பாபாசாகேப் அம்பேத்கரின் இரண்டாவது திருமணம் பற்றிய கதை

பட மூலாதாரம், VIJAY SURWADE
- எழுதியவர், நாம்தேவ் கட்கர்
- பதவி, பிபிசி மராத்தி
டாக்டர். பி.ஆர். அம்பேத்கரின் முதல் மனைவி ரமாபாய் 1935ல் காலமானார். டாக்டர் அம்பேத்கர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். டாக்டர் அம்பேத்கரின் இரண்டாவது மனைவியான டாக்டர் சவிதா அம்பேத்கரைப் பற்றி பலருக்கும் தெரியாது.
முதல் சந்திப்பு
மும்பை விலே பார்லே பகுதியில் வசித்து வந்த பொருளாதார நிபுணர் டாக்டர் எஸ்.ராவ், டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய நண்பர். ஒவ்வொரு முறை மும்பைக்குச் செல்லும் போதும் அம்பேத்கர் டாக்டர் ராவை சந்திப்பார். அம்பேத்கர் வைஸ்ராயின் நிர்வாக சபையில் தொழிலாளர் நல அமைச்சராக இருந்த காலத்திலும்கூட மும்பை சுற்றுப்பயணங்களில்போது டாக்டர் ராவின் இல்லத்தில் சிறிது நேரம் செலவிடுவார்.
பின்னர் சவிதா அம்பேத்கராக மாறிய ஷாரதா கபீர், டாக்டர் ராவின் மகள்களின் தோழி ஆவார். உண்மையில், ராவ் மற்றும் கபீர் குடும்பத்தினர் குடும்ப நண்பர்களாக இருந்தனர். எனவே, அவர்கள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சந்தித்துக்கொள்வார்கள்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கரும் ஷாரதா கபீரும் முதல் முதலில் டாக்டர் ராவின் இடத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர்.
ஷாரதா கபீர் 1912 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ராஜாபூர் நகரில் சரஸ்வத் குடும்பத்தில் பிறந்தார். கிருஷ்ணராவ் விநாயகராவ் கபீர் மற்றும் ஜானகிபாய் கபீரர் தம்பதிக்கு ஷாரதா உட்பட எட்டு குழந்தைகள் இருந்தனர்.
1947-ல் டாக்டர் அம்பேத்கரை முதன்முதலில் சந்தித்தபோது, அவர் தொழிலாளர் அமைச்சர் என்பது மட்டுமே ஷாரதாவுக்குத் தெரியும்.
1947 ஆம் ஆண்டின் ஆரம்ப மாதங்களில் ஒரு நாள், டாக்டர் அம்பேத்கர் டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்றார். அவர் தனது வழக்கப்படி பார்லேயில் உள்ள டாக்டர் ராவின் இல்லத்திற்குச் சென்றார். ஷாரதா கபீரும் அங்கே வந்திருந்தார். டாக்டர் ராவ் அவரை பாபாசாகேப்பிற்கு அறிமுகப்படுத்தினார். "இவர் என் மகள்களின் தோழி. மிகவும் புத்திசாலி. அவர் ஒரு MBBS மருத்துவர். டாக்டர் மால்வன்கருடன் உதவி மருத்துவராக வேலை செய்கிறார்," என்று டாக்டர் ராவ் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இப்படித்தான் டாக்டர் அம்பேத்கர் தனது இரண்டாவது மனைவியான ஷாரதா கபீரை முதன்முதலில் சந்தித்தார், அவர் திருமணத்திற்குப் பிறகு சவிதா அம்பேத்கராக மாறினார். அம்பேத்கரின் தொண்டர்கள் அவரை மாயி(தாய்) சாகேப் என்று அன்புடன் அழைக்கிறார்கள். ஆனால், டாக்டர் அம்பேத்கருக்கு அவர் பிரியமான 'ஷாரு'வாகவே இருந்தார்.
'பிரகாசமான கண்கள், கூர்மையான தோற்றம் மற்றும் புத்திசாலித்தனம்'
மாயிசாகேப் தனது சுயசரிதையான 'டாக்டர். அம்பேத்கரன்ச்ய சஹவாஸத்' (டாக்டர் அம்பேத்கருடன் எனது வாழ்க்கை) என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார். "டாக்டர். அம்பேத்கரின் ஆளுமை ஈர்க்கக்கூடியதாக இருந்தது. அவரது பரந்த நெற்றி, பிரகாசமான கண்கள், கூர்மையான தோற்றம், நவீன மற்றும் நேர்த்தியான ஆடைகள் மற்றும் அவரது புத்திசாலித்தனத்தின் பிரகாசம் ஆகியவற்றால் அவரது அசாதாரண இருப்பை உடனடியாக உணர முடிந்தது."
"டாக்டர் அம்பேத்கரை ஏன் வெளிநாட்டவர்கள் ஜெர்மன் இளவரசர் என்று அழைத்தார்கள் என்பதை எளிதில் உணர முடியும். அவரது ஈர்க்கக்கூடிய ஆளுமை மற்றும் அவரது அசாதாரண அறிவுத்திறன் ஆகியவற்றின் தாக்கத்தை ஒருவர் காணலாம்," என்று அவர் மேலும் எழுதுகிறார்.
இந்த காலகட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆயினும்கூட அவர் பல பொறுப்புகளைச் சுமக்க வேண்டியிருந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, டாக்டர் அம்பேத்கர் பண்டித நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சரானார். 1947 ஆகஸ்ட் 29 ஆம் தேதி அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராகவும் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். அவருடைய எழுத்தும் சமூகப் பணியும் ஒரே சமயத்தில் நடந்தன. அந்த நேரத்தில், மாயிசாகேப் மும்பையின் கிர்காமில் உள்ள ஹியூஸ் சாலையில் உள்ள டாக்டர் மால்வன்கர் கிளினிக்கில் ஜூனியர் டாக்டராக பணிபுரிந்தார். ஒரு நாள், பாபாசாகேப் திடீரென்று டாக்டர் மால்வன்கரின் மருத்துவ மனைக்கு வந்தார்.

பட மூலாதாரம், VIJAY SURWADE
அங்கு அவரைப் பார்த்ததும் மாயி சாகேப் ஆச்சரியப்பட்டார். ஆனால், ராவின் மனைவிக்கு ஏற்பட்ட வலிப்பு பிரச்னையை வெற்றிகரமாக குணப்படுத்திய டாக்டர் மால்வன்கரிடம் செல்லுமாறு பாபாசாகேபிடம் டாக்டர் ராவ்தான் சொன்னார் என்பதை ஷாரதா பின்னர் அறிந்துகொண்டார். டாக்டர். மால்வன்கர் பாபாசாகேப்பை பரிசோதித்தார், நீரிழிவு, நரம்பு அழற்சி, மூட்டுவலி மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதைக் கண்டறிந்தார். மூட்டுவலி காரணமாக அம்பேத்கரின் தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.
"சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு சமத்துவம் மற்றும் நீதிக்கான உரிமையை முன்வைத்த டாக்டர் அம்பேத்கர் தனது உடல்நலத்தில் அக்கறை காட்டவில்லை," என்று மாயி சாகேப் மேலும் எழுதுகிறார்.
டாக்டர் மால்வன்கர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக் கொள்ள ஆரம்பித்த பிறகு பாபாசாகேப் சிறிது நிம்மதி அடைந்தார். எனவே, அவர் டெல்லியில் இருந்தபோதும், டாக்டர் மால்வன்கருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசி ஆலோசனை செய்வார். மேலும் ஒவ்வொரு முறை மும்பைக்கு செல்லும்போதும் க்ளினிக்கிற்கு தவறாமல் செல்வார். இதனால், பாபாசாகேப்பும் மாயிசாகேப்பும் ஒருவரையொருவர் அடிக்கடி சந்தித்தனர்.
மாயி சாகேப்பிடம் திருமண யோசனையை முன்வைத்த அம்பேத்கர்
1947 டிசம்பரில் ஒரு நாள், பாபாசாகேப் மும்பை வந்திருந்தார், அவர் டாக்டர் மால்வன்கரின் கிளினிக்கிற்குச் சென்றார். பரிசோதனைக்குப் பிறகு, அவர் தாதரில் உள்ள தனது இல்லமான ராஜ்க்ருஹாவுக்குச் செல்ல இருந்தார். தாதரில் உள்ள போர்த்துகீசிய தேவாலயத்திற்கு எதிரே மாயிசாகேப் வசித்து வந்தார், எனவே அம்பேத்கர் வழியில் அவரது வீட்டில் இறக்கிவிட முன்வந்தார்.

பட மூலாதாரம், VIJAY SURWADE
அதே நாளில், பாபாசாகேப் மாயிசாகேப்பிடம், "என்னுடைய தொண்டர்களும், சக ஊழியர்களும் ஒரு துணையை அழைத்து வர வேண்டும் என்று என்னிடம் தொடர்ந்து சொல்கிறார்கள், ஆனால் எனக்கு விருப்பமான மற்றும் எனக்கு இணக்கமான ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது கடினம். என் மக்களுக்காக நான் நீண்ட காலம் வாழ வேண்டும். எனவே, என்னை கவனித்துக் கொள்ள யாராவது தேவை. பொருத்தமான துணையின் தேடலை உங்களிடமிருந்து தொடங்க விரும்புகிறேன்," என்றார்.
மாயிசாகேப் முதலில் ஆச்சரியப்பட்டார். அவரால் பதில் சொல்ல முடியவில்லை. எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் நன்கு நேரம் எடுத்து சிந்திக்குமாறு அவரிடம் கூறிவிட்டு அம்பேத்கர் டெல்லி திரும்பினார்.
மாயி சாகேப் 1948 ஜனவரி 25 ஆம் தேதி பாபாசாகேப்பிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றார். "எனது வாழ்க்கைத் துணையின் தேடலை உங்களிடமிருந்து தொடங்குகிறேன். ஆனால் என் யோசனை உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே இது நடக்கும்! இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்,' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் மற்றும் தனது பாதிக்கப்பட்ட உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு திருமண யோசனையை அவர் மறுத்தால் தவறாக கருதமாட்டேன் என்றும் அம்பேத்கர் தெளிவுபடுத்தினார்.

பட மூலாதாரம், VIJAY SURWADE
மாயி சாகேப் குழப்பமடைந்தார். டாக்டர் மால்வன்கரிடம் ஆலோசனை கேட்டார். "அம்பேத்கர் வலியுறுத்தவில்லை, எனவே நீ யோசித்து பிறகு முடிவு செய்யலாம்," என்று அவர் கூறினார்.
பின்னர் அவர் பாபாசாகேப்பின் யோசனை பற்றி தன் மூத்த சகோதரரிடம் தெரிவித்தார். "நீ இந்தியாவின் திருமதி சட்ட அமைச்சராக இருப்பாய். இதை மறுக்காதே. முன்னே செல்," என்று சகோதரர் பதில் சொன்னார்.
இது மாயிசாகேப்பிற்கு ஓரளவு நம்பிக்கையை அளித்தது. பாபாசாகேப்பின் கடிதத்திற்கு சாதகமான பதிலை அவர் அளித்தார்.
பாபாசாஹேப் 1948 ஜனவரி மாத இறுதியில் ஷாரதாவின் கடிதத்தைப் பெற்றார். அதே வாரத்தில், பாபாசாகேப் ஒரு தங்க நெக்லஸை மாயிசாகேப்பிற்கு அனுப்பினார். அதில் ஒரு நங்கூர வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது.
'ஷாரு'வும், 'ராஜா'வும்
மாயிசாகேப்பிற்கு பாபாசாஹேப் எழுதிய '1948 பிப்ரவரி 20 ஆம் தேதியிட்ட கடிதம், அன்புள்ள சாரு..' என்ற வார்த்தைகளுடன் தொடங்கி 'ராஜாவின் ஆழமான அன்புடன்' என்ற வார்த்தைகளுடன் முடிகிறது.
பாபாசாகேப் பொதுவாக தனது கடிதங்களில் பீம்ராவ் அம்பேத்கர் அல்லது பி.ஆர்.அம்பேத்கர் என்று கையெழுத்திடுவார். மாயிசாகேப்பிற்கு அவர் எழுதிய கடிதங்கள் மட்டுமே 'உன் ராஜா' என்று முடிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், MAISAHEB AMBEDKAR BIOGRAPHY
"எல்பின்ஸ்டன் கல்லூரியில் படிக்கும்போது சக மாணவர்கள் என்னை ராஜா என்றுதான் அழைப்பார்கள். நீங்களும் எப்படி என்னை அதே பெயரில் அழைத்தீர்கள்? இது உங்களுக்கு பிடித்திருந்தால், நீங்கள் என்னை ராஜா என்றே அழைக்கலாம்," என்று அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.
பிறந்த நாளுக்கு மறுநாள் திருமணம்
மாயிசாகேப்பும் பாபாசாகேப்பும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பிறகு, அம்பேதகர் தனது நெருங்கிய நண்பர்களான கமலாகாந்த் சித்ரே, டாக்டர் மால்வன்கர், தௌலத் ஜாதவ், பௌராவ் கெய்க்வாட் மற்றும் ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் டாக்டர் எம்.கே.பி. நாயர் ஆகியோருக்கு இந்தச் செய்தியைத் தெரிவித்தார்.
மும்பையில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதியில் அது டெல்லியில் நடைபெற்றது.

பட மூலாதாரம், VIJAY SURWADE
பாபா சாகேப்பும் மாயிசாகேப்பும் 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி டெல்லியில் திருமணம் செய்துகொண்டனர்.
ரத்தம் தோய்ந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினை மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு நாடு கொந்தளிப்பில் இருந்தது. எனவே, பாபாசாகேப் திருமணச் சடங்கு சாதாரணமாக இருக்க வேண்டும் என்றும், அதிக விளம்பரம் இருக்கக்கூடாது என்றும் விரும்பினார்.
அந்த காலகட்டத்தில், பாபாசாகேப் '1, ஹார்டிங் அவென்யூ' என்ற இடத்தில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்தார். இருவருக்கும் பதிவுத்திருமணம் நடந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு அளிக்கப்பட்டது.
அன்றைய தினம் மதியம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் முன்னாள் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் பிரபுவின் சிறப்புப் பிரதிநிதியும் விழாவில் கலந்து கொண்டார்.
பாபாசாகேப்பும் மாயிசாகேப்பும் சர்தார் படேலை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றனர். படேல் இதய நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். புதுமணத் தம்பதிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், VIJAY SURWADE
மாயிசாகேப் தனது சுயசரிதையில் திருமண நாளாக ஏப்ரல் 15 ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார். "ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள். அவரது நலம் விரும்பிகள் பலர் அந்தச் சந்தர்ப்பத்தில் அவரது இல்லத்தில் குவிந்தனர். எனவே, ஏப்ரல் 14ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 15ஆம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்தோம்." என்று அவர் எழுதியுள்ளார்.
'எனக்குப் பிறகு ஷாருவுக்கு என்ன ஆகும்?'
திருமணத்தின் போது பாபாசாகேப்புக்கு வயது 57. பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார், அந்த சமயம் மாயிசாகேப்புக்கு 36 வயது. 1948 பிப்ரவரி 21 தேதியிட்ட கடிதத்தில் அவர் மாயிசாகேப் பற்றிய தனது கவலையை வெளிப்படுத்துகிறார். "ராஜா இறந்த பிறகு ஷாருவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலை ராஜாவை வாட்டுகிறது. ராஜா பொதுநலத்திற்காக தன்னை அர்ப்பணித்ததால் எந்த நிதி ஏற்பாடும் செய்யவில்லை. ஷாருவின் ராஜா தனது தொழிலில் சம்பாதிக்கும் பணத்தைக்கொண்டு வாழ்க்கையை நடத்துவதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. ஷாருவின் ராஜாவுக்கு ஓய்வூதியம் இல்லை. ஷாருவின் ராஜா ஆரோக்கியமாகவும் நன்றாகவும் இருந்தால் எந்த பிரச்னையும் இருக்காது. ஆனால் அவர் ஆரோக்கியமாக இல்லை. அதனால், தனக்குப் பிறகு ஷாருவுக்கு என்ன நடக்குமோ என்ற கவலையில் இருக்கிறார். அதை நினைக்கும் போதெல்லாம் அவர் மனதில் இருள் சூழ்கிறது. பகவான் புத்தர் ஏதாவது ஒரு வழியைக் காட்டுவார் என்று ஷாருவின் ராஜா நம்புகிறார்."
மாயிசாகேப் மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஒன்பது ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்தனர். பாபாசாகேப் 1956 டிசம்பர் 6 ஆம் தேதி இயற்கை எய்தினார். மாயிசாகேப் பாபாசாகேப்பின் போராட்டங்களில் அவருக்கு துணையாக இருந்தார். பாபாசாகேப் இறந்த பிறகு, அவர் பல்வேறு முனைகளில் தொடர்ந்து போராட்டங்களை சந்தித்தார். இதை 'சோதனை காலம்' என்று அவர் அழைத்தார்.
டாக்டர் அம்பேத்கரின் மரணத்திற்கான காரணங்கள் குறித்து சிலர் சந்தேகம் எழுப்பினர். டாக்டர் அம்பேத்கரின் மரணத்திற்கு மாயிசாகேப் தான் காரணம் என்று அவர்கள் மறைமுகமாகக் கூறினர்.
இந்தக் காலங்களைப் பற்றி மாயிசாகேப் தனது சுயசரிதையில் எழுதுகிறார்: "டாக்டர். அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு நான் கடந்த கடினமான காலகட்டத்தைப் பற்றி நினைத்துப்பார்க்கிறேன். எந்தப் பெண்ணாவது இப்படியெல்லாம் கஷ்டப்படுவதை அம்பேத்கர் பார்த்திருந்தால் அவர் நிச்சயமாக முன்னே வந்து உதவிக்கரம் நீட்டியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் அவளது உரிமைகளுக்காக போராடியிருப்பார் மற்றும் உறுதியாக ஆதரித்திருப்பார்."
இருவரும் சேர்ந்து வாழ்ந்த அந்தக்குறுகிய காலத்தில் மாயிசாகேப், தனது முழு நேரத்தையும் பாபாசாகேப்பின் உடல்நிலையை கவனிப்பதிலும், அவருடைய வேலையைச் செய்வதில் அவருக்கு உதவுவதிலும் அர்ப்பணித்தார். 2003 இல் அவர் காலமாகும்வரை டாக்டர். அம்பேத்கரின் கொள்கைகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.
பாபாசாகேப் ஒருமுறை கூறியிருந்தார், "எனது மனைவி மற்றும் டாக்டர் மால்வன்கரின் மருத்துவத் திறமைகள்தான் இந்த அழிந்துகொண்டிருந்த சுடரை வெற்றிகரமாக மீண்டும் ஒளிபெறச்செய்தது. நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் மட்டுமே என் பணியை முடிக்க எனக்கு உதவினார்கள்."
இது டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கையில் மாயிசாகேப் வகித்த முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
(மேற்கோள்கள்: டாக்டர் அம்பேத்கரன்ச்ய சஹவாசத்- டாக்டர் சவிதா பீம்ராவ் அம்பேத்கர் மற்றும் டாக்டர் மாயிசாகேப் அம்பேத்கரன்ச்ய சஹவாசத்- வைஷாலி பலேராவ்)
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












