இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த மக்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
நாடு முழுவதும் நாளை காலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்தை கைப்பற்றிய மக்கள்

முன்னதாக இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றினர்.
பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங்.
இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர்.
போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டது இருப்பினும் பாதுகாப்புப் படையினரை மீறி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் உள்ளே நுழைந்தனர்.
முன்னதாக திங்கள்கிழமையன்று பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார் என்றும் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களும் கருத்து தெரிவித்தனர் என்றும் பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பொறுப்பு ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவசர நிலை பிரகடனம்

பிரதமர் அலுவலகம் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்தார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பி மாலத்தீவு சென்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 37.1ன் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் கூறியதாக அபேவர்த்தன கூறியுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.

பிரதமர் அலுவலக வாயிலுக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி பின்னுக்குத் தள்ளியதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த நேரத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக்கு எதிரான முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரண முகக் கவசமே அணிந்திருந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் நடந்த போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லம் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து தலைமறைவான கோட்டாபய புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்று தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி, இன்று காலை போராட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடல் போராட்டக் களத்திலிருந்து பேரணியாக கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் சென்றனர். பிறகு போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர். அப்போது போலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகத்தை நடத்தினர்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.
இந்நிலையில், ரணில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்திருப்பது அவர் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை செயல்படுத்தியதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
காலிமுகத் திடலில் போராட்டக்காரர்கள் கூடியிருக்கும் நிலையில், அங்கே ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வட்டமிட்டது.

நாடுமுழுவதும், அவசர நிலையும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், போராட்டத்தை தாங்கள் கைவிடப்போவதில்லை என்று காலிமுகத் திடலில் உள்ள போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அமைதியாக கூடிப் போராட்டம் நடத்தி வரும் மக்களின் தலைக்கு மேலே ராணுவ ஹெலிகாப்டரை பறக்கவிடுவது, இந்த ஆட்சிக்கு எதிரான அமைதியான போராட்டத்தை இவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது என்று பிபிசியிடம் கூறினார் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விராகா பெரீரா.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












