அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்த வருண் சக்ரவர்த்தி: திணறிய பெங்களூரு - கொல்கத்தா அசாத்திய வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, டுப்ளெஸ்ஸி விக்கெட்டை வீழ்த்தியதைக் கொண்டாடும் வருண் சக்ரவர்த்தி

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், கொல்கத்தாவும் பெங்களூருவும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஆனால், பெங்களூரு அணி 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு அணியிலிருந்து இன்றைய போட்டியின் முதல் ஓவரை வீச வந்த முகமது சிராஜ் 9 ரன்களை கொடுத்தார். கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினார்கள். சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே கொல்கத்தாவின் பவுண்டரிக்கான கணக்கையும் குர்பாஸ் தொடக்கி வைத்தார்.

பவர் பிளேவின்போது சிறப்பான ஷாட்களை அடிப்பதுதான் குர்பாஸின் வலிமை. அதைக் கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தார். முகமது சிராஜின் பந்துவீச்சை குர்பாஸ் சாமர்த்தியமாகப் பயன்படுத்தினார். அவரது பந்துவீச்சில் ஃபீல்டிங் பகுதிக்கு நடுவே கிடைத்த இடைவெளியில் இரண்டு பவுண்டரிகளை அடித்தார்.

அதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, மூன்றாவது ஓவரில் வைட், நோபால் ஆகியவற்றை சிராஜ் வீசினார். இரண்டாவது ஓவரை வீசிய டேவிட் வில்லி, மூன்று ரன்களை மட்டுமே கொடுத்து, ரன் கணக்கைக் கட்டுப்படுத்த முயன்றார். அதைத் தொடர்ந்து நான்காவது ஓவரை வீச வந்தவர், இரண்டாவது பந்திலேயே வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை கிளீன் போல்ட் செய்து எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய மந்தீப் சிங்கையும் அடுத்த பந்திலேயே அவுட்டாக்கினார் டேவிட் வில்லி. கொல்கத்தா பவர் பிளேவின் நான்காவது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. நான்காவது ஓவர் முடிவில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை எடுத்திருந்தது.

ஒரு பக்கம் விக்கெட் அடுத்தடுத்து விழுந்தாலும் ரஹ்மானுல்லா குர்பாஸ் தனது ரன் குவிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தார். ஐந்தாவது ஓவரில் ஆகாஷ் தீப் வீசிய நோ பாலில் கொல்கத்தாவுக்கான சிக்ஸர் கணக்கையும் அவரே திறந்துவைத்தார். ஆகாஷ் தீப் வீசிய ஷார்ட் பாலில் க்ரீஸ் லைனுக்கு வெளியே இறங்கி வந்து மிக அழகான சிக்ஸ் ஒன்றை அடித்துக் காட்டினார் குர்பாஸ்.

முந்தைய ஓவரில் ரன் ஏதும் குவிக்கவிடாமல் டேவிட் வில்லி தடுத்தார். ஆனால், அதற்கும் சேர்த்து ஆகாஷ் தீப் வீசிய அடுத்த ஓவரிலேயே நோ பாலில் ஒரு சிக்ஸ், லெக் பையில் ஒரு பவுண்டரி என்பதோடு சேர்த்து குர்பாஸ் தீப்பின் பந்துகளை வெளுத்து வாங்கினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, ரஹ்மானுல்லா குர்பாஸ் அரை சதம் அடித்தபோது

கொல்கத்தா அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி விருந்தளித்த கரண் ஷர்மா

ஐந்தாவது ஓவரில் ஆகாஷ் தீப் நோபால், வைட், லெக் பை ஆகியவற்றோடு சேர்த்து 15 ரன்களை கொடுத்துவிட்டார். அவரைத் தொடர்ந்து ஆறாவது ஓவரை வீசிய டேவிட் வில்லி 6 ரன்களை கொடுத்தார். பவர் பிளே இறுதியில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை எடுத்திருந்தது.

ஏழாவது ஓவரின் முதல் பந்திலேயே நிதிஷ் ராணா கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர் பிளே முடிந்து முதல் பந்திலேயே மைக்கேல் பிரேஸ்வெல் முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.

முந்தைய ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்கான மொத்த ரன்களில் பாதியை நிதிஷ் ராணாவும் ஆண்ட்ரே ரஸ்ஸலுமே அடித்திருந்தனர். ஆனால், இன்றைய போட்டியில் நிதிஷ் இன்னும் சற்று நிதானமாக விளையாடியிருக்கலாம். கொல்கத்தாவின் பேட்டிங் சிக்கல் பவர் பிளேவுக்கு பிறகும் தொடர்ந்தது.

இருப்பினும் குர்பாஸ் விடுவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து விளாசிக்கொண்டே இருந்தவர், 3 சிக்சர், 6 பவுண்டரிகளை அடித்து 44 பந்துகளில் 57 ரன்களை அடித்தார். ஆனால், அவரது விளாசலை எப்படியாவது தடுத்தாக வேண்டுமென்று போராடிய பெங்களூரு அணிக்கு, 12வது ஓவரை வீசிய கரன் ஷர்மா விருந்தளித்தார்.

அவரது பந்துவீச்சில், குர்பாஸ் ஆகாஷ் தீப் கைகளுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதோடு கரண் ஷர்மாவின் விருந்து நிற்கவில்லை.

ஷர்துல் தாக்கூர்

பட மூலாதாரம், BCCI/IPL

படக்குறிப்பு, ஷர்துல் தாக்கூர்

அந்த ஓவரிலேயே லெக் ஸ்பின்னரான கரன் ஷர்மா மிக அபாயகரமான விக்கெட்டாக கருதப்பட்ட ஆண்ட்ரே ரஸ்ஸலையும் பூஜ்ஜிய ரன்களிலேயே கோலி கைக்கு கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றி கொல்கத்தாவுக்கு அதிர்ச்சியையும் பெங்களூருவுக்கு ஆனந்தத்தையும் ஒருசேர வழங்கினார்.

12 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா 5 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை எடுத்திருந்தது. இருப்பினும், அடுத்த ஓவரை வீசிய வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் 19 ரன்களை வாரி வழங்கி, கொல்கத்தா அணி 100 ரன்களை கடக்க உதவினார். இன்னொருபுறம், ஷர்துல் தாக்கூர் நான்கு பவுண்டரிகளை விளாசி 11 பந்துகளில் 28 ரன்களை எடுத்து களத்தில் நின்றுகொண்டிருந்தார்.

ஷர்துல் தாக்கூர் ஃபீல்டிங்கை பற்றி கவலையே கொள்ளாமல் பந்துகளை பவுண்டரிக்கு தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார். 15வது ஓவரில் பிரமாண்டமாக இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார். இன்றைய போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸல்தான் ஆட்டத்தின் திசையை மாற்றுவார் என்று கருதப்பட்டது. வெறும் 14 பந்துகளிலேயே 41 ரன்களை குவித்திருந்தார் ஷர்துல். 10 ஓவர் முடிவில் 100 ரன்களையே தாண்டாமல் இருந்த கொல்கத்தா 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்திருந்தது. இதில் ஷர்துல் தாக்கூருக்கு மிக முக்கியப் பங்குண்டு.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

ஷர்துல் தாக்கூர் - ரிங்கூ சிங் அதிரடி

ஈடன் கார்டனில் இருந்த ஒவ்வொரு கொல்கத்தா ரசிகரையும் குதூகலிக்க வைத்துக்கொண்டிருட்ந்தார் ஷர்துல் தாக்கூர். ரிங்கூ சிங்கும் தனது பங்குக்கு பவுண்டரி கணக்கை 16வது ஓவரில் தொடங்கினார். 90 ரன்களிலேயே 5வது விக்கெட்டை இழந்துவிட்ட நிலையில், கொல்கத்தா எந்தளவுக்கு இலக்கு நிர்ணயிக்கும் என்ற சந்தேகம் எழுந்தது. பெரியளவிலான ஆட்டம் வெளிப்படாது என்று கருதப்பட்டது.

ஆனால், ஷர்துல் தாக்கூர், ரிங்கூ சிங் இருவரது கூட்டணியும் கொல்கத்தாவுக்கு பெரிய நம்பிக்கையாக விளங்கத் தொடங்கினார்கள். ரிங்கூ நிதானித்து நின்று ஷர்துல் விளாசுவதற்கான வாய்ப்பை வழங்கவே, ஷர்துல் சிக்ஸ், ஃபோர் என்று விளாசிக்கொண்டிருந்தார்.

வெறும் 20 பந்துகளில் 51 ரன்களை எடுத்து தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்து களத்தில் நின்றுகொண்டிருந்தார் ஷர்துல். ஐபிஎல் தொடரில் அவரது முதல் அரைசதம். அதுவும் அதிவேக அரைசதம். ஜாஸ் பட்லருக்கு அடுத்தபடியாக அதிவேக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளார். இத்தகைய பங்களிப்புகள் கொல்கத்தாவுக்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து சிக்ஸ், ஃபோர் என வெளுத்துக்கொண்டிருந்தார். ஆட்டத்தின் ஒவ்வொரு பந்து, ஒவ்வொரு ஓவர் முடியும்போதும் அவரைத் தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறிக்கொண்டிருந்தது. ஷர்துல், ரிங்கூ இருவரது கூட்டணியும் வலிமையாக இருந்தது.

ரிங்கூ சிங்

பட மூலாதாரம், BCCI/IPL

ஷர்துல் ஒவ்வொரு ஷாட்டிலும் தனது வலிமையான ஆட்டத்தை மட்டுமின்றி மிட் ஆன் பக்கமாக வீசப்படும் பந்தைக் கணக்கிட்டு அடித்து, தனது சாதுர்யமான ஆட்டத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ரிங்கூ தனது ஆட்டத்தை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தாமல், ஷர்துல் இறங்கி அடிக்க வாய்ப்பளித்து அவுட்டாகாமல் நின்றுகொண்டிருந்தார்.

அதேவேளையில், தனக்குக் கிடைத்த வாய்ப்பிலும் 18வது ஓவரில் பின்புறமாக விக்கெட் கீப்பர் தலைக்கும் மேலாக சாதுர்யமான சிக்ஸ் ஒன்றை அடித்தார். ரிங்கூவை நோக்கி வந்த வேகப்பந்தை மென்மையாகத் தொட்டு பின்புறத்தில் மேல்நோக்கித் தொட்டுக் கொடுத்தார். பந்து மிக அழகாக பவுண்டரியை நோக்கிப் பறந்தது.

நீண்ட நேரமாக கூட்டணியில் நிற்கும் வீரர்களை அடிக்க விட்டு நிதானமாக நின்றுகொண்டிருந்த ரிங்கூ, 100 மீட்டருக்கும் மேலான தொலைவுக்கு அட்டகாசமான சிக்ஸ் ஒன்றை அடித்தார். ஹர்ஷல் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்ஸ் என்று வெளுத்து வாங்கினார்.

ஆண்ட்ரே ரஸ்ஸல் கேட்சை பிடித்தவுடன் விராட் கோலி நினைத்திருப்பார். ஷர்துல், ரிங்கூ கூட்டணி ஆண்ட்ரே செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்வார்கள் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், 19வது ஓவர் இறுதியில் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ரிங்கூ சிங் அவுட்டாகும் வரை மிக அற்புதமான கூட்டணியை இருவரும் அமைத்திருந்தனர். 19 ஓவர் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை எடுத்திருந்தது. அவரைத் தொடர்ந்து சுனில் நரைன் களமிறங்கினார்.

பத்து ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி வெறும் 79 ரன்களில் இருந்தது. அப்போது யாரும் இவ்வளவு சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று நினைத்திருக்க மாட்டார்கள். ஏனெனில், 12வது ஓவரிலேயே அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆனால், அதையும் தாண்டி மிகச் சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்து, கொல்கத்தா 204 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஈடன் கார்டன் மைதானத்தில் நிர்ணயிக்க உதவினார்கள் ஷர்துல் தாக்கூர், ரிங்கூ சிங்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

பெங்களூரு அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வருண் சக்ரவர்த்தி

கொல்கத்தா அணி, 205 என்ற இமாயல இலக்கை நிர்ணயித்தது. அதை எதிர்த்து தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெஸ்ஸி களமிறங்கினார்கள்.

முதல் ஓவரிலேயே கோலி இரண்டு பவுண்டரி ஷாட்களை அடித்து விளாசினார். ஆனால் இரண்டாவது ஓவரை வீசிய டிம் சௌதீ இரண்டே ரன்களை கொடுத்து இரண்டு ஜாம்பவான்களின் ரன் குவிப்பைத் தடுத்தார்.

இருப்பினும் நான்காவது ஓவரில், கோலி, டுப்ளெஸ்ஸி இருவருமே டிம் சௌதீக்கு பதிலடி கொடுத்தார்கள். அந்த ஒரு ஓவரில் மட்டும் 23 ரன்களை எடுத்தார்கள். ஆர்சிபி ரசிகர்களுக்கு நம்பிக்கை ஒளி தெரிந்தது.

ஆனால், அந்த ஒளியை சுனில் நரைன் நீண்டநேரம் நீடிக்கவிடவில்லை. ஐந்தாவது ஓவரிலேயே பெங்களூரு ரசிகர்களின் ‘கிங்’ கோலியை மிக அழகாக தனது ஸ்பின் வலைக்குள் சிக்க வைத்தார். கோலி அவரது பந்துவீச்சில் தடுமாறியதைப் பயன்படுத்திக் கொண்டார். சுனில் லெக் சைடில் வீசிய பந்தை இறங்கி அடிக்க முயன்று கிரீஸ் லைனை தாண்டி வந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக போல்ட் அவுட்டாகி வெளியேற வேண்டியிருந்தது.

அதற்கு அடுத்த ஓவரிலேயே மீண்டும் ஒரு பெரிய விக்கெட்டான டுப்ளெஸ்ஸியையும் கொல்கத்தா வெளியேற்றி, பெங்களூருவுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்களை எடுத்திருந்தது.

பவர் பிளேவின் இறுதி ஓவரில் டுப்ளெஸ்ஸி விக்கெட்டை வீழ்த்தி வருண் சக்ரவர்த்தி கொல்கத்தா அணிக்குச் சாதகமான நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்தார். விராட் கோலி, மூன்று பவுண்டரி அடித்து 18 பந்துகளில் 21 ரன்களை எடுத்து வெளியேறினார். டுப்ளெஸ்ஸி இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரி அடித்து 12 பந்துகளில் 23 ரன்களோடு வெளியேறினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

பெங்களூரு அணி பவர் பிளே முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 52 ரன்களை எடுத்திருந்தது. பெங்களூருவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுத்துக் கொண்டிருந்தார் வருண் சக்ரவர்த்தி. 8வது ஓவரில் மீண்டுமொரு கிளென் மேக்ஸ்வெல், அர்ஷல் பட்டேல் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அவரது பந்துவீச்சு சாதுர்யமானதாக இருந்தது. ஒரு மிஸ்ட்ரி ஸ்பின்னராக தனது பந்துவீச்சைத் துளியும் கணித்துவிடாதபடி விளையாடிக் கொண்டிருந்தார். 44 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இழக்காமல் நின்றுகொண்டிருந்த பெங்களூரு அணி 54 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலைக்கு இறங்குவதில் வருண் சக்ரவர்த்தி மிக முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.

அவர் வீசிய 8வது ஓவர் முடிவில் ஒரேயொரு ரன் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பெங்களூரு பேட்டர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்பதே புதிராக இருக்கும் அளவுக்கு அவரது பந்துவீச்சு இருந்தது.

முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூர், குர்பாஸ் ஆகிய இரண்டு பேட்டர்கள் கொல்கத்தாவுக்காக அதிரடியாக வெளுத்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகிய இரண்டு பவுலர்கள் அந்த அணிக்காக அட்டகாசமாக பந்துவீசிக் கொண்டிருந்தது.

சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருவரும் ஒவ்வொரு ஓவரையும் தொட்டாலே விக்கெட் என்ற அளவுக்கு பெங்களூருவுக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தார்கள். ஒன்பதாவது ஓவரில் ஷாபாஸ் அகமது விக்கெட்டையும் ஷர்துல் தாக்கூர் கைக்கு கேட்ச் கொடுக்க வைத்து வெளியேற்றினார். பத்து ஓவர் முடிவில் ஆர்சிபி 5 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை எடுத்திருந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

கொல்கத்தாவை தூக்கி நிறுத்திய 'இம்பாக்ட் பிளேயர்' சுயாஷ் ஷர்மா

ஆனால் கொல்கத்தாவும் இதே நிலையில்தான் 10 ஓவர் முடிவில் இருந்தது. ஆனால், அடுத்த பத்து ஓவர்களில் அசுரத்தனமான பேட்டிங்கால் 205 என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. அதேபோல், அந்த இமாலய இலக்கை அடைய பெங்களூரு அணிக்கும் வாய்ப்பு இருக்கலாம்.

ஆனால், பவுலிங்கிலும் கேம் சேஞ்சராக இருந்த ஷர்துல் தாக்கூர் 12வது ஓவரில் மைக்கேல் பிரேஸ்வெல் விக்கெட்டை வீழ்த்தினார். பெங்களூரு அணி தனது இம்பாக்ட் பிளேயராக அனுஜ் ராவத்தை களமிறக்கியது. களத்தில் அவரும் தினேஷ் கார்த்திக்கும் இருந்தனர்.

முந்தைய போட்டியையும் இந்தப் போட்டியையும் ஒப்பிட்டால், ஆர்சிபியின் பேட்டிங் திறனில் மிகப்பெரிய வித்தியாசம் தெரிந்தது. கொல்கத்தா இம்பாக்ட் பிளேயராக களமிறக்கிய சுயாஷ் ஷர்மா வீசிய ஓவரில், பெங்களூரு களமிறக்கிய இம்பாக்ட் பிளேயர் அனுஜ் ராவத் ஒரே ரன்னில் சுனில் நரேன் கைகளுக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். விக்கெட் இழக்காமல் களத்தில் நிற்பதே ஆர்சிபிக்கு பெரும் போராட்டமாக இருந்தது.

கொல்கத்தா அணியை சில வீரர்கள் ஒன்றுகூடி காப்பாற்றியது என்றே சொல்ல வேண்டும். 12வது ஓவர் வரைக்கும் மோசமான நிலையில் இருந்த கொல்கத்தாவை ஷர்துல் தாக்கூர் களமிறங்கி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இன்னிங்ஸின் முதல் பாதியில் மோசமான நிலையில் இருந்த ஓர் அணி, இரண்டாவது பாதியில் அபாரமான இலக்கை நிர்ணயித்தது. இதுவே எதிரணிக்கு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும்.

அதனோடு சேர்த்து, இரண்டாவது இன்னிங்ஸில் வருண் சக்ரவர்த்தி, சுனில் நேரன், இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய சுயாஷ் என்று பவுலர்களும் சரி ஃபீல்டிங்கிலும் சரி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டே இருந்தார்கள். 13 ஓவர் முடிவதற்கும் உள்ளாகவே 7 விக்கெட்டுகளை ஆர்சிபி இழந்திருந்தது. சுயாஷ் தான் வீசிய ஒரே ஓவரில், அனுஜ் தாக்கூர், தினேஷ் கார்த்திக் என இரண்டு விக்கெட்டுகளை எடுத்து முழுமையான தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்தினார்.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

கொல்கத்தாவின் அடுத்தடுத்த போட்டிகளிலும் சுயாஷ் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய வீரராக இருக்க வாய்ப்புள்ளது என்பதை அந்த ஒரு ஓவர் காட்டியது. அதிலும் குறிப்பாக சுழற்பந்துகளை எதிர்கொள்வதில் திறமையானவரான தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்தியது பெங்களூருவுக்கு பெரிய அடியாக இருந்தது.

சுயாஷ் பந்துவீச்சு ஆர்சிபிக்கு இடியாக இறங்கிக் கொண்டிருந்தது. 15வது ஓவரில் கரன் ஷர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தி, ஆர்சிபி 100ஐ தாண்டுவார்களா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தினார். அடுத்து களமிறங்கிய ஆகாஷ் தீப் முதல் இன்னிங்ஸில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பேட்டிங்கில் அவர் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே நீண்டநேரம் கழித்து ஆர்சிபிக்காக ஒரு பவுண்டரியை அடித்தார்.

ஆனால், இறுதி விக்கெட்டான ஆகாஷ் தீப் 18வது ஓவரில் வருண் சக்ரவர்த்தியின் சுழற்பந்துக்கு இரையானார். மிக உயரமாக அவர் அடித்த ஷாட்டை வருண் சக்ரவர்த்தியே கேட்சும் பிடித்து பந்துவீச்சு மட்டுமல்ல ஃபீல்டிங்கிலும் தான் சிறப்பான ஃபார்மில் இருப்பதைக் காட்டினார்.

கொல்கத்தாவை பொறுத்தவரை, வரிசையாக விக்கெட்டுகளை இழந்தாலும்கூட அவர்கள் தொடர்ச்சியாக ரன் ரேட்டை தக்க வைத்திருந்தார்கள். களத்தில் நின்ற வீரர்கள் தொடர்ச்சியாக பவுண்டரி, சிக்ஸ் என விளாசினார்கள். ஆனால், பெங்களூரு அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை ரன் ரேட் மிகவும் மோசமாக இருந்ததோடு சேர்த்து விக்கெட்டுகளையும் வரிசையாக இழந்துகொண்டிருந்தார்கள்.

விராட் கோலி, டுப்ளெஸ்ஸி களத்தில் நிற்காதது அந்த அணிக்கு சொதப்பலாக அமைந்தது. பெங்களூருவின் மிடில் ஆர்டர் பேட்டர்கள் வலிமையாக இல்லாதது ஒரு காரணம். அவர்களை வீழ்த்தியபோதே கொல்கத்தா வீரர்களிடையே நம்பிக்கை ஒளி பிரகாசமாகிவிட்டது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து மேக்ஸ்வெல், பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் என்று விழுந்த விக்கெட்டுகள், பெங்களூரு அணியை மோசமான நிலைக்குத் தள்ளியது.

கொல்கத்தா, 5 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் என்ற நிலையில் இருந்து, 205 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயிக்கும் அளவுக்கு ரன் ரேட் எகிற வாய்ப்பளித்து பெங்களூரு அணி பெரிய தவறிழைத்துவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: