You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிறுபான்மை உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைத்ததா?
இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் நான்கு சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றத்திற்கான அமைச்சரவை நியமனம் நேற்று கண்டி - ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்றது.
இதில் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.
அதில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோருக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பொறுப்புக்கள் வழங்கப்பட்ட நிலையில், 4 சிறுபான்மையினரும் இந்த அரசாங்கத்தின் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
மூன்று தமிழர்கள் மற்றும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி நேற்றைய தினம் நியமனம் பெற்றனர்.
கடல் தொழில் அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரேயொரு தமிழ் அமைச்சர் இவர் ஆவார்.
தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, இரண்டு தமிழர்களுக்கு இராஜாங்க அமைச்சு கிடைத்துள்ளது.
அத்துடன், நீதி அமைச்சராக அலி ஷப்ரி, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பொறுப்பொன்று கிடைத்துள்ளது.
வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கில் சதாசிவம் வியாழேந்திரன், இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி மலையகத்தில் ஜீவன் தொண்டமான் மற்றும் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி அலி ஷப்ரி ஆகியோர் இந்த அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுகொண்டுள்ளனர்.
கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் சிறுபான்மை சமூகத்திற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் குறைவடைந்துள்ளதாக தெரிகின்ற நிலையில், அவ்வாறு அங்கீகாரம் குறைவடைய பிரதான காரணங்களும் காணப்படுகின்றன.
குறிப்பாக கடந்த அரசாங்கத்தில் சிறுபான்மையின சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள், இந்த முறை எதிர்க்கட்சியிலுள்ளமையே அதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.
கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த மனோ கணேஷன், பழனி திகாம்பரம், ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மாத்திரமன்றி, வேலுசாமி இராதாகிருஸ்ணன், வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார்;, வேலுகுமார் உள்ளிட்ட பலர் இந்த முறை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்துள்ளனர்.
சிறுபான்மை சமூகத்தை நாடாளுமன்றத்தில் பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் இந்த முறை எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ளமையும், சிறுபான்மைக்கான நாடாளுமன்ற அங்கீகாரம் குறைவடைய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், சிறுபான்மை கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கஜன் இராமநாதன், சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), அதாவுல்லா உள்ளிட்ட மேலும் பல சிறுபான்மையினர் அங்கம் வகித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா என குரல் எழுப்பி வருகின்றவர்களுக்கு, இந்த தமிழ் பிரதிநிதித்துவமே பதில் சொல்லும் என கூறப்பட்டு வருகின்றது.
பிற செய்திகள்:
- அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா? அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
- "பாகிஸ்தானில் வாழ்ந்தாலும் நாங்களும் தமிழர்களே" - பெருமிதப்படும் அறியப்படாத சமூகம்
- இட்லி, தோசை தமிழர்களின் உணவுகளாக மாறியது எப்போது? வரலாற்று சான்றுகள் கூறுவது என்ன?
- சூரியன் ஏன் சில காலம் சிவப்பாக இருக்கிறது? காரணம் தெரியுமா?
- ஃபிடல் காஸ்ட்ரோ- புரட்சி நாயகன் அல்லது கொடுங்கோலன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: