You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை ஜனாதிபதி மாளிகை வசதிகளை அனுபவிக்கும் போராட்டக்காரர்கள் - பிபிசி தமிழின் கள அனுபவம்
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வரும் மாளிகையின் வாழ்வை ஒரு சில நிமிடங்கள் அனுபவிக்க கிடைத்த வாய்ப்பை போராட்டக்காரர்கள் சனிக்கிழமை மாலையில் இருந்து தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாளிகையை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் இரவை அங்கே கழித்தனர்.
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து ஒவ்வொரு பிரிவாக போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் ஒவ்வொரு அறையையும் சுற்றால தலம் போல சுற்றிப்பார்த்து வருகின்றனர்.
அங்குள்ள கள நிலவரத்தை பிபிசி தமிழுக்காக செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் நேரில் பார்வையிட்டு வழங்கிய சிறப்புத் தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக போராட்டக்காரர்களால் நாட்டின் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு அதனுள்ளே போராட்டக்குழுவினர் நுழைந்துள்ளனர். அது மட்டுமின்றி பலத்த பாதுகாப்பு நிறைந்த அந்த மாளிகையின் கிட்டத்தட்ட எல்லா அறைகளிலும் போராட்டக்காரர்கள் நிரம்பியுள்ளனர். ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், இன்றும் (ஜூலை 10) அங்கேயே உள்ளனர்.
முதன் முறையாக அந்த மாளிகைக்குள் நுழைவு வாயில் மீது ஏறிக் குதித்துச் சென்றவர் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்பதை அறிய முடிந்தது. அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றவர்கள், அங்குள்ள பொருட்களை தொட்டுப் பார்த்தனர்.
ஆரம்பத்தில் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தத் தொடங்கினார்கள்.
தற்போது கொழும்பில் நடைபெறும் போராட்டங்களை உள்ளூர் பெளத்த பிக்குகள், கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மத பெரியவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் போன்றோரே செல்வாக்குடன் கட்டுப்படுத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் ஜனாதிபதி மாளிகையில் பொருட்களை சேதப்படுத்தியவர்களை கண்டித்ததுடன் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் உள்ள பொருட்களை பாருங்கள், ரசியுங்கள் - பிறகு வெளியே சென்று விட்டு இந்த வாய்ப்பை அனுபவிக்க மற்றவர்களுக்கும் வாய்ப்பளியுங்கள் என்று மத பெரியவர்கள் அறிவுறுத்தினர்.
இதன் பின்னர், போராட்டக்காரர்கள் பலரும் மாளிகையின் ஒவ்வொரு அறையாக சென்றனர். அங்குள்ள சமையலறைக்கு சென்ற குழுவினர் அங்கு முன்தினம் சமைக்கப்பட்டு மீதமிருந்த உணவு வகைகளை சாப்பிட்டனர். சிலர் குளிரூட்டியில் இருந்த ஜூஸ், மதுபான வகைகளை எடுத்துப் பருகினர்.
வேறு சிலரோ, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தாரால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கழிவறையை பார்வையிட்டனர். அந்த அறையும் குளிர்சாதன வசதியுடன் இருந்ததைப் பார்த்த போராட்டக்காரர்கள் ஆச்சரியத்தில் அதனுள்ளே சென்று பார்ததனர். சிலர் கழிவறைக்குள் சிறுநீர் கழித்து விட்டு வந்தனர். அருகே இருந்த குளியலறையே மிகப்பெரிய அறை போல இருந்ததை பார்த்து மக்கள் வியந்தனர்.
இதேவேளை, வேறு சில போராட்டக்குழுவினர் ஜனாதிபதி பயன்படுத்தியதாக நம்பப்படும் அறைக்குள் சென்று அங்கிருந்த அலமாரிகளை திறந்தனர். அதனுள் இருந்த கோட் சூட் ஆடைகளை அணிந்து படம் எடுத்துக் கொண்டனர்.
ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் மிகப்பெரிய அறையில் உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. அந்த அறைக்குள் சென்ற சிலர், அங்கிருந்த கருவிகளை இயக்கி உடற்பயிற்சி செய்தனர்.
மற்றொரு அறையில் இருந்த சொகுசு மெத்தை படுக்கையில் குதித்தும் படுத்தும் ஆனந்தத்தில் சிலர் குரல் எழுப்பினர். இப்படியாக ஒவ்வொருவரும் அந்த படுக்கை மீது படுத்து உருண்டு புரண்டு சில நிமிடங்களுக்கு ஜனாதிபதி வாழ்ந்த வாழ்வை ரசித்து விட்டு வெளியே சென்றனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு பக்கவாட்டில் மிகப்பெரிய நீச்சல் குளம் உள்ளது. இந்த நீச்சல் குளத்தை பிரத்யேகமாக ஜனாதிபதியும் அவரது குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர்.
அந்த நீச்சல் குளத்தைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க, ஒரு சிலர் அதனுள் ஆர்வ மிகுதியில் குதித்து நீச்சலடித்துக் குளித்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகைக்குள் கட்டுக்கடங்காமல் பெருங்கூட்டம் வரத் தொடங்கியது. இதையடுத்து போராட்டக்காரர்களை ஒழுங்குபடுத்தும் பணியை தாமாக முன்வந்து ஏற்ற மாணவர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் பிரதிநிதிகள், மாளிகையின் பிரதான வாயில் பகுதியை மூடினர். அவர்களே தங்களுக்குள்ளாக கூட்டத்தை ஒழுங்குபடுத்தத் தொடங்கினர்.
பகுதி, பகுதியாக போராட்டக்காரர்கள் உள்ளே வந்து ஜனாதிபதி வாழ்ந்த சொகுசான வாழ்க்கை அனுபவத்தையும் வசதிகளையும் பார்த்து விட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இலங்கை ஜனாதிபதி மாளிகையின் தெருமுனை வரை கூட வழக்கமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவுக்கு அந்த பகுதி கடுமையான பாதுகாப்பு வளையத்தில் இருக்கும். ஆனால், இலங்கையில் தீவிரமான மக்கள் போராட்டங்கள் காரணாக சனிக்கிழமை பிற்பகலுக்குப் பிறகு அந்த சாலைகள் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியிருந்தது.
இதனால் போலீஸாரும் ராணுவத்தினரும் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஒதுங்கிக் கொண்டனர். அவர்கள் மாளிகைக்கு வெளியேயும் அருகே இருந்த வீதிகளிலும் நடப்பதை வேடிக்கை பார்த்தபடி இருந்தனர்.
பெருங்கூட்டத்தால் ஏற்பட்ட களேபரங்களும் குதூகலமும் நிறைந்த சூழலில் தங்களுடைய ஜனாதிபதி இதுநாள் அனுபவித்து வந்த ஆடம்பர சொகுசு வாழ்வை சாமானியரான போராட்டக்குழுவில் இருந்த பொதுமக்களும் அனுபவித்தனர். அங்கிருந்து வெளியே சென்ற போராட்டக்காரர்கள் பலரும் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தை மற்றவர்களிடம் வியப்புடன் விவரித்துச் செல்வதை பார்க்க முடிந்தது.
சனிக்கிழமை நள்ளிரவைக் கடந்த நிலையில், போராட்டக்காரர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பல இடங்களில் பட்டாசுகளை வெடித்தனர். சிலர் பாட்டுப்பாடியும் நடனமாடியும் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு எதிர்ப்பாளர் பியோனா சிர்மானா, "கோட்டாபய மற்றும் ரணிலை பதவியில் இருந்து அகற்றிய பிறகு, இலங்கைக்கு புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கான நேரம் இது" என்று கூறினார்."இந்த இருவரும் முன்பே செல்லவில்லை. அதுதான் எனக்கு மிகவும் வருத்தம் தந்தது. அவர்கள் முன்பே சென்றிருந்தால் எந்த அழிவும் ஏற்பட்டிருக்காது," என்று அந்த பெண் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்