You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இலங்கைக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும்" - எஸ்.ஜெய்சங்கர்
இந்திய அரசு இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடு என்ற முறையில் அதற்கு உதவ முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்,
மூன்று நாள் பயணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், "நாங்கள் இலங்கைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம். அந்நாட்டுக்கு நாங்கள் உதவ முயற்சிக்கிறோம், அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் நாங்கள் எப்போதும் மிகவும் உதவியாக இருக்கிறோம்," என்று கூறினார்."இப்போது இலங்கையில் அவர்கள் சொந்த பிரச்னைகளை தீர்க்க முற்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்தியாவுக்கு இல்லை," என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
முன்னதாக, இதே விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு தேவையான எல்லா உதவிகளையும் இந்தியா வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
"இலங்கையில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது. கடுமையான நெருக்கடி நிலவும் இந்த தருணத்தில் இலங்கை மற்றும் அதன் மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வெளிப்படுத்துகிறது. இந்த சூழலை இலங்கையர்களால் சமாளிக்க முடியும் என்று நம்புகிறேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.
"தற்போதைய சூழ்நிலையின் சிரமங்களைக் கையாள்வதில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று சோனியா காந்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் போராட்டக்காரர்கள் கொண்டு வந்த பிறகு, அங்கு பதற்றத்தைத் தணிக்க அரசியல் மற்றும் ராணுவ ரீதியிலான முன்னெடுப்புகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. அங்குள்ள இன்றைய நிலவரத்தை இந்த பக்கத்தில் வழங்குகிறோம்.
இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தமது அமைச்சுப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை (10) அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் நாட்டின் மீது கொண்டுள்ள அளப்பரிய நேசத்தை கருத்திற்கொண்டு அமைச்சர் பதவியை ஏற்றதாக கூறியுள்ளார். ஆனால், "பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் நாட்டு மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் இலங்கை ஒரு தீர்வை விரைவாகக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று நான் இப்போது கருதுகிறேன்," என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.
இலங்கையில் அமைச்சர் பொறுப்பு வகித்த ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் ஏற்கெனவே தங்களுடைய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இவர்கள் வரிசையில் நான்காவதாக தம்மிக்க பெரேராவும் பதவி விலகியுள்ளார்.
எல்பிஜி எரிவாயு விநியோகத்துக்கு நடவடிக்கை
இலங்கையில் தீவிரம் அடைந்துள்ள போராட்டங்கள் ஒருபுறமிருக்க அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை தெளிவாகவில்லை. இந்த நிலையில், அவரது செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாட்டுக்கு வருகை தரும் எல்பிஜி தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
அதில், 3,700 மெற்றிக் தொன் எல்பி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு சரக்கு கப்பல் இன்று பிற்பகலில் வரவுள்ளது. அது வந்தவுடன் எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், 3,740 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவின் இரண்டாவது தொகுதி நாளை (ஜூலை 11) நாட்டிற்கு வரவுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது கப்பல் பிற்பகல் பிற்பகல் 3 மணியளவில் கெரவலப்பிட்டியை வந்தடைந்ததன் பின்னர் சிலிண்டர்களை இறக்கி விநியோக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, 3,200 மெட்ரிக் டன் எல்பி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு மூன்றாவது சரக்கு கப்பல் ஜூலை 15 ஆம் தேதி நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த மாதத்துக்காக மட்டும் 33,000 மெட்ரிக் டன் அளவுக்கு சிலிண்டர்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைத் தளபதி வேண்டுகோள்
தற்போதைய அரசியல் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாகவும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் இலங்கை பாதுகாப்புப் படை தலைமைத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவல்பூர்வ மாளிகையை சனிக்கிழமை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றிய பிறகு, பிரதமர் ரணிலின் தனிப்பட்ட வீட்டுக்கும் ஒரு கும்பல் தீ வைத்தது. இந்த சம்பவத்தால் கொழும்பு நகரில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை செய்தித்தொடர்பாளர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கூறியுள்ளார். அந்த சந்தேக நபர்களின் விவரம் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, இலங்கை எண்ணெய் கழகம், நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எண்ணெய் விநியோகத்தை மீண்டும் தொடங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இந்தப் பணிக்காக திருகோணமலையில் உள்ள முனையம் 24 மணி நேரமும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை எண்ணெய் கழகம் கூறியுள்ளது.
சனிக்கிழமை நிகழ்வுகளுக்குப் பின்னர், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கையில் விரைந்து செயற்படுமாறு இலங்கை தலைமையிடம் அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
காங்கிரஸ் அறிக்கை
இலங்கையின் நெருக்கடி சூழல் குறித்து காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இந்த நெருக்கடியான தருணத்தில் காங்கிரஸ் கட்சி இலங்கை மக்களுடன் துணை நிற்கிறது. இலங்கை மக்கள் இந்த சூழலை கடந்து வருவர் என காங்கிரஸ் நம்புகிறது. இந்தியா தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை மேற்கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அளவில் போலீஸ் கண்காணிப்பு
முக்கிய சாலை சந்திப்புகளில் சனிக்கிழமை காலையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் பெரும்பகுதியினர் தங்களுடைய முகாம்களுக்கும் நிலையங்களுக்கும் திரும்பியிருக்கின்றனர். வெகு சிலரே வழக்கமான போலீஸ் பாதுகாப்புப் பணியை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மாளிகையை சனிக்கிழமை பிற்பகலில் முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை, மேலும் முன்னேறாமல் தடுக்கும் நடவடிக்கையில் அதிரடிப்படையினர் ஈடுபட்ட காணொளி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அதில் மாளிகையின் மதில் சுவருக்கு வெளியே போராட்டக்காரர்கள் குழுமியிருக்க அவர்களை நோக்கி மாளிகைக்குள் நின்றிருந்த அதிரடிப்படையினர் இயந்திரத் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் காணொளியில் உள்ளன.
ஆனால், இடைவிடாது நடந்த துப்பாக்கி சூடுக்குப் பிறகும் போராட்டம் தணியாததால் காவல்துறையினர் ஒரு கட்டத்தில் மெல்ல, மெல்ல பின்வாங்கத் தொடங்கினார்கள். இதன் பிறகே போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை நுழைவாயில் கேட் மீது ஏறிக் குதித்து கதவைத் திறந்து நுழைந்தது தெரிய வந்துள்ளது.நாட்டின் பொருளாதார நிர்வாகம் சீர்கேடு அடைந்ததாகக் கூறி கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்ற போராட்டங்கள் சனிக்கிழமை உச்சத்தைத் தொட்டது. ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் ரணிலும் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற குரலை ஒலித்தபடி பொதுமக்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13ஆம் தேதி விலகுகிறார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். "அமைதியான வழியில் அதிகார பரிமாற்றம் நடைபெற அவர் உறுதி அளித்துள்ளார்" என்று சபாநாயகர் கூறியுள்ளார். ஆனால், இந்த தகவலை கோட்டாபய தரப்பு பொதுவெளியில் இதுவரை நேரடியாக உறுதிப்படுத்தவில்லை.
போராட்டத்தைக் கைவிட மறுக்கும் மக்கள்இதற்கிடையே, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவார் என்ற அறிவிப்பு கொழும்பு நகர வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. அவர்கள் பல இடங்களில் பாட்டுப்பாடியும் நடனமாடியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், தங்களுடைய போராட்டங்களை கைவிட அவர்கள் தயாராக இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்