அமரகீர்த்தி அத்துகோரல: இலங்கை எம்.பி அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறும் உடற்கூராய்வு அறிக்கை

Amarakeerthi Athukorala MP

பட மூலாதாரம், Amarakeerthi Athukorala MP

கொழும்பு புறநகர் பகுதியான நிட்டம்புவ பகுதியில் வைத்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் பிரகாரம், அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அமரகீர்த்தி அத்துகோரலவின் உடலில் ஏற்பட்ட உள்ளக காயங்களே, அவரது மரணத்திற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அமரகீர்த்தி அத்துகோரல தம்மைத்தாமே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார் என்று வெளியான தகவல்கள் குறித்துக் குறிப்பிட்ட அவர், அமரகீர்த்தி அத்துகோரலவின் உடலில் எந்தவித துப்பாக்கி சூட்டு அடையாளங்களும் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.

அடையாளம் தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்காகியே அவர் உயிரிழந்துள்ளமை தற்போது உறுதியாகியுள்ளது என காவல் திணைக்களம் தெரிவிக்கிறது.

அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்திருந்தார்.

இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

அமரகீர்த்தி அத்துகோரலவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி இந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலான விசாரணைகளை அரச பகுப்பாய்வு திணைக்களம் நடத்தி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தற்கொலை செய்துகொண்டமைக்கான எந்தவித சாத்தியமும் கிடையாது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இந்த வாரம் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் சொத்துகள் மற்றும் பொது சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.
படக்குறிப்பு, இலங்கையில் இந்த வாரம் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் சொத்துகள் மற்றும் பொது சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்டது.

கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்று வரும் அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தின் மீது, கடந்த 9ம் தேதி அரசாங்க ஆதரவாளர்கள் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதல் பின்னர், வன்முறையாக மாறியிருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள், அளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சொத்துகளுக்கு சேதம் விளைவித்திருந்தனர்.

இந்த நிலையில், நிட்டம்புவ வழியாக பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து அவர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

அமரகீர்த்தி அத்துகோரல துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாக அப்போது கூறப்பட்டாலும், அவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்கிறது காவல் திணைக்களம்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படாத நிலையில், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

காணொளிக் குறிப்பு, ரணில் விக்ரமசிங்க: 6ஆவது முறையாக இலங்கையின் பிரதமர் - யார் இவர்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: