இலங்கை யுத்த காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் நிலை என்ன? - அமைச்சர் ஜீவன் தொண்டமான் பேட்டி

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

யுத்தக் காலத்தில் காணாமல் போன இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தொடர்பில் ஆராய தான் நடவடிக்கை எடுப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு தான் உதவிகளை வழங்க தாயாராகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்கள் தொடர்பான உரிய தகவல்களை தன்னிடம் வழங்கினால், அதற்கான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

கேள்வி : கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளை பெற்ற தமிழ் பிரதிநிதி நீங்கள். ஒரு அரசியல் பலம் உங்களிடம் காணப்படவில்லை. அனுதாபத்திற்காகக் கிடைத்த வாக்கு என கூறப்படுகின்றது. நீங்கள் கூறுவது என்ன?

பதில் : "முதல்ல அரசியல் பலம் இல்லனு சொல்லுறது. தேர்தல் பிரசாரமாக இருந்தாலும் சரி. தேர்தல் பிரசாரத்திற்கு பிற்பாடு கிடைத்த வரவேற்பாக இருந்தாலும் சரி அதுலயே தெரிஞ்சிருக்கும் எங்கட அரசியல் பலம் என்னானு. அதேநேரம் அனுதாப வாக்குனு சொல்லுறாங்க. சொல்லுறவங்க சொல்லட்டும். நீங்க பார்த்திருப்பீங்க நுவரெலியா மாவட்டத்தில மட்டும். கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பதிவு செய்யப்பட்டிருக்காங்க வாக்களிக்க. அப்படி இருக்கும் போது காங்கிரஸிற்கு ஏற்கனவே ஒரு பலம் இருந்திருக்கு. அது மட்டும் இல்லாம 3 வருஷமாக மக்களுடன் இருந்து வேல செய்திருக்கின்றோம். அது மட்டுமில்லாமல் இன்னைக்கு வந்திருக்க இளைஞர்களே எங்கள முன்னாடி கொண்டு வந்திருக்காங்க. நீங்களே சிந்தித்து பாருங்க, ஒரு லட்சம் வாக்குகள தாண்டியிருக்கோம். இத அனுதாப வாக்குனு சொல்லுறவங்க பற்றி நான் ஒன்னும் சொல்லயில்ல."

கேள்வி : இலங்கை முழுவதும் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. அது மலையகத்திலும் இடம்பெற்றுள்ளது. இது இனி வரும் காலங்களில் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் இருக்க எவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில் : "திட்டங்கள் எதுவும் முன்னெடுக்க வேண்டிய தேவையில்லை. மக்கள் தெளிவா இருந்தா சரி. யாரு என்ன சொன்னாலும், கடைசில மக்களோடு தீர்ப்பு தான் ஜெயிக்கும். ஏனென்றால் இது மக்களோட வாக்கு. அப்படி கேட்டீங்கனா நுவரெலியா மாவட்டத்துல கேட்ட ஒருவருக்கு 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கு. அதைவிடவும் 42 ஆயிரம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருக்கு. அப்படினா எங்களோட கடமையில ஒரு வகையில நாங்க தவறிட்டோம். மக்களுக்கு தெளிவுப்படுத்தியிருக்கனும். எதிர்காலத்துல மக்களுக்கு தெளிவுப்படுத்துவோம். அதேசமயம் மக்களும் கொஞ்சம் சுயமா சிந்திச்சு எப்படி வாக்குகள் நிராகரிக்கக்கூடாது என்பத பார்க்க வேண்டும்."

கேள்வி : உங்களது குடும்பம் ராஜபக்ஷ ஆட்சியாளர்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேணிய ஒரு குடும்பம். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் உங்களது தந்தை அமைச்சு பதவிகளை வகித்திருந்தார். அப்படியான சூழ்நிலையில், மலையக மக்கள் இன்றும் பின் தள்ளப்பட்ட நிலையில் தான் வாழ்ந்து வருகின்றார்கள். இது நுவரெலியாவாக இருக்கலாம், பதுளையாக இருக்கலாம் ஏனைய பகுதிகளாகவும் இருக்கலாம். ஏன் இந்த நிலைமை?

பதில் : "மலையக மக்கள் பின் தள்ளப்பட்டுள்ளார்கள் என நாங்கள் சொல்கின்றோம். நாங்க சொல்லுகிற மக்கள் 30 சதவீதமான தோட்டத் தொழிலாளர்கள், ஏனா அவங்க இன்னும் கம்பனிக்கு அடியில இருக்கனால. ஆவங்களுக்குக் கிடைக்க வேண்டிய நிறைய அடிப்படை உரிமைகள் அவங்களுக்கு கிடைக்க மாட்டைங்குது. வாய்ப்புனு பார்த்தால், எல்லாருக்கும் சரியான வாய்ப்பு கிடைக்குது. ஆனால் அந்த வாய்ப்பு நியாயமான முறையில மக்களுக்கு போய் சேரல. இலங்கை நாடு முழுவதும் வறுமை இருக்கு. இல்லனு சொல்ல முடியாது. பசியும் இருக்கு. அப்படி இருக்கும் போது அந்த இடத்துல இருக்க பிரதி நான். அந்த வாய்ப்ப நியாயமான முறையில நான் கொண்டு போய் சேர்ப்பேன்."

கேள்வி : இன்னுமொரு விடயம் கூறப்படுகின்றது ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் அல்லது ஆட்சியில் வருகின்றவர்களோடு நீங்கள் தொடர்ந்து பயணிக்கின்றவர்கள். இந்த மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசாமல் சமரசப்படுத்தக்கூடிய ஒரு சாத்தியம் காணப்படுவதாகக் கூறப்படுகின்றது. இதில் ஏதாவது உண்மை தன்மை காணப்படுகின்றதா?

பதில் :- "இல்லை. இன்று ஆளுமை மிகுந்த தலைவர் என்றால் மஹிந்த ராஜபக்ஷ இருக்கிறாரு. நிறைய பேர் நினைச்சாங்க 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷ திரும்ப வரமாட்டாரு. ஆறுமுகன் தொண்டமானும் முடிஞ்சிச்சுனு சில பேர் நினைச்சாங்க. ஆனால் அவங்க எப்படி அவங்கட கட்சிய கட்ட ஆரம்பிச்சாங்களோ, அதே மாதிரி எங்களோட கட்சிய நாங்களும் கட்ட ஆரம்பிச்;சோம். கட்டி நாங்க திருப்பி வந்தோம். இந்த உள்ளுராட்சி சபை தேர்தல்ல எங்களுக்கு ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்குகள் வந்துச்சு. அதே மாதிரி தான் இப்போவும். அப்படி இருக்கும் போது எங்களுக்கு பேரம் பேசும் சக்தி இருக்கு. அது மட்டுமல்லாமல் நெருங்கிய உறவு இருக்க நால, எங்களுக்கு தேவையான வேலைகள முடிக்க முடியும். நெருங்கிய உறவு இருக்க காரணம் வேறு ஒன்னும் இல்ல, நெருங்கிய உறவு இருக்க காரணம், நாங்க நேர்மையா உண்மையா இருந்தோம். 5 வருஷமா சிறுபான்மையாக இருந்தாலும், நாங்க எதிர்க்கட்சியில் இருந்திருக்கோம்."

கேள்வி : மலையகத்தில் வீட்டுத் திட்டங்கள், குடி நீர் வசதிகள், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் இன்று தொடர்ச்சியாகவே இருந்து கொண்டிருக்கின்றது. இந்த திட்டங்களை உங்களது ஆட்சியில் முன்னோக்கிக் கொண்டு செல்ல எவ்வாறான திட்டங்களை வைத்திருக்கின்றீர்கள்?

பதில் : "சுகாதாரம் சம்பந்தமாக சொல்லுறேன், வைத்தியசாலைகளை பார்த்திங்கனா மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கு. இருக்க மக்களுக்கும் தெரியும். அப்படியிருக்க நேரம் இந்த வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்துக்கு மாத்தனும். அது மட்டுமில்லாம உங்களுக்கு தெரியும் கிளங்கன் ஹெஸ்பிட்டலும் இருக்க. அதற்கு உள்ளால இருக்க உட்கட்டமைப்பு வசதிகள் சரியான குறைவு. அதையும் நாங்க இந்திய அரசாங்கத்திடம் பேசி என்னென்ன உதவி வாங்கி அத சரிய செய்ய முடியுமா இருந்தா அதையும் சரி செய்யனும். அதேமாதிரி குடிநீர் பிரச்சினையும் நிறைய இடத்துல இருக்கு. இன்னைக்கு மலையகத்துல நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுறாங்க இந்த குடிநீர் பிரச்சினையினால. அதேமாதிரி ரோட் வசதி எல்லாம் இருக்கு. கட்சி பார்க்காம யார் யாருக்கு தேவையோ அதை நாங்க செஞ்சாகனும். வீட்டு பிரச்சினை சம்பந்தமான சொன்னீங்க. சமீபத்துல இந்திய தூதுவர சந்திச்சு பேசினோம். அவருக்கு கிட்ட நாங்க வச்சியிருக்க பிரதான கோரிக்கை என்னான்னா?, கிரனிபேஷரி கிரைடீரியானு ஒன்று இருக்கு இந்திய வீட்டுத்திட்டத்துக்கு. அதுல பாத்திங்கனா தோட்டத்துல வேலை செஞ்சா மட்டும் தான் வீடு. ஈ.டி.எப்;, ஈ.பி.எப் வந்தா மட்டும் தான் வீடு. நிறைய பேர் பென்சன் வாங்கிட்டு தோட்டத்துல வேல செய்றாங்க. நிறைய பேர் கேஸ் வேகரா இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் ஈ.டி.எப்;, ஈ.பி.எப் நம்பர் கிடையாது. அதேமாதிரி நீங்க பார்த்திருப்பீங்க. அவங்களோட குழந்தைங்க. 30 சதவீத தொழிலாளர்களின் 70 சதவீத குழந்தைகள். அங்க தோட்டத்துல வேல கிடையாது. அவங்களும் அந்த தோட்டத்துல வாழுறாங்க. அவங்களுக்கும் இந்த வீட்டுத் திட்டம் போய் சேரனும். அதேமாதிரி டீச்சர்ஸ் இருக்காங்க. அரசாங்க ஊழியர்கள் இருக்காங்க தோட்டத்துல வாழ்றவங்க. அவங்களுக்கும் வீட்டுத்திட்டம் போய் கிடைக்க மாட்டைங்குது. ஏனா அவங்க தோட்டத்துல வேல இல்லனு. தோட்டத்துல வேல செஞ்சா மட்டும் வீடு கிடைக்க கூடாது. தோட்டத்துல பிறந்தாலே வீடு கிடைக்கனும்."

கேள்வி : யுத்தக் காலத்தில் மலையகத்திலுள்ள அதே மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். காணாமல் போயிருந்தார்கள். இந்த விடயம் குறித்து எந்தவொரு மலையக அரசியல்வாதியும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை. இந்தவிடயம் தொடர்பில் ஜீவன் தொண்டமான் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பார்?

பதில் :"மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருக்கும் போது அவரிடம் புனர்வாழ்வு அமைச்சு இருந்தது. அப்படி இருக்கும் போது யாழ்ப்பாணத்துக்கு போய் இருந்தோம். அப்படி போன போது அங்குள்ள இந்திய வம்சாவளி மக்களை பார்த்தோம். அவங்க என்னா அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்காங்க என்றதையும் பார்த்தோம். போர்னால நிறைய பேர் பாதிக்கப்பட்டாங்க. மனசுக்கு ரொம் வேதனையா இருந்துச்சு. அப்படியான நிலையில், அந்த மக்களுக்கு ஆறுமுகன் தொண்டமான் 50 மில்லியன் ரூபாவ வழங்கினாரு, தேவையான வசதிகள செய்வதற்கு. அப்படி இருக்கும் போது அவங்களுக்கு ஒரு பிரதி தேவை. அவங்களுக்கு ஒரு குரல் தேவை. அதை கொண்டு வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாளாகும். அது வரை நாங்கள் இருப்போம்."

கேள்வி : அந்த காணாமல் போனோர் விவகாரம், வடக்கு, கிழக்கு அல்லது கொழும்பு பகுதிகளில் காணாமல் போனோருக்காக மாத்திரமே குரல் எழுப்பப்படுகின்றது. ஆனால் மலையகத்திலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு சென்று காணாமல் போனோர் தொடர்பில் எவரும் குரல் எழுப்புவதில்லை. இது தொடர்பில் ஜீவன் தொண்டமான் எவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பார்?

பதில் : "ஜீவன் தொண்டமான் எவ்வாறான நடவடிக்கை எடுப்பாருனா, முதல்ல எங்களுக்கு அந்த தகவல்கள் வரனும். அப்படி அந்த தகவல்கள் வரும் போது அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம். ஏனா இந்த அரசாங்கத்துல நீங்க பார்த்திருப்பீங்க நல்லாட்சிக்கு முன்னாடி வந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துல அந்த போர் காலம் முடிஞ்சு கிட்டத்தட்ட 13 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. சில காணாமல் போனதாக சொன்னவங்க கூட அந்த புனர்வாழ்வு திட்டத்துல இருந்திருக்காங்க. ஆனால் போன அரசாங்கத்துல எதுவும் நடக்கல. கட்டாயம் தகவல் வந்தால், கட்டாயம் உதவி செய்வோம். ஏற்கனவே பதில் சொல்லியிருந்தேன், அவங்களுக்கு தேவையான பிரதி முதல்ல அவங்களுக்கு தேவை. பிரதி இருந்தால் தான் அவங்கட விஷியத்த பேச முடியும். தகவல் கொண்டு வந்தா கட்டாயம் உதவி செய்யலாம்."

கேள்வி : உங்களது தந்தை ஆறுமுகன் தொண்டமான் இறுதியாக இந்திய உயர்ஸ்தானிகரையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் தான் சந்தித்து இருந்தார். இறுதியாக அந்த இடத்தில் நீங்கள் இருந்தீர்கள். எவ்வாறான விடயங்களை கலந்துரையாடினார்?

பதில் : "இந்திய தூதுவரை பார்க்கும் போது, அவர் அப்போது தான் புதுசா நியமிக்கப்பட்டிருந்தார். ஒரு மரியாதை நிமிர்த்தமா பார்த்தோம். தோட்டத்துல வேலை செய்தா தான் வீடா.. அதை மாற்றி அமைக்கனுனு சொன்னார். அதற்கு அவரு அடுத்த வாரம் ஒரு புரோபோஷல் கொண்டு வாங்கனு சொன்னாரு. அதற்கு அப்புறும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரை பார்த்தோம். பிரதமர பார்க்கும் போது இந்த ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினைக்கு கட்டாயமா ஒரு தீர்வு எடுத்து தரனுனு. சலுகைகள் தொடர்பிலும் பேசினோம். இப்படி பேசிட்டு வரும் போது அவருக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தாரு. ரொம்ப போஷிடீவா போச்சு பேச்சு வார்த்தை."

கேள்வி : ஆயிரம் ரூபா என்ன நடக்கும்?

பதில் : "ஆயிரம் ரூபா வந்து எப்பவுமே தேர்தல் பிரசார மேடையில சொல்லியிருக்க மாதிரி, இன்னைக்கு இருக்க விலவாசிக்கு ஆயிரம் ரூபா பத்தாதுனு உங்களுக்கே தெரியும். ஆனாலும், அத நாங்க கட்டாயம் வாங்கி தருவோம். தொழிற்சங்க பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியாது. அப்படியிருக்கும் போது முதல் விஷியமா நாங்க முடிவு பண்ணியிருக்கோம். பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சு பேச்சாவே போக கூடாது. நீங்க கவனிச்சு இருப்பிங்க கம்பனி சொல்லுறாங்க. நாங்க ரொம்ப கஷ்டத்துல இருக்கோம். இந்த தோட்டத்த நடத்த முடியலனு சொல்லுறாங்க. இப்ப நாங்க என்ன சொல்ல போறோனா, பிரதமர், ஜனாதிபதி அவங்கள வச்சு, கம்பனி பாவம் தானே? அவங்களால நடத்த முடியல தானே? தோட்டத்த திருப்பி எடுக்கனும், இல்லனா ஆயிரம் ரூபா சம்பளத்தை தரனும். இரண்டுல எதாச்சும். ஏனா அவங்க பாவம், அவங்களுக்கு கஷ்டம் தானே? இந்த முறை பேச்சுவார்த்தை எல்லாம் இரண்டு மூன்று வாரம் எல்லாம் போகாது. ஒரேயொரு பேச்சுவார்த்தை. அந்த பேச்சுவார்த்தையில முடிவு செஞ்சாகனும். இதை கம்பனிகளுக்கும் தெரிவிச்சு இருக்கோம். அவங்க சொன்னாங்க, அங்க மத்தியிலும் பேச்சுவார்த்தை நடத்தனுனு. கட்டாயம் நல்ல முடிவு கிடைக்கும்."

கேள்வி : கூட்டு உடன்படிக்கை... இது சரியா? தவறா?

பதில் : "கூட்டு ஒப்பந்தத்தை நிறைய பேர் நினைக்குறாங்க, தொழிலாளிகளை கட்டுப்படுத்துறதுனு. உண்மையான விஷியம் இது கம்பனிகள கட்டுப்படுத்துறது. அதனால நாங்க என்ன பண்ணினோன, மினிட் புக் ஒவ்வொரு ஆபிஸ்லயும் வெளியிட்டுள்ளோம். ஒவ்வொரு தோட்ட கமிடிக்கும் போய் சேரும் தானே. அந்த மினிட் புத்தகத்த திறந்து பார்த்திங்கனா? கூட்டு ஒப்பந்தத்துல இருக்க அத்தனை சரத்தும் அதுல இருக்கு. அதுல என்னென்ன உரிமைகள் உள்ளிட்ட எல்லா சரத்துக்களும் அதுல இருக்கு. நாங்க ஏன் அப்படி பண்ணினோனா, கூட்டு ஒப்பந்தம் என்னானு தெரியாம நிறைய பேர் குரல் கொடுக்க ஆரம்பிச்சாங்க. சம்பளம் அதுல ஒரு பகுதி தான். அதை தவிர நிறைய விஷியங்கள் இருக்கு. அந்த தோட்டத்துல நிறைய இளைஞர்கள் இருக்காங்க. கல்வி நிலையும் கூடியிருக்கு. அவங்கட அம்மாவுக்கு அல்லது அப்பாவுக்கு துரைமார் மூலம் ஏதாவது தவறு நடந்தால், அநீயாயம் நடந்தால் இந்த கூட்டு ஒப்பந்தத்த அவங்களே படிச்சு பார்த்து சொல்ல முடியும் இதோ பாருங்கனு. நிறைய துரை மார் சொல்லுறாங்க கூட்டு ஒப்பந்தத்துல சொல்லியிருக்கு 18 கிலோ பறிச்சாகனுனு. கூட்டு ஒப்பந்தத்துல அப்படி எங்கயும் சொல்லுப்படல. நாங்க எழுதியிருக்க விஷியம். முதல் வாரமும், மூன்றாவது வாரமும் தோட்ட கமிடியும், துரைமார்களும் கூடி பேசி ஒரு முடிவுக்கு வரனுனு தான் சொல்லியிருக்கோம். ஏனா எனக்கு தெரியாத அந்த மலையில இருந்து எவ்வளவு கொளுந்து வர போகுதுனு. அதேமாதிரி உங்களுக்கும் தெரியாது. கம்பனி முதலாளிக்கும் தெரியாது. அந்த தோட்டத்துல இருக்க துரைமார்களுக்கும், தோட்ட கமிடிக்கும் மட்டும் தான் தெரியும். அதை தான் நாங்க கூட்டு ஒப்பந்தத்துல போட்டு இருக்கோம். இந்த மாதிரியான விஷியங்கள நாங்க போட்டவுடனேயே நல்லதொரு பெனிபிட்டா இருக்கு. நிறைய பேர் நியாயமான முறையில பயன்படுத்தியிருக்காங்க. கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் இன்னொரு விஷியத்த சொல்லனும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அதுல சில பழைமையான விஷியங்கள் இருக்கு. அதை கொஞ்சம் புதுபிச்சாகனும். யாரு வேனுமானால், கூட்டு ஒப்பந்தத்த படிச்சுட்டு வாங்க. படிச்சுட்டு உங்களோட அபிப்ராயங்கள ஆரோக்கியமான முறையில சொல்லுங்க. அப்படினா கட்டாயம் நாங்க தீர்மானம் எடுப்போம்."

கேள்வி : சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் இரண்டு பேரும் இந்திய அரசாங்கத்துடன் நேரடி தொடர்புகளை பேணி வந்த ஆளுமைகள். இனி ஜீவன் தொண்டமான் தான் கையில் எடுத்திருக்கும் இந்த பொறுப்பு, எவ்வாறான முறையில் இந்தியாவுடன் முன்னெடுக்கப்படும்?

பதில் : "முதல்ல பாத்திங்கனா, இந்திய அரசாங்கத்தோட நாங்க நெருங்கிய தொடர்புகள வச்சி இருக்கோம். தந்தை மறைந்து போகும் போது கூட இந்திய அரசாங்கம் அனுதாபம் தெரிவிச்சு இருந்தாங்க. இந்திய அரசாங்கத்தோட இ.தொ.காவின் உறவு இன்றைக்கும் இருக்கு. பலமா தான் இருக்கு. ஏனா இந்திய தூதுவர் நிறைய மாற்றத்தை கொண்டு வரனுனு ஆசப்படுறாரு. அவருக்கு உதவியா இருக்கனுனு தான் நாங்களும் ஆசைப்படுறோம். இந்தியா வீட்டுத் திட்டத்தை கூட. இந்தியா தான் தந்திருக்கு. அதனால இதைவச்சு அரசியல் செய்யாம மக்களுக்கு நன்மை செய்யனும். இந்திய அரசாங்கம் மூலம் நிறைய விஷியங்கள அவங்க கிட்ட இருந்து எடுத்துகிறோம்."

கேள்வி : இந்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தம், இன்று ஒரு சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். 13ஆவது திருத்தம் இந்த அரசாங்கத்தினால் நீக்கப்படவுள்ளதாகவும் கூறுகின்றார்கள். அவ்வாறு நீக்கப்பட்டால், நீங்கள் எடுக்கும் தீர்மானம் என்ன?

பதில் : "முத விஷியம் என்னானா? 13ஆவது திருத்தம் சிறுபான்மை மக்களுக்கு ஒரு நல்ல விஷியம். நாங்களும் கூட மாகாண அமைச்சுக்களின் மூலம் நிறைய உதவிகளை செய்திருக்கோம். அப்படியிருக்கும் போது, இந்த சட்டதிருத்தம் கொண்டு வரும் போது முத வேல அதை பார்த்தாக வேண்டும். என்னென்ன திருத்தங்கள் இருக்குனு. அதுக்கு அப்புறம் ஒரு முடிவெடுப்போம்."

கேள்வி : சிறுபான்மை கட்சிகள் தற்போது அதிகளவில் போட்டியிட்டு வருகின்றன. குறிப்பாக மலையகம் மாத்திரமன்றி ஏனைய பகுதிகளிலும் சிறுபான்மை கட்சிகள் அதிகளவில் போட்டியிட்டமையினால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இந்த கட்சிகளை அரவணைத்து கொண்டு ஓரணியாக செயற்படுவதற்கான எண்ணங்கள் எதுவும் இருக்கின்றதா?

பதில் : "ஆமா. கட்டாயமாக. நான் எந்த இடத்துல பேசினாலும் நான் சொல்லியிருக்க ஒரே விஷியம் என்னானா? மலையகத்துல உள்ள கட்சிகள் மட்டும் அல்ல. வடக்கு கிழக்காக இருந்தாலும் சரி. நாங்க எல்லாம் ஒன்றாக சேர்ந்தா தான் பலமான அழுத்தத்தை தர முடியும். அப்படி இருக்கும் போது, எதிர்காலத்துல அந்த ஒற்றுமை வருனு நான் எதிர்பார்க்கின்றேன்."

கேள்வி : கடந்த ஈஸ்டர் தாக்குதல். இதில் சிறுபான்மையினர் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இன்னும் அதற்கு ஒரு தீர்வு வராத பின்னணியில் இந்த அரசாங்கம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த அரசாங்கத்தினால், இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்படுகின்ற சிறுபான்மையினரை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்ற சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கான திட்டங்கள் என்ன?

பதில் : "வெளிப்படையாக ஒரு விஷியத்த சொல்லிறேன். ஆளும் கட்சியில இருக்க அமைச்சரா நான் பேசல. நான் வந்து இலங்கை நாட்டின் ஒரு குடிமகனா பேசுறேன். போன அரசாங்கத்துல இந்த இன்போமேஷன் முன்கூட்டியே வந்திருக்கு. அப்படி வந்தும் இவங்க அதை சீரியஸா எடுத்துகிறல. அதில ஒரு அமைச்சரா இருந்தவரு கூட தனது தந்தை சொன்னாருனு சொல்லியிருக்காரு. அப்படியிருக்கும் போது அது ஒரு தவறு. இந்த அரசாங்கத்துல அப்படியான சின்ன சின்ன குறைப்பாடுகள் இருக்காது. சின்ன குறைப்பாடு நாள தான் பெரிய ஆபத்து நம்மல நோக்கி வந்துச்சு. அது மட்டுமில்லாம இன்னைக்கு இருக்க ஜனாதிபதி ஒரு பலமான ஜனாதிபதி, கொரோனாவ சரியா கட்டுப்படுத்தினாரு. அதேமாதிரி எதிர்காலத்துல ஒரு தகவல் வந்தால், எதிர்காலத்துல இந்த மாதிரி ஒரு ஆபத்து வருதுனு தெரிஞ்சா. கட்டாயம் இவரு முன்னாடி வந்து நடவடிக்கை எடுப்பாரு. அதனால தான் இந்திய அரசாங்கமும் இவரோட அவ்வளவு நெருக்கமா இருக்காங்க."

கேள்வி : இந்த அரசாங்கம் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு அரசாங்கம் என்ற கருத்து கூறப்படுகின்றது. இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில் : "ஒரு விஷியத்த வெளிப்படையா சொல்லியாகனும். போன அரசாங்கத்துல ஒரு அமைச்சர் இருந்தாரு ஹரின் பெர்ணான்டோ, அவரு கிறிஸ்வத்துல இருக்க கார்தினலுக்கு எதிரான ஒரு கருத்தை தெரிவிச்சாரு. அதேமாதிரி சம்பிக்க ரணவக்க. அவருக்கு வந்து இஸ்லாமியர்களாக இருக்கட்டும், தமிழர்களாக இருக்கட்டும் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிச்சு இருந்தாரு. அதேமாதிரி மங்கள சமரவீர. அவரும் போன அரசாங்கத்துல இருந்தாரு. அவரு சிங்கள பௌத்த மக்களுக்கு எதிரா கருத்துக்களை தெரிவிச்சு இருந்தாரு. அப்படியிருக்கும் போது அது ஒரு பக்கம். இரண்டாவது விஷியம் என்னனா அதே அணியில இருக்கவங்க, தேசியப் பட்டியல்ல சிறுபான்மையினருக்கு சந்தர்ப்பம் கொடுத்திருப்பது சரியான குறைவு. அதே இந்த தரப்ப பாருங்க. மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் அவர்கள் சொல்லியிருக்க விஷியம் என்னனா, தமிழர்கள், முஸ்லிம்கள். சிங்களவர்கள் யாராக இருந்தாலும், முதல்ல நாங்க இலங்கையர்கள். அந்த நோக்கத்துல தான் செல்றோம். தேசியப் பட்டியல் விவகாரத்த பார்த்த கூட சிறுபான்மைக்கு முக்கியத்தும் கொடுத்திருக்காங்க. அப்படி இருக்கும் போது நீங்க தான் முடிவு செய்யனும் யாரு இனவாதமுனு."

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: