இலங்கை ஜனாதிபதி ஜூலை 13இல் பதவி விலகுவார் - சபாநாயகர் தகவல்

இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து, வரும் 13ஆம் தேதி பதவி விலகுவேன் என்று கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த யாப்பா அபேவர்தன, சனிக்கிழமை இரவு தொலைக்காட்சியில் தோன்றிப் பேசினார். அப்போது அவர், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு நாடாளுமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கோட்டாபயவிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.மேலும், அதிகார மாற்றம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் விதமாக கோட்டாபய ராஜபக்ஷ புதன்கிழமை வரை ஜனாதிபதியாக இருப்பார் என்று அபேவர்தன கூறினார்.நாட்டின் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்த கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக, எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் அலுவல்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்தது. இதற்கிடையில், பிரதமரின் தனிப்பட்ட இல்லத்தையும் போராட்டக்காரர்கள் உடைத்து தீ வைத்தனர்.

முன்னதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமது பதவியை ராஜினாமா செய்து விட்டு சர்வகட்சி ஆட்சி பொறுப்பேற்க வழி வகை செய்யத் தயார் என அறிவித்தார்.

கொழும்பில் மக்கள் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் பிரதமர் ரணில். அதில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட சில பிரதான கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. நீடித்து வரும் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் ரணிலும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், தமது அழைப்புக்கு இணங்கி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் பேசிய ரணில், பிரதமர் பதவியில் இருந்து விலகத் தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

மேலும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் தெரிவித்தார்.

இந்த நிலையில், சபாநாயகர் இல்லத்தில் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பதவியில் இருந்து விலக ரணில் முடிவெடுத்துள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பிபிசி தமிழிடம் கூறுகையில், ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். குறுகிய காலத்திற்கு ஜனாதிபதி பதவியை வகிக்குமாறு என்னை கேட்டுக் கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.

எதிர்கட்சிகளின் கோரிக்கை மீதான உங்களின் முடிவு என்ன என்று கேட்டதற்கு, ''எனக்கு இதில் உடன்பாடு இல்லை. அது அரசியலமைப்பு கடமையாகும்" என்று கூறிய அவர், "இது ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்து எடுக்க வேண்டிய தீர்மானம்" என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள்

முன்னதாக, இலங்கை ஜனாதிபதி மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போராட்டக்காரர்கள், பிரதமரின் அலுவல்பூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு (இங்கு ரணில் வசிப்பதில்லை) உள்ளே இன்று மாலை நுழைந்தனர்.

இன்று காலையில், ஜனாதிபதி மாளிகையை இணைக்கும் சாலைகளுக்குள் போராட்டக்காரர்களை முன்னேற விடாமல் தடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைக்க காவல்துறையினர் முயன்றனர்.

இருப்பினும் காவல்துறையினர் வைத்த தடுப்புகளைத் தாண்டி கோட்டாபயவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் முன்னேறினர். சில போராட்டக்காரர்கள் இல்லத்தின் பிரதான வாயில் மீது ஏறி இல்லத்துக்குள் நுழைந்தனர்.

எம்பி மீது தாக்குதல்

கொழும்பில் இன்று நடைபெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த சமகி ஜன பலவேகய (SJB) கட்சி எம்.பி ராஜித சேனாரத்ன, போராட்டக்காரர்கள் சிலரால் திடீரென தாக்கப்பட்டார்.அவர் போராட்ட களத்துக்கு வந்தபோது, பொதுமக்கள் தண்ணீர் மற்றும் பிற பொருட்களை அவரை நோக்கி வீசினர். போராட்ட களத்தை விட்டு வெளியேறுமாறும் அதிருப்தியாளர்கள் கோஷமிட்டனர்.முன்னாள் அமைச்சரான ராஜித சேனரத்ன உடனடியாக ஒரு குழுவினரால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது போராட்டக்களத்தில் இருந்தவர்கள் அவரை தாக்கினார்கள். இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கும் காட்சிகளும், நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சிகளும் வெளியாகி இருக்கின்றன.

கண்ணீர்ப்புகை குண்டு வீச்சால் காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளையும் காண முடிகிறது. ஒரு பாதுகாப்புப் படை வீரர் உள்பட 33 பேர் காயமடைந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை கூறியுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கொழும்பில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்து தமது ஆதரவைத் தெரிவித்தார். போராட்டக்காரர்கள் சிலருடன் புகைப்படங்களை எடுத்து அதை தமது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இலங்கை மக்களுடன் தான் நிற்பதாகவும், வெற்றியை விரைவில் கொண்டாட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் இல்லாத சூழல் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இன்று அரசுக்கு எதிரான மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், விவசாய அமைப்புகள் போன்றவை இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்திருந்தன.

நேற்று முதலே நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர் அமைப்பினர் தலைநகர் கொழும்புவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனர். இன்று காலையிலும் ஏராளமான வாகனங்களில் மக்கள் கொழும்பு நகருக்குள் வருவதைக் காண முடிந்தது.

இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்துவரும் காலி மைதானத்துக்கு வெளியேயும் ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: