கொல்கத்தாவின் ‘அபாயகர’ பேட்ஸ்மேன் ஷர்துல் தாக்கூர் – வருண் சுழலுக்கு இரையான பெங்களூரு அணி

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை ருசித்துள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா, பெங்களூருவுக்கு எதிரான போட்டியில், ஷர்துல் தாக்கூர் 29 பந்துகளில் 68 ரன்களை எடுத்ததோடு, ஒரு விக்கெட்டையும் எடுத்து கேம் சேஞ்சராக பிரகாசித்தார். பேட்டிங்கில் அவர் காட்டிய அதே வீரியத்தை பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், இளம் வீரரான சுயாஷ் ஷர்மா ஆகியோர் காட்டினார்கள்.

அவர்களது அதிரடிக்கு நடுவில் சிக்கிய பெங்களூரு அணி 18வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்களோடு சுருண்டது.

கொல்கத்தா இந்தப் போட்டியில் வெற்றி பெற மிக முக்கியக் காரணமாக இருந்தது ஷர்துல் தாக்கூரின் பேட்டிங். 12வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் என்ற நிலையில் இருந்தது கொல்கத்தா. ஆனால், ஷர்துல் தாக்கூர் தனது அதிவேக அரைசதத்தால் அணியைத் தூக்கி நிறுத்தினார்.

அவர் 29 பந்துகளில் 68 ரன்களை எடுத்து அணியின் ரன் கணக்கை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்தார். அந்தக் கடைசி 8 ஓவர்களில் அவர் காட்டிய அதிரடி அணியை வெற்றிப் பாதைக்கு மீட்டு வந்தது. ஆரம்பத்தில் ரஹ்மானுல்லா குர்பாஸ் நிதானமாக நின்று விளையாடி 44 பந்துகளில் 57 ரன்களை எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து ரன் குவிக்கும் இயந்திரமாகச் செயல்பட்டு கொல்கத்தாவை ஆண்ட்ரே ரஸ்ஸல் காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அவர் டக் அவுட் ஆகவே, அந்த இடத்தை ஷர்துல் கைப்பற்றிக்கொண்டார். ரஸ்ஸல் விக்கெட் வீழ்ந்த பிறகு குழப்பமான நிலையில் இருந்த கொல்கத்தாவை முதல் இன்னிங்ஸில் ஷர்துல் உண்மையாகவே தனது தோளில் தூக்கிச் சுமந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேவேளையில், 12வது ஓவர் வரை கொல்கத்தாவின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைக்க பெங்களூரு முயன்ற அளவுக்கு, அதற்குப் பிறகு முயலவில்லை. இன்னும் சொல்லப்போனால், கொல்கத்தாவின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைப்பதில் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் கோட்டைவிட்டுவிட்டனர்.

கொல்கத்தாவின் சுழலுக்கு இரையான பெங்களூரு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஓர் அற்புதமான சேஸிங்கை செய்த பெங்களூரு, இன்றைய போட்டியில் பந்துவீச்சிலும் சரி சேஸிங்கிலும் சரி அவர்கள் முழுமையாக எதிர்வினையாற்றவில்லை. கொல்கத்தாவின் சிறப்பான பந்துவீச்சுக்கு, விராட் கோலி, டுப்ளெஸ்ஸி, கிளென் மேக்ஸ்வெல் என்று முக்கிய வீரர்கள் வரிசையாக இரையானார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

பெங்களூரு அணிக்காக கோலி, டுப்ளெஸ்ஸி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால், அவர்களது ஆட்டத்தை கொல்கத்தாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் சீக்கிரமே சிதைத்து வெளியேற்றினார்கள். இரண்டாவது இன்னிங்ஸின் 5வது ஓவரிலேயே சுனில் நரேன் தாக்குதலில் சிக்கி கோலி 21 ரன்களில் வெளியேறினார்.

சுனில் நரேனை போலவே, தமிழக சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி ஆர்சிபியின் கேப்டன் டுப்ளெஸ்ஸியை அவுட்டாக்கினார்.

ஆர்சிபியின் மிடில் ஆர்டர் அவ்வளவு பலம் வாய்ந்ததாக இல்லாத காரணத்தால், கோலி, டுப்ளெஸ்ஸி களத்தில் அவுட்டாகாமல் நின்றாக வேண்டிய தேவை அதிகமாகவே இருந்தது. ஆனால், இந்த இரண்டு விக்கெட்டுகளை இழந்ததும், மற்ற விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வரிசையாக விழத் தொடங்கின.

வருண் சக்ரவர்த்தியின் சுழல் பேட்டர்களால் கணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. அவரது சுழல் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல் இருவருமே அவருடைய இரண்டாவது ஓவரில் வெளியேற்றப்பட்டார்கள்.

சுனில் நரேன், வருணுடன் போட்டி போட்டு மேற்கொண்ட சுழல் தாக்குதலை மேற்கொண்டார். அவரது தாக்குதலுக்கு ஷாபாஸ் அகமது அவுட்டானார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 1

ஷர்துல் தாக்கூர் களத்தில் சிறு தவறைக்கூட செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். பேட்டிங்கில் விளாசியவர், பந்துவீச்சிலும் அவரது முதல் ஓவரிலேயே மைக்கேல் பிரேஸ்வெல்லை வெளியேற்றினார். அவர்களைப் போலவே, இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய இளம் வீரரான சுயாஷ் ஷர்மா, ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தை ஆடினார்.

பெங்களூருவுக்காக இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரின் விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்திய 19 வயதான அந்த பவுலர், பெங்களூருவுக்கு மறக்க முடியாத போட்டியைக் கொடுத்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 2

இடியாக இறங்கிய சுயாஷ் பந்துவீச்சு

கொல்கத்தாவின் அடுத்தடுத்த போட்டிகளிலும் சுயாஷ் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரராக இருக்க வாய்ப்புள்ளது என்பதை அந்த வீசிய ஒரு ஓவர் காட்டியது. அதிலும் குறிப்பாக சுழற்பந்துகளை எதிர்கொள்வதில் திறமையானவரான தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்தியது பெங்களூருவுக்கு பெரிய அடியாக இருந்தது.

சுயாஷ் பந்துவீச்சு ஆர்சிபிக்கு இடியாக இறங்கிக் கொண்டிருந்தது. 15வது ஓவரில் கரன் ஷர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தி, ஆர்சிபி 100ஐ தாண்டுவார்களா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் நீண்டநேரம் கழித்து ஆர்சிபிக்காக ஒரு பவுண்டரியை அடித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு, 3

ஆனால், இறுதி விக்கெட்டான ஆகாஷ் தீப் 18வது ஓவரில் வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துக்கு இரையானார். மிக உயரமாக அவர் அடித்த ஷாட்டை வருண் சக்ரவர்த்தியே கேட்சும் பிடித்து பந்துவீச்சு மட்டுமல்ல ஃபீல்டிங்கிலும் தான் சிறப்பான ஃபார்மில் இருப்பதைக் காட்டினார்.

முந்தைய சீசனில் வருண் சக்ரவர்த்தி இருந்த ஃபார்மை விட இப்போது அவர் சிறப்பாக உள்ளார் என்பதை இரண்டாவது இன்னிங்ஸில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நிரூபித்துக்கொண்டே இருந்தார். அவரது பந்துவீச்சு முன்பைவிடப் பல மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அவரது ஃபீல்டிங் வேகமும் முன்னேறியுள்ளது.

அவர் தனது திறன்களை எந்த அளவுக்கு வளர்த்துக்கொண்டுள்ளார் என்பதை இந்தப் போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்தினார்.

கொல்கத்தாவை பொறுத்தவரை, வரிசையாக விக்கெட்டுகளை இழந்தாலும்கூட அவர்கள் தொடர்ச்சியாக ரன் ரேட்டை தக்க வைத்திருந்தார்கள். களத்தில் நின்ற வீரர்கள் தொடர்ச்சியாக பவுண்டரி, சிக்ஸ் என விளாசினார்கள். ஆனால், பெங்களூரு அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ரன் ரேட் மிகவும் மோசமாக இருந்ததோடு விக்கெட்டுகளையும் வரிசையாக இழந்துகொண்டிருந்தார்கள்.

விராட் கோலி, டுப்ளெஸ்ஸி களத்தில் நிற்காதது அந்த அணிக்கு சொதப்பலாக அமைந்தது. பெங்களூருவின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் வலிமையாக இல்லாதது ஒரு காரணம். அவர்களை வீழ்த்தியபோதே கொல்கத்தா வீரர்களிடையே நம்பிக்கை ஒளி பிரகாசமாகிவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேக்ஸ்வெல், பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் என்று விழுந்த விக்கெட்டுகள், பெங்களூரு அணியை மோசமான நிலைக்குத் தள்ளியது.

கொல்கத்தா, 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்து, 205 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு ரன் ரேட் எகிற வாய்ப்பளித்து பெங்களூரு அணி பெரிய தவறிழைத்துவிட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஷர்துல் தாக்கூர் - அபாயகரமான பேட்ஸ்மேன்

கொல்கத்தாவின் பேட்டிங்கில் முதல் பாதியை ரஹ்மானுல்லா குர்பாஸ் கட்டுப்படுத்தி வழிநடத்தினார். அதேபோல், முதல் இன்னிங்ஸில் ரீஸ் டோப்லிக்கு பதிலாக களமிறங்கிய டேவிட் வில்லி தனது முத்திரையைப் பதித்தார். இரண்டாவது ஓவரில் வெங்கடேஷ் ஐயர், மந்தீப் சிங் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார்.

நான்காவதாக களமிறங்கிய நிதிஷ் ராணா, மைக்கேல் பிரெஸ்வெல்லின் முதல் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்று தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். குர்பாஸ் 44 பந்துகளில் 57 ரன்கள் எடுக்காமல் இருந்திருந்தால், கொல்கத்தா மிகவும் அபாயகரமான நிலையில் இருந்திருக்கும்.

ஆனால், அவர் அதிரடியாக விளாசி, ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 21 வயதான குர்பாஸ், களத்தை மிகவும் புத்திசாலித்தனமாகக் கையாண்டார். எதிரணி பவுலர்கள் வீசிய மோசமான பந்துகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்ட அதேவேளையில் சிக்கலான பந்துகலை நிதானமாக நின்று ஆடினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

கொல்கத்தாவின் இன்னிங்ஸ் மோசமடையாமல் இருப்பதை அவர் உறுதி செய்தார். ஆனால், 12வது ஓவரில் கரன் ஷர்மா பந்துவீச்சில், குர்பாஸ், ரஸ்ஸல் ஆகியோர் வெளியேறியபோது கொல்கத்தா அழிவுப் பாதைக்குள் மீண்டும் நுழைந்தது. ஆனால், வெற்றிப் பாதைக்கான கதவை ஷர்துல் திறந்து வைத்தார்.

குர்பாஸ் தூக்கி நிறுத்திய ரன் கணக்கைக் கைவிடுவதற்கு ஷர்துல் தாக்கூர் தயாராக இல்லை. அவர் 2023 ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதத்தை அடித்து, ரிங்கூ சிங்குடன் இணைந்து 7.3 ஓவர்களில் 103 ரன்களை சேர்த்தார். ஷர்துல் தாக்கூர் தனியாக 29 பந்துகளில் 68 ரன்களை விளாசினார். ரிங்கூ மிக நிதானமாக அவுட் ஆகாமல் நின்று ஷர்துல் விளாசுவதற்கான வாய்ப்பை வழங்கி நல்ல கூட்டணியை அமைத்துக் கொடுத்தார். அதைப் பயன்படுத்திக்கொண்ட ஷர்துல் 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் தடம் பதித்தார்.

ஷர்துல் தாக்கூர் கொல்கத்தா அணிக்காக தனது இரண்டாவது போட்டியைத்தான் விளையாடியுள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவர் எவ்வளவு ஆபத்தான ஆல்-ரவுண்டர் என்பதை மற்ற அணிகளுக்குக் காட்டிவிட்டார். அணிக்கு மிகவும் தேவையான தருணத்தில் தனது அதிரடியைக் காட்டி கொல்கத்தாவுக்கு இந்த ஐபிஎல் தொடரின் முதல் வெற்றியை ருசிக்கக் கொடுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: