இலங்கை நெருக்கடி - தொடரும் அமைதியின்மை, தீக்கிரையாகும் சொத்துக்கள் - அடுத்து என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கை பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.
முன்னதாக, நேற்று நண்பகலில் கொழும்பு காலி முகத்திடலில் ஆளும் அரசுக்கு எதிரான போராட்டக்குழுவினருக்கு போட்டியாக மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பெருமளவில் திரண்டதால் அங்கு வன்முறை சூழல் நிலவியது. இதுவரை நடந்த மோதலில் சுமார் 78 பேர் காயமடைந்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பினார்.
கொழும்பு - காலி முகத்திடலில் கடந்த ஒரு மாத காலமாக தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் என அறியப்படுவோர் நேற்று முற்பகல் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து, வன்முறை ஏற்பட்டது.
காலி முகத்திடலிலுள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை தற்போது நாடு முழுவதும் பரவி வருகின்ற நிலையில், தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைதியின்மை நிலவி வருகின்றது.
அரசியல்வாதிகளின் வீடுகள், அலுவலகங்கள், அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு தொடர்ந்தும் சேதம் விளைவிக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பின் பல்வேறு பகுதியில் பல சொத்துக்கள் தீக்கிரையாகி வருவதை காண முடிகின்றது.
இவ்வாறான நிலையில், இலங்கையில் அடுத்து என்ன நேரும் என பலரும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றனர்.
இடைக்கால அரசு என்பது என்ன?
இலங்கைக்கு என்ன நேரும் என்பது குறித்து பிரபல அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான நிக்ஷன், பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.
பிரதமர் பதவி விலகிய நிலையில், முழு அமைச்சரவையும் இல்லாது போன பின்னணியில், ஜனாதிபதி எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அரச சட்டத்தரணிகள் சங்கத்தின் தலையீட்டில் சந்தர்ப்பம் காணப்பட்டது.
இடைக்கால அரசாஙகத்தை ஏற்காவிட்டாலும், தான் வெளியில் இருந்து ஆதரவு வழங்க தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.
எனினும், நேற்று குழப்பம் ஏற்பட்ட பின்னணியில், இடைக்கால அரசாங்கத்திற்கு சஜித் பிரேமதாஸ ஆதரவு வழங்குவதற்கான சாத்தியம் இனி இருக்காது என தான் நினைப்பதாக அரசியல் ஆய்வாளர் நிக்ஷன் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் தேர்வுக்கு ஆதரவு வழங்கிய 148 பேரும் ஆதரவு வழங்கும் பட்சத்தில், கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடைக்கால அரசாங்கமொன்றை அமைக்க முடியும் என அவர் கூறுகின்றார்.
இவ்வாறு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தை மீண்டும் அமைக்கும் பட்சத்தில், சர்வதேசத்திடமிருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் கிடைக்காது.
சர்வதேசத்திடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே, அரச சட்டத்தரணிகள் சங்கம் தலையீடு செய்து, இடைக்கால அரசாங்கத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறுகின்றார்.

பட மூலாதாரம், GOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE
இந்த பின்னணியில், எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லாமல், அரசாங்கமொன்றை கோட்டாபய ராஜபக்ஷ அமைப்பாரானால், அதனை இடைக்கால அரசாங்கம் என்று கூற முடியாது என்கின்றார் அரசியல் ஆய்வாளர் நிக்ஷன்.
அரசாங்கத்துடன், எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அதனை இடைக்கால அரசாங்கம் என கூற முடியும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை காணாத ஒரு அரசியல் நெருக்கடியாக இது இருக்கின்றது என அவர் கூறுகின்றார்.
இந்த நிலையில், சுயாதீனமாக செயற்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமித்து, இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்க ஜனாதிபதி முயற்சிக்கக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.
ஆனால், மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமித்து, புதிய இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவிக்கும் என அவர் கூறுகின்றார்.

பட மூலாதாரம், Getty Images
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கான சாத்தியங்களே தற்போது காணப்படுகின்றது.
எனினும், அரசாங்கத்தில் அங்கம் வகிப்போரின் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள் என பல இடங்களில் தீக்கிரையாகி வருகின்ற நிலையில், தற்போது ஆளும் அரசாங்கத்திற்கு யாரும் ஆதரவு வழங்க முன்வர மாட்டார்கள் என அவர் கூறுகின்றார்.
ஜனாதிபதியும் பதவி விலகினால் என்ன நடக்கும்?
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் பட்சத்தில், அவரது பதவி அடுத்ததாக பிரதமருக்கு செல்லுமாறே அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போது பிரதமரும் பதவி விலகியுள்ள நிலையில், சபாநாயகரே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
சபாநாயகரும் ஜனாதிபதி பதவியை ஏற்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட ஒருவர், ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன், தற்போது அதற்கும் சாத்தியமற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு பெரும்பான்மை நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குழப்பகர நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர் நிக்ஷன் தெரிவிக்கின்றார்.
சபாநாயகர், ஜனாதிபதியாக பதவியேற்கும் பட்சத்தில், 18 மாதங்களுக்கு இடைக்கால அரசாங்கமொன்று உருவாக்கப்படும்.
யாரும் பதவியேற்க மறுத்தால் அடுத்து என்ன நடக்கும்?
நாட்டில் இருக்கக்கூடிய இந்த அசாதாரண சூழ்நிலையில், யாரும் பதவியேற்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அடுத்து என்ன நடக்கும்?
அரச சட்டத்தரணிகள் சங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு காரணமாகவே இந்த இடைக்கால விடயத்தில் தலையீடு செய்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
அரசியல் குழுப்பகர நிலைமை காணப்படுகின்றமையினால் தூதுவராலயங்களின் ஊடாக, அரச சட்டத்தரணிகள் சங்கத்துடன் கலந்துரையாடல்களை நடத்தி, இந்த விடயத்தில் தலையீடு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், கட்டாயம் யாராவது ஒருவர், ஜனாதிபதி பதவியை ஏற்க இணக்கம் தெரிவிப்பார் என அவர் தெரிவிக்கின்றார்.
இதில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக பதவியேற்கும் சந்தர்ப்பம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச நாணய நிதியம், கட்டாயமாக, நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வரையறுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதுடன், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை வழங்கும் வகையில் ஒரு செயற்பாடு முன்னெடுக்கப்படும்.
தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில், கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயம் பதவி விலக வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதுடன், அடுத்த ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதவிக்கு வருவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை அரசியலுக்கு மிகப்பெரிய சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசியலானது, அரசியல் ஆய்வு எல்லை கோட்டிலிருந்து வேறொரு எல்லை கோட்டை நோக்கி நகர்ந்துள்ளமையினால், அடுத்தது என்ன நடக்கும் என்பதை சரியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக, அரசியல் ஆய்வாளர் நிக்ஷன் தெரிவிக்கின்றார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில், பெரும்பாலும் இந்த நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியத்தின் கைகளுக்கு செல்லும் சந்தர்ப்பம் ஏற்படும்.
இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மத்திய வங்கி செல்லுமாக இருந்தால், நாட்டின் உயர் பதவிகளிலுள்ளவர்களுக்கான சலுகைகள் அனைத்தும் இல்லாது செய்யப்படும்.
சாதாரண மக்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட்டாலும், பெரும்பாலான சலுகைகள் இல்லாது போகும் சாத்தியம் ஏற்படும்.
அதேபோன்று வங்கிகளின் வட்டி வீதம் மாத்திரமே அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அரசியல் ஆய்வாளர் நிக்ஷன் தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












