இலங்கை நெருக்கடி: கோட்டாபய, ரணில் இல்லாவிட்டால் அடுத்தடுத்த வாய்ப்புகள் என்ன?
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அதைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாளிகையில் இருந்து வெளியேறிவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.
கோட்டாபயவின் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனால் அவரால் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ரணில் பிரதமர் பதவியில் இருந்து விலக தயார் என கூறியிருக்கிறார். அப்படியென்றால், நாட்டை தலைமையேற்று நடத்துவதில் யாருக்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளன?
ஏற்கெனவே நிதியில்லாமல், எரிபொருள் தீர்ந்து பெரும் சிக்கலில் இருக்கும் இலங்கையில் அடுத்த என்ன நடக்கப் போகிறது?
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?
கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அவரது அதிகாரபூர்வ மாளிகையில் இல்லை. அவரது அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் அவரால் முழுமையாக இயங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. "இப்போதைக்கு அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பதவி விலகுவதுதான்" என்கிறார் இலங்கை அரசியல் நிபுணர் நிக்சன்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் என்னவாகும்?
இலங்கை அரசியல் சட்டப்படி ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர்தான் தற்காலிக ஜனாதிபதியாக செயல்படுவார். ஆனால் ஒரு மாதத்துக்குள்ளாக நாடாளுமன்றம் கூடி அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் பதவியில் தொடர முடியாது. தற்போதைய சூழலில் ரணில் தற்காலிக அதிபராக வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ரணில் விக்கிரமிங்கவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு கிடைக்குமா?
"வாய்ப்பில்லை" என்கிறார் நிக்சன். நாடாளுமன்றத்தில் அவரது கட்சிக்கு அவர் மட்டும்தான் உறுப்பினர். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அவருக்கு எதிராக களத்தில் இருக்கின்றன. 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்கட்சிகள் கூறுகின்றன.
ரணில் அதிபராக முடியவில்லை என்றால் என்ன நடக்கும்?
அரசியல் சட்டப்படி பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் அதிபராக அறிவிக்கப்படலாம். தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபயவின் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிர்கட்சிகள் ஆதரவளிப்பதற்கான வாய்ப்புக் குறைவு. எனவே அரசியல் சட்டப்படி அவருக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அதிபராகலாம். ஆனால் அதற்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியம்.

எதிர்கட்சிகளின் திட்டம் என்ன?
தங்களுக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் தாங்களே அரசமைக்க முடியும் என்று சஜித் பிரேமதாஸவின் எஸ்ஜேபி, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக அறிவித்திருக்கின்றன. அதிபரும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்பதையும் கோரியிருக்கின்றன. "தங்களில் ஒருவரே அதிபராகவும், பிரதமராகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருக்கலாம்" என்கிறார் நிக்சன்.

பட மூலாதாரம், Getty Images
கோட்டாபய பதவி விலக மறுத்தால் என்னவாகும்?
"இது அரசியல் சிக்கலை ஏற்படுத்தும். அவர் பதவி விலக மறுத்தால் எதுவும் செய்ய இயலாது. அதே நேரத்தில் அவரது இல்லமும் அலுவலகமும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவரால் செயல்படவும் முடியாது." என்கிறார் நிக்சன். ராணுவத்தைக் கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவதற்கான சாத்தியத்தையும் நிக்சன் மறுக்கவில்லை.
அனைத்துக் கட்சி அரசு அமைய வாய்ப்பிருக்கிறதா?
இதுவும் எதிர்கட்சிகளின் கையில்தான் இருக்கிறது. ஏனென்றால் ஏற்கெனவே அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் செல்லவில்லை. தங்கள் தலைமையில்தான் அரசு அமைய வேண்டும் என்பதில் அவை தீவிரமாக இருக்கின்றன.
தேர்தல் அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா?
இப்போது தேர்தல் நடத்துவதற்கு அரசிடம் பணம் இல்லை. அதனால் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இல்லை.
ஜனாதிபதி மாறினால் பொருளாதார நெருக்கடியில் மாற்றம் வருமா?
தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கே அரசியம் பணம் இல்லை. பல மருத்துவமனைகள் இப்போது நன்கொடையை நாடத் தொடங்கிவிட்டன. எரிபொருள் முற்றிலுமாகத் தீரப் போகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை செயல்படவில்லை. அதனால் யார் அதிபராக வந்தாலும் பொருளாதார நிலைமையில் "உடனடியாக மாற்றம் வர வாய்ப்பில்லை" என்று கூறுகிறார் நிக்சன்.
அதே நேரத்தில் அரசியல் நெருக்கடி நீடித்து வந்தால், ஐஎம்எஃப் உள்ளிட்ட நிதி அமைப்புகளிடம் இருந்து கிடைப்பது சிக்கலாகும் என்கிறார் நிக்சன்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














