இலங்கையில் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடா? எரிசக்தி அமைச்சர் பதில் என்ன?

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு
படக்குறிப்பு, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு - கோப்புப்படம்
    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழ்

இலங்கையில் எரிபொருளுக்கு மீண்டும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு முதல் நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வரிசைகள் காணப்படுவதை பார்க்க முடிகின்றது.

நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் வரிசைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கைக்கு தேவையான பெட்ரோல் போதுமான அளவு இருப்பு காணப்படுகின்ற போதிலும், சிலரது திட்டமிட்ட சதிகளினால் பெட்ரோல் வரிசை ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் பெட்ரோல் தட்டுப்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

பட மூலாதாரம், KANCHANA WIJESEKARA'S FACEBOOK

படக்குறிப்பு, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர

"டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவும்"

அத்துடன், டீசலுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நுரைச்சோலை மின்உற்பத்தி நிலையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதை அடுத்து, ஏனைய மின்உற்பத்தி நிலையங்களின் ஊடாக மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கு தேவையான டீசலை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாகனங்களுக்கு டீசலை வழங்குவதை விடவும், மின்சார உற்பத்தியை மேற்கொள்வது அவசியம் என கொள்கை அளவில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டு, பெருமளவிலான டீசல் மின் உற்பத்திக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் 11ம் தேதியே நாட்டை வந்தடையும் என அவர் கூறினார்.

இதனால், நாளொன்றுக்கு 4000 மெட்ரிக் டன் டீசல் தேவைப்படுகின்ற நிலையில், தற்போது சந்தைக்கு 1,000 முதல் 1,500 மெட்ரிக் டன் டீசல் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம் காரணமாக நாளொன்றுக்கு பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு 1613 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

தாம் நட்டத்திலேயே சந்தைக்கு எரிபொருளை விநியோகித்து வருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியில் தற்போது 100 மில்லியன் அமெரிக்க டாலரே எஞ்சியுள்ளது.

இந்த கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 200 மில்லியன் அமெரிக்க டாலரை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை இந்தியாவிடம் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டாலரை கோரியுள்ளது.

மே மாதத்தில் மாத்திரம் எரிபொருள் கொள்வனவுக்கு 580 மில்லியன் டாலர் தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த மாதத்தில் மாத்திரம் 4 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும், விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :