கால்மேல் கால் போட்டு அமர்வது ஆண்மைக்குறைவை ஏற்படுத்துமா? ஆய்வு கூறுவது என்ன?

கால் மேல் கால் போட்டு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஆடம் டெய்லர்
    • பதவி, பிபிசி

நன்கு வசதியாக அமர்ந்துள்ளீர்களா? ஒரு நிமிடம்... நீங்கள் அமர்ந்திருக்கும் முறையை மாற்றாமல் உங்கள் கால்கள் எப்படி இருக்கின்றன என்று கவனியுங்கள். குறுக்குமறுக்காக கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளீர்களா?

62 சதவிகித மக்கள் இடமிருந்து வலமாகவும், 26 சதவிகித மக்கள் வலமிருந்து இடமாகவும், 12 சதவிகித மக்கள் எந்தவித தேர்வும் இல்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்கின்றனர்.

இப்படி கால் மேல் கால் போட்டு அமர்வது நம்முடைய உடல்நலத்தை பாதிக்குமா?

இது குறித்து ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

கால் மேல் கால் போட்டு அமர்வது இடுப்பு எலும்புகள் இடம்பெயர்தலை அதிகரிக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும், கீழ்ப்பகுதியில் உள்ள ரத்தக்குழாய்களில் ரத்த ஓட்ட வேகத்திலும் இது மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த உறைவு ஏற்படும் அபாயம் அதிகம்.

கால் மேல் கால் போட்டு அமரும் போது ரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. இதைச் சமாளிக்க இதயமும் கூடுதலாக வேலை செய்ய வேண்டும்.

எனவேதான் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது உங்கள் கால்கள் தரையில் இருக்க வேண்டும்.

உடலில் ஏற்படுத்தும் தாக்கம்

நீண்ட நேரத்திற்கு கால் மேல் கால் போட்டு அமரும் போது தசைகளின் நீளம் மற்றும் இடுப்பு எலும்புகளின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படும்.

கூடுதலாக, முதுகு எலும்பு மற்றும் தோள்பட்டையின் அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

உடலின் ஒரு பகுதி மற்ற பகுதியைவிட பலவீனமாக இருப்பதால் கழுத்து எலும்புகளும் பாதிக்கப்படலாம்.

கழுத்து எலும்புகளில் ஏற்படும் இந்த மாற்றம் தலையின் நிலை மாறுவதற்கும் வழிவகுக்கலாம்.

கால் மேல் கால் போட்டு அமர்தல்

பட மூலாதாரம், Getty Images

பெரும்பாலும், தவறான தோரணையில் அமர்வதால் ஏற்படும் இடுப்பு மற்றும் கீழ் முதுகு தசையின் சமநிலையின்மை, கால் மேல் கால் போட்டு அமரும்போதும் ஏற்படலாம்.

நீண்ட நேரம் கால்மேல் கால் போட்டு அமர்வது ஸ்கோலியோசிஸ் குறைபாட்டை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது. ஸ்கோலியோசிஸ் என்பது வழக்கத்திற்கு மாறாக முதுகெலும்புகளின் அமைப்பில் ஏற்படும் மாற்றமாகும்.

கூடுதலாக, இது ட்ரோசென்டெரிக் நோய் நிலையையும் ஏற்படுத்துகிறது. ட்ரோசென்டெரிக் என்பது இடுப்பு மற்றும் தொடையின் வெளிப்புற பகுதிகளை அதிகம் பாதிக்கக் கூடிய நோய்.

கால் மேல் கால் போட்டு அமர்வது கீழ் காலில் உள்ள ஃபைபுலர் நரம்பில் சுருக்கம் மற்றும் காயம் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளது என்று ஓர் ஆராய்ச்சி கூறுகிறது.

இந்தச் சுருக்கம் சில நேரங்களில் கால்விரலை உயர்த்த அல்லது நடக்க முயற்சிக்கையில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஆனால், பெரும்பாலான தருணங்களில் இது குறுகிய கால பாதிப்பாகவே இருக்கும். சில நிமிடங்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு கால் திரும்பிவிடும்.

அதேபோல, கால் மேல் கால் போட்டு அமர்வது விந்து உற்பத்தியை பாதிப்பதாகவும் சில சான்றுகள் உள்ளன. ஏனெனில் விதைப்பையின் வெப்பநிலை உடலின் வெப்பநிலையில் இருந்து 2 முதல் 6 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வேண்டும்.

உட்கார்ந்திருப்பது விதைப்பையின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கிறது. கால் மேல் கால் போட்டு அமர்வது வெப்பநிலையை 3.5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

விதைப்பையில் வெப்பநிலை அதிகரிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பலன்கள்

அதே நேரத்தில் கால் மேல் கால் போட்டு அமர்வது சிலருக்கு பலனைத் தரும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

உதாரணமாக, 2016ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஓர் ஆய்வில் ஒரு கால் மட்டும் நீளமாகக் கொண்டவர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வது, இடுப்பு எலும்பின் இரு பகுதிகளையும் சீராக்க உதவுவது தெரியவந்தது.

மேலும், கால் மேல் கால் போட்டு அமரும் போது சில தசைகளின் செயல்பாடுகள் குறைவதால் இது முக்கிய தசைகளைத் தளர்த்தவும் உதவும்.

அதேபோல, கால் மேல் கால் போட்டு அமர்வது சாக்ரோலியாக் என்ற இடுப்பில் காணப்படும் முக்கோண வடிவ மூட்டின் உறுதித்தன்மையை மேம்படுத்துவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

யோகா

பட மூலாதாரம், Getty Images

சில யோகா மற்றும் தியானங்களிலும் நாம் கால் மேல் கால் போட்டு அமர்கிறோம்.

நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்வதால் ஏற்படும் பிரச்னை யோகா செய்யும் போதும் ஏற்படுமா என்பது குறித்து நிறைய தரவுகள் இல்லை.

ஏனெனில், ஏற்கனவே மூட்டு வலி உள்ளவர்களுக்கும் யோகா நல்ல பலன்களையே தருகிறது.

அப்படியெனில் கால் மேல் கால் போட்டு அமரலாமா, கூடாதா என்ற சந்தேகம் உங்களுக்குள் எழலாம்.

உங்களால் முடிந்தவரை கால் மேல் கால் போட்டு அமர்வதைத் தவிர்த்துவிடுவது நல்லது.

கால் மேல் கால் போட்டு அமர்வதால் ஏற்படும் பிரச்னைகள் உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமனோடு் தொடர்புடையதாக உள்ளன.

எனவே நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் அமர்வதைத் தவிர்ப்பதும், தொடர்ந்து சுறுசுறுப்புடன் இருப்பதுமே நல்லது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: