You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்தை ஈர்க்கும் மக்கள் போராட்டங்கள்
இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையுடன் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டங்கள் தீவிரம் ஆகியிருக்கிறது.
கொழும்பில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததுடன், அந்த பகுதியையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முன்னதாக, அவர்களை அந்த இடத்துக்குள் நுழைய விடாமல் போலீஸாரும் ராணுவத்தினரும் கடுமையாக முயன்றனர்.
பல கட்ட அடுக்கு தடுப்புகள் அமைத்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்ற போலீஸார், பிறகு தொடர்ச்சியாக கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். அதன் காரணமாக சில நிமிடங்கள் தணிந்த போராட்டம் பிற்பகலில் மீண்டும் தீவிரம் அடைந்தது. இதனால் அவர்களை சமாளிக்க முடியாமல் போலீஸாரும், ராணுவத்தினரும் ஒதுங்கிக் கொண்டனர்.
இதற்கிடையே, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் தலைநகர் கொழும்பில் திடீரென நேற்று அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் மற்றும் கடந்த சில நாட்களாக இலங்கையில் பதிவாகும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மறைமுகமாக செய்ய முயற்சிக்க வேண்டாம் - மனித உரிமைகள் ஆணையம்
இதேவேளை, இலங்கை போலீஸ் மா அதிபரினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் சட்டவிரோதமானது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணையம் வெள்ளிக்கிழமை இரவு அறிக்கை மூலம் தெரிவித்தது.
அதில், "போலீஸ் தலைவரின் உத்தரவு மக்களின் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றான ஒன்று கூடும் உரிமையை பறிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது. 'நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்ய முயற்சிக்காதீர்கள்' என்ற தலைப்பில் இந்த அறிக்கையை ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது.
"மக்களின் பேரணியைத் தடுக்க நீதிமன்ற உத்தரவைப் பெற முடியாத நிலையில், சட்ட விரோதமான வழிகளில் பேரணியைத் தடுக்க அரசு முயற்சிக்கிறது" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் எதிர்வினை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகமும் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "சனிக்கிழமை, ஜூலை 9, கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக, கூட்டங்களைக் கையாள்வதில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், வன்முறையைத் தடுக்குமாறும் அதிகாரிகளுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். அனைத்து இலங்கையர்களுக்கும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான ஒன்றுகூடல் உரிமை உள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், "மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை அவதானிக்கவும் அது பற்றிய கருத்துக்களை வெளியிடவும் உரிமை உண்டு என்றும் பாதுகாப்புப் படையினருக்கு தெளிவாக அறிவுறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒரு பொது விதியாக, மக்கள் கூட்டங்களைக் கட்டுப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்தக்கூடாது என்ற மரபு உள்ளது. ஆனால் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், ராணுவ வீரர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு உட்பட்டு சட்ட அமலாக்கப் பணிகளைச் செய்யலாம். அப்படி பணியாற்றும்போது அவர்கள் சிவில் ஆளுகைக்கும் சிவில் சட்டங்களுக்கும் உட்பட்டவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அமைதிவழி போராட்டம் மக்களின் உரிமை - ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்
இந்த நிலையில், அமைதி வழியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசுப் படைகள் மற்றும் காவல்துறை நடத்திய தாக்குதலை கண்டித்து சர்வதேச மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
#RightsUnderAttack என்ற ஹேஷ்டேக் என குறிப்பிட்டு அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்திற்கு செல்லும் குடிமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய பல விஷயங்களை உள்ளடக்கிய ஒரு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும்போது 'செய்ய வேண்டியவை' மற்றும் 'செய்யக்கூடாதவை', என்ன உடை அணிய வேண்டும், எதை எடுத்துச் செல்ல வேண்டும், கண்ணீர் புகை குண்டுகளை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பாளர்களின் உரிமைகள் என்ன போன்ற அறிவுறுத்தல்களை அந்த அறிக்கை தெளிவாகக் கொண்டிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்