில் உள்ள அவரது அறைக்கு வெளியே பத்து பன்னிரெண்டு குண்டர்கள் கையில் கம்புகளுடன் வந்து நின்றனர்,” என்று சவிதா அம்பேத்கர் எழுதுகிறார்,

"ஹோட்டலை மாசுபடுத்தியதாக அவரை ஏசினர். அவர் ஹோட்டலை விட்டு வெளியேறி ஒரு கிறிஸ்தவ நண்பரின் இடத்தில் தஞ்சம் அடைந்தார், ஆனால் அங்கும் அவரது சாதி பற்றி மக்கள் அறிந்தவுடன் அந்த வீட்டைவிட்டும் அவர் வெளியேற வேண்டியதாயிற்று. பரோடாவில் வேலையை விட்டுவிட்டு இரவோடு இரவாக அவர் பம்பாய் செல்ல நேர்ந்தது.”

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், VIJAY SURWADE'S ARCHIVAL COLLECTION NAVAYANA

மஹாட் இயக்கத்தை ஆதரித்த சாவர்க்கர்

இதுபோன்ற பல சம்பவங்கள் சாதி தொடர்பான பாபாசாகேப்பின் சிந்தனையை மாற்றியது. விநாயக் தாமோதர் சாவர்க்கர், அம்பேத்கரின் மஹாட் சத்தியாகிரகத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தார்.

தனஞ்சய் கீர், சாவர்க்கரின் வாழ்க்கை வரலாறான 'சாவர்க்கர் அண்ட் ஹிஸ் டைம்ஸ்' என்ற புத்தகத்தில்," தீண்டாமையைக் கண்டனம் செய்வது மட்டுமல்ல, மதத்தின் கட்டளையாக அதை வேரறுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அது கொள்கை அல்லது உரிமை பிரச்சனை மட்டும் அல்ல. நீதி மற்றும் மனித குலத்திற்கான சேவை ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன என்று அப்போது அவர் கூறினார்," என்று எழுதியுள்ளார்.

"தங்கள் மதத்தை கடைப்பிடிப்பவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது ஒவ்வொரு இந்துவின் புனிதக் கடமை என்று சாவர்க்கர் அறிவித்தார். ஒரு விலங்கின் சிறுநீரால் தன்னை தூய்மைப்படுத்திக்கொள்வது, மனிதத் தொடுதலால் மாசு ஏற்படும் என்ற கருத்தை விட மோசமான கேலிக்கூத்து. இது கண்டிக்கத்தக்கது என்று சாவர்கர் தெரிவித்தார்."

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், விநாயக் தாமோதர் சாவர்க்கர்

அம்பேத்கர், சாவர்க்கரின் சிந்தனையில் வேறுபாடு

ஆனால் இப்படி இருந்தபோதிலும், சமூக சீர்திருத்தத்திற்கான சாவர்க்கரின் பிரச்சாரத்தால் அம்பேத்கர் ஏமாந்தார்.

சமீபத்தில் வெளியான 'A Part Apart the Life and Thought of BR Ambedkar' என்ற புத்தகத்தின் ஆசிரியர் அஷோக் கோபால்,"சாவர்க்கர் இந்து தேசத்தை உருவாக்கும் தனது இலக்கை அடைய வேண்டுமானால், தீண்டாமைக்கு உள்ளானவர்களுக்கும் மற்ற இந்து சமுதாயத்திற்கும் இடையே உள்ள தடையை உடைக்க வேண்டும் என்று அம்பேத்கர் நினைத்தார்,” என்று எழுதியுள்ளார்.

1924 ஜனவரியில் சிறையில் இருந்து விடுதலையான பிறகு, சாவர்க்கர் கண்டிப்பாக இந்த திசையில் சில வேலைகளைச் செய்தார். ஏனெனில் அவர் ரத்னகிரி மாவட்டத்தில் மட்டுமே அரசியல் சாராத பணிகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டார்.

தீண்டாமைக்கு உள்ளானவர்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவும், எல்லா சாதியினரும் ஒன்றாக சாப்பிடவும் ஒரு பிரசாரத்தை அவர் தொடங்கினார்.

சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் தனஞ்சய் கீர், அம்பேத்கரும் சாவர்க்கரும் இந்து சமுதாயத்தை சீர்திருத்தப் பாடுபட்டதாக சித்தரிக்க முயற்சித்துள்ளார்.

"1933 பிப்ரவரி 18 ஆம் தேதி சாவர்க்கருக்கு அம்பேத்கர் எழுதிய கடிதத்தையும் தனஞ்சய் கீர் குறிப்பிடுகிறார். ரத்னகிரியில் ஒரு பணக்கார தொழிலதிபரின் உதவியுடன் பதித் பாவன் கோவிலைக் கட்டிய சாவர்க்கரின் முன்முயற்சிக்கு பிறகு இந்தக் கடிதம் எழுதப்பட்டது. இந்தக்கோவிலில் வழிபட தீண்டாமைக்கு உள்ளானவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலின் திறப்பு விழாவில் பங்கேற்க அம்பேத்கரை சாவர்கர் அழைத்தார். ஆனால் அம்பேத்கர் தனது வேலை சுமை காரணமாக விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சமூக சீர்திருத்தங்களுக்குப் பணியாற்றுவதற்கான பிரசாரத்தைத் தொடங்கியதற்காக நான் உங்களைப் பாராட்ட விரும்புகிறேன் என்று அந்தக்கடித்தில் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்,” என்று அஷோக் கோபால் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

நால்வருண அமைப்பு தொடர்பாக சாவர்க்கருடன் இருந்த வேறுபாடுகள்

ஆனால் இது முழு உண்மையல்ல. 1929 ஏப்ரல் 12 ஆம் தேதி 'பஹிஷ்கிருத பாரத்' இதழில் எழுதப்பட்ட தலையங்கம்,”பதித் பாவன் கோவில் கட்டும் தொடக்கத்திலேயே அம்பேத்கர் அதை எதிர்த்தார்” என்று கூறுகிறது. பிற்காலத்தில் இந்தக் கோவில்கள் தீண்டப்படாதாரின் கோவில்கள் என்று அழைக்கப்படும் என்று அவர் நம்பினார்.

1930 நவம்பர் முதல் 1931 மார்ச் வரை 'கேசரி'யில் வெளியான தனது கட்டுரைகளில் சாவர்க்கர், சாதிவெறியை எதிர்க்கிறார். ஆனால் நால்வருண அமைப்புக்கு தான் எதிரானவர் அல்ல என்று அவர் தெளிவாகக் கூறினார். சாவர்க்கரின் இந்த எண்ணங்களை அம்பேத்கர் அறிந்திருந்தார்.

அவர் 1933 பிப்ரவரி 18 ஆம் தேதி சாவர்க்கருக்கு எழுதிய கடிதத்தில், "நீங்கள் இன்னும் 'சதுர்வர்ணம்' என்ற சொல்லை தகுதியின் அடிப்படையிலானது என்று வாதிடுவது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் வரும் காலங்களில் இந்தகைய தேவையற்ற மற்றும் குறும்புத்தனமான வாசகங்களிலிருந்து விடுதலை பெறும் தைரியம் உங்களுக்குக்கிடைக்கும் என்று நம்புகிறேன், " என்று குறிப்பிட்டிருந்தார்.

”சாவர்க்கர் அவ்வாறு செய்வதற்கான விருப்பம் இருப்பதாக தெரிவிக்கவில்லை. அப்போதிலிருந்து சீர்திருத்த முயற்சிகளில் அம்பேத்கரின் ஆர்வம் குறைந்துவிட்டது,” என்று அஷோக் கோபால் எழுதுகிறார்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், VIJAY SURWADE'S ARCHIVAL COLLECTION NAVAYANA

படக்குறிப்பு, சாவர்க்கருக்கு அம்பேத்கர் எழுதிய கடிதம்

பாய் பர்மானந்தின் ஆதரவை நாடிய அம்பேத்கர்

இதற்கிடையில் அம்பேத்கர் பஞ்சாபின் இந்துத்துவ ஆர்ய சமாஜ் தலைவரான பாய் பர்மானந்தின் முயற்சிகளை நம்பிக்கையுடன் பார்க்கத் தொடங்கினார். இந்தியாவில் பிரிட்டிஷ் அரசை வன்முறை மூலமாக கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் சாவர்க்கரைப்போலவே, பர்மானந்தும், அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார்.

1920 ஆம் ஆண்டு அந்தமானில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, பர்மானந்த், 'ஜாத்-பாத் தோடக் மண்டல்'( சாதி பாகுபாடுகளை உடைக்கும் அமைப்பு) தலைவராக ஆனார். 1927ஆம் ஆண்டு அவர் அதன் பெயரை 'இந்து சாம்யவாத் மண்டல்' என்று மாற்றினார்.

1927 செப்டம்பர் 16 ஆம் தேதி பஹிஷ்கிருத பாரத் இதழில் ஒரு கட்டுரை எழுதிய அம்பேத்கர், இந்து மகாசபைக்கு ஆரோக்கியமான மாற்று இந்த மண்டல் என்று குறிப்பிட்டார்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், INDIAN POST

படக்குறிப்பு, இந்திய அரசு 1979 இல் பாய் பர்மானந்தின் நினைவாக தபால்தலையை வெளியிட்டது

"லாகூரின் ஆரியசமாஜிகள் ’ஜாத் -பாத் தோடக் மண்டல்’ என்ற பெயருடன் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பாததால் பாய் பர்மானந்த் பெயர் மாற்றம் செய்தார் என்பது அம்பேத்கருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது," என்று அஷோக் கோபால் கருதுகிறார்.

சதுர்வர்ண அமைப்பை நியாயப்படுத்தும் ஒரு பெயரை அவர்கள் விரும்பினார்கள். பின்னாளில், இந்த மண்டல் மீதான ஆர்வத்தையும் அம்பேத்கர் இழந்தார்.

1935 டிசம்பரில் இந்த அமைப்பு, லாகூரில் தனது வருடாந்திர மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்கு அம்பேத்கருக்கு அழைப்பு அனுப்பியது. அம்பேத்கர் தனது உரையின் நகலை அங்கு அனுப்பியபோது, அதில் சில திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அதை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீண்ட கடிதப் பரிமாற்றத்திற்குப்பிறகு மாநாட்டிற்கு செல்வதை அவர் ரத்து செய்தார். பின்னர் இந்த உரையை அம்பேத்கர் தனது ' Annihilation of caste’ என்ற நூலில் வெளியிட்டார்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், RUPA PUBLICATIONS INDIA

சுயராஜ்ஜியத்தை விட சாதிகளற்ற அமைப்பு முக்கியமானது

சுயராஜ்யம் வருவதற்கு முன், இந்து சமுதாயத்தில் சாதிகளற்ற அமைப்பை உருவாக்குவது அவசியம் என்று அம்பேத்கர் நம்பினார். "உங்களால் பாதுகாக்க முடியாத சுயராஜ்ஜியத்தால் எந்தப் பயனும் இல்லை. என் பார்வையில் இந்து சமூகம் எப்போது சாதியற்றதாக மாறுகிறதோ, அப்போதுதான் அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்." என்று ஒரு இடத்தில் அவர் எழுதினார்.

அப்போது இந்து மகாசபை போன்ற அமைப்புகளும் இந்து சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தன. இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அவர் முன்வைத்த சூத்திரம் என்னவென்றால் சில காரணங்களால் யாருடைய முன்னோர்கள் இஸ்லாத்திற்கு மாறினார்களோ அவர்களை மீண்டும் இந்துக்கள் ஆக்குவதாகும்.

"இந்து சமூகம் பிழைக்க வேண்டுமானால், தன் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக, தன் ஒற்றுமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சாதிகளை வேரறுப்பது என்பது இதன் நேரடி பொருள். அதன் பிறகு இந்து சமூகம் ஒழுங்கமைக்கப்பட்டால் புனிதப்படுத்தலின் தேவையே இருக்காது,” என்று அம்பேத்கர் 'தெலுகு சமாச்சார்' இதழில் எழுதினார்.

இந்துத்துவம் தொடர்பாக அம்பேத்கருக்கும் சாவர்க்கருக்கும் வேறுபாடு

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், Getty Images

"சமூகத்தில் சமத்துவ உரிமை வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். முடிந்தவரை இந்து சமுதாயத்தில் நிலைத்திருந்து இந்த உரிமையை பெற விரும்புகிறோம். தேவைப்பட்டால், இந்து மதத்தை விட்டுச்செல்லவும் தயங்க மாட்டோம். நாங்கள் இந்துத்துத்தை விட்டுவிடுட்டால் பிறகு கோவிலுக்குச் செல்வதில் ஆர்வம் இருக்காது,” என்று பாபாசாகேப் அம்பேத்கர் வெகு காலத்திற்கு முன்பே கூறியிருந்தார்.

அம்பேத்கரும் சாவர்க்கரும் இந்து மதம் தொடர்பாக வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறத் தயங்கமாட்டேன் என்று கூறியபோது, பௌத்தத்தை ஏற்க நினைப்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.

1935 நவம்பர் 3 ஆம் தேதி 'நிர்பித்' இதழில் இது குறித்து விரிவான கட்டுரையை சாவர்க்கர் எழுதினார். இந்து மதத்தை விட்டு வெளியேறும் அம்பேத்கரின் விருப்பம் குறித்து கேள்வி எழுப்பிய சாவர்க்கர், "ஒவ்வொரு ஒழுங்கமைக்கப்பட்ட மதத்தைப் போலவே இந்து மதத்திலும் பகுத்தறிவின்மையின் சில கூறுகள் உள்ளன. ஆனால் இத்தகைய பகுத்தறிவின்மை மற்ற மதங்களிலும் காணப்படுகிறது" என்று எழுதினார்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM

தனது அறிவையும் அறிவுசார் செல்வாக்கையும் பயன்படுத்தி இந்து மதத்தில் இருந்துகொண்டே அதை சீர்திருத்த முயற்சிக்குமாறு அவர் அம்பேத்கரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

'தீண்டாமைதான் பிரச்சனை என்றால் 10 வருடங்கள் பொறுமையாக இருங்கள். அதற்குள் இந்த பிரச்சனை வேரில் இருந்தே போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

100 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்து சமுதாயத்தில் தீண்டாமை நிலைத்திருக்கும் என்று அம்பேத்கர் அதற்கு பதிலளித்தார்.

1929 செப்டம்பரில் அம்பேத்கர் ஒரு வழக்கு தொடர்பாக சாவர்க்கரின் சொந்த ஊரான ரத்னகிரிக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

நகரத்தின் குடிமக்கள் சார்பாக விட்டல் கோவிலில் உரை நிகழ்த்த சாவர்க்கர் அவரை அழைத்தார்.

அம்பேத்கரும் இதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு ஒரு தந்தி வந்தது, அதன் காரணமாக அவர் பம்பாய் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவர் தனது ரத்னிகிரி பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று, இதனால் அம்பேத்கரும் சாவர்க்கரும் ஒரே மேடையில் அமர்ந்திருப்பதை பார்க்கும் வாய்ப்பை நகர மக்கள் இழந்தனர்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், VIJAY SURWADE'S ARCHIVAL COLLECTION NAVAYANA

இந்து மதத்தை விட்டு விலகுவதாக அறிவிப்பு

இந்து மதத்தில் நிலைத்திருக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அம்பேத்கர் தனது உரை ஒன்றில் தெளிவுபடுத்தியிருந்தார்.

”தீண்டத்தகாத இந்து என்ற களங்கத்துடன் பிறந்தது என் கையில் இல்லை. ஆனால் இந்த அவமானகரமான நிலையை மாற்றுவதன் மூலம் எனது நிலையை மேம்படுத்த முடியும். அப்படி செய்ய என்னால் முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்து என்று சொல்லிக்கொள்ளும் ஒரு மனிதனாக நான் சாகமாட்டேன் என்பதை தெளிவுபடுத்துகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார்

அம்பேத்கரின் அறிக்கை தொடர்பான முதல் எதிர்வினை மகாத்மா காந்தியிடமிருந்து வந்தது. அவர் செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு அளித்த பேட்டியில், "டாக்டர் அம்பேத்கரின் இந்த அறிக்கை நம்பக்கூடியதாக இல்லை" என்று கூறினார்.

அம்பேத்கர், சாவர்க்கர், இந்தியா

பட மூலாதாரம், VIJAY SURWADE'S ARCHIVAL COLLECTION NAVAYANA

இந்து மகாசபையின் தலைவர் பால்கிருஷ்ண மூஞ்சே மற்றும் காங்கிரஸ் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர், மதமாற்றம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

பத்து ஆண்டுகளுக்குள் தீண்டாமை ஒழிந்துவிடும் என்றும் ஒரு லட்சம் தீண்டப்படாதவர்கள் மற்றும் ஆயிரம் மஹர்களில் பத்து பேருக்கு மேல் மதம் மாற்றுவதில் அம்பேத்கரை பின்பற்றமாட்டார்கள் என்றும் சாவர்க்கர் கூறினார்.

'எந்த மதமும் பகுத்தறிவுவாதத்தின்படி மட்டுமே வாழ முடியாது' என்பது சாவர்க்கரின் வாதம். அம்பேத்கர் பகுத்தறிவுவாதத்தை வளர்க்க விரும்பினால், அவர் ஒரு பகுத்தறிவு அமைப்பை தொடங்க வேண்டும் என்று சாவர்கர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: