பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்புக்கடிக்கான சிகிச்சைமுறைகள் என்ன?
இந்தக் கேள்விகள் நம்மில் பலருக்கும் பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்பட்டிருக்கும். பாம்புகள் என்றதும் நமக்குள் கலவையான உணர்வுகள் எழுவதுண்டு. இருப்பினும் பாம்புக்கடியை நாம் இன்னும் எச்சரிக்கையின்மையுடனே அணுகுகிறோம். இது எந்த அளவுக்குச் சரி?
பாம்புக்கடியால் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது.
2017ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலைப்படுத்தியுள்ளது.
இதற்குச் சில முக்கியமான காரணங்கள் உண்டு. பாம்புக்கடி உயிரிழப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, நஞ்சுமுறி மருந்துகளின் பற்றாக்குறை என பாம்புக்கடி விவகாரத்தில் இதுபோன்று பல சவால்கள் உண்டு.
இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்?
ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் 50 லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட 27 லட்சம் பேர் நச்சுப்பாம்புகளின் கடியால் பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஒவ்வோர் ஆண்டும் 81,000 முதல் 1,38,000 பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாகப் பல்வேறு அறிக்கைகள் மூலமாகத் தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை. ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையைத் தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குக் கிடைப்பது இல்லை.
இந்தியாவில் 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் உயிரிழந்திருப்பதாக 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வோர் ஆண்டும் 58,000 உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகின்றன.
இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகள்
பாம்புகள் மற்றும் பாம்புக்கடி தொடர்பாக இந்தியாவில் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடவுள் வழிபாடு

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக இந்தியாவில் உள்ள சில சமூகங்கள் பாம்புகளைக் கடவுளாக வழிபடுகிறார்கள். தங்கள் விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கு கடவுள் பாம்புகளை அனுப்பி வைத்துள்ளதாக பழங்குடி சமூகங்கள் நம்புகின்றன.
மேலும், பாம்புகள் தொடர்பாக இந்தச் சமூகங்கள் மத்தியில் நிலவும் சில நம்பிக்கைகள் பாம்புக்கடி உயிரிழப்புகள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருப்பதாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் ராஹு கஜ்பியே தெரிவிக்கிறார்.
பாம்புகள் பழிவாங்குமா?
பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களைத் தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டது உண்டு. இதுவொரு மோசமான கட்டுக்கதை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியமாக ஒருவர் ஒரு நாகப்பாம்பை அடித்துக் கொன்றுவிட்டால் அந்தப் பாம்பின் துணை அடித்துக் கொன்றவரைத் தேடி வந்து பழிவாங்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இது மோசமான கட்டுக்கதை என்கிறார் கஜ்பி. இதுபோன்ற சில மூட நம்பிக்கைகளும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகளும் இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் கடைபிடிக்கப்படுகின்றன.
கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல்
இந்தியாவின் சில இடங்களில் பாம்பு கடித்தால் மருத்துவர்களைப் பார்க்காமல் மந்திரவாதிகளைப் பார்ப்பதுண்டு.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அது மட்டுமின்றி முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது, நிறுவப்படாத மூலிகைகளைப் பயன்படுத்துவது போன்ற பழக்கங்களும் பரவலாக உண்டு.
பாம்பு கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுப்பதைப் போல் பல திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் நிச்சயமாக அப்பட்சி செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70% நஞ்சற்ற பாம்புகள், 30% நஞ்சுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாம்பு கடித்த உடனே அருகிலுள்ள மருத்துவனைக்குச் செல்ல வேண்டும்.
மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக்கூடாது.
பாம்புக்கடிக்கு உள்ளானவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்குப் போகக்கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்திலோ பாதுகாப்பாகப் போகவேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள், இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதைக் கண்டிப்பாக அகற்ற வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
காயங்களைக் கழுவுதல், கீறி விடுதல், துணியை வைத்து இறுக்கமாகக் கட்டுதல், ஏதேனும் மூலிகைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதால் ஏற்படும் நன்மைகளைவிட தீமைகள்தான் அதிகம்.
குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்குச் செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவில் போதுமான நஞ்சுமுறி மருந்துகள் உள்ளனவா?
முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்வதைப் போல் பாம்பின் நஞ்சை முறிப்பதற்கும் அதன் நஞ்சுதான் பயன்படுத்தப்படுகிறது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் நஞ்சை வைத்துதான் நஞ்சுமுறி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
1895ஆம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பின் நஞ்சுக்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் நஞ்சுமுறி மருந்தை உருவாக்கினார்.
ஆனால், இந்தியாவில் நஞ்சுமுறி மருந்துகளைப் பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், நஞ்சுமுறி மருந்துகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு போவதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார்.
இதுமட்டும் அல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்கவேண்டும் என்பது போன்ற விஷயங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கியமான நான்கு பாம்புகள்
நீங்கள் பார்க்கும் அனைத்துப் பாம்புகளுக்கும் மனிதர்களைக் காவு வாங்கும் அளவுக்கு வீரியமிக்க நஞ்சு இருக்காது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு வகைகள் உள்ளன. அதில் 60 வகையான பாம்புகள் தான் நஞ்சுள்ளவை. அதில் குறிப்பாக நான்கு பாம்புகள்தான் பெரும்பாலான பாதிப்புகளுக்குக் காரணம்.
கண்ணாடி விரியன்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும்.
கட்டு விரியன்

பட மூலாதாரம், Getty Images
அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்தப் பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாகத் தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம்.
இந்திய நாகம்
நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளைக் கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள், விவசாய நிலங்களில் இது பொதுவாகக் காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதைப் பார்க்க முடியும்.
சுருட்டை விரியன்

பட மூலாதாரம், Getty Images
இறுதியாக சுருட்டை விரியன். இதன் அளவு சிறியதாக இருந்தாலும் தாக்கும் திறன் மிகவும் அபாயகரமானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனால், இதன் நஞ்சு மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பாம்பு கடித்த உடனேயே பதற்றப்படாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்தில் பாம்புகளின் அழிவைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












