இலங்கை நெருக்கடி: கோட்டாபய ராஜபக்ஷ எங்கே? இதுவரை நடந்தது என்ன?

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தமது அலுவல்பூர்வ மாளிகையில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியிருக்கிறார். அவரது இல்லத்துக்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சனிக்கிழமை பிற்பகலில் நுழைந்தனர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏற்கெனவே பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இருந்து வரும் செய்தி இணையதளம் ஒன்றில் ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகன தொடரணி கடற்படை தளத்தை நோக்கிச் செல்லும் காட்சிகளும் அங்கு தயார்நிலையில் இருந்த கப்பலில் ஜனாதிபதி வாகனத்தொடரணியில் இருந்து உடைமைகள் ஏற்றிச் செல்லும் காட்சிகளும் பகிரப்பட்டுள்ளன.

அது ஜனாதிபதி கோட்டாபயவின் இன்றைய காட்சிகளா என்பதை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை. அவர் ராணுவத்தின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிரதமர் அவசர ஆலோசனை

இலங்கையில் தீவிரம் ஆகியுள்ள நெருக்கடி குறித்து அனைத்து கட்சி கூட்டத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை பிற்பகலில் அழைப்பு விடுத்தார்.

ஆனால், இந்த கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்கவில்லை. இதே கருத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரன்ஜித் மத்தும பண்டாரவும் பிரதிபலித்தார்.

இந்த நிலையில், தமது அழைப்புக்கு இணங்கி வேறு சில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரணில், பிரதமர் பதவியில் இருந்து விலக தாம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இந்த தகவலை அவரே தமது ட்விட்டர் பக்கத்திலும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலகுமாறும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்ற ஒருவரை நாட்டை வழிநடத்த அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இத்தகைய சூழலில் பிரதமர் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை தவறாக நிர்வகித்ததாகக் கூறி ஆளும் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக கடந்த பல மாதங்களாக மக்கள் போராட்டங்கள் முன்னெடுத்து வந்தனர். அதைத் தணிக்கும் விதமாக இலங்கை பிரதமர் பதவி வகித்த தற்போதைய ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் பதவி விலகினார். அதைத்தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த பிறகு மக்கள் போராட்டம் சில வாரங்களுக்கு தணிந்தன.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு போன்றவற்றால் மக்கள் மீண்டும் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ஜூலை 9ஆம் தேதி மிகப்பெரிய போராட்டத்துக்காக தலைநகர் கொழும்பில் திரளும்படி நாட்டு மக்களுக்கு போராட்டங்களை வழிநடத்துக்கும் பல்வேறு குழுக்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பொதுமக்கள் போராட்டம்

இதையடுத்து தலைநகர போராட்டங்களில் பங்கெடுக்க நாடு முழுவதிலுமிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்புக்கு பேரணியாக சென்றனர்.

காலையில் இருந்து தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸாரும் ராணுவத்தினரும் முயன்றனர். இந்த நிலையில், நண்பகல் 12 மணிக்கு பிறகு போராட்டக்காரர்கள் மீதான தங்களுடைய நடவடிக்கையை போலீஸார் மெல்ல, மெல்ல தளர்த்திக் கொண்டதை காண முடிந்தது.

இதுவரை நடந்த போராட்டங்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உள்பட குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் காயம் அடைந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை "கோட்டா வீட்டுக்குப் போ!" போன்ற கோஷங்களை எழுப்பியபடி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் வீட்டை அடைந்தனர். அவர்களை முன்னேற விடாமல் தடுக்க ராணுவத்தினர் சுமார் இரண்டு மணி நேரம் போராடினர். கடைசியில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையின் நுழைவு வாயில் கேட் மீது ஏறி உள்ளே குதித்தனர். பிறகு நுழைவாயில் கதவைத் திறந்து கொண்டு அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும் ராணுவத்தினரும் ஒதுங்கிக் கொண்டனர்.

முன்னதாக, போலீஸார் சிலர் கூட்டத்தை அச்சுறுத்த வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அந்த நேரத்தில் கோபத்தில் இருந்த கூட்டத்தினர் மிக ஆவேசமாக வீட்டுக்குள் நுழைந்தபோது படையினரால் எதிர்ப்பாளர்களை தடுக்க முடியவில்லை.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், கட்டடத்தின் உள்ளே இருந்து பேஸ்புக் லைவ்ஸ்ட்ரீம் செய்யத் தொடங்கினர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மாளிகை அறைகள் மற்றும் அலுவலக அறைகளுக்குள் சென்று அங்கிருந்த மேஜை, நாற்காலிகளில் ஏறி குதித்தனர்.

வேறு சிலர், ஜனாதிபதி மாளிகை நீச்சல் குளத்தில் குதித்து நீச்சல் அடித்து மகிழ்ச்சியாக குரல் கொடுத்தனர்.

சிலர் ஜனாதிபதி மாளிகை அறைக்குள் இருந்த பொருட்களை கொண்டு செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்த போராட்டங்களை நடத்தும் குழுவைச் சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட நபர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் ஜனாதிபதி மாளிகையின் நுழைவு வாயிலை மூடி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் அதை கொண்டு வந்துள்ளனர். அங்கு போலீஸாரும் ராணுவத்தினரும் எதுவும் செய்ய முடியாதவர்களாக நிற்கிறார்கள்.

இலங்கை: சில அடிப்படைகள்

  • இலங்கை தென்னிந்தியாவிற்கு அப்பால் உள்ள ஒரு தீவு நாடு: 1948இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. மூன்று இனக்குழுக்கள் இங்கு வாழ்கின்றன. சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை உள்ளடக்கிய அந்த சமூகத்தினர் 99 சதவீதம் பேருடன் சேர்த்து இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை 2.20 கோடி ஆகும்.
  • ரே சகோதர குடும்பம் பல ஆண்டுகளாக இந்த நாட்டின் ஆளுகையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2009ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது அவரது தலைமையிலான அரசாங்கம் தமிழ் ஈழத்துக்காக போராடி வந்த விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்திய உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகளை வீழ்த்தியது. அதன் மூலம் தன்னை கதாநாயகன் போல மஹிந்த ராஜபக்ஷ காட்டிக் கொண்டார். அவரது அராசங்கத்தில் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய இப்போது நாட்டின் ஜனாதிபதியாக உள்ளார்.
  • இப்போது இந்த நாடு எதிர்கொண்டு வரும் அசாதாரண பொருளாதார நெருக்கடியின் தாக்கம் வீதிகளில் மக்கள் கோபத்தின் வடிவில் வெளிப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகரித்து வருவதால் உணவுப்பொருட்கள், மருந்துகள் மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மின் தடைகள் பரவலாக இருப்பதால் அதைத் தடுக்க அரசாங்கம் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கினர். அந்த போராட்டங்கள், பல வடிவங்களில் விரிவடைந்து இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் வெளியேற கோரிக்கை விடுக்கும் அளவுக்கு வலுப்பெற்றுள்ளன.

கடந்த வாரம், நாட்டின் குறைந்து வரும் எரிபொருள் இருப்புகளைப் பாதுகாக்கும் முயற்சியாக அத்தியாவசியமற்ற வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கடனில் எரிபொருளைப் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது - ஆனால் அந்த முயற்சியில் இதுவரை அரசு வெற்றி பெறவில்லை.

தற்போதைய நெருக்கடியை சமாளிக்க அவசர நிதியுதவியை வழங்குமாறு இலங்கை அரசு கோரி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக கடும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்று, இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை முடக்கி விட்டதாக அரசாங்கம் கூறுகிறது.

ஆனால், பொருளாதார நிபுணர்களில் ஒரு பிரிவினர் தவறான நிர்வாகமே தற்போதைய நிலைக்கு காரணம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி கடந்த மார்ச் மாதம் முதல் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தீவிரம் அடைந்ததாலேயே கடந்த மே மாதம் பிரதமர் பதவியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ விலக நேர்ந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: