இலங்கையில் மழையால் மண் சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 11 பேர் பலி

பட மூலாதாரம், SRI LANKA ARMY
இலங்கையை அண்மித்த வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க (காற்றழுத்த தாழ்வு நிலை) நிலைமை காரணமாக, 15 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மழையுடனான வானிலை காரணமாக ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கேகாலை - ரம்புக்கன்ன பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பாரிய மண்மேடொன்று சரிந்து வீழ்ந்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் தாய் மற்றும் இரு மகள்கள் உயிரிழந்ததாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
சம்பவத்தில் கடும் காயங்களுக்கு உள்ளான தந்தை, கேகாலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கேகாலை மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, பாரிய மண்மேடொன்று சரிந்து வீழ்ந்திருந்தது.
மக்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை?
இந்த பகுதியில் மண்சரியும் ஆபத்து காணப்படுகின்ற நிலையில், அங்கிருந்து மக்களை ஏன் வெளியேற்றவில்லை என மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரியவிடம் பிபிசி தமிழ் வினவியது.
குறித்த பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுகின்றமையினால், அந்த பகுதி மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு நேற்றைய தினமே தாம் அறிவித்தல் பிறப்பித்திருந்ததாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், SRI LANKA ARMY
மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பகுதியில் வாழ்ந்த இரண்டு குடும்பங்கள் நேற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததாக அவர் குறிப்பிடுகின்றார்.
தமது அதிகாரிகள் பல முறை கோரிக்கை விடுத்த போதிலும், குறித்த குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற முடியாது என கூறியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, இன்றைய தினம் மண்மேடு சரிந்து குறித்த வீட்டின் மீது வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
மற்றுமொரு மண்சரிவு
குருநாகல் - நாரம்மல பகுதியில் இன்று மற்றுமொரு வீட்டின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
கடும் மழையுடனான வானிலை நிலவிய தருணத்திலேயே, வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
மண்மேடு சரிந்து விழும் சந்தர்ப்பத்தில் வீட்டில் தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், சம்பவத்தில் தாயும், மகனும் உயிர் தப்பியுள்ளதுடன், மகள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

பட மூலாதாரம், SRI LANKA ARMY
சம்பவத்தில் காயமடைந்த யுவதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பகுதிகள் குறித்து ஏற்கனவே அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அது குறித்து அக்கறை கொள்வதில்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

பட மூலாதாரம், SRI LANKA ARMY
மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பெரும்பாலான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்கள் அது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதற்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவுகள்
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பகுதியில் 2016ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டிருந்தது.
இந்த மண்சரிவில் சுமார் 30 பேரில் சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்ட போதிலும், 150திற்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
நூற்றுக்கணக்கானோரின் சடலங்களை மீட்காது, மீட்புப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தன.
பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்த பகுதியில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருந்த நிலையில், சிலரது சடலங்கள் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டிருந்தன.
ஏனைய நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












